புதன், 11 டிசம்பர், 2013

ஷைத்தான் உடல் உபாதை செய்வானா?


ஷைத்தானின் ஆற்றல் என்பது உள்ளத்தில் கெட்ட எண்ணங்களை இடுவதும் அதன் மூலம் நம்மை வழிகெடுப்பதும் தானே தவிர, உடல் உபாதைகள் செய்வது அவனது ஆற்றலில் உள்ளவை இல்லை.

இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றாலும், உடல் உபாதைகளை செய்யலாம் என்கிற கருத்துடையவர்கள் தங்கள் நிலைபாட்டுக்கு சான்றாய், அய்யுப் நபி தமக்கு ஏற்பட்ட நோயினை ஷைத்தான் தந்தது என்று சொல்வதையும், வட்டி வாங்கியவர் ஷைத்தானால் பைத்தியமாக்கப்பட்டவர் போல் எழுவார் என்கிற இறை வசனத்தையும் காட்டுவர்.

ஷைத்தானின் சக்தி என்ன என்பதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் எண்ணற்ற சான்றுகள் இருக்கும் போது அவைகளுக்கு முரணில்லாத வகையில் தான் மேற்கூறிய இரு வசனங்களையும் புரிய வேண்டும்.

பொதுவாக நன்மைகளை அல்லாஹ்வுடன் தொடர்புபடுத்தியும், கெட்டவைகளை ஷைத்தானுடன் தொடர்புப்படுத்தியும் சொல்லும் வழமை மார்க்கத்திற்கு உட்பட்டது தான்.

இதை முஸ்லிம் 1848 தெளிவாக விளக்குகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கனவின் மூலம் கண்டவைகளாக சொல்லப்படும் செய்தியில், நன்மை யாவும் அல்லாஹ்வே, உன் புறத்திலிருந்து வருபவை எனவும், தீங்குகள் அல்லாஹ்வோடு தொடர்புடையவையல்ல‌ எனவும் சொல்கிறார்கள்.

நன்மையும் தீமையும் அல்லாஹ்வின் ஏற்பாடு என்ற போதிலும், அல்லாஹ் நன்மையையே நமக்கு அளிப்பான் என்பதாலும், மனிதனின் கெட்ட செயல்களுக்கு ஷைத்தானை காரிணியாக அல்லாஹ்வே படைத்திருக்கிறான் என்பதாலும், தீமைகளை அல்லாஹ்வுடன் தொடர்புப்படுத்த நபியவர்கள் விரும்பவில்லை.

நபி காலத்து நயவஞ்சகர்கள்,
தொழுகையின் போது குறுக்கே செல்பவர்கள்,
தூக்கத்தின் போது மூக்கில் படியும் அசுத்தங்கள்,
கொட்டாவி விடும் போது வாய்க்குள் நுழையும் பூச்சிகள்,
மாலை நேரத்தில் உலவும் நச்சுப்பிராணிகள்,
ஒட்டகங்கள்

என பலவற்றை ஷைத்தான் என அல்லாஹ்வும் அவனது தூதரும் உவமையாக சொல்லியிருக்கிற ஏனைய சான்றுகளும் குர் ஆன் ஹதீஸ்களில் உள்ளன !

புரிய வேண்டிய முறையில் புரிகிற போது மார்க்கம் எளிமையானதே !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக