செவ்வாய், 30 ஜூன், 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 11)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 11


சஹாபாக்களிடமும் தவறுகள் ஏற்படும் (தொடர்ச்சி)


லுஹா தொழுகை :


முற்பகலில் லுஹா என்ற தொழுகை உள்ளது என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். நபி (ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகையை நிறைவேற்றியதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.

எனது தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விஷயங்களை வலியுறுத்திக் கூறினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விட மாட்டேன். அவைகளாவன : ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது; லுஹா தொழுவது; வித்ரு தொழுத பின்னர் உறங்குவது என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 1178, 1981

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட தினத்தில் எனது வீட்டுக்கு வந்து குளித்து விட்டு எட்டு ரக்அத்கள் தொழுதனர். அந்த நேரம் லுஹா நேரமாக இருந்தது என்று அபூ தாலிபின் மகள் உம்மு ஹானி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 357, 3171, 6158

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் தொழுது மற்றவருக்கும் வலியுறுத்திய ஒரு தொழுகையை சில நபித் தோழர்கள் அடியோடு மறுத்துள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.

நூல் : புகாரி 1128, 1177

நீங்கள் லுஹா தொழுவதுண்டா? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் இல்லை என்றனர். உமர் தொழுதிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். அபூபக்ர் தொழுதிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்களா? என்று கேட்டேன். அதற்கவர் அவர்கள் தொழுததாக நான் நினைக்கவில்லை என்றார்கள். இதை முவர்ரிக் என்பார் அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 1175

நபி (ஸல்) அவர்களின் வணக்கம் தொடர்பான செய்தி அவர்களின் மனைவிக்கும் தெரியாமல் இருந்துள்ளது. நபி (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றுவதில் தனித்து விளங்கிய இப்னு உமர் (ரலி) அவர்களுக்கும் தெரியாமல் இருந்துள்ளது.

நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெரியாமல் இருந்துள்ளதால் நபித்தோழர்கள் எந்த நடவடிக்கைக்கு நபிவழியை ஆதாரமாகக் காட்டுகிறார்களோ அதை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும்.
நபிவழியை ஆதாரமாகக் காட்டாமல் அவர்கள் செய்தவற்றையோ, சொன்னவற்றையோ பின்பற்றும் அவசியம் நமக்கு இல்லை என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.

நபித் தோழர்கள் எல்லாரும் 100 சதவிகிதம் நபி (சல்) அவர்களோடு எப்போதும் தொடர்பில் இருக்கவில்லை என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் சான்றாக நிற்கின்றன.
இது அவர்கள் தரப்பில் குற்றமுமில்லை. அவர்கள் வாழ்ந்த கால சூழலில் எல்லா நேரங்களிலும் நபி (சல்) அவர்கள் பேசுவதும் செய்வதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைந்து கொண்டே இருக்காது.
ஆனால், இன்று தகவல் தொடர்பு வசதிகள் பெருகியிருக்கும் காலத்தில் வாழ்கிற நமக்கு லுஹா தொழுகையை நபி (சல்) அவர்கள் அனுமதித்த செய்தியும் சேர்த்து கிடைக்கும் போது அது தான் நாம் பின்பற்ற வேண்டியது.

சஹாபாக்களுக்கு சில விஷயங்கள் தெரியாமலும் இருந்திருக்கின்றன என்று சொல்வது அவர்களை இழிவுப்படுத்துவதோ திட்டுவதோ ஆகாது. ஏனெனில், அவர்கள் சில விஷயங்களை அறியாமல் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை நாம் சுயமாக சொல்லவில்லை, நாமும் நம்மை எதிர்க்கிறவர்களும், அனைத்து முஸ்லிம்களும் ஏகமனதாய் அங்கீகரிக்கக் கூடிய ஹதீஸ் நூற்களில் தான் அவை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

எனவே, இது போன்ற விமர்சனங்களில் எள்ளளவும் அர்த்தமில்லை.



பிறரது இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டல் :

அபூ மூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் ஏதோ வேலையில் இருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூ மூஸா (ரலி) திரும்பி விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் தமது வேலையை முடித்த பின் ``அபூ மூஸாவின் குரல் கேட்டதே! அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் எனக் கூறினார்கள். அவர் திரும்பிச் சென்று விட்டார் எனக் கூறப்பட்டது. உடனே அவரை அழைத்து வரச் செய்து உமர் (ரலி) விசாரித்தார்கள். அதற்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் ``இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது எனக் கூறினார்கள். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் ``இதற்கான ஆதாரத்தை நீர் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் அன்ஸாரிகள் கூட்டத்தில் வந்து இதைக் கூறினார்கள்.

வயதில் சிறியவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர யாரும் உமக்காக இந்த விஷயத்தில் சாட்சி கூற மாட்டார்கள் எனக் கூறினார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்களை அழைத்து வந்து அபூ மூஸா (ரலி) சாட்சி கூற வைத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ``கடை வீதிகளில் மூழ்கிக் கிடந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட இந்தச் செய்தி எனக்குத் தெரியாமல் போய் விட்டதே எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 2062, 6245, 7353

உமர் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நபித்தோழர் என்றாலும் அவர்களால் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள இயலவில்லை. வியாபாரம் தொடர்பான பணிகளில் அவர்கள் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளனர் என்பதற்கு அவர்களே வாக்குமூலம் தந்து விட்டனர்.

இந்த நிலையில் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் நபிவழியில் தான் அமைந்திருக்க வேண்டும் என்று வாதிடுவது சரியாகுமா?
என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


தயம்மும் சலுகையை மறுத்த இப்னு மஸ்வூத்


மிகச் சிறந்த நபித்தோழர்களான உமர் (ரலி) , இப்னு மஸ்வூத் ஆகியோருக்கு குளிப்புக்காக தயம்மும் செய்வதை அறியாமல் இருந்துள்ளார்கள்.

நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) , அபூ மூஸா (ரலி) ஆகயோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் ``ஒருவருக்கு குளிப்பு கடமையாகி தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று அப்துல்லாஹ் பின் மவூதிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தண்ணீர் கிடைக்கும் வரை தொழக் கூடாது என்று விடையளித்தார் கள். தயம்மும் செய்வது போதும் என்று அம்மாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திக்கு உமது பதில் என்ன? என்று அபூ மூஸா (ரலி) திருப்பிக் கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அவர் சொன்னதைத் தான் உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லையே என்று விடையளித்தார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் ``அம்மார் கூறுவதை விட்டு விடுவோம். இந்த 5:6 வசனத்தை என்ன செய்யப் போகிறீர்? என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் ``நாம் இதை அனுமதித்தால் ஒருவர் குளிர் அடிக்கும் போது கூட தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார் என்று இப்னு மஸ்வூத் (ரலி) பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 346, 347

உளுச் செய்வதற்கு தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்து தொழலாம். அது போல் குளிப்பு கடமையாகி குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் குளிப்பதற்குப் பகரமாகவும் தயம்மும் செய்யலாம். இது இன்றைக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் தெரிந்து வைத்திருக்கின்ற சட்டமாகும்.

ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இதனை மறுக்கிறார்கள். அபூ மூஸா (ரலி), இப்னு மவூதுக்கு எதிராக ஒரு நபி மொழியையும், ஒரு திருக்குர்ஆன் வசனத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.

தக்க ஆதாரங்கள் கிடைக்காத நேரத்தில் தவறான தீர்ப்பு அளிப்பது மனிதர்களின் பலவீனம் என்று எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய தவறுகள் நிகழாத மனிதர்களை நாம் காண முடியாது.

ஆனால் மேற்கண்ட செய்தியில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் தக்க ஆதாரங்களை அபூ மூஸா (ரலி) எடுத்துக் காட்டிய பிறகு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தமது கருத்தை உடனே மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது தமது கருத்துக்கு ஆதரவான ஆதாரத்தை எடுத்துக் காட்டியிருக்க வேண்டும்.

ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தக்க ஆதாரத்தை அறிந்த பின்பும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அனுமதி அளித்தால் சாதாரண குளிருக்குப் பயந்து தயம்மும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று கூறுகிறார்கள். அதாவது அல்லாஹ் அனுமதித்த ஒன்றை தவறான காரணம் கற்பித்து இப்னு மஸ்வூத் (ரலி) மறுக்கிறார்கள்.

சொந்த யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் மனப்பான்மை தலை சிறந்த நபித் தோழரிடம் காணப்பட்டால் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? இது போல இன்னும் எத்தனை தீர்ப்புகள் அவரால் அளிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா?
சலுகையை தவறாக பயன்படுத்தி விடுவார்கள் என்கிற நல்ல நோக்கம் இதற்கு பின்னால் இருக்கின்றது என்கிற வகையில் அலலஹ் அவர்களை மன்னிப்பான். ஆனால், நாம் எப்படி இதை மார்க்க ஆதாரமாக கொள்வது?
குளிர் அடித்தால் தயம்மும் செய்து கொள்ளலாம் என்பதல்லவா மார்க்கம்?
அதற்கு மாற்றமாக, நல்லெண்ணத்தை மனதில் கொண்டே கூட ஒரு சஹாபி ஒரு சட்டத்தினை வகுத்தாலும் நாம் அதை ஏற்க முடியாது தானே?


பிளேக் ஏற்பட்ட ஊருக்குள் நுழைவது

உமர் ரலி) அவர்கள் சிரியாவை நோக்கிப் பயணமானார் கள். சரக் என்ற இடத்தை அடைந்த போது அபூ உபைதாவும், அவரது சகாக்களும் வந்து சிரியாவில் பிளேக் ஏற்பட்டதாகக் கூறினார்கள். இதற்கு என்ன செய்வது? என்று முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளிடம் உமர் (ரலி) ஆலோசனை கேட்ட போது யாருக்கும் இது பற்றிய விளக்கம் தெரியவில்லை. எனவே சிரியாவுக்குச் செல்ல உமர் (ரலி) ஆயத்தமானார்கள். வெளியூர் சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்கள் திரும்பி வந்தார்கள். உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து இது பற்றிய நபிமொழி தமக்குத் தெரியும் என்றார்கள். ஒரு ஊரில் பிளேக் நோய் வந்துள்ளதைப் பற்றிக் கேள்விப்பட்டால் அவ்வூரை நோக்கிச் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கும் ஊரில் பிளேக் ஏற்பட்டால் ஊரை விட்டு வெளி யேறாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு திரும்பி விட்டார்கள்.


நூல் : புகாரி 5729

சில விஷயங்கள் ஒரே ஒரு நபித்தோழருக்கு மட்டும் தெரிந்து, மற்றவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் இந்த நபி மொழியை எடுக்காட்டியிருக்கா விட்டால் உமர் (ரலி) உட்பட நபித்தோழர்கள் சிரியாவுக்குச் சென்றிருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.

ஆக, ஒரு செய்தியை ஒரு சஹாபி நபி (சல்) அவர்கள் வாயிலாக அறிகிறார் என்றால் அவர் தாமாக முன்வந்து ஒவ்வொருவரிடம் சென்று நான் இன்று ஒரு ஹதீஸை கேட்டேன், இன்று ஒரு ஹதீஸை கேட்டேன் என்று சொல்லிக் கொண்டே இருக்க மாட்டார்.
மாறாக, அவர் தமது வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்கும் போது அது தொடர்பான ஹதீஸ்களை நினைவில் கொண்டு செயல்படுவார், பிறருக்கும் அறிவுரை கூறுவார்.

இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசுதல்

ஹஜ், உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணிந்த பின் நறுமணம் பூசக் கூடாது என்பதை அனைவரும் அறிவோம். இஹ்ராம் அணிவதற்கு முன்னர் நறுமணம் பூசி, அந்த நறுமணம் நீங்குவதற்கு முன் இஹ்ராம் அணியலாமா?

இது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் போது இவ்வாறு செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்து வந்தார்கள். இவ்வாறு முடிவு செய்வதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இஹ்ராம் அணிந்த பின்னர் நறுமணம் பூசக் கூடாது என்பதால் முன்னர் பூசிய நறுமணமும் நீடிக்கக் கூடாது என்று அவர்கள் கருதியதே இதற்குக் காரணம்.

இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது ``இப்னு உமருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசி விடுவேன். பின்னர் தமது மனைவியரிடம் செல்வார்கள். பின்னர் அவர்கள் மீது நறுமணம் வீசும் நிலையில் காலையில் இஹ்ராம் அணிவார்கள் என்று விடையளித்தார்கள்.

பார்க்க : புகாரி 267, 270, 1754

நேரடி ஆதாரங்கள் இல்லாத போது நபித் தோழர்கள் சுயமாகக் கருத்து கூறியுள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகும் போது நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று எப்படிக் கூற முடியும்?

உமர் (ரலி) அவர்கள் சொன்னது அவரது சொந்த கருத்து என்று பளிச்சென்று தெரிகிறது.
அதே சமயம, ஆயிஷா (ரலி) அவரக்ளோ வஹீ செய்தியை கூறுகிறார்கள்.
இப்போது, நாம் பின்பற்ற வேண்டியது உமர் (ரலி) அவர்களது சொந்த கருத்தையா அல்லது அலலஹ்வின் வஹீயையா? என்பதே நம் முன்னால் நிற்கும் கேள்வி.


ஒரே நேரத்தில் கூறப்படும் மூன்று தலாக்

மனைவியைப் பிடிக்காத கணவர்கள் தாமாகவே மனைவியை விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது போல் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆண்களைப் பொருத்த வரை இவ்வாறு மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

முதல் தடவை விவாக ரத்து செய்து, மனைவிக்கு மூன்று மாதவிடாய் முடிவதற்குள் மனமாற்றம் ஏற்பட்டால் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மூன்று மாதவிடாய் கடந்து விட்டால் மனைவி சம்மதித்தால் மீண்டும் அவர்கள் தமக்கிடையே திருமணம் செய்து கொள்ளலாம்.

இரண்டாவது தடவை விவாகரத்து செய்தாலும் மேற்கண்ட அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம்.

மூன்றாவது தடவை விவாகரத்து செய்தால் அதன் பின்னர் மனைவியுடன் சேரவோ, திருமணம் செய்யவோ அனுமதி இல்லை. விவாகரத்து செய்யப்பட்ட மனைவி மற்றொருவனை மணந்து அவனும் விவாகரத்து செய்திருந்தால் முதல் கணவன் அவளைத் திருமணம் செய்ய அனுமதி உண்டு.

ஒரு கணவன் முதல் தடவை விவாகரத்து செய்யும் போது முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அது மூன்று தடவை தலாக் கூறியதாக ஆகாது. மூன்று தலாக் என்று கூறினாலும், மூவாயிரம் தலாக் என்று கூறினாலும் தனக்கு இஸ்லாம் வழங்கிய ஒரு வாய்ப்பைத் தான் அவன் பயன்படுத்தியுள்ளான். இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறை இருந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இது தான் நடைமுறை என்று தெரிந்திருந்தும் உமர் (ரலி) அவர்கள் அதை மீறி நபிவழிக்கு மாற்றமான சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை ஹதீஸ் நூலில் நாம் காண்கிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும், உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளும் மூன்று தலாக் எனறு கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. நிதானமாக முடிவு செய்யும் விஷயத்தில் மக்கள் அவசரப்படுகிறார்கள். எனவே மூன்று தலாக் என்று கூறுவதை மூன்று தலாக் என்றே சட்டமியற்றினால் என்ன? என்று கூறி அதை உமர் (ரலி) அவர்கள் சட்டமாகவும் ஆக்கினார்கள்.

நூல் : முஸ்லிம் 2689

ஆக, மூன்று முறை சொன்னாலும், ஏன், ஆயிரம் முறை சொன்னாலும் அது ஒரு தடவை சொன்னதாக தான் கருதப்படும் என்கிற கொள்கைக்கும், மூன்று முறை சொன்னாலும் அது மூறாகவே முடிக்கப்பட்டு விடும் என்று சொல்வதும் பாரதூரமான வேறுபாடு.

எனவே தான் "தடவை" என்கிற சொல்லாக்கம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

உதாரணத்திற்கு, ஒருவர் 40 இட்லியை ஒரே நேரத்தில் உண்ணுகிறார்.
இவர் உண்டது 40 இட்லி என்றாலும் இவர் எத்தனை முறை அல்லது எத்தனை தடவை உண்டார்? என்று கேட்டால் ஒரு தடவை என்று தான் சொல்வோம்.

அதே சமயம், இன்னொருவரோ ஒரு முறை கயை கழுகி விட்டு 2 இட்லி சாப்பிடுகிறார், பின் எழுந்து சென்று கையை சுத்தம் செய்து விடுகிறார்,
பிறகு மீண்டும் அமர்ந்து 2 இட்லி சாப்பிடுகிறார், மீண்டும் கையை கழுகி விடுகிறார்.
இப்படி மூன்று முறை அவர் செய்தால், அவர் சாப்பிட்டது மொத்தமாக 6 இட்லி தான் என்றாலும், அவர் எத்தனை தடவை சாப்பிட்டார்? என்று கேட்டால் மூன்று தடை என்று சொல்வோம்.
ஆக, ஒரு தடவை செய்தல் என்றால் அதற்கென்று துவக்கமும் முடிவும் இருக்க வேண்டும்.
உண்பதற்கு முன் கை கழுகுதல் துவக்கம் என்றால், உண்ட பிறகு எழுந்து சென்று கை கழுகி விடுவது அதனுடைய முடிவு.

அது போல், ஒரு தடவை தலாக் விடுவது என்றால், தலாக் விடுவதில் துவங்கி மீண்டும் அவளை மனைவியாக கருதி சேர்ந்து வாழ்வது தான் அதன் முடிவு.

இது தான் நபி (சல்) அவர்களின் வழிகாட்டுதலாக இருந்தது.
உமர் (ரலி) அவர்கள், இந்த சட்டத்தை மக்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்கிற காரணத்திற்காக வேண்டுமென்றே இதை மாற்றுகிறார்கள்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இது தான் என்று தெரியாமல் சுயமுடிவு எடுப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல் இது தான் என்று தெரிந்து கொண்டே அதை ரத்துச் செய்வது பாரதூரமானது என்பதில் சந்தேகம் இல்லை. உமர் (ரலி) போன்றவர்களிடமே சில நேரம் இது போன்ற முடிவுகள் வெளிப்பட்டது என்றால் இதை ஏற்று நபிவழியைப் புறக்கணிக்க முடியுமா?

நபிவழியை அறிந்து கொண்டே அதற்கு மாற்றமாகத் தீர்ப்பு அளித்திருக்கும் போது நபித் தோழர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆகும்?



தொடரும், இன்ஷா அல்லாஹ்








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக