செவ்வாய், 23 ஜூன், 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 4)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 4தூதருக்கு அதிகாரம் உண்டா? (தொடர்ச்சி..)

நபிகள் நாயகம் (சல்) அவர்களது நபித்துவத்தின் ஆரம்ப காலங்களில் மக்கத்து காஃபிர்கள் மத்தியில் இன அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள் நிலவி வந்தன.
உயர்ந்த குலங்கள் என்று தங்களை கருதிக் கொண்டவர்கள் தாழ்ந்த இனத்தவராக கருதப்பட்டவர்களோடு சமமாக பழகுவதை வெறுத்தார்கள், அவர்களுக்கு சம உரிமை வழங்குவதையும் எதிர்த்து வந்தார்கள்.
அத்தகைய சூழலில் தான் இஸ்லாம் அந்த சமூகத்தார் மத்தியில் அறிமுகமாகிறது.
இஸ்லாம் போதிக்கும் ஏனைய பல‌ சட்டத் திட்டங்கள் உயர்ந்த குலத்தார் என்று கருதப்பட்ட மக்கத்து காஃபிர்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும், அவர்களும், தாழ்ந்த இனம் என்று கருதப்பட்டவர்களும் சமம் என்கிற ஒரு சித்தாந்தத்தை மட்டும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை.
இதை காரணம் காட்டியே இஸ்லாத்தை தழுவிக் கொள்வதையும் அவர்கள் மறுத்து வந்தார்கள்.
அவர்களையும் எங்களையும் நீர் சமமாக நடத்துகின்ற வகையில் இந்த மார்க்கத்தில் சட்டத் திட்டங்கள் இருக்குமானால் அந்த சட்டங்களை மாற்றி எங்களுக்கென்று (உயர்ந்த குலம்) தனி மார்க்கத்தை உருவாக்கு என்று, எந்த தீண்டாமையையும் இன ரீதியிலான ஏற்றத்தாழ்வையும் ஒழித்துக் கட்ட இஸ்லாம் வந்ததோ அந்த இஸ்லாத்தின் விதியையே மாற்றுமாறு பேரம் பேசினர்.

இதை வன்மையாக கண்டித்த அல்லாஹ், உடனடியாக தமது திருமறையில் கீழ்காணும் வசனத்தை இறக்குகிறான்..

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (18:28)

அந்த மக்கத்து காஃபிர்களின் நிபந்தனைக்கு ஒரு போது செவி சாய்த்து விடாதீர் என்றும், இவ்விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளை எதுவோ அதற்கே செவி சாய்க்குமாறும் உடனடியாக வஹீ செய்தியை அருளச் செய்து, முடிவுகள் செய்கின்ற அதிகாரத்தில் நபிக்கு எந்தவித பங்கும் கிடையாது எனவும், அல்லாஹ் ஆகிய தனக்கு மட்டுமே அனைத்து அதிகாரமும் உள்ளன என்பதையும் நிரூபிக்கிறான்.

இதே போன்றதொரு சம்பவமாக, 
ஒரு முறை உயர்ந்த குலத்தார் என்று கருதப்பட்ட உபைத் பின் ஹலஃப் என்பவருடன் நபி (சல்) அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த சபையொன்றில் தாழ்ந்த இனமாக கருதப்பட்டவர்களின் ஒருவரும் ஏற்கனவே இந்த தூய மார்க்கத்தை ஏற்றவருமான அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரலி) அவர்கள் தற்செயாலாக கடந்து செல்கிறார்கள்.

கண் பார்வையற்றவரான அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரலி), நபி (சல்) அவர்களின் குரலை வைத்து அவர்களை அடையாளம் கண்டவர்களாக அவர்களுக்கு சலாம் சொல்கின்றார்கள்.
உயர்ந்த குலமாகிய தங்களை தாழ்ந்த குலத்தாருடன் சரிக்கு சமமாக நடத்தக் கூடாது என்கிற நிபந்தனைப் பற்றி தான் அப்போது உபைத் பின் ஹலஃப் என்பவருடன் பேசிக் கொண்டிருக்கிறோம், இந்த நேரம் பார்த்து இவர் வருகிறாரே என்று கோபமுற்ற நபி (சல்) அவர்கள், தமது முகத்தை கடுகடுப்பாக்கினார்கள், இன்னும், அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரலி) அவர்கள் கூறிய சலாத்திற்கு மறு மொழியும் கூறவில்லை.

இவ்வாறு நடந்து கொண்ட நபி (சல்) அவர்களின் காரியம் அவர்கள் சுயமாய் செய்தது என்றாலும், அதை அல்லாஹ் சரி காணவில்லை.
அல்லாஹ் அதை எளிதில் எடுத்துக் கொள்ளவும் இல்லை.
மிகக்கடுமையான கண்டனத்துடன் உடனடியாக வசனங்களை இறக்குகிறான்.

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.
அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?
அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.
யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.
அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.
(இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். (80:1 ‍ 10)

யார் இந்த மார்க்கத்தையே கூறு போடுமாறு உம்மிடம் கேட்கிறாரோ அவரிடம் வலியச் சென்று பேசுகிறீர், யார் உனது தூய மார்க்கத்தை நோக்கி ஓடோடி வருகிறாரோ அவரை நீர் அலட்சியம் செய்கிறீரா?
என்று கடுங்கோபத்தில் பெருமானார் (சல்) அவர்களை அல்லாஹ் எச்சரிக்கிறான்.

பின்னாளில், இதே அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரலி) அவர்களுக்கு உயரிய பல அந்தஸ்த்துகளை நபி (சல்) அவர்கள் வழங்கி அழகுப் பார்த்தார்கள் என்பது தனி விஷயம்.

இவ்வாறு, அதிகாரத்தை கையில் எடுக்கின்ற எந்த விஷயமாக இருந்தாலும், அது மிகவும் சிறிய விஷயமாக பார்க்கப்பட்டாலும், அல்லாஹ் அதில் தமது உரிமையை எள்ளளவும் விட்டுக் கொடுப்பதே இல்லை என்பதற்கு, நபி (சல்) அவர்களை கண்டித்து இறக்கப்பட்ட இந்த வசனமும் சான்றாக இருக்கின்றது.

இது அல்லாஹ்வின் வேதம் என்பதற்கும், நபியே சொந்தமாக இட்டுக்கட்டியவை அல்ல என்பதற்கும் கூட இந்த வசனமே சான்றாகும்.
காரணம், சொந்தமாக இட்டுக்கட்டக்கூடியவர் என்றால் தன்னை கண்டித்து அல்லாஹ் வசனம் இறக்கினான் என்றெல்லாம் சொல்லவே மாட்டார், மனிதன் என்கிற முறையில் மட்டும் தமது சுய இலாபத்தை கருதுபவராக இருந்தால் இது போன்ற சம்பவங்களை எழுதி தமது கெளரவத்திற்கு இழுக்கு தேட அவர் முன்வந்திருக்க மாட்டார்.

இது அல்லாஹ்வின் வேதமாக இருப்பதால் தான், நபியே ஆனாலும், அல்லாஹ் நாடினால் அவர்களையும் திட்டுவான், கண்டிப்பான், எச்சரிப்பான் என்கிற செய்தி வேதத்தில் காணப்படுகிறது.

ஆக, அதிகாரம் விஷயத்தில் இந்த அளவிற்கு கடுமையாக இருக்கும் இறைவன், மற்ற மற்ற மனிதர்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்குவானா? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மற்றுமொரு சம்பவத்தைப் பாருங்கள்.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (நயவஞ்சகர்களின்தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும்” என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, ‘(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்” என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும், நபி(ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து, ‘நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘(ஜனாஸாத் தொழுவது, தொழமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது’ எனக் கூறிவிட்டு, ‘நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை” என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே ‘அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்” என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது.
(புஹாரி: 1269)

 
நயவஞ்சகர் ஒருவருக்கு ஜனாசா தொழுகை தொழுமாறும், அவருக்காக பாவ மன்னிப்பு தேடுமாறும் நபி (சல்) அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்ட போது முதலில் அதை ஏற்கிறார்கள். அவர் ஒரு முனாஃபிக், அவருக்கு ஜனாசா தொழுகை தொழக் கூடாது என்று உமர் (ரலி) அவர்கள் சுட்டிக் காட்டிய பிறகும் கேட்கவில்லை.
தொழவும் செய்யலாம், தொழாமலும் இருக்கலாம், இரண்டுமே தமது உரிமையில் உள்ளது என்று நபி (சல்) அவர்கள் பதிலளிக்கிறார்கள்.
ஆனால் இறுதியில், அல்லாஹ் வசனத்தை இறக்கி, அவ்வாறு செய்வது பெருங்குற்றம் என்று கண்டித்த பிறகு தான் அதிலிருந்து தவிர்ந்து கொண்டார்கள்.

இந்த சம்பவமும், நபிக்கென்று எந்த சுயமான அதிகாரத்தையும் அல்லாஹ் வழங்கவே இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.

இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முனாஃபிக்குகளுக்கு தொழுகை நடத்தக் கூடாது, அவர்களுக்கு பாவ மன்னிப்பு தேடக் கூடாது என்பதெல்லாம் நபி (சல்) அவர்கள் காலத்திற்கு மட்டும் தான்.
ஏனெனில், அவர்களுக்கு மட்டும் தான் முனாஃபிக் யார் என்பதை அல்லாஹ் அடையாளப்படுத்திக் காட்டிக் கொடுத்தான்.

இன்று நம்முடன் இருக்கும் முஸ்லிம்களில் எத்தனையோ பேர் முனாஃபிக்குகளாக இருக்கலாம், அது பற்றிய ஞானம் நமக்கு இருக்கிறதா என்றால் இல்லை.
எவரது உள்ளத்தையும் நாம் அறிய முடியாது என்கிற அடிப்படையில், இன்று இவர் முனாஃபிக், எனவே அவருக்கு நான் தொழ வைக்க மாட்டேன் என்கிற நிலைபாட்டையெல்லாம் நாம் எடுக்க முடியாது.
வெளிப்படையாக தெரிந்தவைகளை வைத்து மட்டுமே நிலைபாடுகளை கொள்ள வேண்டும்.


இன்னும், அதிகாரத்தில் வேறு எவருக்கும் பங்கு இல்லை என்பதைப் பற்றியும், நபி (சல்) அவர்களாக இருந்தாலும், அவர்களும் மார்க்கத்தில் சுயமான முடிவுகளை எடுப்பது கூடாது எனவும் அல்லாஹ் இன்னும் பல வசனங்கள் வாயிலாக நமக்கு தெளிவுப்படுத்துகிறான்

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர் களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர். (5:49)


மற்றொரு வசனத்தில்,

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லை யானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். 145  (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். (5:67)


அல்லாஹ் அருளியதை வைத்து மட்டுமே தீர்பளிக்க வேண்டும் எனவும், அல்லாஹ் அருளிய வஹீ செய்தியை விட்டும் நபியை அவர்கள் குழப்பினாலும் அதில் கவனமாக இருக்குமாறும் அல்லாஹ் எச்சரிக்கிறான். அவ்வாறு வஹியை விட்டும் சமூகத்தை வேறு பாதையை நோக்கி குழப்புபவர்களுக்கு கடுமையான தண்டனை இருக்கிறது எனவும் அல்லாஹ் சுட்டிக்காட்டுவதை நாம் சிந்திக்கையில் வஹீ செய்தி அல்லாத எந்தவொன்றையும் நாம் மார்க்கமாக கருதவே கூடாது என்று திட்டவட்டமாக விளங்குகிறது.

மேலும், அல்லாஹ் அருளிய இந்த தூதுச் செய்தியை புறக்கணித்து சுயமாக எதையாவது நபி (சல்) அவர்கள் சொன்னால் அவர்கள் தூதர் என்கிற பணியை முழுமையாக செய்தவராகவே ஆக மாட்டார் எனவும் அல்லாஹ் எச்சரிப்பதை கவனியுங்கள்.


மற்றொரு சம்பவத்தில், நல்ல எண்ணத்திற்காக உள்ளத்தில் உள்ளதை மறைத்து செயல்பட்ட நபி (சல்) அவர்களை கூட அல்லாஹ் கண்டிக்கவே செய்கிறான்..

பெருமானார் நபி (சல்) அவர்கள் தமது வளர்ப்பு மகனான‌ சைத் (ரலி) அவர்களுக்கு, தமது மாமி மகள் சைனப் (ரலி) அவர்களை திருமணம் செய்து வைக்கிறார்கள்.
ஆனால் அவர்களது மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக செல்லவில்லை. எப்போதும் சண்டை சச்சரவாகவே காட்சியளித்தது.
இதை நபி (சல்) அவர்களும் அறிந்து தான் இருந்தனர்.
இறுதியில், இதற்கு மேல் இணைந்து வாழவே இயலாது என்கிற இக்கட்டான நிலை வந்த போது சைத் (ரலி) அவர்கள் தம்மை இந்த மண வாழ்விலிருந்து விலக்கு ஏற்படுத்தி தருமாறு (தலாக்) நபி (சல்) அவர்களிடம் வந்து முறையிடுகிறார்கள்.

அவர்களது மண வாழ்க்கை வெற்றிகரமாக செல்லவில்லை என்பதையும், இவர்கள் பிரிந்து விடுவது தான் நல்லது என்பதையும் ஏற்கனவே அறிந்திருந்த நபி (சல்) அவர்கள், அதை வெளிக்காட்டாமல், மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்யுமாறு சைத் (ரலி) அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள்.

இதை கண்டிக்கிறான் அல்லாஹ் !

உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே இன்னொன்றை ஏன் கூறினாய் என்று, இருவரும் இணைந்து வாழட்டுமே என்கிற நல்லெண்ணத்தில் அவர்கள் செய்ததை கூட அல்லாஹ் விட்டு விட மாட்டேன் என்கிறான்.
அல்லாஹ் இதைப் பற்றி கூறும் போது,

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் 'உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்' என்று நீர் கூறியதை எண் ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சு வதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது (விவாகரத்துச் செய்த போது) உமக்கு அவரை மண முடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவியரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய் தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. (33:37)

நபி (சல்) அவர்களுக்கென்று ஒரு சில சுய அபிப்பிராயங்கள் இருந்த போதிலும், சட்டமியற்றுகின்ற ரீதியிலோ, மார்க்கத்தோடு தொடர்புடையதாகவோ அவை செல்கின்ற பட்சத்தில் அல்லாஹ் அதை முளையிலேயே கிள்ளி விடுவதை இது போன்ற சம்பவங்கள் வாயிலாக நாம் அறிகிறோம்.

அல்லாஹ் சொல்கிறான்,

(முஹம்மதே!) நம் மீது நீர் இட்டுக் கட்ட வேண்டும் என்பதற்காக, நாம் உமக்கு அறிவித்ததை விட்டும் திசை திருப்ப முயன்றனர். (அப்படிச் செய்தால்) உம்மை உற்ற நண்பராக ஆக்கியிருப்பார்கள்.
(முஹம்மதே!) நாம் உம்மை நிலைப்படுத்தியிருக்கா விட்டால் அவர்களை நோக்கிச் சிறிதேனும் நீர் சாய்ந்திருப்பீர்!
அவ்வாறு நீர் செய்திருந்தால் வாழும் போது உமக்கு இரு மடங்கும், மரணிக்கும் போது இரு மடங்கும் வேதனையைச் சுவைக்கச் செய்திருப்போம். பின்னர் நம்மிடம் உமக்காக எந்த உதவியாளரையும் காண மாட்டீர் (17:73 - 75)

வஹீயை தவிர்த்து, சுயமாக இந்த முஹம்மதை எதையாவது சொல்லி உளர வைத்து விட வேண்டும், அதன் மூலம் இறைவனின் வேதம் பொய் என்று நிரூபித்து விட வேண்டும் என்பதற்காக மக்கத்து காஃபிர்கள் பல்வேறு மூளை சலவை வேலைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.
இதைப் பற்றி அல்லாஹ் மேற்கூறிய வசனத்தில் சொல்லும் போது, நாம் தான் முஹம்மது நபியை கட்டுப்படுத்தி வைத்திருந்தோம் எனவும், அவ்வாறு வைக்காமல் இருந்திருந்தால் அவர்களது மூளைச் சலவைக்கு முஹம்மது நபியும் பலியாகியிருப்பார்கள் எனவும் கூறுகிறான்.

கூறி விட்டு தொடர்ந்து அல்லாஹ் பயன்படுத்துகின்ற கடுமையான வாசகத்தைப் பாருங்கள்.

அவ்வாறு நீர் செய்திருந்தால் வாழும் போது உமக்கு இரு மடங்கும், மரணிக்கும் போது இரு மடங்கும் வேதனையைச் சுவைக்கச் செய்திருப்போம்.


அல்லாஹ் அருளியதைத் தவிர, முஹம்மது நபி (சல்) அவர்கள், சுயமாக ஒரு வார்த்தையை அதிகப்படுத்தி கூறினாலும், அவர்களுக்கு இம்மையிலும் இரு மடங்கு தண்டனை, மறுமையிலும் இரு மடங்கு தண்டனை.

அல்லாஹ் தமது அதிகாரம் விஷயத்தில் அத்தனை கடுமை காட்டுபவன் என்பதற்கு இந்த வசனமும் தெளிவான சான்றாக நிற்கிறது.

இதே மக்கத்து காஃபிர்களின் வழிமுறையை இன்றைய கப்ர் வணங்கிகளும் கையாள்கிறார்களா இல்லையா?
அடக்கத்தஸ்தலத்தின் மீது கட்டிடம் கட்டக் கூடாது என்று நபி (சல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கும் போது, நபி (சல்) அவர்களது காலத்திற்கெல்லாம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த ஆட்சியாளன் ஒருவன் நபியின் கப்ருக்கு மேல் டூம் ஒன்றை கட்டுகிறான்.
இதற்கும் நபிக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா? இல்லை.
இஸ்லாம் தடுத்த ஒன்றை நபி (சல்) அவர்களது காலத்திற்குப் பிறகு எவரேனும் செய்தால் அதற்கும் இஸ்லாத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? நிச்சயம் கிடையாது.

தரைமட்டத்திற்கு மேல் உயர்ந்தப்பட்ட எந்த கப்ரையும் இடித்து தரைமட்டமாக்கத் தான் வேண்டும் என்கிற மார்க்கச் சட்டத்தை மீறி நபியின் கப்ரின் மீதே டூம் ஒன்றை கட்டியிருக்கிறார்கள் என்றால் அது இடித்து தரைமட்டமாக்கப்ப‌ட வேண்டியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த கருத்தை தவ்ஹீத் ஜமாஅத் தைரியமாக முன் வைத்த போது, அதற்கெதிராக இந்த கப்ர் வணங்கிகள் கொந்தளித்தனர்.
கப்ரில் கட்டிடம் கட்டுவது தொடர்பாக நாம் எழுப்பும் எந்த கேள்விக்கும் பதில் சொல்ல திராணியற்றவர்கள், டூமை இடிக்கச் சொல்லி விட்டார்கள், டூமை இடிக்கச் சொல்லி விட்டார்கள் என பாமரர்கள் மத்தியில் ஒன்றுமில்லாததை பெரிய பூதாகரமாக்கும் விதமாய் கூச்சலிட்டு வந்தனர்.

மக்கத்து காஃபிர்கள் எவ்வாறு திசை திருப்பும் வேலையில் ஈடுபட்டார்களோ அதில் சிறு மாறுதலுமின்றி இன்றைய முஷ்ரிக்கீன்களும் ஈடுபட்டனர்.

அதே சமயம், சத்தியக் கொள்கையை உறுதியாய் பற்றிப் பிடித்திருக்கும் நாமோ இவைகளுக்கு அணு அளவும் அசைந்து கொடுக்கவில்லை.
நாம் சொன்ன கருத்து தான் மார்க்க அடிப்படையில் சரி என்று இருக்கும் போது, நீ உலகத்தையே திரட்டி அழைத்து வந்தாலும் நாங்கள் அஞ்சப்போவதுமில்லை, எங்கள் கருத்தை நாங்கள் திரும்பப் பெறப்போவதுமில்லை என்கிற ஈமானிய உறுதியையே இந்த ஜமாஅத் வெளிக்காட்டியது.

நபித்துவத்தின் துவக்கத்தில் நபி (சல்) அவர்கள் தன் குடும்பத்தாருக்கு இந்த மார்க்கத்தை எத்தி வைத்தது பற்றிய ஹதீஸ்களை அறிகின்ற போதும் அல்லாஹ்வின் அதிகாரம் நபி (சல்) அவர்களுக்கு துளியும் இல்லை என்பது தெளிவாகிறது.

அதிகாரத்திலும், மறுமையில் ஒருவரது நிலை என்னவாக இருக்கும் என்கின்ற விஷயத்திலும் முடிவு செய்வதற்கு நபி என்கிற முறையில் அவர்களுக்கு எந்த பங்கும் இருக்கப் போவதில்லை, நபியின் உறவினர்கள் என்கிற முறையில் அவர்களுக்கும் எந்த சாதகமான சூழலும் இருக்கப் போவதில்லை.
அனைத்து அதிகாரமும் அல்லாஹ் ஒருவனது கையில் மட்டும் தான் இருக்கிறது.
இதை தெளிவாக விளக்கும் புஹாரி ஹதீஸை பாருங்கள்.


அபூஹூரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ((உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக)) என்ற ஆயத்து இறங்கிய சமயம் நபியவர்கள் எழுந்து நின்று ஏ குறைசிகளே! உங்களது ஆத்மாக்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள். உங்களை விட்டும் அல்லாஹ்விடத்திலிருந்து வரும் எதனையும் என்னால் தடுக்க முடியாது. அப்துமனாபின் மக்களே! உங்களை விட்டும் அல்லாஹ்விடமிருந்து வரும் எதனையும் என்னால் தடுக்க முடியாது. அப்பாஸே! உம்மை விட்டும் அல்லாஹ்விடமிருந்து வரும் எதனையும் என்னால் தடுக்க இயலாது. ஸபிய்யாவே! (நபியவர்களது தாய்வழிச் சகோதரி) உம்மை விட்டும் அல்லாஹ்விடமிருந்து வரும் எதனையும் என்னால் தடுக்க முடியாது.      (புஹாரி:2753)


தமது தூத்துவச் செய்தியை முதன் முதலாய் தமது உறவினர்களிடமிருந்து பிரச்சாரம் செய்யுமாறு பணிக்கிறான் அல்லாஹ்.
அதன்படி, தமது உறவினர்களையெல்லாம் ஓரிடத்தில் அழைத்து வந்து அவர்களை நோக்கி பிரச்சாரம் செய்கின்ற பெருமானார், அதிகாரம் விஷயத்தில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், என் உறவினர்கள் என்கிற முறையில் இவ்வுலகில் ஏதேனும் உதவிகளை வேண்டுமானால் என்னால் செய்ய முடியுமே தவிர நாளை மறுமையில் உங்கள் நிலை பற்றி அல்லாஹ் ஒருவனே தீர்மானிப்பான் என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார்கள்.

மார்க்கத்திற்கு அல்லாஹ்வே முழுமுதற் சொந்தக்காரன், எனவே அதிகாரம் அனைத்திற்கும் உரிமையாளன் அவனே !

மற்றொரு ஹதீஸைப் பார்ப்போம்..

உகது போரின் போது எதிரிகளால் நபி (சல்) அவர்கள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள், கடவாய் பற்கள் உடைந்து இரத்தம் பீரிட்டு வருகின்றது, மரணித்து விட்டார்கள் என்று மக்கள் மத்தியில் செய்தி பரவுகிற அளவிற்கு இரத்த வெள்ளத்தில் மூர்ச்சையாகி விழுகிறார்கள் நபி (சல்) அவர்கள்.
நினைவு வந்த பிறகு, தமக்கு ஏற்பட்ட வேதனையின் வெளிப்பாடாக, நபியின் முகத்தில் இரத்தச் சாயத்தைப் பூசியவர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்? என்றொரு வாசகத்தை சொல்லி விடுகிறார்கள்.

மனிதன் என்கிற முறையில் பார்ப்பதானால், அத்தகைய சூழலில் நாம் அனைவருமே பயன்படுத்துகின்ற ஒரு வாசகம் தான்.

"என்னை இப்படி அடித்து விட்டாயா? உன்னை என்ன செய்கிறேன் பார், நீ எப்படி உயிரோடு இருக்கிறாய் பார்" என்றெல்லாம் பேசுவது என்பது அந்த கணத்தில் ஏற்படும் உணர்ச்சி மிகுதலால் வெளிப்படும் இயல்பான வார்த்தைகள் தான்.

ஆனால், இதை கூட அல்லாஹ் இலேசாக எடுத்துக் கொள்ளவில்லை.

நபியை கண்டித்து அந்த நேரத்திலும் வசனம் இறக்குகிறான்.

(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக் கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள் (3:128)

உம்மை தாக்கி இரத்தம் வரவைத்து விட்டார்கள் என்பதனால் அவர்கள் தோல்வியுற்று தான் ஆக வேண்டுமா?
உம்மை காயப்படுத்தி விட்டார்கள் என்பதால் அவர்களால் வெற்றி பெறவே இயலாதா?
அதிகாரம் உம்மிடம் இருக்கிறதா, நீர் சொல்வது போல் நடப்பதற்கு?

அதிகாரம் என்பது என் கையில் தான் இருக்கிறது, நான் நாடினால் அவர்களை தண்டிப்பேன், நான் நாடினால் அவர்களை மன்னிக்கவும் செய்வேன்..

என்று சொல்கிறான் அல்லாஹ் !

எவ்வளவு கடும் வார்த்தைகள்.

இப்படி பேசியது தமக்கு மிகவும் விருப்பமான முஹம்மது தானே, என்று அல்லாஹ் பார்த்தானா? இல்லை.
வேதனை மிகுதியால் உணர்ச்சிவயப்பட்டு தானே பேசினார், என்று பார்த்தானா? இல்லை.

தமது அதிகாரம் விஷயத்தில் பங்கு போடுவது யாராக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு பிரச்சனையில்லை,
எப்படிப்பட்ட சூழல் என்பதும் அல்லாஹ்வுக்கு தேவையற்றது.

அல்லாஹ் பார்ப்பது ஒன்றே ஒன்று தான். தனது அதிகாரத்தில் கை வைக்க மனிதனாகிய நீ யார்?

இதை தெளிவாக புரிந்தால் மார்க்கம் என்கிற பெயரில் ஹசரத்மார்கள் பின்னால் செல்வோமா? இமாம்கள் என்றும் பெரியார்கள் என்றும் கூறி மார்க்கத்தில் தாங்களாகவே சட்டமியற்றிக் கொள்கிறார்களே அவர்கள் பின்னால் இந்த சமூகம் செல்லுமா?
எந்த அளவிற்கென்றால், மதரசாவில் நாமெல்லாம் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஜுப்பா அணிவதை சுன்னத் என்று ஆசிரியர்களே போதித்து வந்தனர்.
ஜுப்பாவுக்கு பதில் சட்டையும் பேண்டும் அணிந்து வந்தால் ஏதோ பெருங்குற்றவாளி போல நம்மை பார்க்கும் காலம் இருந்தது.
ஆனால், ஜுப்பா அணிவது சுன்னத் என்று அல்லாஹ் எங்காவது சொல்லியிருக்கிறானா? இல்லை.
நபி (சல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்களா? இல்லை.
இதற்கு ஆதாரம் என்ன என்று எதிர் கேள்வி கேட்பதற்கு கூட தெரியாமல் அறியாமையில் மூழ்கியிருந்தோம். 
நமது அறியாமையை மூலதனமாக பயன்படுத்தி தான் இந்த மதுஹபுவாதிகள் தங்கள் வழிகெட்ட கொள்கையை தொடர்ந்து வந்தார்கள்.

அது போன்று தப்லீக்காரர்கள் செய்கின்ற கூத்து இதை விட வேடிக்கையானது.
தப்லீக் என்கிற பெயரில் மாதக்கணக்கில் ஊரையும் குடும்பத்தையும் விட்டு விட்டு பயணம் செல்கின்ற போது அவர்கள் மார்க்கம் என்று சொல்கின்ற பெரும்பான்மையான காரியங்களுக்கு அல்லாஹ்வின் வஹீயில் ஆதாரம் இருக்காது.

கழிவறைக்கு செல்லும் போது எப்படி அமர்ந்திருப்போமோ அந்த  முறையில் அமர்ந்து தான் உணவை உண்ண வேண்டும் என்பார்கள். 
அல்லது வேறு இரு வகைகளில் அமர வேண்டும் என்பார்கள், இது தான் சுன்னத் என்றும் போதிப்பார்கள்.
இதுவெல்லாம் இவர்களாக கற்பனை செய்து கொண்ட முன்னோர்களின் கட்டுக்கதைகளில் வேண்டுமானால் இருக்கலாமே தவிர அல்லாஹ்வின் வஹியில் இதற்கு சான்றுகள் இருக்கின்றனவா என்றால் இல்லை.


புஹாரியில் வரக்கூடிய மற்றொரு ஹதீஸை பார்ப்போம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, 'நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம். மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்) விட்டு விடட்டும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்முஸலமா (ரலி).
நூல் : புஹாரி :2458 


வழக்கு ஒன்று தீர்ப்புக்காக தம்மிடம் கொண்டு வரப்பட்டால், மனிதன் என்கிற முறையில் தமக்கிருக்கும் பலகீனங்களுக்குட்பட்டு தான் தம்மால் தீர்பளிக்க முடியும் எனவும், ஒரு வேளை அது தவறாகவும் போய் விடலாம் எனவும் நபி (சல்) அவர்கள் கூறுவது நமக்கு எதை காட்டுகிறது?
அல்லாஹ்வுடைய அதிகாரம் தமக்கு கிடையாது என்பதைக் காட்டுகிறது.

மனிதர்களிலெல்லாம் சிறந்தவர்களும், மகான்கள் என்று இவர்கள் எவரையெல்லாம் கருதுகிறார்களோ அவர்களை விடவெல்லாம் ஆயிரம் மடங்கு சிறந்த மகானாகவும் திகழ்ந்த நபி (சல்) அவர்களுக்கே இது போன்ற தவறுகள் ஏற்படலாம் என்றால் இவர்கள் பின்பற்றுகின்ற இமாம்களுக்கும் முன்னோர்களுக்கும் தவறே ஏற்படாதா?
அவர்கள் செய்யும் ஆய்வுகளும் அவர்கள் எடுக்கும் முடிவுகளும் நூறு சதவிகிதம் சரியாகத் தான் இருக்கும் என்று யார் உத்திரவாதம் அளித்தது?
வஹியின் துணையின்றி மனிதன் என்கிற முறையில் ஒன்றை ஆய்வு செய்கிற போது நபிக்கே அந்த உத்திரவாதம் இல்லையே !

என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.

நபி (சல்) அவர்களையும் மனிதனாகவே ஒவ்வொரு கணத்திலும் அல்லாஹ் வெளிக்காட்டினான்.
மற்ற மனிதர்களுக்கு எப்படி தவறுகள், கவனக்குறைவுகள், ஞாபக மறதிகள் ஏற்படுமோ அது போன்று நபி (சல்) அவர்களிடமும் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு முறை நான்கு ரக்காஅத் தொழுவதற்கு பதிலாக ஐந்து ரக்காஅத் தொழுகிறார்கள். பிறகு, சுட்டிக்காட்டப்பட்ட பின் சரி செய்கிறார்கள்.
இது புஹாரி 402 இல் பதிவாகியிருக்கும் சம்பவம்.

இவையெல்லாம் நபி (சல்) அவர்களும் மனிதன் தான் என்பதையும் எந்த மனிதனாக இருந்தாலும் கவனக்குறைவுகள் அவர்களுக்கு ஏற்படத் தான் செய்யும் என்பதையும் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.

தூதருக்கு அல்லாஹ்வின் அதிகாரத்தில் துளியளவு பங்கும் இல்லை என்பதற்கு தொடர்ச்சியாக பல்வேறு சான்றுகளை நாம் பார்த்து வந்தோம்.
இதற்கு முத்தாய்ப்பாக யூனுஸ் நபி தொடர்பான சம்பவத்தை நாம் சொல்லலாம்.

வழிகேட்டின் உச்சத்திற்கு யூனுஸ் நபியின் சமுதாயம் சென்ற போது, ஒட்டு மொத்த ஊரையும் அல்லாஹ் அழிக்க நாடி யூனுஸ் நபியிடம் ஊரை விட்டு வெளியேறுமாறு கட்டளையிடுகிறான்.
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று யூனுஸ் நபியும் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள்.
ஆனால், அல்லாஹ் அந்த ஊரை ஒட்டு மொத்தமாக அழிக்காமல், இறக்கவிருந்த அதாபை (தண்டனையை) நிறுத்தி விடுகிறான்.

 ஒட்டு மொத்த ஊரும் அழிக்கப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் திரும்பி வந்த யூனுஸ் நபி, அந்த ஊர் அழிக்கப்படாமல் இருப்பதை கண்டு அல்லாஹ்விடமே கோபம் கொள்கிறார்.

தூதர் என்பதற்காக அவர் விரும்பியதையெல்லாம் செய்து விட முடியாது, அல்லாஹ்வாகிய நான் எதை எப்போது செய்ய வேண்டும் என்று நாடுகிறேனோ அப்போது தான் செய்வேன் என்பதாக கூறி, யூனுஸ் நபியை கண்டித்த செய்தியை குர் ஆன் சொல்கிறது.

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். 'அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்' என்று நினைத்தார். 'உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி வி ட்டேன்' என்று இருள்களிலிருந்து   அவர் அழைத்தார். (21:87) 

மீனுடைய வயிற்றினுள் சிறை வைக்கப்பட்டு தமது தவறை உணர்ந்து பாவமன்னிப்பு தேடிய பிறகு தான் யூனுஸ் நபி விடுதலை செய்யப்பட்டார் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்து, மேலே இதுவரை கூறப்பட்ட அடிப்படையான, அதிகாரத்தில் அல்லாஹ்வை விடுத்து வேறு எவருக்கும் பங்கு இல்லை என்பதையும், அல்லாஹ்வின் தூதராக இருந்தாலும் அவருக்கும் அதில் பங்கு கிடையாது என்பதையும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அறிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹ் எதை அருளினானோ அது மட்டும் தான் மார்க்கம். அதனோடு ஒன்றை சேர்ப்பது, அதிலொன்றை குறைப்பது, திரிப்பது, அனுமதிக்கப்பட்டவைகளை தடுப்பது, தடுக்கப்பட்டவைகளை அனுமதிப்பது என எந்த காரியத்திற்கும் எவருக்கும் அதிகாரமில்லை, அவர்கள் நபிமார்களாக இருந்தாலும் சரியே !
இந்த அடிப்படையை சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்..கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக