வெள்ளி, 6 டிசம்பர், 2013

சஜதா செய்தல் : விவாதம் Part 1


Ifham Mohamed

மனிதன் மனிதனுக்கு ஸஜூது செய்தல் கூடுமா?

அல்லாஹ் குர்ஆனிலே –
لَّقَدْ كَانَ فِي يُوسُفَ وَإِخْوَتِهِ آيَاتٌ لِّلسَّائِلِينَ
நிச்சயமாக யூஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன. . (அல்-குர்ஆன் 12:7)

وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا 
தமது பெற்றோரைச் சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள்அனைவரும் அவருக்குப் ஸூஜூது செய்தனர். (அல்-குர்ஆன் 12:100)

மேலேயுள்ள வசனம் மனிதன் மனிதனுக்கு ஸஜூது செய்யலாம் என்பதை மிகத் தெளிவாக காட்டுகிறது. எனினும் நபி(ஸல்) அவர்கள்,

முஆத் (ரலி), ஸல்மான் (ரலி) போன்ற நபித் தோழர்கள் தமக்கு ஸஜ்தாச் செய்ய முன் வந்த போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர். மனிதனுக்கு மனிதன் ஸஜ்தாச் செய்யக் கூடாது என்று பிரகடனப்படுத்தி விட்டனர்.
(நூல்கள்: திர்மிதி 1079, இப்னுமாஜா 1843, அஹ்மத் 12153, 18591, 20983, 23331)

யூசுப்(அலை) அவர்களின் ஷிரிஅத்தில் ஆகுமாக்கப்பட்டிருந்த மனிதனுக்கு ஸூஜுது செய்தல் நபி(ஸல்) அவர்கள் தமது உம்மத்திற்கு தடை செய்கிறார்கள். ஆகவே மனிதன் மனிதனுக்கு ஸூஜுது செய்வது கூடாது.

எனினும்,

TNTJ யினர், தாம் ஒரு நிலைப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றாற் போல் குர்ஆன் ஹதீஸை வளைக்கின்றார்கள் என்ற எமது குற்றச்சாட்டுக்கு எடுத்துக்காட்டாக,

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளதற்கு மாற்றுவிளக்கம் கொடுத்து 19:47 மற்றும் சில வசனங்களில் இப்ராஹீம் (அலை) அவர்கள் முஷ்ரிக்கான தனது தந்தைக்கு ஸலாம் கூறியதை மோற்கொள் காட்டி முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸலாம் கூறலாம் என்ற தனது நிலைப்பாட்டை கூறுகின்றார்கள்.

ஆனால்-

மனிதன் மனிதனுக்கு ஸூஜுது செய்யக் கூடாது என்ற தனது கொள்கைக்காக – குர்ஆனுக்கு மாற்றுவிளக்கம் கொடுத்து விட்டு ஹதீஸில் தடைவந்துள்ளது ஆகவே கூடாது எனக்கூறுகிறார்கள்.

இவை இவர்கள் குர்ஆன் ஹதீஸை தமக்கு ஏற்றாற் போல் வளைக்கின்றார்கள் என்பதற்கு போதுமான சான்றாகும்.

ஸலாம் விடயத்தில் எனக்கு பதில் அளிக்கையில் – 

//அறிவீனர்களுக்கு சலாம் சொல்வது விதிவிலக்கு என்கிறீர்கள்.அதற்கு காரணம்,ஹதீஸில் சலாம் சொல்ல தடை வந்திருப்பதை காட்டுகிறீர்கள்.இது அடிப்படையிலேயே தவறான அணுகுமுறை.ஹதீஸில் ஒன்றை புரிந்து அதனடிப்படையில் குர்ஆனுக்கு அர்த்தம் வைக்க கூடாது.குர்ஆனில் அறிவீனர்களுக்குசலாம் சொல்லுமாறு வந்தால் அது தான் முதல் அர்த்தம்.பிறகு ஹதீஸில் சலாம் சொல்ல தடை வந்தால் அந்த ஹதீசை தான் குர்ஆனுக்கு ஏற்றாற்போல மாற்றி புரிய வேண்டுமே அல்லாமல்,ஹதீசில் தடை உள்ளது,ஆகவே குர்ஆன் வசனத்திற்கு இப்படி பொருள் கொள்ள வேண்டும் என்பது மிக மிக தவறான போங்கு. //

எனக் கூறிவிட்டு, சஜ்தா விடயத்தில் அப்படியே உல்டாவாக தமக்கேற்றாற் போல் பொருள் கொள்கிறார்கள். இவ்வாறு ஒரு போக்கை கொள்ளும் இவர்கள் மனிதனுக்கு மனிதன் சஜ்தா செய்வது கூடும் என்று கூற வேண்டுமே ஒளிய,
எவ்வாறு கூடாது என்று கூறுவார்கள். இது இவர்களின் கொள்கை முரண்பாட்டை படம் பிடித்துக் காட்டுகிறது.

மேலும் –

சில வார்த்தைகளுக்கு மொழிரீதியான ஒரு பொருளும் இஸ்லாமிய ரீதியான ஒரு பொருளும் காணப்படுகிறது. உதாரணமாக சஜ்தா என்றால் மொழிரீதியாக – பணிதல் என்று அர்த்தம். இஸ்லாமிய பரிபாஷையில் – இரண்டு கைகள் நெற்றியை தரையில் வைத்து செய்யும் ஒரு செயலுக்கு கூறப்படும் என்பதை அறிவீர்கள்.

அப்படியான ஒரு வார்த்தை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டால் அதற்கு முதலாவதாக இஸ்லாமிய பரிபாஷையில் உள்ள பொருளே வழங்கப்படும். அந்த பொருள் அவ்விடம் வழங்கப்பட முடியாதுவிட்டால் மாத்திரமே மொழிரீதியான பொருள் கொள்ளப்படும் என்பது ஒரு அடிப்படையாகும்.

ஆனால் இவர்களது கொள்கைக்காக 12:100 இற்கு இஸ்லாமிய பொருளை வழங்க முடியுமாக இருந்தும் மொழிரீதியான பொருளை கொடுத்து ஹதீஸிற்கு இஸ்லாமிய பொருளை கொள்கிறார்கள்.

நீங்கள் இவ்வாறு செய்தால் நாமும் கூறுகிறோம்
12:100 வது வசனம் மனிதன் மனிதனுக்கு பணிவதை அனுமதியளிக்கின்றது. அதே வேலை ஹதீஸ் –பணிவதை- தடை செய்கின்றது.

ஆகவே எவ்வாறு நீங்கள் குர்ஆனுக்கு மாற்றமாக வரும் ஹதீஸை குர்ஆனுக்கு முரணாகவே உங்கள் கொள்கை பிரகாரம் ஏற்றுக்கொள்கின்றீர்கள் என்பதை நிரூபிக்கவும்.

Nashid Ahmed தவிர்ந்து வேறு யாரும் கருத்துப்பதிவிட வேண்டாம்)




Nashid Ahmed


மனிதனுக்கு சஜதா செய்வது தொடர்பாக அழைக்கப்பட்டிருக்கிற விவாதம் என்பது சில வரிகளில் விளக்கும் அளவிற்கு கேள்வி பதில் போன்றது தான்.
விவாதமாக கொண்டு செல்கிற அளவிற்கு இது கொள்கை வேறுபாடு ஏதும் இல்லை. 

12:100 வசனம் சிரம் பணிதலை சொல்கிறதா அல்லது கீழ்படிவதை பற்றி சொல்கிறதா? என்கிற ஒரு வசனத்திற்கான அர்த்ததை அறிவது தான் இந்த விவாதத்தின் நோக்கம்.

வெறும் கேள்வியாக கேட்டிருந்தால் ஒரு சில வரிகளில் நான் பதில் அளித்திருப்பேன், தலைப்பு முடிந்திருக்கும்.

சூனியம் போன்ற முக்கியமான, கொள்கைக்கு வேட்டு வைக்கும் நம்பிக்கை பற்றியெல்லாம் நான் பேச அழைத்த போது, அதை விடவும் இது தான் முக்கியம் என்று நீங்கள் சொன்ன காரணத்தால் தான் இதற்கும் ஒப்புதல் அளித்தேனே தவிர, ஐந்து வாய்ப்புகள் கொண்டு விவாதிக்கும் அளவிற்கு இது முக்கியமானதுமில்லை, நீண்ட ஆதாரங்களை கொண்டு பேச வேண்டியதுமில்லை.

சலாம் சொல்லுதல் தலைப்பில், குர்ஆன் சலாம் சொல்ல அனுமதிக்கிறது, ஹதீசில் தடை உள்ளது. ஆகவே ஹதீஸை வேறு அர்த்தத்தில் புரிய வேண்டும் என்று சொன்னேன். சரி தான்.

சஜதா விஷயத்தில் குர் ஆனில் மனிதனுக்கு சஜதா செய்யலாம் என்கிற கருத்துப்பட (12:100) வசனம் இருப்பதாக சொல்கிறீர்கள், ஹதீசில் சஜதா செய்ய தடை இருக்கிறது, 
ஆகவே, சலாம் விஷயம் போல், ஹதீஸை வேறு மாதிரி புரிந்து, சஜதா செய்வது தான் சரி என்று சொல்ல மாட்டோம் தான்.

இரண்டும் முரண்பாடு போல் விளக்கியுள்ளீர்கள். முரண்பாடல்ல !

குர்ஆனை கொண்டு தான் ஹதீஸை விளக்க வேண்டும் என்பதில் எந்த நிலையிலும் மாற்றமில்லை !

சலாம் சொல்லுதல் பற்றிய‌ குர்ஆனின் அனுமதி அனைவருக்கும் பொதுவானது. குர்ஆனில் ஒரு விஷயம் பொதுவாக சொல்லப்பட்டால், ஹதீஸில் அதற்கு முரணாய் தோன்றும் வகையில் ஏதும் செய்தி இருப்பின், ஒன்று அந்த ஹதீஸுக்கு மாற்று விளக்கம் உள்ளதா என்று பார்க்க வேண்டும் அல்லது குர் ஆனின் அனுமதிக்கு இது முரண் என்று கூறி அதை புறந்தள்ல வேண்டும்.

இந்த விஷயத்தில், சம்மந்தப்பட்ட ஹதீஸை புறந்தள்ளுவதா அல்லது மாற்று விளக்கங்கள் கொடுத்து ஏற்பதா என்று சிந்திக்கையில், மாற்று விளக்கங்கள் கொடுத்து ஏற்பதற்கு முகாந்திரம் இருக்கிறது.
வேறு வேறு செய்திகளில் காஃபிர்களுக்கு சலாம் சொல்லக்கூடாது என்பதற்கான காரண‌த்தை நபியவர்கள் தெளிவுப்படுத்துகிறார்கள் என்கிற வகையில் அந்த செய்திகள், இந்த செய்திக்கு விளக்கம் என்று புரிகிறோம், புரிய இடமுள்ளது.

ஆகவே காஃபிர்களுக்கு சலாம் சொல்லலாம் என்று குர்ஆன் அனுமதிக்கிறது,
ஹதீசும் அனுமதிக்கிறது, ஒரு சில ஹதீஸ், சில காரணங்கள் இருந்தால் மட்டும் தான் சொல்ல தடை என்கிறது.

இப்படி புரியலாம். குர்ஆனை கொண்டு தான் ஹதீஸை விளக்க வேண்டும் என்பதில் இப்போதும் மாற்றமில்லை !

ஆனால் சஜதா விஷயம் அப்படியல்ல. 

சலாம் சொல்ல குர் ஆன் அனுமதிப்பது போல் சஜதா செய்யவும் குர் ஆன் அனுமதிக்கும் பட்சத்தில், சலாம் சொல்ல தடை சொல்லும் ஹதீஸுக்கு என்ன மாதிரியான நிலைபாட்டை கொண்டிருந்தோமோ அதை தான் இதிலும் கொள்வோம்.
சஜதா செய்யாதீர்கள் என்கிற ஹதீஸுக்கு அப்போதும் மாற்று அர்த்தம் தான் கொடுப்போம் !

குர்ஆனை கொண்டு தான் ஹதீஸை விளக்க வேண்டும் என்பதில் எந்த நிலையிலும் மாற்றமில்லை !

மனிதனுக்கு மனிதன் சஜதா செய்வது போன்ற அர்த்தத்தை கொடுக்க கூடாது
என்பதற்கு, சஜதா செய்யாதீர்கள் என்கிற ஹதீஸ் காரண‌மில்லை. 

மாறாக, மனிதனுக்கு மனிதன் சஜதா செய்யக்கூடாது என்று குர்ஆனே கூறுகிறது. அது தான் காரணம் ! 

அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கும் சிரம் பணியக்கூடாது என்று அல்லாஹ் குர்ஆனிலேயே கூறி விட்ட பிறகு, யூசுஃப் நபி விஷயத்தில் மட்டும் அனுமதிக்க மாட்டான். 

இதை பார்ப்பதற்கு முன், சஜதாவிற்கு இஸ்லாமிய பரிபாஷை அர்த்தம், அகராதி அர்த்தம் என இரண்டு இருப்பதாய் சொன்னீர்கள். 12:100 வசனத்திற்கு 
இஸ்லாமிய பரிபாஷை அர்த்தம் தான் பொருந்தும் என்றும் சொன்னீர்கள். 

மனிதருக்கு மனிதன் சஜதா செய்வது என்கிற வாசகம் வந்தால் சிரம் பணிதல் மட்டும் பொருந்தாது, கட்ட்டுப்படுதலும் பொருந்தத் தான் செய்யும். ஆனால், பொதுவாக இரு கருத்தும் பொருந்தினாலும் கூட, இந்த 12:100 வசனத்திற்கு சிரம் பணிதல் என்பது எக்காரணம் கொண்டும் பொருந்தவே பொருந்தாது !

சற்று ஆழமாக சிந்தித்தால், சிரம் பணிதலை இது சொல்லவில்லை, கட்டுப்படுவதை தான் சொல்கிறது என்பதை அந்த யூசுஃப் அத்தியாயத்தைக் கொண்டே புரிந்து கொள்ளலாம்.

அத்துடன், இந்த இடத்தில் சஜதா என்பதற்கு சிரம் பணிதல் என்கிற அர்த்த்த்தை எந்த காரணம் கொண்டும் கொடுக்கவே கூடாது என்பதற்கு குர் ஆனின் வேறு பல வசனங்களின் துணையுடனும் நிரூபிக்க முடியும்.

அடுக்கடுக்காக பல சான்றுகளை தொடர்ந்து பார்போம் இன்ஷா அல்லாஹ் !




Ifham Mohamed

சாகோதரர் நாஷிட் அஹ்மட் ஒரு சந்தர்ப்பத்தை வீணாக கழித்துவிட்டார் என்பதையே அவரது முதல் கருத்துப்பதிவு சுட்டிக்காட்டுகிறது. ஒரு ஆதாரமேனும் முன்வைக்கப்படவில்லை தன்னிலை விளக்கமாகவே அதனை பார்க வேண்டியுள்ளது. வெறும் 5 கருத்துப்பதிவுகள் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதால் தவிர்த்திருக்கலாம். இறுதிப்பதிவு உங்களுக்கு என்பதால் எனக்கு சில பின்னடைவுகள் ஏற்படலாம்.

சஜ்தா பற்றி கேள்வி கேட்ட நேரத்தில் இதனையும் விவாத் தலைப்பாக்கியது நீங்கள் என்பதை மறக்க வேண்டாம் மேலும் சலாம் விடயத்துடன் சஜ்தாவும் சேர்த்து பேசலாம் என்பதை ஒப்புக்கொண்டு விட்டு விவாத நேரத்தில் வேறு காரணம் கூறி பின்வாங்கினீர்கள். தற்போது இவற்றை பேசுவதே வீண் வேலை. ஆகவே விட்டுவிடுகிறேன்.

மேலும்,

குர்ஆனைக் கொண்டு தான் ஹதீஸை விளங்க வேண்டும் என்ற தவறான கொள்கை ஆதாரமின்றி ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் குர்ஆன் ஹதீஸ் இரண்டு வஹி அவற்றில் எவ்வித பேதமும் காட்ட கூடாது என்பதற்கு 2 ஆதாரங்கள் முன்வைத்தும் அவற்றுக்கு பதில் வழங்கப்படவில்லை. அவை,
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 53:3,4) 

நபி(ஸல்) கூறுகின்றார்கள்:-
உங்களில் எவரும் தனது கட்டிலிலே சாய்ந்திருக்கும் நிலையில் (நான்) ஏவியவற்றிலிருந்து அல்லது (நான்) தடுத்த வற்றிலிருந்து ஒரு விடயம் அவரிடம் வரும்போது “(இவை எதுவும்) எங்களுக்குத் தெரியாது. அல்லாஹ்வின் வேதத்தில் எதனை (நாம்) காணுகின்றோமோ அதனை (நாம்) பின்பற்றுவோம் எனக்கூறுவதை (நான்) அறவே காணக்கூடாது. (அபூ தாவூத் - கி. ஸுன்னா 06)

நபி(ஸல்) அவர்கள் கூறியது என்று உறுதியாக நம்மை வந்தடையும் செய்தி வஹியாகும். இரண்டையும் முன்வைத்து தான் ஒரு விடயத்திற்கு முடிவு காண வேண்டுமே தவிர, குர்ஆனை முன்னிறுத்தி ஹதீஸை விளங்குவது என்று கதையே கிடையாது. குர்ஆனுக்கு விளக்கம் ஹதீஸ் – ஹதீஸிற்கு விளக்கம் குர்ஆன் இது எமது நிலைப்பாடாகும். உங்கள் நிலைப்பாட்டிற்குரிய ஆதாரத்தை முன்வைத்தால் சிறந்தது.

மேலும் - அஹமத் 27280 ஹதீஸில், நாளை யூதர்களுடன் போர் செய்ய போகிறோம், என்று கூறி ஹதீஸில் இடைச்செருகல் செய்து எனது பதில் வராது இறுதிப்பதிவில் வேறு அறிவிப்புக்களில் உள்ளது எனக் கூறி சமாளித்திருந்தீர்கள். பிழையான அணுகுமுறை. 
குர்ஆனில் இப்ராஹீம்(அலை) அவர்கள் சலாம் சொல்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று தெளிவாக ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டது. 

நேர்வழியில் உள்ளவருக்கு ஸலாம் சொல்லுங்கள் என்று முகைய்யதாகவும்
அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும்
பெரியவர் சிறியவர்
சிறு கூட்டம் பெரும் கூட்டம்
ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகள் என்பது முத்லக்கான அறிவிப்புக்கள் என்பதும் முன்வைக்கப்பட்டது. 

ஆனால் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் முஷ்ரிக்குகள், யூத நஸாராக்கள் என்று முன்று முகைய்யதான கூட்டங்கள் இருந்தும் அந்த அறிவிப்புக்களுக்கு மத்தியில் முத்லக் முகைய்யதை பிழையாக உபயோகித்தீர்கள். 

எது எப்படியோ – மாஷா அல்லாஹ் பொதுவாக காபிருக்கு ஸலாம் சொல்லலாம் என்ற உங்கள் நிலையில் இருந்து – இஸ்லாத்தை எதிர்ப்பவர்களுக்கு ஸலாத்தை பரப்பத் தேவையில்லை என்று இறங்கிவந்தது சத்தியத்திற்கு கிடைத்த வெற்றியே!

குர்ஆனிலே தொழுகை, ஸகாத், நோன்பு, சஜ்தா போன்ற வார்த்தைகள் பாவிக்கப்படுகையில் இவற்றுக்கு மொழிரீதியாக வேறு அர்த்தம் காணப்படினும் இஸ்லாமிய பொருளே கொடுக்கப்பட வேண்டும். அவை முடியாதவிடத்து மாத்திரமே மொழிரீதியான அர்த்தம் கொள்ளப்பட வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.

சஜ்தா விடயத்தில்-

மனிதன் மனிதனுக்கு சஜ்தா செய்ய தடை குர்ஆனிலே எங்கே உள்ளது.

இஸ்லாமிய பரிபாஷைியில் கூறப்படும் சஜ்தா 12;100 க்கு பொருந்தாமல் மொழிரீதியானது எவ்வாறு பொருந்துகிறது என்பவற்றை ஆதாரங்களுடன் முன்வைக்கவும். 
சிம்மாசனத்தில் அமர்த்தி கட்டுப்பட்டார்கள் என்று எவ்வாறு மொழிக்கு ஒத்துக் போகிறது. உங்கள் தாய் தந்தையரை சிம்மாசனத்தில் அமர்த்தி கட்டுப்பட்டார்கள்/ பணிந்தார்கள் என்று கூற முடியுமா? எவ்வாறு நடைமுறையுடன் விளக்கவும்.

குர்ஆனிலே கட்டுப்படுவதை தான் குறிக்கின்றது எனில் ஹதீஸூம் கட்டுப்படுவதையே குறிக்கின்றது. குர்ஆனில் ஆகுமாக்கப்பட்டுள்ளதை ஹதீஸ் தடைசெய்கின்றது. ஹதீஸை என்ன செய்வது..?

குர்ஆனுக்கு கட்டுப்படுவது என்று பொருள் கொண்டுவிட்டு ஹதீஸிற்கு மாத்திரம் எவ்வாறு சஜதா என்ற வார்த்தைக்கு இஸ்லாமிய பொருளை கொடுக்கன்றீர்கள். 

உங்கள் அடுக்கடுக்கான ஆதாரங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.




Nashid Ahmed


சஜதா தலைப்பில் உங்கள் தரப்புக்கு என எந்த வாதமும் இருக்காது என்று நாம் எதிர்பார்த்தது போலவே தான் இந்த விவாதத்தின் போக்கு செல்கிறது. அதி பயங்கரமான விஷயம் போல இதை பாவித்து, இதை தான் பேச வேண்டும், இதை பேசி விட்டு தான் சூனியம் போன்ற பாரதூரமான தலைப்புகளை பேச வேண்டும் என்றெல்லாம் கூறிய நீங்கள், சஜதா தலைப்பு தொடர்பாய் கொண்டிருக்கும் நிலைபாடு என்ன? அதற்கான ஆதாரம் என்ன்? என்பதை வெறும் கேள்வி பதிலாய் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

குர் ஆனிலிருந்து தான் ஹதீசை விளங்க வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்கள். உங்களிடம் அடிப்படை குறித்தே பேச வேண்டும் போல தோன்றுகிறது.
குர் ஆன் தான் அல்லாஹ்வின் முதல் வஹி. அதற்கு விளக்கம் தான் நபியின் வழிகாட்டல். அதுவும் வஹி தான் என்றாலும் குர் ஆனாகிய வஹிக்கு விளக்கமாக தான் நபியின் வாழ்வு என்கிற வஹி இருந்ததே தவிர, நபியின் வாழ்வுக்கு குர் ஆன் விளக்கம் கொடுக்கவில்லை.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். அல்குர்ஆன் (16 : 44)

நீங்கள் இதை கவனிக்காமல், நபியின் போதனையும் வஹி தான் என்பதற்கு ஆதாரம் தந்து கொண்டிருக்கிறீர்கள், அதை நான் மறுத்தால் தான் அவற்றை நீங்கள் தருவதில் அர்த்த‌மிருக்கும்.

சலாம் சொல்லுதல் தலைப்பில், நம்மை அழிக்க நினைக்கும் காஃபிர்களிடம் சலாம் சொல்ல தேவையில்லை என்று நான் சொன்னது ஏதோ நான் என் நிலைபாட்டிலிருந்தே இறங்கி வந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள். 
பொதுவாக காஃபிர்களுக்கு சலாம் கொண்டு முந்தலாம் என்பதும், நம்மை அழிக்கவும், நமக்கு சாபம் இடவும் செய்யும் காஃபிர்கள் விஷயத்தில் சலாத்தைக் கொண்டு முதவும் தேவையில்லை, அவர்களாக சலாம் சொன்னால் கூட வ அலைக்கும் என்று சொல்லி நிறுத்தியும் கொள்ளலாம் என்பது தான் எனது அடிப்படை நிலையே.. அதையொட்டி தான் விவாதமே நடந்தது. எனது இந்த நிலைக்கு நான் பல சான்றூகளையும் , எதிர் கேள்விகளையும் கேட்டிருந்தேன்.
நான் வைத்த எந்த வாதத்திற்கும் உருப்படியான பதிலை சொல்லாமல், இப்ராஹிம் நபியை பின்பற்ற தேவையில்லை, அறிவீனர்களுக்கு சலாம் என்றால் அந்த சலாம் என்கிற நேரி அர்த்தமல்ல என்றெல்லாம் அல்லாஹ்வின் வசனத்திற்கு எதிராக போர் செய்து விட்டு நான் இறங்கி வந்தேன் என்று சொல்வது வேடிக்கை !!

அந்த தலைப்பை முழுதாய் படிப்பவர்கள் உண்மையை விளங்கிக் கொள்வார்கள். விவாதம் முடிந்த பிறகு வெற்றிக் கோஷம் இடுவதில் எனக்கு உடன்பாடில்லை !

விஷயத்திற்கு வருவோம்.

சஜ்தா தலைப்பில்,உங்கள் வாதம் என்ன என்பதை நானே விளக்குகிறேன்.
12:100 வசனத்தில் சஜதா என்கிற வார்த்தை வந்து விட்டது.. சஜதா என்பதற்கு சிரம் பணிதல், கட்டுப்படுதல் ஆகிய இரு அர்த்தம் இருந்தாலும் மனிதனோடு தொடர்புப்படுத்தி வரும் இடம் என்பதால் சிரம் பணிதல் என்கிற அர்த்தம் தான் வைக்க வேண்டும்.
இது தான் உங்கள் நிலைபாடு. 
ஆனால் ஹதீஸில் சிரம் பணிதலுக்கு தடை இருப்பதால் சிரம் பணியக்கூடாது என்பது தான் இந்த உம்மத்துக்கான இப்போதைய சட்டம் என்பதையும் ஒப்புக்கொண்டு தான் இருக்கிறீர்கள்.
அதோடு, சஜதா என்பதற்கு முதலில் இஸ்லாமிய பரிபாஷை அர்த்தத்தை முதலில் கொடுத்து அது பொருந்தாமல் போனால் தான் அகராதி அர்த்தம் கொடுகக் வேண்டும் என்கிறீர்கள். 

அப்படியல்ல !

எந்த இடத்திலும் எந்த அர்தத்தையும் கொடுக்கலாம். எது பொருத்தமான அர்த்தம் என்று தான் பார்க்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால்,அகராதி அர்த்த்ம் தான் எப்போதும் முதலில் கொடுக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையையும் நீங்கள் விளங்கவில்லை.

12:100 வசனத்திற்கு சிரம் பணிதல் என்கிற அர்த்தம் வராது என்பதற்கு நான் கூறும் பல காரணங்களில் ஒன்று, சிரம் பணிதல் எப்போதும் அல்லாஹ் ஒருவனுக்கே !

இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய் யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்கு வோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள் (41:37)

சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள் என்கிற வாசகம், அல்லாஹ்வின் எந்த படைப்புக்கும் சிரம் பணியாதீர்கள் என்பதை சொல்கிறது.

தொடர்ந்து அதை வலியுறுத்தும் அல்லாஹ்வின் தெளிவான கட்டளையானது, அல்லாஹ்வுக்கே தவிர வேறு எவருக்கும் சிரம் பணியக் கூடாது !!

அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கு மட்டும் தான் சிரம் பணிய வேண்டும் என்று அல்லாஹ் சொல்லி விட்டமையால், அல்லாஹ்வை வணங்கும் யூசுஃப் நபியின் சகோதரர்கள் அவர்களது தந்தைக்கு சிரம் பணிந்தார்கள் என்று அர்த்தம் வைத்தால் அவர்கள் அல்லாஹ்வை வண‌ங்காமல் அவர்களது தந்தையை வணங்கினார்கள் என்கிற அர்த்தம் வரும் !

யூசுஃப் நபியின் சகோதரர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்க மாட்டார்கள், அதை யூசுஃப் நபி பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள், 
அவர்களது தந்தையான யாகூப் நபி அதை அங்கீகரித்திருக்க மாட்டார்கள்.

ஆகவே அந்த இடத்தில் சஜதா என்கிற வார்த்தைக்கு இஸ்லாமிய பரிபாஷை பொருளான சிரம் பணிதல் கொடுக்கவே கூடாது ! இது என் தரப்பில் நான் வைக்கும் முதல் ஆதாரம்.
நான் ஏற்கனவே சொன்னது போல, இதே வார்த்தைக்கு அகராதி அர்த்தமான கட்டுப்படுதலை தான் கொடுக்க வேண்டும். 

கட்டுப்படுதல் என்கிற அர்த்தமும் பொருந்தி போகும் என்பதற்கு அந்த அத்தியாத்தை கொண்டே என்னால் நிரூபிக்க முடியும். அதையும், தொடர்ந்து வேறு பல சான்றுகளையும் அடுத்தடுத்து காணலாம், இன்ஷா அல்லாஹ் !




Ifham Mohamed

திரும்பவும் சஜ்தா தலைப்பு பற்றி ஒரு விமர்சனம் முன்வைத்திருகின்றீர்கள். அதனை ஒரு தலைப்பாக்கியது நீங்கள். அதற்கப்புறம் நடந்தவைகள் நீங்கள் அறிவீர்கள். தலைப்பை ஒப்புக்கொண்டு விவாதிக்க வந்த பிறகு அது பற்றி விமர்சிப்பதில் அர்த்தமில்லை. ஸலாத்துடன் சஜ்தாவை பேச ஒப்புக்கொண்டு பின்வாங்கியதாக இது ஒரு தனித்தலைப்பாக மாறியது. இன்ஷா அல்லாஹ் இதற்கு அடுத்ததாக சூனியம் தொடர்பாக தான் பேச இருக்கிறோம் என்பதை கவனத்திற்கொள்க.

குர்ஆனிலிருந்து தான் ஹதீஸை விளங்க வேண்டும் என்பதற்கு நீங்கள் முன்வைத்துள்ள ஆதாரம் 16:44 உங்களுக்குரிய ஆதாரமே இல்லை. குர்ஆன் ஹதீஸ் இரண்டும் வஹி என்பதற்கே இது ஆதாரம். 

குர்ஆனில் ஒரு விடயம் கூறப்பட்டால் அதனை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு அமல் செய்கின்றார்கள் என்பதையும் பார்த்து இரண்டையும் சேர்த்தே முடிவெடுக்க வேண்டும் என்பது தான் எமது அடிப்படை.

உங்களுடைய இந்த தவறான போக்கின் அடிப்படையில், 
4:23, 24 இல் அல்லாஹ் மணமுடிக்க தடுக்கப்பட்டவர்கள் பட்டியலை கூறிவிட்டு - இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.- என்பதை நேரடியாகக் கூறுகிறான். 

ஆனால் நபி(ஸல்) அவர்கள் – புஹாரி 5109 இல்,
ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒரு சேரவும் ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் ஒருசேரவும் மனைவியராக்கிக் கொள்வதற்கு தடை செய்கின்றார்கள். 

தற்போது இதனை குர்ஆனிலிருந்து ஹதீஸை பார்க்க வேண்டும் உங்கள் தவறான அடிப்படையிலிருந்து விளக்கி காட்டுங்கள் பார்க்கலாம். 

ஆனால் அவ்வசனங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தான் பொருள் அறிவார்கள் அல்லாஹ்வின் வஹியை கொண்டு அவர்கள் நடைமுறைப்படுத்தி விளக்கப்படுத்துவார்கள். சிலதை அல்லாஹ் ஆரம்பத்தில் ஆகுமாக்கி இருப்பான் பின்னால் அவற்றை நபி(ஸல்) அவர்கள் தடை செய்வார்கள். குர்ஆனில் அல்லாஹ் கூறியதை விட கூடுதலான கட்டளைகளை நபி(ஸல்) அவர்கள் செயற்படுத்துவார்கள். 

உதாரணமாக தொழுகையை கூறலாம் மூன்று வேளைகள் தான் அல்லாஹ் கூறுவது நபி(ஸல்) அவர்கள் ஜவேளை தொழுதார்கள் தொழும்முறைகள் என இப்படி அதிகமான சட்டங்கள் ஹதீஸூம் கூறுகிறது. அபூதாவுதின் ஹதீஸ் தெளிவாக உங்கள் நிலை பிழை என்பதை படம்பிடித்துக்காட்டுகிறது. அல்லாஹ் இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு ஆகுமாக்கிய ஸலாத்தை நபி(ஸல்) அவர்கள் தமது உம்மத்திற்கு தடை செய்கின்றார்கள். ஆனால் நீங்கள் அல்லாஹ் இடாத நிபந்தனையை நீங்கள் இடுகின்றீர்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறீர்கள். பின்பு உங்களுக்கே முரண்பட்டுக்கொண்டு “இஸ்லாத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு ஸலாம் கிடையாது” என்கிறீர்கள். 

இவையாவும் நடுநிலையாக சிந்திப்பவர்களுக்கு போதுமானது. யாராவது ஒருவர் இக்கொள்கையில் தவறு என்பதை உணர்ந்து கொண்டாலும் அல்ஹம்துலில்லாஹ். அதற்கான ஒரு சிறு முயற்சியே இதுவாகும்.

இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் சாபம் இடுபவர்களுக்கு ஸலாம் கூடாது என்று TNTJயினர் எங்கும் சென்னதாக எனக்கு தெரியவில்லை முடிந்தால் எடுத்துக்காட்டுங்கள். நீங்கள் சுயமாக தற்போது நிலை மாறியபின் நான் இப்படித்தான் என்பதில் அர்த்தம் கிடையாது. குறைந்தபட்சம் நான் இந்த தலைப்பை எடுக்க முன்பு நீங்கள் இவ்வாறு கூறியதற்காவது ஆதாரத்தை காட்டுங்களேன் பார்க்கலாம். வெற்றி கோஷம் இல்லை உண்மை.

உங்கள் வாதம் முழுவதிற்கும் பதில் அளிக்கப்பட்டது. ஆனால் என்னுடைய வாதம் பலவற்றிற்கு பதில் கிடையாது. குறிப்பாக “ஹதீஸிலே செய்த இடைச் செருகலில் கூட” ஒரு தந்திரத்தை கையாண்டீர்கள் இன்ஷா அல்லாஹ் நடுநிலையாளர்கள் புரிந்து கொள்வார்கள். அதிகமாக எழுத இடம் கொடுக்காததால் நிறுத்திக் கொள்கிறேன்.

சஜ்தா – அகராதியில் உள்ள அர்த்திற்கு தான் முன்னுரிமை என்று இன்னுமொரு புது விளக்கம் கூறுகிறீர்கள் ஏதாவது ஆதாரங்கள் இருப்பின் முன்வைக்கவும்.

41:37 இல் அல்லாஹ்விற்கு சிரம் பணியக் கூறுகிறான். ஆனால் 12:100 சிரம் பணிந்துள்ளதை காட்டுகிறது ஆகவே குர்ஆனில் முரண்பாடா? நஊதுபில்லாஹி மின்ஹா. அப்போது நீங்கள் குர்ஆன் வசனங்களை ஒன்றுக்கொன்று முரணாகமல் இருப்பதற்கு முயற்சி செய்து அகராதி அர்த்தம் கொடுக்கின்றீர்களா?

அப்படியல்ல – 

அல்லாஹ் மலக்குமார்களை ஆதம்(அலை) அவர்களுக்கு சஜ்தா செய்யச் சொன்னது வணங்குவதற்கு என்று கூறுவீர்களா? இல்லை அல்லாஹ்வின் படைப்பிற்கு மரியாதை செய்வதற்கு என்று தானே கூறுவீர்கள். 

அது போல் யூசுப்(அலை) அவர்கள் செய்த சஜ்தாவும் அவரது தாய் தந்தையரை மரியாதை செய்வதற்காகவேயன்றி வணங்குவதற்கு அல்ல. அவ்வாறு நாம் பொருள் கொள்ள முடியாது. ஆனால் 41:37 இல் அல்லாஹ் “வணங்குவதை” பற்றி பேசுகிறான் என்பதை அவ்வசனத்தை வாசிக்கும் போதே இலகுவாக புரியலாம் நீங்களும் விளக்கம் கூறியுள்ளீர்கள்.

அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும் என்ற ஓரிறைக்கொள்கையில் உறுதியாகயிருந்த ஸஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சஜ்தா செய்ய அனுமதி கேட்டது அவர்களை வணங்குவதற்கு அல்ல மரியாதைக செய்வதற்கு என்பதை இலகுவாக புரியலாம். ஆகவே நீங்கள் கொண்டு வந்த முதல் ஆதாரம் தவிடுபொடியாகிவிட்டது.

-சிம்மாசனத்தில் அமர்த்தி கட்டுப்பட்டார்கள்- என்ன அர்த்தம் வருகிறது என்னுடைய முன்னைய பதிவில் கேட்டுள்ளதை தெளிவாக விளக்கவும்.

இருக்கிற சில சந்தர்ப்பங்களில் ஆணித்தரமான உங்கள் ஆதாரங்களை கொண்டு வரவும். எனக்கு பதில் அளிக்க முடியாத இறுதிப்பதிவில் ஆதாரங்கள் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.



Nashid Ahmed


மூன்றாம் வாய்ப்பின் இறூதியிலேயே நிலைமை தெளிவாகி விட்டது.

நீண்ட வாய்ப்புகளோ வாதங்களோ இதற்கு தேவையேயில்லை.

41:37 வசனம் சஜதாவை பற்றி பேசுகிறது. அதிலுள்ள சஜதா, சிரம் பணிதல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய சிரம் பணிதல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் செய்ய வேண்டும் என்கிறது.

இப்போது 12:100 வசனத்திலும் சஜதா என்கிற வார்த்தை வருகிறது. இதற்கு சிரம் பணிதல் என்கிற அர்த்தமா அல்லது கட்டுப்படுதல் என்கிற அர்த்தமா? என்பது சர்ச்சை.

அல்லாஹ்வுக்கு மட்டும் தான் சிரம் பணிய வேண்டும் என்று 41:37 வசனம் தெளிவாக சொல்லி விட்டது. அப்படியானால் நிச்சயமாக 12:100 வசனம் சிரம் பணிதலை சொல்லாது, ஏனெனில் சிரம் பணிதல் அல்லாஹ்வுக்கு தான்.

இப்போது இதற்கு பதில் சொல்லும் நீங்கள், 12:100 இல் சஜதா என்பதற்கு சிரம் பணிதல் என்று பொருள் கொள்ள தான் வேண்டும் ஆனால் அது மரியாதைக்குரிய சிரம் பணிதல் என்கிறீர்கள்.

எந்த நிமிடத்திலிருந்து எதிர் தரப்பில் இது போன்ற வரட்டு வாதங்கள் எழுகின்றனவோ, அந்த நிமிடத்தில் எதிர் தரப்பில் கைவசம் சரக்குகள் இல்லை என்று அர்த்தமாகும்.

மரியாதைக்கு சிரம் பணியலாமா? 41:37 வசனத்தின் படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் மரியாதைக்கு சிரம் பணியலாம் என்று தான் சொல்கிறதா?

கேட்டால் அந்த வசனம் வணக்கத்தை பற்றி பேசுகிறது என்கிறீர்கள். 

அதிலும் உங்களுக்கு போதிய ஞானமில்லை. வணக்கத்திற்காக சிரம் பணியாதீர்கள் என்று 41:37 வசனம் சொல்லியிருந்தால் தான் பார்த்தீர்களா, வணக்கத்திற்காக தான் சிரம் பணியாதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான், ஆகவே மரியாதைக்கு சிரம் பணியலாம் என்று அர்த்தம் வைக்கலாம்.

ஆனால், அந்த வசனத்தில் அல்லாஹ் அப்படி சொல்லவில்லை. நீங்கள் சிரம் பணியாதீர்கள், அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால் அவனுக்கே சிரம் பணியுங்கள் என்கிறான்.

அதாவது சிரம் பணிவதன் அர்த்தமே வணங்குவது ! அதை யாருக்கு செய்தாலும் அது வணக்கமாக தான் கருதப்படும். சூரியனுக்கு சிரம் பணிந்தால், நான் மரியாதைக்காக சிரம் பணிகிறேன் என்று சொன்னால் கூட அது அல்லாஹ்வால் வணக்கமாக தான் கருதப்படும். அதனால் தான், என்னை வணங்குவதாக இருந்தால் எனக்கு சிரம் பணியுங்கள் என்கிறான். அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்தால் தான் அல்லாஹ்வை வணங்குவதாக ஆகும். 

ஆக, எனது வாதம் நிலையாக தான் இருக்கிறது. உங்களது அறியாமை, எனது ஆதாரத்தை தவிடு பொடியாக்காது, உங்கள் சிந்தனையை தான் அது தவிடு பொடியாக்கும்.

12:100 வசனத்தில் சொல்லப்படும் சஜதாவிற்கு சிரம் பணிதல அர்த்தம் வராது என்பதற்கு நான் வைக்கும் இன்னொரு ஆதாரம், அந்த வசனத்தில் யூசுஃப் நபியின் சகோதரர்கள் யாகூப் நபிக்கு சஜதா செய்கிறார்கள், அதை பற்றி யாகூப் நபியிடம் யூசுஃப் நபி சொல்லும் போது, இது தான் நான் முன்பு கண்ட கனவின் விளக்கமாகும் என்று சொல்கிறார்கள்.

அவர்கள் கண்ட கனவு என்ன என்பது பற்றி அதே அத்தியாயத்தில் 4 ஆம் வசனம் சொல்கிறது. அதில், சூரியன் , சந்திரன் தமக்கு சஜதா செய்வதாக அவர்கள் கனவில் கண்டார்கள்.
தம்மீது பழி சுமத்தி சிறைக்கு அனுப்பிய சகோதரர்கள் மனம் மாறி விடுவதை பற்றிய கனவு தான் அது. அது மெய்யாகும் விதத்தில் இப்போது நடக்கிறது என்று ஒப்பீடு செய்கிறார்கள் யூச்ஃப் நபி.

12:4 இல் சூரியன் சஜதா செய்தது என்றல் சூரியன் சிரம் பணிந்தது என்று பொருள் செய்ய மாட்டோம், கட்டுப்பட்டது என்று தான் பொருள் செய்வோம். அதே வாசகம் தான் 12:100 இலும் வருகிறது என்பதால் இங்கும் அது கட்டுப்படுதல் என்கிற அர்த்தத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை புரியலாம்.

குர் ஆனிலிருந்து ஹதீசை விளங்க வேண்டும் என்றால் திருமணம் செய்ய தடை பற்றி ஹதீஸில் ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும் ஒரு சேர மணமுடிக்காதீர்கள் என்பதை எப்படி புரிவது என்று கேட்கிறீர்கள். ஒரு சேர மணமுடிக்கலாம் என்று குர் ஆன் சொல்லியிருந்தால் தான் இது முரண் என்போம். குர் ஆன் இதை பற்றி பேசவேயில்லை, ஹதீஸ் இதை சொல்கிறது என்றால் ஹதீஸில் கூடுதல் விளக்கம் இருக்கிறது என்று பொருள்.
குர் ஆனில் 3 வேளை தொழ சொல்லியிருக்கிறது, ஹதீஸில் 5 வேளை உள்ளது என்கிறீகள். இது உங்களது அறியாமை. குர் ஆனிலும் 5 வேளை தொழுகை பற்றி சொல்லித்தான் இருக்கிறது. நீண்ட விளக்கமாக அமையும் என்பதால் இதை வேண்டுமானால் தனி தலைப்பில் விளக்குகிறேன்.

மலக்குமார்களை ஆதம் நபிக்கு சஜதா செய்ய சொன்னது மரியதை நிமித்தம் சிரம் பணிய சொன்ன அர்த்தமாகும் என்கிறீர்கள். அது சிரம் பணிதலே இல்லை என்கிறேன் நான்.
ஒரு வசனம் மிகத் தெளிவாக சிரம் பணிதல் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்று சொல்லி விட்டால், அது போல் வரும் எந்த வசனத்தையும் அதற்கு முரணில்லாமல் தான் புரிய வேண்டும். ஆதம் நபிக்கு மலக்குமார்களை கட்டுப்படவும் மரியாதை செலுத்தவும் தான் அல்லாஹ் சொல்கிறானே தவிர சிரம் பணிய அல்ல !

ஏனெனில், 41:37 வசனம், வணக்கம் என்கிற நோக்கில் சிரம் பணியாதீர்கள் என்று சொல்லவில்லை. அல்லாஹ்வை வணங்கக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அல்லாஹ்வை தவிர வேறு எவருக்கும் சிரம் பணியாதீர்கள் என்று தெளிவாக சொல்கிறது.
மற்றொரு முக்கியமான சான்று ஒன்றை அடுத்த வாய்ப்பில் காணலாம். 

உங்களுக்கு பதில் சொல்லவும் வாய்ப்பளித்து நான் எத்தனை ஆதாரம் தந்தாலும் அவைகளுக்கு உங்களால் உருப்படியான விடையை சொல்ல முடியாது என்று எமக்கு தெரியும் என்பதால் உங்களுக்கு பதில் அளிக்க வாய்ப்பில்லாத கடைசி வாய்ப்பில் எந்த புது ஆதாரத்தையும் வைக்க மாட்டேன்.
அது விவாத நெறிமுறைக்கும் மாற்றம் என்பதை நான் அறிவேன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக