வெள்ளி, 26 ஜூன், 2015

ஆற்றல் அனைத்தும் அல்லாஹ்வுக்கே




ஆற்றல் அனைத்தும் அல்லாஹ்வுக்கே :


ஒட்டு மொத்த அண்ட சராசரங்களும் ஒரு நாள் அழியும். அப்போதும் அல்லாஹ்வின் திருமுகம் மட்டும் நிலைத்திருக்கும், அவனே நித்திய ஜீவன். அவனே எல்லா பொருட்களின் மீதும் முழு ஆற்றல் கொண்டவன்.

இதைப் பற்றி அல்லாஹ் திருமறையில் சொல்லும் போது, உங்கள் தீனை (மார்க்கத்தை) எனக்கு நீங்கள் கற்றுத் தருகிறீர்களா? என்று மிகக் கடுமையாக கேட்கிறான்.

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளை யும் அறிந்தவன் என்று கூறுவீராக! (49:16)

அல்லாஹ்வுக்கே அனைத்து ஆற்றல்களும் இருக்கின்றன எனும் போது அவனுக்கு தெரியாதவை என்ன?

ஒரு விஷயத்தில் ஒரு சட்டத்தை ஒருவர் வகுக்க வேண்டுமானால் அவர் அதில் முழு ஆற்றலையும் பெற்றவராக இருக்க வேண்டும்.
அதற்கு தான் அல்லாஹ் இவ்வசனத்தில் கேட்கிறான், மனிதனாகிய நீ சட்டம் வகுக்கிறாயே, உனக்கு இவ்வுலகிலுள்ள அனைத்தும் தெரியுமா?
வானத்தில் உள்ளவை பற்றி உனக்கு தெரியுமா?
மறைவானவை பற்றி உனக்கு தெரியுமா?

இத்தகைய எந்த அறிவும் இல்லாத அற்பத்திலும் அற்பமான மனிதன் ஒரு சட்டத்தை வகுக்க வேண்டுமா அல்லது அனைத்து பொருட்களின் மீதும் எல்லா ஆற்றல்களையும் கொண்டிருக்கும் அந்த மகத்தான அல்லாஹ் சட்டமியற்ற வேண்டுமா?

சட்டமியற்றும் எந்த தகுதியும் மனிதனுக்கு கிடையாது என்பதை அல்லாஹ் மிகக் கடுமையாக, அதற்கான காரணங்களோடு சொல்கிறான் என்பதை நாம் புரிய வேண்டும்.

இது மட்டுமல்லாமல், அதிகாரம் என்பது அல்லாஹ்வின் கைகளில் மட்டும் தான் என இன்னும் பல்வேறு வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர் கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது' என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.' (12:40)

'நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்' என்றும் கூறுவீராக! (6:57)

என் மக்களே! ஒரே வாசல் வழி யாக நுழையாதீர்கள்! பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அல்லாஹ்விட மிருந்து சிறிதளவும் உங்களை நான் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருக்க வேண்டும்' என்றார். (12:67)

மேற்குறிப்பிடப்பட்ட எல்லா வசனங்களிலும், அதிகாரம் என்பது அல்லாஹ்வின் புறத்தில் மட்டும் தான் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

யாருக்கு முழு அதிகாரமும் இருக்கிறதோ அவன் மட்டும் தான் சட்டமியற்ற முடியும்.

அதுவல்லாமல், அந்த மனிதர் சட்டமியற்றுவார், இந்த மனிதர் சொல்வதும் மார்க்கம், அந்த இமாம் சொல்லி விட்டால் அது ஃபர்ல், இந்த இமாம் சொல்லி விட்டால் அது ஹராம் என்று நாம் எவரைப் பற்றியாவது நம்பினோம் என்று சொன்னால், அல்லாஹ்வுக்கே எல்லா அதிகாரமும் என்கிற வசனத்தையும், மனிதனின் சொந்தக்காரனும் இந்த மார்க்கத்தின் சொந்தக்காரனும் அல்லாஹ் ஒருவன் தான் என்பதாக வரக்கூடிய எல்லா இறை வசனங்களையும் நாம் அப்பட்டமாக‌ மறுக்கிறோம் என்று பொருளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக