புதன், 11 டிசம்பர், 2013

அஜ்வா முறிப்பது என்ன வகை விஷம்?


விஷத்தை முறிக்கும் ஆற்றல் அஜ்வா பழத்திற்கு உண்டு என்கிற செய்தியை நியாயப்படுத்த, சிலர் மிகவும் பலகீனமான வாதங்களை வைப்பதை காண்கிறோம்.

அதில் சொல்லப்படும் விஷம் என்பது பொதுவாக அனைத்து வகை விஷத்தையும் குறிக்காது என்கின்றனர் இவர்கள்.

குறிப்பு சொல், பொது சொல் என இரு வகை சொற்கள் எல்லா மொழிகளிலும் உள்ளதாகும். "வீடு" என்பது பொது சொல்லாகவும், "அந்த வீடு" என்பது குறிப்பு சொல்லாகவும் பொருள் தருகிறது. குறிப்பு சொல்லாக ஒன்றை சொன்னால் மட்டும் தான் பல வகைகளில் ஒரு குறிப்பிட்ட வகை என்று புரிய‌ வேண்டும். அல்லாமல், பொதுவாக ஒன்றை சொன்னால் அது பொதுவாக அனைத்தையுமே தான் உள்ளடக்கும்.

அஜ்வா தொடர்பான ஹதீஸில் விஷம் என்று நாம் மொழியாக்கம் செய்திருக்கும் சொல்லுக்கு "சம்" என அரபியில் உள்ளது. இது, பொதுவாக எந்த வகையான விஷத்தையும் குறிக்கும் சொல்லாகும். உடலில் ஏற்படும் டாக்சின் என்று இதை குறிப்பு சொல்லாக ஆக்குவதற்கு எந்த முகாந்திரமும் இதில் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூத பெண்மணி விஷம் வைத்து கொல்ல முயற்ச்சித்ததாக வரக்கூடிய செய்தியில் கூட இதே சம் என்கிற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஹதீஸுக்கு உடலிலோ அல்லது வேறு காரணங்களின் மூலமாகவோ உருவாகும் டாக்சின் என்று எதிர் கொள்கையுடையவர்கள் உட்பட எவருமே பொருள் செய்ய மாட்டார்கள்.

இன்னும் சொல்லப்போனால், சம் என்கிற வார்த்தை அக்கால மக்கள் மத்தியில் விஷம் என்கிற பொதுப் பெயருக்கு தான் பயன்பட்டது. இன்று உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், அதனால் உருவாகும் டாக்சின்கள் என்பதெல்லாம் நபியின் காலத்தில் எவருக்கும் தெரியாத ஒன்று.
அத்தகைய ஞானம் இல்லாத கால சூழலில் "சம்" என்று குறிப்பிட்டு சொன்னால், அதன் பொதுப்பெயரில் தான் அதற்கு அர்த்தம் வைத்தார்கள் என்று புரிய வேண்டுமே அல்லாமல், அக்கால மக்களுக்கு விளங்காத அர்த்தத்தில் பேசினார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது.

ஹதீசுக்கு முட்டுக் கொடுக்க, இவர்களாக அர்த்தங்களை திணிக்கிறார்களே அல்லாமல், சத்தியம் இவர்களிடம் இல்லை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக