சனி, 25 அக்டோபர், 2014

தஜ்ஜாலுக்கு ஆற்றல் உண்டு என்பது சூனியத்திற்கு எதிரான ஆதாரம் !


நபிமார்கள் இதை செய்தார்கள், தஜ்ஜால் இதை செய்வான்.. என்றெல்லாம் சொல்லப்படுவது தான் சூனியத்தினால் எதையும் செய்ய முடியாது என்பதற்கு சான்று என்கிறேன் நான்.
ஆழமாக சிந்தித்துப் பாருங்கள்.
நீங்களோ மேலோட்டமாக சிந்தித்து, நபிமார்கள் செய்வார்கள் தானே அப்படியானால் சூனியத்தின் மூலம் மற்ற மனிதர்களாலும் செய்ய முடியும் என்கிறீர்கள்.
யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சூனியம் என்கிற பெயரால் அற்புதங்கள் நிகழ்த்திக் காட்ட முடியும் என்பது உண்மையாக இருக்குமானால் தஜ்ஜாலைப் பற்றி குறிப்பிட்டு அல்லாஹ் சொல்ல மாட்டான் என்கிறேன் நான்.
ஈஸா அதை செய்தார், மூசா இதை செய்தார், சுலைமான் இன்னின்னதை செய்தார் என்று, ஒவ்வொரு அற்புதத்தையும் ஒவ்வொரு நபிமார்கள் செய்ததை தனி தனியே சுட்டிக் காட்டி அல்லாஹ் சொல்வதில் அர்த்தமிருக்காது என்கிறேன்.
இன்னும் சொல்லப்போனால், அத்தகைய அற்புதம் தான் அவர்கள் தங்களை இறைவனின் தூதர்கள் என்று சமுதாயத்தில் காட்டிக் கொள்ள உதவியது என்கிற வகையில் சிந்திக்கையில், எல்லா மனிதர்களுக்கும் சகஜமாய் அற்புதத் திறன் இருக்கும் என்று நம்புவது தான் நபிமார்கள் மூலமாக அல்லாஹ் நிகழ்த்திய கராமத்களை மறுப்பதாக இருக்கும்.
அல்லாமல், கராமத்தை நம்புவதால் சூனியத்தையும் நம்ப வேண்டும் என்பது மிக மிக பாமரத்தனமான, ஆழமான, நுணுக்கமான புரிதல் அறவே இல்லாத வாதம் !
தஜ்ஜாலைப் பற்றியும் நபிமார்கள் செய்து காட்டிய அற்புதங்கள் பற்றியும் அல்லாஹ் பெருமையுடனும் மனித குலம் படிப்பினை பெறுவதற்காகவும் சொல்கிறான் என்றால், அத்தகைய ஆற்றல் குப்பனுக்கும் சுப்பனுக்கும் அகோரிக்கும், நாதாரிகளுக்கும் கொடுக்கப்படவில்லை என்று பொருள் !
இவர்கள் வாதப்படி) ஏற்கனவே இவ்வுலகில் ஏராளமான மனிதர்கள் மூலம் ஏராளமான அற்புதங்களை சூனியம் என்கிற பெயரில் பார்த்து வந்த தலைமுறை தான் தஜ்ஜாலை சந்திக்கும்.
அப்படியிருக்கையில், தஜ்ஜாலை பத்தோடு ஒன்று பதினொன்றாக தான் அம்மக்கள் காண்பார்களேயொழிய யாரும் அவனைக்கண்டு பிரமிப்படைய மாட்டார்கள், இதுவரை காணாத ஒன்றை கண்டது போன்றோ இதுவரை கேட்டிராத ஒன்றை கேள்விப்பட்டதை போன்றோ வியப்படைய மாட்டார்கள் !
நபிமார்கள் அற்புதம் செய்திருப்பதால் சூனியத்தினால் செய்ய முடியாது என்கிறோம்.
அற்புதங்கள் தான் அவர்களை நபியென்று நிரூபிக்க உதவியது.
அந்த சாதனத்தை, அந்த ஆயுதத்தை அல்லாஹ் எவருக்கும் கொடுக்க மாட்டான் !!
எது சூனியத்தை மறுக்கிறதோ அதை சூனியத்தை நம்புவதற்கு சான்றாய் கொண்டு வருகிறார்கள் !! ஆழமான புரிதல் இல்லாமையே இதற்கு காரணம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக