வெள்ளி, 26 ஜூன், 2015

உலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை




உலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை :

ஆதம் நபியை அல்லாஹ் படைத்து இந்த பூமியின் அனைத்து ஆற்றலையும் அறிவையும் அவர்களுக்கு வழங்கியதாக சொல்கிறான்.
இன்று மனிதன் சொந்தம் கொண்டாடும் எல்லா அறிவும் ஆற்றலும், ஆதம் நபியிடமிருந்து வந்தவை தான் என்கிற அளவிற்கு அனைத்து அறிவையும் ஆதம் நபிக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான்.

அத்தகைய பேரறிவு கொண்ட ஆதம் நபி அல்லாஹ்வின் கட்டளையை மீறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தை நெருங்காதே என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்க, அதை மீறி அந்த மரத்தை நெருங்குகிறார்கள்.
கோபமுற்ற அல்லாஹ் அவரை அங்கிருந்து வெளியேற்றுகிறான்.

சரி, வெளியேற்றும் போதாவது, உனக்கிருக்கும் அறிவை கொண்டு நீ இவ்வுலகில் வாழ்ந்து கொள் என்று அல்லாஹ் சொன்னானா? என்றால் அப்படி அவன் சொல்லவில்லை.

திருமறை குர் ஆனில் அல்லாஹ் இது பற்றி சொல்லும் போது,

'இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள் என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்' என்று கூறினோம்.(2:38)

என்னிடமிருந்து நேர்வழி வரும் என்று தான் பெரும் அறிவு மேதையான ஆதம் நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். 
இன்னும் சொல்லப்போனால், மனித குலத்திற்கு அல்லாஹ்வால் இட‌ப்பட்ட முதல் கட்டளையும் இது தான்.

ஆக, பேராற்றலும் அறிவும் கொண்ட ஆதம் நபிக்கே சுயமாக நன்மை தீமைகளை முடிவு செய்யும் அதிகாரத்தை அல்லாஹ் வழங்கவில்லை எனும் போது, அவர்களை விடவும் பல மடங்கு அறிவு குறைவு உள்ள நம்மைப் போன்ற மனிதர்களுக்கு அல்லாஹ் அந்த அதிகாரத்தை வழங்கி விடுவானா? நிச்சயம், அதிகாரங்கள் அனைத்திற்குமான முழு உரிமை படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்று இதன் மூலமும் தெளிவாகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக