சனி, 20 ஜூன், 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் 2)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 2


மார்க்கத்தில் அல்லாஹ் குறை வைத்து விட்டானா?

அல்லாஹ் தான் இந்த மார்க்கத்திற்கு உரிமையாளன் என்று நாம் சொல்லும் போது, நாம் எப்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்ளுமாறு அவன் எதிர்பார்க்கிறானோ அந்த முறையில் நாம் அமைத்துக் கொண்டால் தான் நம்மால் மறுமையில் வெற்றி பெற முடியும்.
எனவே தான், அல்லாஹ் தான் இந்த மார்க்கத்தின் உரிமையாளன் என்கிற கருத்தையும், எல்லா அதிகாரமும் தனக்கு மட்டுமே இருப்பதாகவும் திருமறை குர் ஆனில் பல்வேறு இடங்களில் சொல்லிக் காட்டுகின்றான்.


அறியாமைக் காலத் தீர்ப்பைத் தான் அவர்கள் தேடுகிறார்களா? உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட அழகிய தீர்ப்பளிப்பவன் யார்?
(5:50)

யார் சொல்வதை கேட்கப் போகிறீர்கள்? என்று அல்லாஹ் கேட்டு விட்டு கூடவே, அல்லாஹ்வின் தீர்ப்பே வெற்றி தரக் கூடியது என்றும், மற்ற எவரது தீர்ப்பாக இருந்தாலும் அவற்றை பின்பற்றுவது என்பது அறியாமை, அது தோல்வியை அளிக்கக் கூடிய செயல் எனவும் கூறுகிறான்.


இன்னும் சொல்லப்போனால், எவர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு மற்ற மனிதர்களின் கூற்றின் பின்னால் செல்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு அல்லாஹ் போதவில்லை என்று கருதுகிறார்கள் என்றே பொருள்.
அல்லாஹ்வுக்கு விளக்கிச் சொல்ல தெரியவில்லை என்றும், மார்க்கத்தில் ஏதோ குறை வைத்து விட்டான் எனவும் இவர்கள் நம்பினால் மட்டுமே அல்லாஹ்வை விட்டு விட்டு இன்னொருவரின் கூற்றை மார்க்கமாக ஏற்பார்கள்.

இதைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது,

உமக்கு இவ்வேதத்தை நாம் அருளி, அது அவர்களுக்குக் கூறப்படுவது அவர்களுக்குப் போதவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் அருளும், அறிவுரையும் உள்ளது. (29:51)

அல்லாஹ் அருளிய வஹியில் தான் அருளும் அறிவுரையும் இருக்கிறது. இதை விட்டு விட்டு வேறு பக்கம் நீங்கள் செல்கிறீர்கள் என்றால் அல்லாஹ் உங்களுக்கு போதவில்லையா? என்று மிக அழகான முறையில், பாமரனுக்கும் புரிகிற தெளிவான நடையில் அல்லாஹ் கேட்கிறான்.

இன்னும் அல்லாஹ் தமது திருமறையில் சொல்லும் போது,

(முஹம்மதே!) இவை அல்லாஹ்வின் வசனங்கள். இதை உண்மையுடன் உமக்குக் கூறுகிறோம். அல்லாஹ்வுக்கும், அவனது வசனங்களுக்கும் பிறகு வேறு எந்தச் செய்தியைத் தான் அவர்கள் நம்புவார்கள்? (45:6)

இதே கருத்தை 77:50 வசனத்திலும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.


அல்லாஹ்வின் வசனங்கள் இவர்களுக்கு போதவில்லை என்றால் வேறு எது தான் இவர்களுக்கு வேண்டும்?
அல்லாஹ்வின் வசனங்களை இவர்கள் நம்பவில்லை என்றால் வேறு எதை தான் நம்ப முடியும்? என்று அழுத்தம் திருத்தமாக அல்லாஹ் கேட்பதிலிருந்து,
சட்டமியற்றும் முழு அதிகாரமும் அவனது கைகளில் மட்டுமே உள்ளது என்பது தெளிவாக புரிகிறது.

அல்லாஹ்வை விட்டு விட்டு மனிதர்களின் தீர்ப்புக்காகவும் அவர்களின் விளக்கங்களை மார்க்க ஆதாரமாகவும் நாம் கொண்டோமென்றால், அந்த மனிதர்களை நாம் அல்லாஹ்வின் இடத்தில் வைக்கிறோம் என்று தான் அர்த்தமாகிறது.
அல்லாஹ்வின் அதிகாரத்தில் வேறு எவருக்கும் துளியளவு பங்கும் கிடையாது என்பதை அடிப்படை கொள்கையாக நாம் புரிய வேண்டும்.

இத்தனை வசனங்கள் வாயிலாகவே இவ்விஷயம் தெளிவாக புரிகிறது என்ற போதிலும், பாமரர்களுக்கும் புரியும் வகையில் இன்னும் அதிகமதிகமாக குர் ஆன் விளக்குவதை பாருங்கள்

நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவ்விரண்டை விட நேர் வழி காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள்! அதைப் பின்பற்றுகிறேன்' என்று கூறுவீராக! (28:49)

அல்லாஹ்வை தவிர வேறு எவரும் சிறப்பானதொரு சட்டத்தை இயற்றி விட முடியாது, அப்படி எவரேனும் நம்புவீர்கள் என்றால் அதை கொண்டு வாருங்கள், நான் அதை பின்பற்றுகிறேன் என்று நபி (சல்) அவர்களை சொல்லச் சொல்கிறான் அல்லாஹ்.

உயர்ந்தோனாகிய அல்லாஹ் இயற்றும் சட்ட திட்டங்கள் தான் மேன்மையானது, ஏனெனில் அவனே இந்த மார்க்கத்திற்கும், இந்த அண்ட சராசரங்களுக்கும், அனைத்து படைப்பினங்களுக்கும் அதிபதி.
இது தவிர, வேறு யார் எதை இயற்றிக் கொண்டு வந்தாலும், தரத்திலும் தகுதியிலும் அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் நெருங்கக் கூட முடியாது என்பதை இவ்வசனங்கள் தெளிவாக பிரகடனம் செய்கிறது !


அல்லாஹ்வின் வஹி மட்டுமே மனிதன் பின்பற்ற வேண்டியவை என்பதை 6:106, 33:2 போன்ற இன்னும் ஏராளமான‌ வசனங்களில் அல்லாஹ் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுவதை கவனியுங்கள்.

அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதை மட்டும் தான் நபியே நீர் பின்பற்ற வேண்டும் என்று நேர்மறையாக பல வசனங்களில் சொன்ன இறைவன், 7:3 வசனத்தில் அதையே எதிர்மறையாகவும் சொல்லிக் காட்டி அதன் முக்கியத்துவத்தை அழுத்தப்படுத்துகிறான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (7:3)

அல்லாஹ்விடமிருந்து அருளியதை பின்பற்றுங்கள் என்று சொன்னாலே வேறு எதையும் பின்பற்றக் கூடாது என்கிற கருத்து அதிலேயே ஒளிந்து தான் இருக்கிறது என்ற போதிலும், மற்ற எவரையும் பின்பற்றாதீர்கள் என்று அதையே எதிர் மறை வாசகத்தோடும் அல்லாஹ் சேர்த்து சொல்வதிலிருந்து இது விஷயமாக அல்லாஹ் எந்த அளவிற்கு நம்மை எச்சரிக்கிறான் என்பதை நாம் உணர வேண்டும்.

இன்னும் 5:48 வசனத்தில் அல்லாஹ் சொல்லும் போது,

உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை  உண்மைப் படுத்துவதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்ப ளிப்பீராக! உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! (5:48)


ஆக, இவையெல்லாமே நமக்கு உணர்த்துவது ஒரேயொரு செய்தியை தான்.

அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்ட வஹீ மட்டுமே இஸ்லாத்தின் மூல ஆதாரமாக நாம் கருத வேண்டும். அதை தவிர்த்து, அதை புறந்தள்ளி வேறு எவரது கூற்றுக்காவது நாம் முன்னுரிமை கொடுப்போமேயானால் அது அல்லாஹ்வின் கோபத்தை ஏற்படுத்தும் செயலாக கருதப்படுமே தவிர மறுமையில் எள்ளளவும் நம்மால் வெற்றி பெற முடியாது.

இன்னும் சொல்வதானால், இந்த அடிப்படையை நாம் ஒவ்வொரு மார்க்க மசாயில்களுடனும் உரசிப் பார்க்கும் போது 99 சதவிகித குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்து விடும்.
மவ்லூது ஓத வேண்டும் என்று நமக்கு சொல்லப்பட்டால், நாம் முதலில் கேட்க வேண்டியது, இதை வலியுறுத்துகின்ற இறைவனின் வஹீ எது?

இன்னும், தர்கா செல்ல வேண்டுமா, மீலாது, தட்டு தாயத்து.. என எதை மார்க்கமாக நமக்கு சொன்னாலும், நாம் கேட்க வேண்டியது,

எந்த குர் ஆன் வசனத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது? எந்த ஹதீஸில் இதற்கு ஆதாரம் இருக்கிறது?

இரண்டிலும் இல்லை, இன்னார் தான் சொன்னார்கள், இந்த இமாம் தான் இதை சரி கண்டார்கள் என்றால், அவை தூக்கி வீசப்பட வேண்டியவை !
அதற்கும் மார்க்கத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்கிற புரிதலில் நாம் நின்றால் குர் ஆன் ஹதீஸ் என்கிற இந்த தூய வழியில் அனைவரும் எளிதில் ஒன்றுபட முடியும்.

எல்லா குழப்பங்களுக்கும் எளிதில் தீர்வு கிடைக்கும். இந்த அடிப்படையை நாம் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இதுவரை, வஹி மட்டும் தான் நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படை என்பதை அல்லாஹ்வின் கூற்றுக்களை சான்றாகப் பெற்று அறிந்து வந்தோம்.

இந்த அடிப்படை இன்னும் ஆழமாக நம் மனதில் பதிய வேண்டும் என்பதற்காகவும், மறுமையில் நாம் கைசேதப்பட்டு நிற்கக் கூடாது என்கிற கருணைப் பார்வையுடனும், அல்லாஹ் தனது திருமறையில் கூறக் கூடிய மற்றுமொரு எச்சரிக்கையானது, நம் உள்ளத்தில் மிகவும் ஆழமாக பதியும் வகையில் இருக்கிறது.

அறியாத நிலையில் திடீரென்று உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னரும், 'அல்லாஹ்வின் கடமையில் நான் குறை வைத்ததற்காக எனக்குக் கேடு தான்; நான் கேலி செய்தவனாகி விட்டேனே' என்று எவரும் கூறுவதற்கு முன்னரும், 'அல்லாஹ் எனக்கு நேர் வழி காட்டியிருந்தால் (அவனை) அஞ்சுவோரில் ஆகியிருப்பேனே' என்று கூறுவதற்கு முன்னரும், வேதனையைக் காணும் நேரத்தில் 'திரும்புதல் எனக்கு இருந்தால் நல்லோரில் ஆகியிருப்பேனே' என்று கூறுவதற்கு முன்னரும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட அழகானதைப் பின்பற்றுங்கள்!
'மாறாக, உன்னிடம் எனது வசனங்கள் வந்தன. அவற்றை நீ பொய்யெனக் கருதினாய். ஆணவம் கொண்டாய். (என்னை) மறுப்பவனாக இருந்தாய்' (எனக் கூறப்படும்.)(33:55 ‍‍‍ 59)

அறியாத நிலையில் திடீரென வேதனை நம்மை தாக்குவதற்கு முன்னரும், அல்லாஹ்வின் சொல்லையே பின்பற்றியிருக்கலாமே, நான் தவறிழைத்து விட்டேனே என்று நாம் மறுமையில் புலம்பும் நிலை ஏற்படுவதற்கு முன்னரும் இந்த அடிப்படை கொள்கையான வஹி மட்டுமே மார்க்கம் என்கிற புரிதலை மனதில் கொண்டு விடுங்கள் என்று இவ்வசனங்கள் மூலமும் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.

வஹீ மட்டும் தான் மார்க்கம் என்கிற கொள்கையை கொண்டவனுக்கு இவ்வாறு மறுமையில் புலம்புகிற நிலை ஏற்படாது.
அல்லாஹ்வின் வஹியை விட்டு விட்டு எவர் வழி தவறி, அறிஞர்கள், இமாம்கள் என சென்றார்களோ அவர்கள், தாங்கள் அனைத்தையும் சரிவர செய்து விட்டோம் என்று உலகில் வாழும் போது இறுமாப்புடன் இருந்து வந்தாலும், நாளை மறுமையில் அவர்கள் சம்பாதிப்பவை அனைத்தும் பூஜியமாக நிற்பதை அறிவர்.

இவ்வுலகில் அவர்கள் செய்து வந்த தொழுகை, நோன்பு, சகாத், ஹஜ், உம்ரா இன்ன பிற நல்லமல்கள் என எதுவாயினும் அவை அல்லாஹ்விடம் எந்த மதிப்பும் இல்லாததாய் நிற்கும்.
அத்தகைய பரிதாபகரமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்றால் இவ்வுலகில் வாழும் போதே தங்கள் நிலையை அவர்கள் சீர்தூக்கிப் பார்த்துக் கொள்வது அவசியம்.
அதை தான் இந்த வசனங்கள் மூலமாக அல்லாஹ் அறிவுறுத்துகிறான்.


குர் ஆன் நமக்கு விளங்காதா?

இறைவனின் வஹீ மட்டும் தான் மார்க்கத்தின் மூல ஆதாரம் என்கிற இந்த பிரச்சாரத்தை நாம் செய்கின்ற போது, இதற்கு நேரடியாக எந்த பதிலும் சொல்ல இயலாதவர்கள், எப்படியாவது தாங்கள் சார்ந்திருக்கும் மதுஹப், சலஃபு கொள்கைகளை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக முன்வைக்கும் வாதம், குர் ஆன் பாமரர்களுக்கு விளங்காது, எனவே அதை விளக்கித்தர ஒரு இமாம் எங்களுக்கு தேவைப்படுகிறார்,என்பதாகும்.

இது போன்ற மிக மோசமான, ஆபத்தான‌ கருத்து வேறு உண்டா?

அல்லாஹ்வின் வஹியான குர் ஆன் மனிதர்களுக்கு விளங்காது என்றால், இதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?
அல்லாஹ்வுக்கு சரியாக விளக்கத் தெரியவில்லை என்று தானே இதன் பொருளாகிறது?
வஹியை பின்பற்றாமல் இருப்பதை காட்டிலும் மோசமான குற்றமில்லையா இது?

வஹியை மறுக்கின்ற முதல் குற்றம், அந்த வஹி மனிதர்களுக்கு புரியாது என அல்லாஹ்வை கேலி செய்கிற இரண்டாம் குற்றம் என்று, இரு வகைகளில் குற்றம் புரிவோர் தான் இத்தகைய வாதம் புரிகின்றவர்கள் என்பதை நாம் புரிய வேண்டும்.

அப்படியானால், என்னைப் போல் அழகாக விளக்க வேறு எவரால் இயலும் என்று அல்லாஹ் குர் ஆனில் கேட்கிறானே, அதற்கு என்ன பொருள்?

சரி, ஒரு வாதத்திற்கு அல்லாஹ்வின் குர்ஆன் நமக்கு விளங்காது என்பதனால் தான் மதுஹபு பக்கம் செல்கிறோம் என்பது சரியென்றால், மதுஹபு இமாம்களின் போதனைகளெல்லாம் என்ன தமிழ் மொழியிலா இருந்தன? இவர்கள் பின்பற்றி ஒழுகக் கூடிய ஷாஃபி இமாம், அபு ஹனீஃபா இமாம், மாலிக் இமாம், ஹம்பலி இமாம் ஆகியோரின் விரிவுரைகள் எல்லாம் தமிழில் தான் இருக்கின்றன என்று இவர்கள் சொல்ல வருகிறார்களா?

அவைகளும் அரபு மொழியில் தானே இருக்கின்றன?

அந்த இமாம்கள் அரபியில் எழுதினால் புரியும், அல்லாஹ் அரபியில் சொன்னால் புரியாதா?
எவ்வளவு அபத்தமான, மிக மோசமான வாதம் இது, என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

வெளி நாட்டில் வேலைக்கு செல்ல நமக்கு விசா வருகிறது, ஆங்கிலத்தில் அல்லது அரபியில் தான் அதில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு தமிழ் மட்டும் தான் தெரியும், எனவே இதை கிழித்துப் போடு என்று கிழித்துப் போடுவோமா அல்லது ஆங்கிலமோ அரபு மொழியோ தெரிந்தவர்களிடம் மொழியாக்கம் செய்து புரிந்து கொள்வோமா?

 உலகக் காரியங்கள் என்று வரும் போது, அவற்றை எப்படி புரிய முடியுமோ அப்படி புரிவதற்குரிய எல்லா முயற்சிகளையும் செய்யும் நாம், குர் ஆன் என்று வரும் போது, அது அரபியில் இருக்கிறது,எனக்கு அரபி மொழி தெரியாது என்று அதை உதாசீனப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

விசாவில் எழுதப்பட்டவைகளை தமிழில் மொழியாக்கம் செய்து புரிந்து கொள்ள நமக்கு இயலும் போது, குர் ஆனில் உள்ள அரபு வசனங்களை தமிழில் மொழியாக்கம் செய்து புரிய நமக்கு இயலாதா?

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், குர் ஆன் புரியாது என்று சொல்லி எந்த மதுஹபு நூற்களின் பக்கம் இவர்கள் சென்றார்களோ அந்த நூற்களும் அதே அரபு மொழியில் தான் இருக்கின்றன, அவற்றையெல்லாம் இவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்து புரிந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அப்படியானால், குர் ஆனை இவர்கள் எந்த அளவிற்கு கேலி செய்கிறார்கள், அல்லாஹ்வை இவர்கள் எந்த அளவிற்கு குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று பட்டவர்த்தனமாக தெரிகிறது.

ஆக, இது போன்ற வாதங்கள் எல்லாம் இவர்களது வழிகெட்ட சித்தாந்தத்தை தூக்கி நிறுத்த உதவவே உதவாது.


 இன்னும் சொல்லப்போனால், நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பட்ட சமுதாயம் கற்றறிந்த பண்டிதர்களை கொண்ட சமுதாயமாகவா இருந்தது? இல்லை.
அவர்கள் உம்மி சமுதாயமாக தான் இருந்தனர்.

"உம்" என்றால் தாய். எப்படி தாயை மட்டுமே சார்ந்திருக்கும் குழந்தைக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாதோ அதே போன்று அந்த மக்களும் இருந்த காரணத்தால் அவர்கள் உம்மி சமூகம் என்று அழைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு அரபு இலக்கணம் தெரியாது, இலக்கியம் தெரியாது, இன்று இவர்கள் எதையெல்லாம் காரணம் காட்டி குர் ஆன் நமக்கு புரியாது என்கிறார்களோ அவை எதையும் நபி (சல்) அவர்கள் காலத்து உம்மி சமூகமும் அறிந்து வைத்திருக்கவில்லை.

அத்தகைய  கல்வியறிவில்லாத சமூகத்தை தான் இந்த மார்க்கம் வென்றெடுத்தது,
எழுதவும் படிக்கவும் தெரியாத பெரும் பெரும் சாஹாபாக்களான பிலால், அம்மார், யாசிர், சுஹைப், சுமையா போன்றோரை இந்த குர் ஆன் ஈர்த்ததே, அது எப்படி?
குர் ஆன் பாமரர்களுக்குப் புரியாது என்றிருக்குமானால், அவர்களெல்லாம் எப்படி இஸ்லாத்திற்கு வந்தார்கள்?

கூட்டம் கூட்டமாக, சாரை சாரையாக இஸ்லாத்தை நோக்கி கடலென வந்தார்களே, அது எப்படி?
அரபு தீபகற்பம் முழுவதும் இஸ்லாத்தின் ஜோதி சுடர் விட்டெரிந்ததே, அது எப்படி?

இன்னும் சொல்லப்போனால், எந்த மொழியறிவைப் பற்றி இந்த வழிகேடர்கள் பேசுகிறார்களோ, அந்த மொழியறிவை இஸ்லாத்தின் எதிரியான அபு ஜஹல் தான் கொண்டிருந்தான்.
கல்வியறிவும், மொழியறிவும், இலக்கண, இலக்கிய ஞானமும் அவனுக்கு அதிகமிருந்த காரணத்தால் தான் அவனை அபுல் ஹுக்கும் (அறிவின் தந்தை) என்று அம்மக்கள் அழைத்தனர்.

ஆனால், அவனை இந்த இஸ்லாம் ஈர்த்ததா? இல்லை.

இத்தனை அறிவு இருந்தும் அல்லாஹ்வின் வேத வசனத்தை அவன் ஏற்காத காரணத்தால் தான் அவன் அபுல் ஹுக்கும் என்பதற்கு பதில் அபு ஜஹ்ல் ‍ அறியாமையின் தந்தை என்று பின்னர் அழைக்கப்பட்டான், என்பது தனி விஷயம்.

மொழியறிவு தான் இஸ்லாம் ஈர்க்கப்படுவதற்கு காரணம் என்றால், மொழியறிவு தான் குர் ஆன் ஒருவருக்கு புரிவதற்கு காரணமென்றால், அபு ஜஹல் குர் ஆனை புரிந்திருக்க வேண்டுமே, அவன் இந்த இஸ்லாத்தை ஏற்றிருக்க வேண்டுமே?
அது ஏன் நிகழவில்லை?
அதுவல்லாமல், எந்த கல்வியறிவும் இல்லாத பிலால் (ரலி) அவர்களும், அம்மார் (ரலி) அவர்கள் போன்றோரும் எப்படி குர் ஆனை விளங்கினார்கள்?

அல்லாஹ் தனது திருமறையில் சொல்லும் போது,

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (2:185)

என்கிறான்.

இந்த குர் ஆன், நேர் வழியை மிகவும் தெள்ளத் தெளிவாக காட்டும் என்று அல்லாஹ் சொல்லியிருக்கும் போது, இது பாமரர்களுக்கு புரியாது என்று சொல்லப்படுகிற கூற்று வழிகேடானது என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்.

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா? (54:17)

என்று கேள்வியெழுப்புகிறான்.

குர் ஆன் என்பது பாமரர்களுக்கு புரியவே செய்யாது என்று இந்த வழிகெட்ட கூட்டம் சொல்கிறது.
அல்லாஹ்வோ, நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக தான் இதை எளிதாக்கியிருக்கிறேன் என்கிறான்.

இன்னும்,31:20, 3:184, 65:11 போன்ற ஏராளமான வசனங்களில் அல்லாஹ் சொல்லும் போது, இந்த குர் ஆனை பிரகாசிக்கும் ஒளியுடன் ஒப்பீடு செய்கிறான்.

ஒளி எப்படி ஒரு இடத்தில் நாம் செல்ல வேண்டிய பாதையை துல்லியமாக காட்டுமோ,
நம் பாதையில் உள்ள தடைகளை, கற்களை, முட்களையெல்லாம் தெளிவாக அடையாளம் காண ஒளி எப்படி நமக்கு அவசியமோ அது போன்று, நம் வாழ்வில் நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, சரி, தவறு, ஹலால், ஹராம்கள் என எதுவாயினும், இந்த குர் ஆன் அவற்றை பிரித்துக் காட்டும்.
தெளிவாகவே பிரித்துக் காட்டும் !
இந்த வாக்குறுதியை அல்லாஹ் நமக்கு இவ்வசனங்கள் மூலமாக அளிக்கிறான்.

மற்றுமொரு வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

 அழகிய செய்தியை அல்லாஹ்வே அருளினான். அது திரும்பத் திரும்பக் கூறப்பட்டதாகவும், ஒன்றையொன்று ஒத்ததாகவும் உள்ளது. தமது இறைவனை அஞ்சுவோரின் தோல்கள் இதனால் சிலிர்த்து விடுகின்றன. பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் அல்லாஹ்வை நினைப்பதற்காக மென்மையடைகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர் வழி. இதன் மூலம், தான் நாடியோருக்கு அவன் நேர் வழி காட்டுகிறான் (39:23)

அதாவது, அல்லாஹ்வின் வசனம் என்பது பாமரர்களுக்குப் புரியாது என்கிற வழிகெட்ட கொள்கைவாதிகளின் பொய்ப் பிரச்சாரத்திற்கு மரண அடி கொடுக்கும் வகையில் இவ்வசனமானது குர் ஆனைப் பற்றி எடுத்துச் சொல்கிறது.

குர் ஆன் வசனம் ஓதப்பட்டால் அது வெறுமனே புரிய மட்டும் செய்யாது.மாறாக, நமது தோல்கள் சிலிர்த்து விடும். அந்த அளவிற்கு மிகவும் ஆழமான தாக்கத்தை நம் உள்ளங்களில் ஏற்படுத்தவல்ல ஆற்றல் பெற்றது தான் அல்லாஹ் அருளியிருக்கும் திருக் குர் ஆன்.
படித்தால் புரியவே செய்யாது என்கிற வாதம் உண்மையென்று இருக்குமானால், உள்ளத்தில் இத்தகைய தாக்கத்தை அது உருவாக்கும் என்கிற அளவிற்கு அல்லாஹ் அதைப் பற்றி சிலாகிப்பானா? என்கிற கண்ணோட்டத்தில் நம் சிந்தனையை செலுத்தினாலும் இந்த குர் ஆன் என்பதும் படிப்போருக்கு மிகவும் எளிமையாகவே அல்லாஹ்வால் தரப்பட்டிருக்கிறது என்று புரியலாம்.

இன்னும் சொல்லப்போனால், அல்லாஹ்வின் வசனங்கள் மனிதர்களுக்கு புரிவது ஒரு பக்கம் இருக்கட்டும், மலைகளுக்கும் பாறைகளுக்கும் அறிவு வழங்கப்ப்ட்டிருக்குமானால், அவைகள் இதை புரிந்து, நடு நடுங்கி விடும் என்று அல்லாஹ் சொல்வது நமக்கு எதை காட்டுகிறது?

இதோ அந்த வசனம்..

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம். (59:21)


ஆக, அல்லாஹ்வின் வசனம் என்பது தெள்ளத் தெளிவானது. எந்த அமல்களையும் செய்ய இயலாத ஒரு மலைக்கு, அல்லாஹ் அறிவைத் தந்து இந்த குர் ஆன் வசனங்களை அதற்கு ஓதிக் காட்டினால், அல்லாஹ்வின் வசனத்தின் தாக்கமானது அந்த மலையையே கிடுகிடுங்க வைக்கும்.
அச்சத்தால் அது நடுங்கி விடும், என்று அல்லாஹ் சொல்கிறான் என்பதும் நமக்கு எதைக் காட்டுகிறது?

இந்த வேதம் அனைவரும் படித்து புரிந்து செயல்படுகிற அளவிற்கு மிகவும் எளிமையாகவே அல்லாஹ் அருளியிருக்கிறான்.

இன்னும் சொல்வதென்றால், வேதத்தை பாமரர்களிடம் காட்டாமல் அந்தந்த சித்தாந்தத்தில் கரை தேர்ந்தவர்கள் மட்டுமே மூடி வைத்துக் கொண்ட காலம் இருந்தது.
யூதர்களானாலும், இந்து மதத்தவர்களானாலும், அவர்களது மத நூல் என்பது அந்த பண்டிதர்களால் மட்டுமே கற்கப்படும், பாமரர்களோ என்றைக்கும் அந்த பண்டிதர்களையே சார்ந்திருக்கும் நிலை இருந்தது.
இவ்வாறு பொது மக்களுக்கும் பாமரர்களுக்கும், கல்வியறிவில் குறைந்தவர்களுக்கும் தங்கள் மத நூற்களை கூட வெளிக்காட்டாமல் மறைத்து வைத்திருந்ததால் தான் இதற்கு "மறை" என்றே பெயர் உருவானது.
உயர்ந்த குலத்தினர் மட்டுமே வாசிக்க முடியும் என்பதான பாரபட்சத்தை மதத்தின் பெயரால் உருவாக்கி வைத்திருந்த காலத்தில் இஸ்லாம் மட்டும் தான் இறைவனின் வார்த்தைகளை உலகத்திற்கான பொதுவுடைமையாக்கியது.

அறிவு ஜீவி முதல் பாமரன் வரை, பணக்காரன் முதல் ஏழை வரை அனைவருக்கும் இந்த குர் ஆன் சமம். அனைவருக்கும் இது திறந்த புத்தகம், அனைவரது வாழ்விலும் இது சரி சமமாய் வழி காட்டும்.

அதனால் தான் அல்லாஹ் சொல்கிறான்,

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (47:24)

என்று.

இந்த குர் ஆனை எப்போது சிந்திக்க முடியும்? அது சொல்கிற போதனைகள் நமக்கு புரிந்தால் தான் சிந்திக்க முடியும்.

ஆக, சிந்திக்க மாட்டீர்களா? என்கிற அல்லாஹ்வின் கேள்வியே
இது அனைவருக்கும் புரியும் என்பதை காட்டுகிறது !

அல்லாஹ்வின் வஹீச் செய்தியான இந்த குர் ஆன், புரிவதற்கு மிகவும் இலகுவானது என்பதற்கு அடுக்கடுக்காக பல்வேறு சான்றுகளை நாம் கண்டோம். ஆனால், அல்லாஹ் தரக்கூடிய சான்றுகள் இன்னும் நிற்கவில்லை.

தமது இந்த வேதத்தைப் பற்றி அல்லாஹ் சொல்கின்ற போது, "ஆயாத்து பையினாத்" தெள்ளத் தெளிவான வசனங்கள் என்பதாக பல்வேறு வசனங்களில் சுட்டிக் காட்டுகிறான்.

உதாரணத்திற்கு, 29:49, 65:11, 58:5, 57:9, 10:15, 2:99 இன்னும் பல வசனங்களின் வாயிலாக இதே கருத்தை அல்லாஹ் திரும்பத் திரும்ப சொல்வதிலிருந்து, குர் ஆன் நமக்கு புரியாது என்கிற வாதம் எந்த அளவிற்கு பலகீனமானதும் அல்லாஹ்வையே இழிவுப்படுத்துகிறதாகவும் இருக்கின்றது என்பதை நாம் அறியலாம்.


வஹீயில் முரண்பாடுகளோ பொய்களோ இல்லை ! :

அல்லாஹ்வின் வஹிச் செய்தியான குர் ஆனை ஒருவர் புறக்கணிப்பதாக இருந்தால் ஏதேனும் ஒரு காரணத்தை அவர் சொல்ல வேண்டும்.
எந்தவொரு நூலை அல்லது சித்தாந்தத்தை ஒருவர் மறுப்பதாக இருந்தாலும், அதிலிருக்கும் பொய்யையோ, முரண்பாட்டையோ, உளரல்களையோ அவர் சுட்டிக் காட்டித் தான் அதை மறுக்க வேண்டும்.

அந்த அடிப்படையில், குர் ஆன் என்கிற வஹீ செய்தியை மறுக்க வேண்டுமானால், குர் ஆனில் ஒரேயொரு பொய்யையாவது இவர்களால் காட்ட முடியுமா? ஒரேயொரு முரண்பாட்டையோ உளரலையோ இவர்களால் காட்ட முடியுமா? என்றால் நிச்சயம் காட்ட முடியாது.

எந்த கோணலும் இல்லாத வேதத்தை அருளியிருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்தே (பார்க்க 18:2), இந்த வேதத்தில் ஒரு குறையையும் நம்மால் கண்டு பிடிக்கவே இயலாது என்பது தெரிகிறது.

இதே கருத்தை இன்னும் பல்வேறு இடங்களில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை (அருளினோம்.) (39:28)

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக் கோனிடமிருந்து அருளப்பட்டது (41:42).

எந்த கோணலும் இல்லாத, இதன் முன்னும் தவறு இல்லாத, பின்னும் தவறில்லாத தூய்மையான வசனத்தை தான் அல்லாஹ் அருளியிருக்கிறான் என்பதை நாம் சரிவர புரியும் போது அல்லாஹ்விவ் வஹீயை மறுப்பதற்கோ, அதோடு இணையாக இன்னொருவரின் கருத்தை சேர்ப்பதற்கோ எந்த நியாயமும் இல்லை என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

எனவே தான் அல்லாஹ் சொல்கிறான்,

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராள மான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் (4:82)

இதை பொய்படுத்துவதற்கு இத்தனை நூற்றாண்டுகளாக எத்தனையோ பேர் முயன்றும் அவர்கள் தோல்வியையே தழுவினார்கள். அத்துடன், இந்த வஹீ செய்தியின் பால் ஈர்க்கப்பட்டு, குர் ஆனை பொய்படுத்த புகுந்தவர்கள் எல்லாம் இஸ்லாத்தை தழுவுகிற காட்சியை தான் நாம் காண்கிறோம். உமர் (ரலி) அவர்கள் இதற்கு சிறந்த உதாரணம் என்பதை நாம் அறிவோம்.

எனவே, முஸ்லிமாக நாம் வாழ வேண்டும் என்று சொன்னால் நாம் அல்லாஹ்வின் வஹீ செய்திக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
முஸ்லிம் என்கிற சொல்லின் பொருளே கட்டுப்பட்டவன் தான் எனும் போது, அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதல் என்பது அதிலேயே அடங்கித்தான் இருக்கிறது.



எதில் ஒற்றுமை?


வஹீ செய்தியை மட்டும் தான் பின்பற்ற வேண்டும், வேறெந்த மனிதரின் கூற்றும் மார்க்கமாகாது என்கிற பிரச்சாரத்தை நாம் முன்னெடுக்கும் போது, இவர்கள் குழப்பவாதிகள், அல்லாஹ் வலியுறுத்துகின்ற ஒற்றுமைக்கு இவர்கள் எதிரானவர்கள் என்கிற பிரச்சாரம் நமக்கெதிராக செய்யப்பட்டு வருவதை நாம் பார்க்கலாம்.

இது ஒரு பொய்ப் பிரச்சாரம்.
இவர்கள் கூறுவது போன்று, ஒற்றுமையாக இருக்குமாறு குர் ஆனில் எந்த வசனத்திலாவது அல்லாஹ் சொல்லியிருக்கிறானா என்றால் இல்லை.
ஒற்றுமையை அல்லாஹ் எங்குமே வலியுறுத்தவில்லை.
சத்தியத்தை எடுத்துச் சொல்லி, அந்த சத்தியத்தின் பால் ஒன்றுபடுவதற்கு தான் சொல்கிறான்.

இதற்கு மறுப்பு சொல்லும் இந்த கூட்டமானது திரு மறை குர் ஆனில் 3:103 வசனத்தை எடுத்துக் காட்டி, ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடிக்குமாறு அல்லாஹ் சொல்கிறான் என்று சொல்வர்.

ஆனால் அவ்வசனத்தில் ஒற்றுமை எனும் கயிறு என்று அல்லாஹ் சொல்கிறானா? நிச்சயம் இல்லை.

வஹ்தஸிமு பி ஹப்லில்லாஹ் என்பது தான் அதன் அரபி மூலத்திலுள்ள சொற்கள். அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப் பிடியுங்கள் என்பது தான் இதன் பொருளே தவிர, ஒற்றுமை எனும் கயிறு என்று எங்கும் இல்லை.

அரபி மூலத்தில் சரியாக படித்து விட்டு, தமிழில் அதை மொழியாக்கம் செய்கின்ற போது மட்டும் இவர்கள் தங்கள் சுய கருத்துக்களை திணிப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இது போன்று, மற்றுமொரு வசனத்தையும் இவர்கள் தங்கள் வாதத்திற்கு சான்றாக வைப்பார்கள்.

நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், 'மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்துவிடாதீர்கள்!' (42:13).

இதில், "பிரிந்து விடாதீர்கள்" என்று அல்லாஹ் சொல்லி விட்டான், எனவே ஒற்றுமை தான் முக்கியம், என்று வாதம் புரிகின்றனர்.

இந்த வாதத்திலாவது அர்த்தமிருக்கிறதா?

அந்த வசனத்தில் வெறுமனே பிரிந்து விடாதீர்கள் என்றா அல்லாஹ் சொல்கிறான்? இல்லை.
மார்க்கத்தை நிலை நாட்டுங்கள் "அதில்" பிரிந்து விடாதீர்கள் என்பது தான் அல்லாஹ் அந்த வசனத்தில் இடும் கட்டளை.

"அதில்" என்றால் நாம் நிலை நாட்டிய மார்க்கத்தில் !

ஆக, மார்க்கத்தை சரியான முறையில் பின்பற்றுவதில் தான் ஒற்றுமையே தவிர, நீ எந்த மார்க்கத்தை வேண்டுமென்றாலும் பின்பற்றி விட்டுப் போ, நான் எந்த மார்க்கத்தை வேண்டுமென்றாலும் பின்பற்றுகிறேன், நாம் இருவரும் ஒற்றுமையாக இருப்போம் என்கின்ற நிலை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்காத ஒன்றாகும்.

இன்னும் சொல்லப்போனால், நன்மையை ஏவி தீமை தடு என்று அல்லாஹ் சொல்கிறானே, இதை செய்தால் ஒற்றுமை ஏற்படுமா ஒற்றுமை குலையுமா?

ஒரு சமூகத்தில் வட்டி மலிந்து கிடக்கிறது, அவர்களிடம் சென்று வட்டி வாங்குவதை தடுத்தால் அங்கே ஒற்றுமை மேலோங்குமா அல்லது ஒற்றுமை குலையுமா?
வரதட்சணை வாங்குவோரிடம் அவ்வாறு வாங்குவது குற்றம் என்று விளக்கினால் ஒற்றுமை வலுப்பெறுமா அல்லது சிதறுமா?

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இந்த தூதுத்துவ பணியை துவக்கிய ஆரம்ப காலங்களில் அந்த சமுதாயம் ஒற்றுமையாக தான் ஷிர்க் வைத்து வந்தனர். ஒற்றுமையாக தான் இன்னபிற அனாச்சாரங்களை செய்து வந்தனர்.
நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கொண்டு வந்த இந்த ஏகத்துவ பிரச்சாரமானது அங்கே நிலவி வந்த இத்தகைய போலி ஒற்றுமையை சிதறடிக்கத் தான் செய்தது.
எல்லா நபிமார்களும் ஒற்றூமையை குலைக்கவே செய்தனர்.

சத்தியத்தை எடுத்துச் சொல்லும் போது, அந்த சத்தியத்திற்கு எதிரானவர்கள் பிரிந்து செல்வது தான் இயல்பு. அந்த பிரிவை கூட‌ நாம் சந்திக்கக் கூடாது என்று சொன்னால் நாம் எந்த பிரச்சாரத்தையுமே செய்ய கூடாது, நன்மையை ஏவுங்கள், தீமையை தடுங்கள் என்று அல்லாஹ் நமக்கிட்டுருக்கும் கட்டளையை நம்மால் பேணவே இயலாது.

ஆக, ஒற்றுமை என்பது அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப் பிடிப்பதில் தான் உள்ளது. அல்லாஹ்வின் கயிறு என்பது அவன் அருளிய வஹீ செய்தி.
அது மட்டுமே மார்க்கம், அது தவிர வேறெதுவுமே மார்க்க ஆதாரமில்லை என்கிற சித்தாந்தத்தில் அனைவரும் ஒன்றுபடுமாறு தான் இஸ்லாம் அழைக்கிறது.

தொடரும், இன்ஷா அல்லாஹ்




























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக