வியாழன், 17 ஏப்ரல், 2014

கொள்கை விற்ற காசு !







முஸ்லிம் கட்சிகளை நாமே விமர்சிப்பதால் அது பாஜகவிற்கு சாதகமாய் முடியும் என்பது பொதுவாய் அனைவரும் வைக்கும் வாதம் தான்.

இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமான கொள்கை கொண்டவர்கள் இஸ்லாமிய பெயரை தாங்கியிருக்கிறார்கள் என்கிற காரணத்தை சொல்லி அவர்களை கண்டிக்காமல் ஒற்றுமை பேசுவோம் என்றால், மன்னிக்கவும், அத்தகைய, கொள்கையை விற்ற காசில் கிடைக்கும் ஒற்றுமை இந்த சமூகத்திற்கு தேவையில்லை.

மார்க்கத்திற்கு விரோதமாக செயல்படும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை நாம் விமர்சிப்பதால் முஸ்லிம்களின் ஒற்றுமை குலையும் என சிலர் தப்புக்கணக்கு இடுகின்றனர். அவ்வாறல்ல !
இவர்களை இனம் காணும் போது, அவர்களும் முஸ்லிம்கள் தானே என்று தவறாக நம்பும் ஒரு சில முஸ்லிம்களும் அவர்கள் பக்கத்திலிருந்து மீட்டெடுக்கப்படுகின்றனர்,
அவர்களது முகத்திரையை கிழிப்பதிலும் அவர்களை சரியான முறையில் அடையாளம் கண்டு கொள்வதிலும் ஒன்றுபடுகின்றனர் என்பதே உண்மை.

இந்த உண்மை, அத்தகைய பெயர்தாங்கிகளுக்கு கசப்பானது என்பதால் தான் ஒற்றுமை குலைகிறது என கூப்பாடு இடுகின்றனர்.

ஒரு வாதத்திற்கு, இதனால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒற்றுமை குலைவு ஏற்பட்டு, பாஜக அதை தமக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டது என்றாலும் கூட பரவாயில்லை, நாம் கண்டிக்கத் தான் வேண்டும்.

இஸ்லாத்தை குழி தோண்டி புதைக்கிற காரியத்தை முஸ்லிம் பெயராலேயே செய்யும் ஒரு அமைப்பை நாள் விமர்சிப்பதன் விளைவாக நாளை மோடி பிரதமராக ஆனால் கூட பரவாயில்லை , நாம் விமர்சிக்க தான் வேண்டும்.

அவன் ஆட்சிக்கு வந்து முஸ்லிம்களை கறுவறுப்பான் என்றாலும், தவறை தவறு என சொல்வதை எந்த நிலையிலும் நிறுத்த முடியாது.

அதிலும், அத்தகைய மார்க்க வரம்பு மீறல்களை செய்ய அவர்களுக்கு இஸ்லாமிய போர்வை தேவைப்படும் என்றால் அதை கண்டிப்பது என்பது நம் உயிரை விட முக்கியம்.
உயிரை விட முக்கியமானது தான் நன்மையை ஏவுதலும் தீமையை தடுத்தலும். ஏனெனில், இதை சொல்வது குர்ஆன்.

குர்ஆனின் கட்டளையை பேணி நடப்பதை விடவும் மோடி பிரதமராவதை தடுப்பது ஒரு முஸ்லிமுக்கு பெரிதல்ல !!

இயக்க விருப்பு வெறுப்புகளின்றியும், மறுமையை உள்ளத்தில் நிறுத்தியும் மேற்கூறியவற்றை சிந்திப்போர் இதை சரி காணத்தான் செய்வர்.

அரசியலுக்குள் காலூன்றி விட்டால் கொள்கையை காற்றில் பறக்க விட்டாக வேண்டும் என்பதற்கு விதிவிலக்குகளே இல்லாமல் அனைவரும் சான்றாய் நிற்பதை பார்க்க முடிகிறது.

மாற்று மதத்தவர் இவ்வாறு செய்கிற போது பலகீனப்படாத இந்த சமூகம், நம் சமூகத்தின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வோரே கொள்கையை விற்று விடும் போது நிச்சயம் பலகீனப்படும்.

அதை கண்டு கொள்ளக் கூடாது, அதை விடவும் ஒற்றுமை தான் முக்கியம் என்று 2014 இலும் பேசுவோம் என்றால், 1980 களில் தவ்ஹீதை பிரச்சாரம் செய்து தமிழக அளவில் நாம் ஏற்படுத்திய புரட்சிக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று தான் ஆகும்.

மார்க்கத்தை விட்டு விடாமல் உன்னால் மோடியை எதிர்க்க முடியும் என்றால் எதிர்க்க நாமும் துணை நிற்போம்.
மார்க்க வரம்பை மீறித்தான் எதிர்க்க முடியும் என்றால், அப்படி என்னால் எதிர்க்க முடியாது, மோடி தாராளமாக பிரதமாரகட்டும் ! இது தான் மறுமையை இலக்காக கொண்ட ஒரு முஸ்லிம் சொல்ல வேண்டியது !!

அடிப்படையில் கை வைப்பதை ஏகத்துவவாதி ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதை மீண்டுமொரு முறை பதிய வைக்கிறோம் !!

நாம் எந்த அளவிற்கு இந்த கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என்பதை நம்மை விமர்சித்து கருத்து மட்டும் இடுபவர்கள் சற்று சிந்தியுங்கள்.
இவர்களை கண்டித்து இங்கே பதிவுகள் இடுவதால் மறுமை இலாபம் மட்டுமே கிட்டுமே தவிர வேறு எந்த சுய இலாபமும் நமக்கில்லை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக