வெள்ளி, 6 ஜூன், 2014

மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?


ஆசிரியர் : அப்பாஸ் அலி 


இஸ்லாத்தை விட்டு விட்டு வேறொரு மதத்தைத் தழுவியன் இஸ்லாமிய அரசாங்கத்தால் கொல்லப்பட வேண்டும் என்ற நச்சுக் கருத்தை பல அறிஞர்கள் தவறுதலாகக் கூறி வருகிறார்கள். இதற்கு அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். 
நபி (ஸல்) அவர்கள் எவன் தன் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறானோ அவனைக் கொன்று விடுங்கள் என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) 
நூல் : புகாரி (3017)
இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான செய்தி என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. இந்த ஹதீஸை நாம் மறுக்கவுமில்லை. எதிர் தரப்பினர் ஆதாரமாகக் காட்டும் இந்த ஹதீஸ் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவனைக் கொல்ல வேண்டும் என்ற ஒரு கருத்தை மட்டும் தராமல் பல கருத்துக்களைத் தரக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. 
இவற்றில் எது குர்ஆனிற்கு முரணாக உள்ளதோ அந்த அர்த்தத்தைக் கொடுக்காமல் குர்ஆனுடன் ஒத்துப் போகின்ற பொருளைக் கொடுக்க வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.
எதிர் தரப்பினர் இந்த ஹதீஸிலிருந்து விளங்கிய தவறான கருத்தை நாம் மறுப்பதால் குர்ஆனிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்ற வாதத்தை எழுப்பி இந்த ஹதீஸை நாம் மறுப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் இதை நாம் மறுக்கவில்லை. முரண்படாத விதத்தில் விளக்கம் தான் தருகிறோம். பின்வரும் பொருள்களை இந்த ஹதீஸ் தருகின்றது. 
1. இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து கொண்டே இஸ்லாமிய கோட்பாடுகளை மாற்ற நினைப்பவனைக் கொல்ல வேண்டும். 
2. முஸ்லிமாக இருந்தவன் வேறோரு மதத்தைத் தழுவியதோடு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்பட்டால் அவனைக் கொல்ல வேண்டும். 
3. முஸ்லிமாக இருந்தவன் வேறொரு மதத்தைத் தழுவினால் அவன் இஸ்லாமிய அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படாவிட்டாலும் அவனைக் கொல்ல வேண்டும். 
4. ஒரு மதத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவன் அவன் ஏற்றுக் கொண்ட மதம் எதுவாக இருந்தாலும் அந்த மதத்தில் இருந்து கொண்டே அதன் கொள்கையை மாற்றம் செய்து குழப்பத்தை ஏற்படுத்தினால் அவன் கொல்லப்பட வேண்டும்.
5. ஒருவனுடைய மார்க்கம் எதுவாக இருந்தாலும் அவன் எதை மார்க்கம் என்று கடைப் பிடிக்கிறானோ அதை விட்டும் விலகி இன்னொரு மார்க்கத்திற்குச் சென்று விட்டால் அவனைக் கொல்ல வேண்டும். இந்த அடிப்படையில் இந்து மதத்தைக் கடைபிடிப்பவன் இஸ்லாத்திற்கு வந்தாலோ அல்லது இந்து மதம் அல்லாத வேறு மதங்களுக்குச் சென்றாலோ அவனைக் கொல்ல வேண்டும். 
இந்த ஐந்து கருத்துக்களில் நான்காவது ஐந்தாவது கருத்தை ஹதீஸ் தரவில்லை என்பதில் நாமும் எதிர் தரப்பினரும் ஒன்றுபட்டுள்ளோம். முதல் இரண்டு கருத்தையும் இந்த ஹதீஸ் கொடுக்கும் என்பதில் நாமும் எதிர்தரப்பினரும் ஒத்துப் போகிறோம். ஏனென்றால் முதலாவது இரண்டாவது வகையினர் இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படுவதால் தான் கொல்லப்படுகிறார்கள். மதம் மாறியதற்காக அல்ல.
 மூன்றாவது கருத்தான மதம் மாறியவன் இஸ்லாத்திற்கு எதிராகச் செல்லாவிட்டாலும் அவன் மீண்டும் முஸ்லிமாகாத வரை அவனைக் கொல்ல வேண்டும் என்பதில் தான் நமக்கும் அவர்களுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 
எதிர் தரப்பினர்கள் கூறும் மூன்றாவது கருத்தை ஏற்றுக் கொண்டால் இஸ்லாத்தில் நிர்பந்தம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் திருக்குர்ஆன் இஸ்லாத்தை ஏற்கும் விஷயத்தில் மக்களுக்குச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. 

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை.

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் (2 : 256)
மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று அல்லாஹ் கூறிவிட்டு அதற்கான காரணத்தையும் இணைத்தே சொல்கிறான். வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது என்பதே அந்தக் காரணம். சத்தியம் எது? அசத்தியம் எது? என்று தெளிவாக சொல்லப்பட்டு விட்டது. ஆகையால் இஸ்லாம் என்ற சத்தியத்தை யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் இலகுவாகப் புரிந்த கொள்ளலாம். இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. 
"இவ்வுண்மை உங்கள் இறைவனிடமிருந்து உள்ளது'' என்று (முஹம்மதே) கூறுவீராக! விரும்பியவர் நம்பட்டும்! விரும்பியவர் மறுக்கட்டும். அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும் உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்ட தங்குமிடம்.
அல்குர்ஆன் (18 : 29)
 (முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா?
அல்குர்ஆன் (10 : 99)
இஸ்லாத்தை ஏற்கும் படி யாரும் யாரையும் நிர்பந்திக்க முடியாது. ஏனென்றால் நேர்வழி காட்டுதல் என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது. அப்படியிருக்க நாம் ஒருவரை நிர்பந்தித்தால் அவர் நேர்வழி பெற்றுவிட முடியாது. எனவே இஸ்லாத்தைக் கட்டாயமாக ஒருவனின் மீது திணிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் இஸ்லாம் அனுமதி தரவில்லை. 
எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர். புறக்கணித்து (ஏக இறைவனை) மறுப்பவன் தவிர. அவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான். அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.
அல்குôஆன் (88 : 21)
நபி (ஸல்) அவர்களுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பை இந்த வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது. இஸ்லாம் உண்மைக் கொள்கை என்பதை அந்த மக்களுக்கு எடுத்துச் சொல்வது தான் நபி (ஸல்) அவர்களின் மீது கடமை. அவர்களை அடக்கி இஸ்லாத்தைப் பின்பற்றச் செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. 
நபியவர்களின் உபதேசத்தை ஏற்காமல் ஒருவன் புறக்கணித்தால் அவனை இந்த உலகத்தில் எதுவும் செய்ய இயலாது. மாறாக அவனை விசாரித்து அவனுக்கு தண்டனை தருகின்ற அதிகாரம் தனக்கு மட்டும் இருப்பதாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். 
(ஏக இறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' என (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் (108 : 1)
நபி (ஸல்) அவர்கள் கூறும் கொள்கையும் இணைவைப்பாளர்களின் கொள்கையும் ஒன்றல்ல. இரண்டுக்கும் மாபெரும் வித்தியாசம் உள்ளது. எனவே நான் உங்கள் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் படி என்னை நீங்கள் நிர்பந்திக்காதீர்கள். என் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி நான் உங்களை நிர்பந்திக்க மாட்டேன் என்று கூறுமாறு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். 
இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
அல்குர்ஆன் (9 : 6)
இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் அடைக்கலத்தை எதிர்பார்த்து வரும் நேரத்தில் அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்தால் தான் அடைக்கலம் கிடைக்கும் என்று நிர்பந்திக்குமாறு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடவில்லை. இணை வைப்பாளர்களை நிர்பந்திப்பதற்குரிய சூழ்நிலைகள் அமைந்தாலும் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வார்த்தையைக் கேட்கச் செய்ய வேண்டுமே தவிர இஸ்லாத்தில் இணையும் படி வற்புறுத்தக் கூடாது என்பதே அல்லாஹ்வின் கட்டளை. 

குர்ஆனுடன் ஒத்துப் போகாத விளக்கம்

மதம் மாறிகளைப் பற்றி குர்ஆன் பல இடங்களில் பேசுகிறது. இந்த இடங்களில் மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தைப் பொறுத்திப் பார்த்தால் அசாத்தியமான விஷயங்களைக் குர்ஆன் சொல்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டி வரும். எந்த வகையிலும் இவர்கள் கூறும் சட்டத்தை வசனங்களுடன் பொறுத்த முடியாது. 
நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.
அல்குர்ஆன் (4 : 137)
இஸ்லாத்தை ஏற்றுவிட்டு மறுத்தவனைக் கொல்ல வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டமாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்று விட்டு மறுத்தவுடன் மதம் மாறியவன் கொல்லப்பட்டு விடுவான். மீண்டும் அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான அவகாசம் அவனுக்குக் கிடைக்காது. ஆனால் இந்த வசனத்தில் இஸ்லாத்தை ஏற்று மறுத்த பிறகும் இஸ்லாத்தை ஏற்பதைப் பற்றிச் சொல்லப்படுகிறது. 
மதம் மாறியவன் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்தியிருந்தால் இரண்டாவது தடவையும் ஒருவனால் எப்படி இஸ்லாத்தில் நுழைந்திருக்க முடியும்? இதன் பின்பு அவன் எப்படி மீண்டும் மறுத்திருக்க முடியும்? மதம் மாறியவர்கள் கொல்லப்படாமல் இருந்தால் தான் இது சாத்தியம்.
மதம் மாறியவன் கொல்லப்பட வேண்டியவன் என்றால் அவன் கொல்லப்பட்டப் பிறகு நான் அவனுக்கு நேர்வழி காட்ட மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவது பொருத்தமில்லாமல் ஆகிவிடும். பல முறை மதம் மாறினாலும் இஸ்லாமிய அரசாங்கத்தால் அவன் கொல்லப்படாமல் உயிருடன் இருக்கும் போது தான் நேர்வழி காட்ட மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவது பொருத்தமாக அமையும். ஏனென்றால் நேர்வழி காட்டுதல் என்பது உயிருள்ளவர்களுக்கே சாத்தியம். 
உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் (2 : 217)
மதம் மாறியவர்களைக் கொல்வது சட்டமாக இருந்திருந்தால் உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக கொல்லப்பட்டவர்களின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிடும் என்று அல்லாஹ் கூறியிருப்பான். பொதுவாக எல்லோரும் எப்படி மரணிக்கிறார்களோ அது போன்ற மரணத்தையே மதம் மாறியவர்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான். 
மதம் மாறியவர்கள் திருந்துவதற்கு அவர்கள் மரணிக்கும் வரை அல்லாஹ் கால அவகாசம் கொடுக்கிறான். அதற்குள் அவர்கள் திருந்தி விட்டால் அவர்கள் செய்த செயல்கள் பாதுகாக்கப்படும். அவர்கள் நரகிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். மரணிக்கும் வரை திருந்துவதற்கு அவகாசம் அல்லாஹ்வால் தரப்பட்டிருக்கும் போது மதம் மாறியவுடன் அவர்களைக் கொல்லுவது என்பது இறை வாக்கிற்கு எதிரான செயல். 
தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் ஏனைய (நன்) மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப் படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் (3 : 86)
இந்த வசனத்தை நன்கு கவனித்துப் பார்த்தால் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தை அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லவேயில்லை என்று முடிவு செய்து விடலாம். மதம் மாறியவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்று இவ்வசனம் கூறுகிறது. மதம் மாறியதற்காக கொல்லப்பட்டு விட்டவர்களுக்கு நான் நேர்வழி காட்ட மாட்டேன் என்று அல்லாஹ் சொன்னால் அது பொறுத்தமாக அமையாது. மாறாக அவர்கள் உயிருடன் இருந்தால் தான் இந்த வாசகத்தைக் கூற முடியும். 
மதம் மாறியவர்களுக்குரிய தண்டûûயைப் பற்றி கூறும் போது அல்லாஹ்வின் சாபம் வானவர்கள் மற்றும் மக்களின் சாபம் அவர்களுக்கு உண்டு என்பதே அவர்களுக்குரிய தண்டனை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இந்த உலகத்தில் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று இங்கு கூறப்படவில்லை. 
மதம் மாறிய பிறகு திருந்தியவர்களை மன்னிப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இறைவனுடைய இந்த மன்னிப்பு மனிதன் மரணிக்கும் வரை இருக்கிறது. மதம் மாறியவர்கள் கொல்லப்பட்டு விட்டால் அவர்களால் எப்படி திருந்த முடியும்? அல்லாஹ் அவர்களை எப்படி மன்னிப்பான்?
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.
அல்குர்ஆன் (16 : 125)
இந்த வசனத்தில் எவ்வாறு அழைப்புப் பணியை செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுக்கிறான். விவேகம் அழகிய அறிவுரை அழகான வாதம் இவற்றின் மூலம் அழைப்புப் பணியைச் செய்யுமாறு கட்டளையிடுகிறான். ஒருவரை நிர்பந்தித்து இஸ்லாத்திற்கு இழுத்து வருவது விவேகமாகுமா? அழகிய அறிவுரையாகுமா? அல்லது அழகிய விவாதமாகுமா? 

நிர்பந்தம் இருக்கும் மார்க்கத்தில் விவாதம் எதற்கு?

இணை வைப்பாளர்கள் வைத்த வாதங்களை திருக்குர்ஆன் குறிப்பிட்டுக் கூறி அதற்கான பதிலையும் தருகிறது. சிந்தித்துப் பார்த்து இம்மார்க்கத்தைக் கடைபிடிக்கும் படி கூறுகிறது. இஸ்லாமியர்கள் கூட அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கும் போது செவிடர்கள் குருடர்களைப் போன்று அதை ஏற்கக் கூடாது என்று உபதேசம் செய்கிறது. 
இஸ்லாம் நிர்பந்தத்தைப் போதிக்கின்ற மார்க்கமாக இருந்தால் கண்மூடித்தனமாக அனைத்தையும் ஏற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக சிந்திக்கும் படி ஏன் சொல்கிறது? நிர்பந்தம் உள்ள இடத்தில் சிந்தனைக்கு வேலை இல்லை.
மாற்றார்களிடத்தில் அழகிய முறையில் விவாதம் செய்யும் வழிமுறையை இஸ்லாம் கற்றுக் கொடுப்பதாலும் மனிதர்களைச் சிந்திக்கத் தூண்டுவதாலும் இஸ்லாம் என்பது சிந்தித்து மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய மார்க்கம் தான். யாரையும் நிர்பந்தமாக இஸ்லாத்தில் இணையச் சொல்கின்ற மார்க்கம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்! "எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்க ளுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுங்கள்!
அல்குர்ஆன் (29 : 46)
குôஆனை வைத்து இணைவைப்பாளர்களிடத்தில் ஜிஹாத் செய்யுமாறு குர்ஆன் கட்டளையிடுகிறது. கொலை மிரட்டல் விடுத்து நிர்பந்திக்கும் மார்க்கமாக இஸ்லாம் இருந்தால் குர்ஆனை வைத்து இணை வைப்பாளர்களிடத்தில் தர்க்கம் செய்யுங்கள் என்று கட்டளையிடாது. ஏனென்றால் விவாதம் செய்து அவர்களை இஸ்லாத்திற்குக் கொண்டு வருவதை விட நிர்பந்தம் செய்தால் பயந்து கொண்டு எளிதில் இஸ்லாத்தில் நுழைந்து விடுவார்கள். ஆனால் இதை அல்லாஹ்வோ அவனது தூதரோ விரும்பாததால் விவாதம் செய்வதையே கற்றுத் தந்துள்ளார்கள்.
எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக!
அல்குர்ஆன் (25 : 52)

குர்ஆன் கூறாத தண்டனை

குர்ஆன் பல இடங்களில் மதம் மாறியவர்களைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட அவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறவே இல்லை. விபச்சாரம் அவதூறு திருட்டு போன்ற தவறான செயல்களுக்குத் தான் இஸ்லாம் இந்த உலகத்தில் தண்டனைகளைத் தருகிறது. ஆனால் தவறான நம்பிக்கைகளுக்கு மறுமையில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனையைக் கூறியே எச்சரிக்கிறது. 
இந்த உலகத்தில் இவர்களுக்கு இப்படி ஒரு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்தத் தண்டனையைக் கூறி மனிதர்களை எச்சரித்திருக்கும். ஆனால் திருட்டு அவதூறு விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கு இந்த உலகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனையைக் கூறிய குர்ஆன் எந்த ஒரு இடத்திலம் மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறவே இல்லை. 
நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். 
அல்குர்ஆன் (5 : 54)
மதம் மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் இஸ்லாமிய சட்டமாக இருந்தால் அதைச் சொல்ல வேண்டிய பொருத்தமான இடம் கூட இது தான். ஆனால் இந்த இடத்தில் மதம் மாறினால் நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்று அல்லாஹ் கூறாமல் இஸ்லாத்தைக் கடைபிடிக்கும் இன்னொரு கூட்டத்தை நான் கொண்டு வருவேன் என்று தான் சொல்கிறான். 
ஒரு உயிரைக் கொல்வது சம்பந்தமான இந்தப் பெரிய பிரச்சனைக்கு சரியான தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் குர்ஆனுடன் மோதுகின்ற விளக்கத்தைத் தான் இவர்களால் கூற முடிகிறது. 

பெயரளவில் முஸ்லிமாக வேண்டுமா?

மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றால் தான் அவன் இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியும். மதம் மாறியவனுடைய உள்ளம் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. உள்ளம் சம்பந்தப்பட்ட இந்த நோய்க்கு மருத்துவம் காண அவனுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்வது அவனது கேள்விகளுக்கு முறையான விளக்கங்ளைக் கொடுப்பது விவாதம் புரிவது போன்ற வழிகளைத் தான் கடைப்பிடிக்க வேண்டும். 
கொலை செய்வதாக அவனை அச்சுறுத்துவது ஒரு போதும் இந்நோய்க்குரிய மருந்தாகாது. எனவே தான் குர்ஆன் மதம் மாறியவர்களுக்கு மறுமையில் தண்டனை இருப்பதாகக் கூறுகிறது. இந்த உலகத்தில் அவர்களுக்கு எந்தத் தண்டனையையும் விதிக்கவில்லை.
உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒருவன் இஸ்லாத்திற்கு வந்தால் அவனுடைய இஸ்லாம் அல்லாஹ்விற்குத் தேவையானதல்ல. அவனது வணக்க வழிபாடுகள் நற்செயல்கள் இவை அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததும், சோம்பலாகவே தொழுது வந்ததும், விருப்பமில்லாமல் (நல் வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டவை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.
அல்குர்ஆன் (9 : 54)
 எந்தக் காரியத்தில் யாருக்கும் எந்த நன்மையும் இல்லையோ அந்த வேலையைச் செய்யுமாறு இஸ்லாம் சொல்லாது. நிர்பந்தமாக இஸ்லாத்தில் தள்ளப் பட்டவனுக்கு இந்த நன்மையான காரியங்களால் எந்த விதமான நன்மையும் மறுமையில் கிடைக்காது. மதம் மாறியவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்ற சட்டம் தூய இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்காது. மாறாக இஸ்லாத்தை மனதளவில் வெறுத்துக் கொண்டு அதற்கெதிராகச் செயல்படும் நயவஞ்சகர்களைத் தான் உருவாக்கும். 

நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்தாத சட்டம்

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் எத்தனையோ நபர்கள் இஸ்லாத்திற்கு வந்து விட்டு வேறொரு மதத்தைத் தழுவினார்கள். இவர்களில் ஒருவருக்காவது நபி (ஸல்) அவர்கள் மரண தன்டனையை விதித்ததாக ஆதாரப்பூர்வமான எந்தச் சான்றும் இல்லை. மாறாக மதம் மாறியவர்களைக் கொல்லாமல் விட்டதற்குத் தான் பல சான்றுகள் உள்ளது. 
ஹுதைபியா உடன்படிக்கையின் போது மக்கத்து குரைஷிகள் நபி (ஸல்) அவர்களிடம் எங்களில் யாராவது உங்களுடன் இணைந்து கொண்டால் அவரை மீண்டும் எங்களிடம் அனுப்பிவிட வேண்டும் உங்களில் யாராவது உங்களை விட்டும் விலகி எங்களிடம் வந்தால் நாங்கள் அவரை உங்களிடம் அனுப்ப மாட்டோம் என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : அல்மிஸ்வர் பின் மஹ்ரமா (ரலி)
நூல் : அஹ்மத் (18152)
மதம் மாறியவர்களைக் கொல்வது இஸ்லாமியச் சட்டமாக இருந்திருந்தால் இந்த இஸ்லாமியச் சட்டத்திற்கு மாறு செய்யும் விதத்தில் அமைந்த இந்த ஒப்பந்தத்திற்கு நபி (ஸல்) அவர்கள் ஒத்திருக்க மாட்டார்கள். மாறாக எங்களிடமிருந்து பிரிந்து வருபவர்களுக்குக் கொலை தண்டனையை நாங்கள் நிறைவேற்றுவதற்காக அவர்களை எங்களிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்றே கூறியிருப்பார்கள். மக்கத்துக் காஃபிர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமியச் சட்டத்தைத் தளர்த்தினார்கள் என்று சொல்ல முடியுமா?
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக உறுதிமொழி கொடுத்தார். மறு நாள் முதல் அவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். (இஸ்லாத்தை ஏற்கும் ஒப்பந்தத்திலிருந்து) என்னை நீக்கி விடுங்கள் என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை அதை மறுத்தார்கள். மதீனா (துருவை நீக்கித் தூய்மைபடுத்தும்) உலையைப் போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிடும். அதிலுள்ள நல்லவர்கள் தூய்மை பெற்றுத் திகழ்வார்கள் என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (1883)
இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் தனக்குக் காய்ச்சல் வந்துவிட்டதாக அந்த கிராமவாசி எண்ணி நபி (ஸல்) அவர்களிடம் செய்த பைஅத்தை முறித்துவிட்டு மக்காவிற்குச் செல்ல நாடுகிறார். மதம் மாறிவிட்ட இவரை ஏன் நபி (ஸல்) அவர்கள் கொல்லவில்லை? மாறாக இவரது எண்ணப்படி இவர் மக்காவிற்கு திரும்ப அனுப்பப்படுவார் என்பதை மதீனா தீயவர்களை வெளியேற்றி நல்லவர்கள் மட்டும் வைத்திருக்கும் என்று கூறுவதன் மூலம் உணர்த்துகிறார்கள். 
அன்சாரிகளில் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவிய பிறகு மதம் மாறி இணைவைப்புக் கொள்கையில் இணைந்து கொண்டார். பின்பு (இதற்காக) வருத்தப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் எனக்கு மன்னிப்பு கிடைக்குமா? என்று கேட்கும் படி தன்னுடைய கூட்டத்தாருக்குத் தகவல் தெரிவித்தார். அவரது கூட்டத்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இன்னார் (மதம் மாறியதற்காக) வருத்தப்பட்டு விட்டார். அவருக்கு மன்னிப்பு உண்டா? என்று உங்களிடம் கேட்கும் படி எங்களுக்குக் கூறியிருக்கிறார் என்று சொன்னார்கள். 
அப்போது தான் தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் ஏனைய (நன்) மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதன் பின்னர் திருந்தி சீர்திருத்திக் கொண்டோரைத் தவிர (மற்றவர்களுக்கு) வேதனை இலேசாக்கப் படாது. அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (3 : 86) என்ற வசனம் இறங்கியது. நபி (ஸல்) அவர்கள் இதை அவருக்குத் தெரிவித்த உடன் அவர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) 
நூல் : நஸயீ (4000)
மதம் மாறிவிட்டவரைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்தியிருந்தால் இந்த நபித்தோழர் திருந்தி மீண்டும் இஸ்லாத்திற்கு வந்திருப்பாரா? இந்தப் படுமோசமான சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சிறந்த சான்றாக உள்ளது. 
ஒரு மனிதர் கிறிஸ்தவராக இருந்தார். பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அல்பகரா மற்றும் ஆலு இம்ரான் அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத வெளிப்பாட்டை) எழுதி வந்தார். அவர் (மீண்டும்) கிரிஸ்தவராகவே மாறி விட்டார். அவர் (மக்களிடம்) முஹம்மதிற்கு நான் எழுதிக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் தெரியாது என்று சொல்லி வந்தார். பிறகு அல்லாஹ் அவருக் கு மரணத்தை அளித்தான். அவரை மக்கள் புதைத்து விட்டனர். ஆனால் (மறு நாள்) அவரை பூமி துப்பி விட்டது. உடனே (கிறிஸ்தவர்கள்) இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள் என்று கூறினர். அவருக்காக இன்னும் ஆழமாக ஒரு குழியைத் தோண்டினர். மீண்டும் அவரைப் பூமி வெளியே துப்பி விட்டிருந்தது. அப்போதும் இது முஹம்மது மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள் என்று கூறினர். மீண்டும் அவர்களால் முடிந்த அளவிற்கு குழியை ஆழமாகத் தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால் அவரை பூமி மீண்டும் துப்பி விட்டிருந்தது. அப்போது தான் அது மனிதர்களின் வேலையல்ல என்று புரிந்து கொண்டார்கள். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டு விட்டனர். 
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி (3617)
நபி (ஸல்) அவர்களுடன் இருந்து விட்டு பின்பு மதம் மாறிய இவரைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தால் உடனே நபித்தோழர்கள் அதைச் செயல்படுத்தியிருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக அல்லாஹ் தான் அவருக்கு மரணத்தைக் கொடுத்தான். 
நயவஞ்சகர்களில் இருவகையினர் இருந்தனர். இவர்களின் ஒரு வகையினரை நபி (ஸல்) அவர்கள் நயவஞ்கர்கள் என்று அறிந்து வைத்திருந்தார்கள். இன்னொரு வகையினரைப் பற்றி நபியவர்களுக்குத் தெரியாது. அல்லாஹ் மட்டும் தான் இவர்களைப் பற்றி அறிந்தவன். 
முதல் வகையினர் பலமுறை தன்னுடைய சொல்லாலும் செயலாலும் தங்களின் இறை மறுப்பை வெளிப்படுத்தினார்கள். இறை மறுப்பாளர்கள் என்று தெரிந்த பின்பும் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்கு மரண தண்டனையை விதிக்கவில்லை. 
நபி (ஸல்) அவர்களுடைய பிரார்த்தனை இவர்களுக்கு இவ்வுலகில் கிடைக்காது. நபியவர்களுடன் சேர்ந்து ஜிஹாத் செய்யும் பாக்கியத்தை இழந்தார்கள். இவை மட்டும் தான் இவர்களுக்கு இந்த உலகத்தில் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட தண்டனை. இது அல்லாத தண்டனைகளை இவர்களுக்குத் தருகின்ற பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.
உம்மை அவர்களில் ஒரு சாராரிடம் அல்லாஹ் திரும்ப வரச்செய்து அப்போது, போருக்குப் புறப்பட அவர்கள் அனுமதி கேட்டால் "என்னுடன் ஒரு போதும் புறப்படாதீர்கள்! என்னுடன் சேர்ந்து எந்த எதிரியுடனும் போர் புரியாதீர்கள்! நீங்கள் போருக்குச் செல்லாது தங்கி விடுவதையே ஆரம்பத்தில் விரும்பினீர்கள். எனவே போருக்குச் செல்லாது தங்கியோருடன் நீங்களும் தங்கி விடுங்கள்!'' என்று கூறுவீராக! அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.
அல்குர்ஆன் (9 : 83)
இறை மறுப்பிற்குரிய சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் மறுத்தனர். அடைய முடியாத திட்டத்தையும் தீட்டினார்கள். அவர்களை அல்லாஹ்வும், தூதரும் அவனது அருள் மூலம் செல்வந்தர்களாக ஆக்கியதற்காகத் தவிர (வேறு எதற்காகவும்) அவர்கள் குறை சொல்லித் திரியவில்லை. அவர்கள் திருந்திக் கொண்டால் அது அவர்களுக்கு நன்மையாக அமையும். அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் அவர்களை இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்துவான். பூமியில் அவர்களுக்குப் பாதுகாவலனோ உதவுபவனோ இல்லை.
அல்குர்ஆன் (9 : 74)
நபித்தோழர்கள் இந்த நயவஞ்சகர்களை நாங்கள் கொல்லட்டுமா? என்று கேட்ட போது கூட மக்கள் தவறாகப் பேசுவார்கள் வேண்டாம் என்றே கூறினார்கள். 
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். அதன் பின்னர் முஹாஜிர்கள் (அன்சாரிகளை விட) அதிகரித்து விட்டனர். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இப்படியா அவர்கள் செய்து விட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால் (எங்கள் இனத்தோரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர் என்று கூறினான். அப்போது (செய்தி அறிந்த) உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் என்னை விடுங்கள் இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விடுகிறேன் அல்லாஹ்வின் தூதரே என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள் முஹம்மத் தன் தோழர்களைக் கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : புகாரி (4907)

தமது மார்க்கத்தை மாற்றிக் கொண்டவன் என்றால் யார்?

தனது மார்க்கத்தை மாற்றியவனைக் கொல்லுங்கள் என்று கூறும் ஹதீஸிற்கு மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்று அர்த்தம் செய்வது குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஒளியில் தவறு என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். எதிர்தரப்பினர் கூறும் பொருள் சரியானதல்ல என்றாகிவிட்ட போது அதன் உண்மையான பொருள் என்ன என்பதைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். 
இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்து கொண்டே இஸ்லாம் கூறாததை இஸ்லாம் என்று சொல்பவன் அல்லது இஸ்லாம் கூறியிருப்பதை இஸ்லாம் இல்லை என்று கூறுபவன் இஸ்லாமிய அரசாங்கத்தால் கொல்லப்படுவான் என்பதே அந்த ஹதீஸின் விளக்கம். மதம் மாறியவனை விட இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்தை சீர்குலைப்பவன் தான் மிகவும் தீமைக்குரியவன். 
பின்னால் வரவிருக்கும் கவாரிஜ் கூட்டத்தார்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கிறார்கள். நபியவர்கள் கூறிய தன்மையுள்ள அந்தக் கூட்டத்தாரிடம் அலீ (ரலி) அவர்கள் போர் செய்தார்கள். இவர்கள் தங்களை முஸ்லிம் என்றே கூறிக் கொண்டிருந்தார்கள். குர்ஆனைப் படிக்கும் வழக்கம் உள்ளவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான காரியங்களை நடைமுறைப்படுத்துவதால் இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அலீ (ரலி) அவர்கள் ஒரு தங்கக் கட்டியை நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பினார்கள். இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக அதை நபி (ஸல்) அவர்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் எழுந்து வந்து நீங்கள் அநியாயமாகப் பங்கிட்டுள்ளீர்கள். அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என்று கூறினார். இவரைப் பற்றியும் இவரது வழித்தோன்றல்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். 
இந்த மனிதனின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால் அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயத்திற்குள்) செல்லாது. வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். இஸ்லாமியர்களையே அவர்கள் கொலை செய்வார்கள். சிலை வணங்கிகளை விட்டு விடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ஆது கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழிப்பேன் என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர் :அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி (7432)
அலீ (ரலி) அவர்களும் அபூபக்கர் (ரலி) அவர்களும் இந்த ஹதீஸ் கூறுகின்ற கருத்தின் அடிப்படையில் மார்க்கத்தில் இருந்து கொண்டே மார்க்கத்தை மாற்ற நினைத்தவர்களிடத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களிடத்திலும் தான் போர் புரிந்தார்கள். 
அலீ (ரலி) அவர்களிடம் (ஸனாதிகா என்று சொல்லப்படும்) இஸ்லாத்திற்கு விரோதமாகச் செயல்பட்ட சிலர் கொண்டு வரப்பட்டனர். அவர்களை அலீ (ரலி) அவர்கள் எரித்து விட்டார்கள். இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் நானாக இருந்திருந்தால் அவர்களை எரித்திருக்க மாட்டேன். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அளிக்கின்ற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள் என்று கூறினார்கள். மாறாக நபி (ஸல்) அவர்கள் எவர் தமது மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறாரோ அவருக்கு மரண தண்டனை அளியுங்கள் என்று சொன்னதற்கேற்ப நான் அவர்களுக்கு மரண தண்டனை அளித்திருப்பேன் என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர் : இக்ரிமா (ரலி)
நூல் : புகாரி (6922)
அலீ (ரலி) அவர்களால் கொல்லப்பட்டவர்கள் யாரென்றால் அலீ (ரலி) அவர்களைக் கடவுள் என்று சொன்னவர்கள். இவர்கள் முஸ்லிம் சமுதாயத்துடன் இணைந்திருந்தார்கள். அதனால் தான் அலீ (ரலி) அவர்களைக் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்றார்கள். இவர்களுக்கு ராஃபிளா என்று சொல்லப்படும். இந்தக் கூட்டத்தினருக்கு தலைவனாக அப்துல்லாஹ் பின் சபஃ என்பவன் இருந்தான். இவன் தன்னை இஸ்லாமியனாகக் காட்டிக் கொண்டு இந்த மோசமான கொள்கையைத் தோற்றுவித்தான். 
இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்திற்கு எதிரான கொள்கையைச் சொன்ன இவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸையே ஆதாரமாகக் காட்டினார்கள். இதிலிருந்து அந்த ஹதீஸ் யாரைக் கொல்ல வேண்டும் என்று சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 
இந்த வரலாற்றுச் செய்தி ஹசன் என்ற தரத்தில் அமைந்தது என்று இப்னு ஹஜர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இமாம் ஷவ்கானீ அவர்கள் ஆதாரப்பூர்வமான செய்தி என்று தனது நூலில் குறிப்பிடுகிறார்கள். 
நபி (ஸல்) அவர்கள் மரணித்து அபூபக்ர் (ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்ததின் மூலம்) காஃபிராகி விட்டார்கள். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்கர் (ரலி) அவர்கள் தயாரானார்கள்) உமர் (ரலி) லா இலாஹ இல்லல்லாஹ் கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்? என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) உமரை நோக்கி அல்லாஹ்வின் மீதாணையாக தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போர்களுடன் நான் போர் புரிவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக நபி (ஸல்) அவர்களிடம் இவர்கள் வழங்கி வந்த ஒரு ஒட்டகக் குட்டியை வழங்க இவர்கள் மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன் என்றார். இது பற்றி உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன் என்றார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (1400)
அபூபக்கர் (ரலி) அவர்கள் யாரிடத்தில் போர் செய்தார்களோ அவர்கள் கலிமாச் சொன்னவர்கள். தொழுகையைக் கடைப்பிடித்தவர்கள். ஆனால் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகிய ஸகாத்தைக் கொடுக்க மறுத்தார்கள். ஸகாத் இல்லை என்றே இஸ்லாம் சொல்கிறது என்று வாதிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் இவர்களால் மாற்றப்பட்டு விடும் என்பதால் அபூபக்கர் (ரலி) அவர்கள் அவர்களிடத்தில் போர் தொடுத்தார்கள். 
தனது மார்க்கத்தை மாற்றுபவனைக் கொல்லுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன காரணத்தினால் தான் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸகாத்தை மறுத்தவர்களிடத்தில் போர் புரிந்ததாக இமாம் புகாரி அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

மதம் மாறிவிட்டவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டுமா?

இஸ்லாத்தில் இருந்து கொண்டே புரட்சி செய்பவர்களுக்குத் தான் மரண தன்டனை என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் நிரூபணம் செய்கிறது. தனது தீனை மாற்றிக் கொண்டவனைக் கொல்லுங்கள் என்று கூறும் ஹதீஸ் மதம் மாறியவர்களைக் குறிக்கும் என்று வைத்துக் கொண்டாலும் மதம் மாறிய அனைவரையும் குறிக்காது. 
இஸ்லாத்தை விட்டு வேறொரு மதத்திற்குச் செல்பவர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். ஒன்று மதம் மாறியதோடு யாருக்கும் எந்த இடையூறும் தராமல் தனது கொள்கையில் இருந்து கொள்பவர்கள்.
 இரண்டாவது வகையினர் மதம் மாறியதோடு இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படுபவர்கள். இரண்டாவது வகையைச் சார்ந்த மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்பதற்குத் தான் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று தன்மைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலே தவிர (வேறெந்த நிலையிலும்) முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணம் முடித்த பிறகும் விபச்சாரம் செய்தவன் கல்லெரிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றே கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான் அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான் அல்லது நாடு கடத்தப்படுவான். 
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல் : நஸயீ (3980)
இஸ்லாத்தை விட்டும் வெளியேறியதோடு இஸ்லாத்திற்கு எதிராக செயல்படுபவனைத் தான் கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மதம் மாறி இஸ்லாத்திற்கு எதிராகச் செயல்படாமல் தான் விரும்பிய கொள்கையில் யாருக்கும் எந்த இடையூரையும் ஏற்படுத்தாமல் வாழுபவன் இந்த ஹதீஸீல் சொல்லப்பட்ட மூன்று நபர்களுள் அடங்க மாட்டான். 
இந்த மூன்று நபர்களைத் தவிர வேறு யாரையும் கொல்லக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது இப்பட்டியலில் அடங்காத ஒருவனைக் கொலை செய்வது எப்படி நியாயம்? இதற்குப் பிறகும் மதம் மாறியவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறினால் அநியாயமாகக் கொலை செய்த குற்றத்திற்காக மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இச்சட்டத்தைக் கூறிய இவர்கள் கொல்லப்பட வேண்டும். 
நபி (ஸல்) அவர்கள் கூறிய மூன்றாவது நபரைப் பற்றி அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். நபியவர்கள் அவனுக்குக் கூறிய அதே தண்டனையைத் தான் அல்லாஹ்வும் கூறுகிறான். 
கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.
அல்குர்ஆன் (5 : 33)
மதம் மாறியவர்களைப் பற்றி பல இடங்களில் பேசிய இறைவன் அங்கெல்லாம் இந்தத் தண்டனையைப் பற்றிப் பேசவில்லை. மாறாக மதம் மாற்றியவர்களைப் பற்றி இங்கு பேசாமல் அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போர் செய்பவர்களைப் பற்றி பேசுகின்ற இந்த இடத்தில் தான் மரணதண்டனையைக் கூறுகிறான். மதம் மாறாமல் தன்னை இஸ்லாமியன் என்று சொல்லிக் கொண்டே ஒருவன் எதிர்த்தாலும் அவனையும் கொல்லும்படித் தான் இஸ்லாம் கூறுகிறது. 
மதம் மாறியவன் மதம் மாறாதவன் என்று பாகுபடுத்தாமல் எதிரியாக மாறுபவன் யாராக இருந்தாலும் அவனைக் கொல்ல வேண்டும் என்றே இஸ்லாம் கூறுகிறது. இதிலிருந்து எதிராகச் செயல்பட்டால் தான் தண்டனை வழங்கப்படுமே தவிர மதம் மாறிவிட்டான் என்பதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம். 
கை கால்களை வெட்ட வேண்டும் என்று இந்த வசனம் கூறும் சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் உக்ல் என்ற கூட்டத்தாருக்குச் செயல்படுத்தினார்கள். அந்தக் கூட்டத்தினர் மதம் மாறியோதோடில்லாமல் பல மோசடித்தனங்களைச் செய்தார்கள். 
உக்ல் மற்றும் உரைனா குலத்தாரில் சிலர் மதீனாவிற்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம் தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகப் பேசினர். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் பால்தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள். நாங்கள் விளைநிலங்கள் வைத்திருப்பவர்கள் அல்லர். (நாங்கள் பால்தரும் கால்நடைகளைக் காடுகளில் மேய்த்து அதன் பாலை அருந்துபவர்களாய் இருந்தோம்) என்று கூறினர். அவர்களுக்கு மதீனா(வின் தட்ப வெட்பம்) ஒத்துக் கொள்ளவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகங்களையும் ஒரு மேய்ப்பரையும் அவர்களு(டைய உபயோகத்து)க்காக வழங்கும் படி உத்தரவிட்டார்கள். மேலும் ஒட்டகங்கள் (மேயும்) இடத்திற்குச் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் மூத்திரத்தையும் பருகிக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றுக் கொண்டனர்) அவர்கள் ஹர்ரா பகுதியில் இருந்த போது இஸ்லாத்திலிருந்து விலகி இறை மறுப்பாளர்களாக மாறி விட்டனர். மேலும் நபி (ஸல்) அவர்களின் கால்நடை மேய்ப்பாளரைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டனர். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது (அவர்களைப் பிடித்து வர) அவர்களைத் தொடர்ந்து ஆளனுப்பினார்கள். (அவர்கள் பிடிபட்டு மதீனாவுக்கு கொண்டு வரப்பட்ட போது) அவர்களுக்குத் தண்டனை கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (மக்கள்) அவர்களுடைய கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடு போட்டார்கள். அவர்களுடைய கை கால்கள் வெட்டப்பட்டு ஹர்ரா பகுதியில் அவர்கள் விடப்பட்டனர். அவர்கள் அந்த நிலையிலேயே மாண்டு போயினர். 
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) 
நூல் : புகாரி (4192)
நபி (ஸல்) அவர்களை ஏமாற்றி விட்டு மேய்ப்பவரையும் கொன்று விட்டு கால்நடைகளை திருடிச் சென்ற காரணத்தினால் தான் நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கொல்லும்படி சொன்னார்கள். இன்னும் இவர்கள் மனப்பூர்வமாக இஸ்லாத்திற்கு வரவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களை ஏமாற்றுவதற்காகத் தான் வந்தார்கள். 
இவர்களுடைய இந்த கொடிய செயலை அபூகிலாபா என்ற அறிவிப்பாளர் பின்வருமாறு கூறுகிறார்.
ஓர் உயிரை (அநியாயமாக்) கொன்று அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்து அல்லாஹ்வின் தூதரை அச்சுறுத்திய இ(ந்தக் கொடுஞ்செயல் புரிந்த)வர்களுக்குத் தண்டனை கொடுப்பதில் தாமதம் காட்டமுடியுமா என்ன?
அறிவிப்பவர் : அபூ கிலாபா
நூல் : புகாரி (4610)
இந்த உக்ல் குலத்தார் செய்ததை விட கொடிய செயல் வேறெது? அவர்கள் இஸ்லாத்தை விட்டுவிட்டு கொலையும் செய்துவிட்டு கொள்ளையடித்தார்கள். 
அறிவிப்பவர் : அபூ கிலாபா 
நூல் : புகாரி (6899)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸைப் போன்ற செய்தியை அபூகிலாபா அவர்களும் அறிவிக்கிறார்கள். இதைக் கூறிவிட்டு உக்ல் கோத்திரத்தாரின் நிகழ்வை அவர் கூறுகிறார். 
அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று காரணங்களில் ஒன்றுக்காகவே தவிர எவரையும் கொல்லுமாறு உத்தரவிட்டதில்லை என்று நான் கூறினேன். (அந்த மூன்று காரணங்கள் வருமாறு)
1. மன இச்சையின் பேரில் (அநியாயமாகப் படு)கொலை செய்தவர். (அதற்குத் தண்டனையாக) அவர் கொல்லப்படுவார். 
2. திருமணமான பின்னர் விபச்சாரம் புரிந்த மனிதர்.
3. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் புரியத் துணிந்து இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டவர்.
அறிவிப்பவர் : அபூகிலாபா
நூல் : புகாரி (6899)

குழப்பம் செய்பவர்களுக்கே தண்டனை

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்லாத்தில் குழப்பம் விளைவிப்பதற்காக வேண்டுமென்றே இஸ்லாத்தைத் தழுவிட்டு பிறகு இறை நிராகரிப்பில் இணைந்து கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களை இதன் மூலம் துன்புறுத்துவதை அவர்கள் நாடினார்கள். 
இவர்கள் இஸ்லாத்திற்கு வரும் போது மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வரவில்லை. மாறாக இஸ்லாத்தை ஏற்றுவிடக் கூடாது என்று எண்ணிக்கொண்டே இஸ்லாத்தில் குழப்பம் விளைவிப்பதற்காக வந்தார்கள். இத்தகையோரைப் பற்றி அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான். 
"நம்பிக்கை கொண்டோர் மீது அருளப்பட்டதை காலையில் நம்பி, மாலையில் மறுத்து விடுங்கள்! அப்போது தான் (மற்றவர்களும் அந்த மார்க்கத்திலிருந்து) விலகுவார்கள்'' என்று வேதமுடையோரில் ஒரு குழுவினர் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (3 : 72)
நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே! கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். 
அல்குர்ஆன் (5 : 41)
(இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்! அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்தப் பாக்கியமும் இருக்கக் கூடாதென்று அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. நம்பிக்கையை விற்று (இறை) மறுப்பை விலைக்கு வாங்கிக் கொண்டோர், அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
அல்குர்ஆன் (3 : 176) 
இவர்களுடைய இந்தக் குழப்பம் விளைவிக்கும் செயலைத் தடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் தன் மார்க்கத்தை மாற்றியவனை கொல்லுங்கள் என்று கூறினார்கள் என்று விளங்கிக் கொண்டால் குர்ஆன் வசனத்தை வைத்து இந்த ஹதீஸை விளங்கிக் கொண்டதாக அமையும். மரண தண்டனை இவர்கள் செய்த குழப்பத்திற்கான தண்டனையே தவிர மதம் மாறியதற்கான தண்டனை அல்ல. 
நபி (ஸல்) அவர்கள் யாரைக் கொல்லுமாறு கூறினார்களோ அவர்கள் உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் வேறொன்றைக் காட்டிக் கொண்டிருந்த நயவஞ்சகர்கள். இந்த அடிப்படையில் குழப்பத்தை விளைவிக்கும் எண்ணத்தில் இஸ்லாத்தில் நுழைந்த மதம் மாறிகளைக் கொல்ல வேண்டுமே தவிர இந்தத் தவறான எண்ணத்தில் புகாமல் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு பிறகு மதம் மாறுபவர்களைக் கொல்வது கூடாது. 
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியவர்கள் இஸ்லாமிய ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நபி (ஸல்) அவர்களுடன் வாழவில்லை. மாறாக நபியவர்களை விட்டும் பிரிந்து அவர்களுக்கு எதிராக செயல்பட்ட இணை வைப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டு போரிடுபவர்களாகத் தான் இருந்தார்கள். 
எனவே இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதத்தைத் தூக்குவார்கள். இஸ்லாமியர்களின் இரகசியங்களை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுப்பார்கள் என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் மதம் மாறியவர்களைக் கொலை செய்யச் சொன்னார்கள். 
அதே நேரத்தில் இஸ்லாத்தைப் புறக்கணித்த நயவஞ்சகர்களைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. யார் யார் காஃபிர் என்று அவர்களுக்குத் தெரிந்தும் கூட அவர்கள் கொல்லவில்லை. ஏனென்றால் இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கவில்லை. ஏன் பலமுறை முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு இணை வைப்பாளர்களுக்கு எதிராகப் போர் புரிந்தார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கியவர்களுக்குத் தான் இந்தச் சட்டம் என்பதை இதிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். 
நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்னால் பல போர்கள் நடந்துள்ளன. இதுவெல்லாம் மதம் மாற்றத்தை அடிப்படையாக வைத்து நடக்கவில்லை. மாறாக முஸைலமா போன்றவர்கள் தங்களை நபி என்று சொல்லிக் கொண்டு இஸ்லாத்தைச் சீர்குலைக்கத் திட்டம் தீட்டியதற்காகத் தான் நடைபெற்றது. 

ஏகோபித்தக் கருத்தில்? ஏன் தடுமாற்றம்? 

மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்பதை அனைத்து அறிஞர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து. மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று சொல்பவர்கள் கூட சில நேரங்களில் கொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்கள். 
ஒரு பெண் மதம் மாறிவிட்டால் அவளைக் கொல்லக் கூடாது என்று ஹனஃபீ மத்ஹபைச் சார்ந்த பல அறிஞர்கள் கூறுகிறார்கள். பெண் ஆயுதங்களைத் தூக்கி போர் செய்ய மாட்டாள் என்பதே இதற்குக் காரணம். இஸ்லாத்திற்கு ஒருவன் புதிதாக வந்து விட்ட சிறிது நாளில் மதம் மாறிவிட்டால் இவனுக்கும் இச்சட்டம் பொருந்தாது என்றும் சிலர் கூறுகிறார்கள். 
மொத்தத்தில் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்ற சட்டத்தைக் கூறுபவர்கள் கூட இச்சட்டத்தைச் சிலருக்குப் பொருத்துகிறார்கள். சிலருக்குத் தளர்த்துகிறார்கள் என்பதே உண்மை. மதம் மாறியவரைக் கொல்ல வேண்டும் என்ற இந்தச் சட்டத்தில் மாற்றுக் கருத்துள்ளவர்களும் இருக்கிறார்கள். 
நாம் மட்டும் இதை மறுக்கவில்லை. இமாம் சுஃப்யான் சவ்ரீ மற்றும் அந்நஹயீ ஆகிய இருவரும் மதம் மாறியவன் கொல்லப்படக் கூடாது. அவன் மரணிக்கும் வரை திருந்திக் கொள்ளும் படி அவனுக்குக் கூற வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இக்காலத்து அறிஞர்கள் பலர் நம்மை விட இச்சட்டத்தைப் பலமாக மறுத்துள்ளார்கள்.

எதிர் வாதங்களும் முறையான பதில்களும்

மதம் மாறியவனைக் கொல்லுமாறு மார்க்கம் சொல்லவில்லை என்பதற்குப் பல குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டினோம். எதிர்க் கருத்தைக் கொண்டவர்கள் இவற்றில் பெரும்பாலான ஆதாரங்களுக்குப் பதில் சொல்லாமல் ஒன்றிரண்டு ஆதாரங்களுக்கு மட்டும் அடிப்படையில்லாத பதிலைச் சொல்கிறார்கள்.

விளக்கம் : 1

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற வசனம் யாருக்காக இறங்கியதோ அவர்களுக்கு மட்டும் தான் நிர்பந்தம் இல்லை என்ற சட்டம் பொருந்தும் இந்த அடிப்படையில் இஸ்லாத்திற்குள் வராமல் இருப்பவரை இஸ்லாத்திற்கு வருமாறு நிர்பந்திக்கக் கூடாது என்பதை மட்டும் தான் இந்த வசனம் சொல்கிறது. இஸ்லாத்திற்கு வந்து விட்டு மதம் மாறுபவனை நிர்பந்திக்கக் கூடாது என்று சொல்லவில்லை என்று வாதிடுகிறார்கள். இந்த வசனம் இறங்கியதற்கான காரணத்தை விளக்கும் பின்வரும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். 
குழந்தைகள் பிறந்து அக்குழந்தைகள் அனைத்தும் மரணித்து விடும் போது தனக்கு பிறக்கின்ற குழந்தை உயிரோடு இருக்குமானால் அக்குழந்தையை யூதனாக மாற்றி விடுவேன் என்று (அறியாமைக் காலத்தில்) பெண் தன் மீது கடமையாக்கிக் கொள்பவளாக இருந்தாள். பனூ னளீர் என்ற (யூதக் கூட்டம் ஊரை விட்டும்) வெளியேற்றப்பட்ட போது அன்சாரிகளுடைய குழந்தைகளில் சிலரும் அதில் இருந்தார்கள். எனவே அன்சாரிகள் எங்கள் பிள்ளைகளை நாங்கள் (யூத மதத்தில்) விட்டு விட மாட்டோம் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது என்ற வசனத்தை இறக்கினான். 
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) 
நூல் : அபூதாவுத் (2307)
பிறப்பிலே யூதர்களாக இருந்தவர்களை இஸ்லாத்திற்கு வரும்படி நிற்பந்திக்கக் கூடாது என்பதற்குத் தான் இந்த வசனம் இறங்கியது. இஸ்லாத்திற்கு வந்துவிட்டு மதம் மாறியவனை திரும்ப இஸ்லாத்திற்கு வருமாறு வற்புறுத்துவதற்குத் தடையாக வசனம் இறங்கவில்லை. எனவே மதம் மாறியவனை நிர்பந்திப்பதற்கு தடையாக இந்த வசனத்தைக் காட்ட முடியாது என்று கூறுகிறார்கள். 

நமது விளக்கம்

இவர்கள் விளங்கியிருப்பது முற்றிலும் தவறானது. ஒருவன் திருடும் போது தவறான காரியங்களில் ஈடுபடாதே என்று சொல்கிறோம். மறு நாள் அந்தத் திருடன் திருட்டை விட்டு விட்டு கொலையில் ஈடுபட்டு விட்டான். நாம் அவனிடம் நேற்றுத் தான் தவறான காரியங்களை செய்யாதே என்று உனக்குச் சொன்னேன் என்று கூறும் போது அவன் நான் திருடும் போது தான் இதைக் கூறினீர்கள். அதனால் நீங்கள் கூறிய வாசகம் திருடக் கூடாது என்பதை மட்டும் தான் காட்டும். கொலை செய்யக் கூடாது என்பதைக் குறிக்காது என்று கூறினால் அவன் கூறுவது சரியாகி விடுமா? இது போன்ற வாதம் தான் இது.
மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று குர்ஆன் கூறினால் எந்த நிர்பந்தமும் இல்லை என்று விளங்கிக் கொள்ள வேண்டுமே தவிர இந்த நிர்பந்தம் கூடும் அந்த நிர்பந்தம் கூடாது என்று பிரிப்பது அறிவீனம். 
பெண்களை நிர்பந்தமாக சொந்தமாக்காதீர்கள் என்று குர்ஆன் கூறுகிறது. இந்த வசனம் இறங்குவதற்கு முன்பு அறியாமைக் காலத்தில் கணவன் இறந்த உடன் மனைவியை அக்கணவனின் சொந்தக்காரர்கள் மணம் முடித்துக் கொள்வார்கள். அல்லது தாங்கள் விரும்பிய ஆட்களுக்கு மணமுடித்து வைப்பார்கள். இதைக் கண்டித்து இந்த வசனம் இறங்கியதாக புகாரியில் 4579 வது எண்ணில் இடம்பெற்றுள்ள செய்தி கூறுகிறது. 
கணவனை இழந்த பெண்னை நிர்பந்தப்படுத்தக் கூடாது என்பதற்குத் தான் இந்த வசனம் இறங்கியது. எனவே திருமணமே செய்யாத பெண்னை நிர்பந்திப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை என்று இவர்கள் விளங்குவார்களா? நிச்சயமாக அவ்வாறு எவரும் விளங்க மாட்டோம். மாறாக பெண்னை நிர்பந்திக்கக் கூடாது என்ற பொதுவான தடையை வைத்துக் கொண்டு எந்தப் பெண்னையும் எந்த வகையிலும் நிர்பந்திக்கக் கூடாது என்றே விளங்குவோம். இது போன்று அமைந்த வசனம் தான் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற வசனம். 
மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் கிடையாது என்று குர்ஆன் சொல்வதால் எதுவெல்லாம் நிர்பந்தமாகுமோ அவை அனைத்தும் கூடாது என்று சொல்வது தான் குர்ஆனைப் புரிந்து கொள்ளும் முறையாகும்.

விளக்கம் : 2

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறும் வசனம் மாற்றப்பட்டு விட்டது என்று கூறி அநியாயமாக அல்லாஹ்வுடைய பயமில்லாமல் சிறப்புமிக்க சூராவில் இடம்பெற்ற வசனத்தை ஓரங்கட்டப் பார்க்கிறார்கள். இணை வைப்பவர்களிடத்தில் போர் புரியுமாறு கட்டளையிடும் வசனங்களைச் சொல்லி மார்க்கத்தில் நிர்பந்தம் இருக்கிறது போர் புரியச் சொல்லும் இந்த வசனங்கள் நிர்பந்தம் இல்லை என்று கூறும் வசனத்தை மாற்றி விட்டது என்கின்றனர். 

நமது விளக்கம்

மனோஇச்சையைப் பின்பற்றுவதற்குச் சிறந்த உதாரணமாக இந்த விளக்கம் அமைந்துள்ளது. குர்ஆனுடைய சட்டம் மாற்றப்படுவதாக இருந்தால் அதை அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்ல வேண்டும். முரண்பாடில்லாத வசனங்களுக்கு மத்தியில் முரண்பாட்டை ஏற்படுத்தி ஒன்றை ஓரங்கட்டுவது முஸ்லிமிற்கு அழகானதல்ல. 
நிர்பந்தம் கிடையாது என்று கூறும் வசனம் மாற்றப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்? மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கு அல்லாஹ் அடுத்த வரியிலே ஒரு காரணத்தையும் இணைத்துச் சொல்கிறான். அந்தக் காரணம் இருக்கும் போதெல்லாம் அந்தச் சட்டமும் நிலைத்திருக்கும். 
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் (2 : 256)
இஸ்லாம் தெளிவான மார்க்கம் என்பதால் உண்மை எது பொய் எது என்பதைச் சிந்திப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம். எனவே இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று அல்லாஹ் கூறுகிறான். இச்சட்டத்தை மாற்றிவிட்டு நிர்பந்தத்தை மார்க்கம் ஏற்படுத்தியதென்றால் தெளிவாக இருந்த இஸ்லாம் தெளிவை இழந்து விட்டது. அதனால் நிர்பந்திக்கச் சொல்கிறது என்று பொருள் வரும். 
நபி (ஸல்) அவர்களால் இஸ்லாம் மென்மேலும் தெளிவுபடுத்தப்பட்டதால் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்ற சட்டம் மென்மேலும் வலுப்பெற்றது என்று தான் சொல்ல முடியும். 
(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திப்பீரா?
அல்குர்ஆன் (10 : 99)
எல்லோருக்கும் நேர்வழி காட்டுவதை அல்லாஹ் நாடவில்லை. அல்லாஹ்வே நாடாத போது நபியே நீ எப்படி நிர்பந்திப்பாய்? என்று அல்லாஹ் கேட்கிறான். மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கு இது போன்ற காரணம் சொல்லப்பட்டுள்ளது. 
பிற்காலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு நிர்பந்தம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது என்று சொன்னால் அல்லாஹ் எல்லோருக்கும் நேர்வழி காட்ட மாட்டான் என்ற விதியை மாற்றி எல்லோருக்கும் நான் நேர்வழி காட்டுவேன் என்று தன்னுடைய நிலைபாட்டை மாற்றிக் கொண்டான் என்று கூற வேண்டிய கட்டாயம். வரும். 
அதிகமான மக்கள் நேர்வழி இல்லாமல் மரணிப்பதை கண்ணால் பார்க்கக் கூடிய நாம் இதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்? எனவே காரணங்களோடு சொல்லப்பட்ட இந்த வசனம் மாற்றப்பட்டது என்று கூறுவது குர்ஆனை மறுத்த குற்றத்தில் நம்மைச் சேர்த்து விடும். அல்லாஹ் நம் அனைவரையும் இதை விட்டும் பாதுகாக்க வேண்டும். 

விளக்கம் : 3

நம்பிக்கை கொண்டு, பின்னர் (ஏக இறைவனை) மறுத்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பின்னர் மறுத்து, பிறகு (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. அவர்களுக்கு வழி காட்டுபவனாகவும் இல்லை.
"நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று (முஹம்மதே!) எச்சரிப்பீராக! 
அல்குர்ஆன் (4 : 137)
மதம் மாறியவர்களைக் கொல்லக் கூடாது என்பதற்கு இந்த வசனத்தை நாம் முன் வைத்தோம். எதிர்த் தரப்பினர்கள் இந்த வசனத்தின் பின்பகுதி நயவஞ்சகர்களைப் பற்றிப் பேசுவதால் இங்கு சொல்லப்பட்டவர்கள் நயவஞ்சகர்கள் தான். மதம் மாறிகளைப் பற்றி இங்கு பேசப்படவில்லை. எனவே மதம் மாறிகளைக் கொல்லக் கூடாது என்பதற்கு இந்த வசனத்தை ஆதாரமாக காட்டக் கூடாது என்கிறார்கள். 

நமது விளக்கம்

இந்த வசனம் நயவஞ்சகர்களைக் குறிக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஏனென்றால் இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று நயவஞ்சகர்களைப் பற்றியும் அல்லாஹ் பின்வருமாறு நயவஞ்சகர்கள் (முனாஃபிகூன்) என்ற சூராவில் குறிப்பிடுகிறான். 
அவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் (ஏக இறைவனை) மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களது உள்ளங்களுக்கு முத்திரையிடப்பட்டு விட்டது. அதனால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
அல்குர்ஆன் (63 : 3)
எனவே இந்த வசனம் நயவஞ்சகர்களைக் குறிக்கிறது என்பது சரி தான். இதனால் நாம் வைத்த வாதத்திற்கு இந்த வசனம் எப்படிப் பொருந்தாமல் போகும்.? நயவஞ்சகனாக இருப்பவன் மதம் மாறியாகவும் இருக்க முடியும். நயவஞ்சகர்களில் மதம் மாறியவர்களைப் பற்றி இந்த வசனம் பேசுகிறது. 
இந்த நயவஞ்சகர்கள் ஈமான் கொண்டு பிறகு மறுத்து விட்டதாக அல்லாஹ் சொல்கிறான். ஈமான் கொண்டு விட்டு பிறகு இறை நிராகரிப்பாளனாக மாறியவன் மதம் மாறியவன் என்பதில் இவர்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டதா? 
மதம் மாறிகளைக் கொலை செய்யக் கூடாது என்பதற்கு நயவஞ்சகர்களை நபி (ஸல்) அவர்கள் கொலை செய்யாமல் விட்டதை முன்பே ஆதாரமாகக் காட்டினோம். நயவஞ்சகர்களைப் பற்றி இந்த வசனம் பேசுவதால் இது மதம் மாறிகளைக் குறிக்காது என்று கூறுவது சிறுபிள்ளைத் தனமானது. 
இமாம் புகாரி அவர்கள் சஹீஹுல் புகாரியில் மதம் மாறிய ஆண் மதம் மாறிய பெண் தொடர்பான சட்டம் என்று தலைப்பிட்டு அதற்குக் கீழே பல வசனங்களைக் குறிப்பிடுகிறார்கள். மதம் மாறிகளைப் பற்றி பேசவில்லை என்று எதிர்த் தரப்பினர் கூறிய மேலுள்ள வசனத்தையும் அங்கு பதிவு செய்துள்ளார்கள். மதம் மாறிகளைக் குறிக்காத வசனத்தை சம்பந்தமில்லாமல் இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்து விட்டார்கள் என்று இவர்கள் சொல்ல வருகிறார்கள். 
நமது கருத்திற்கு இந்த ஒன்றை மட்டும் ஆதாரமாக வைக்கவில்லை. நாம் பல வசனங்களைக் கூறியிருக்கும் போது இந்த ஒன்றுக்கு மட்டும் தப்பான விளக்கத்தைக் கொடுத்து விட்டு மீத வசனங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள். 

புதிய ஆதாரங்கள்!

ஆதாரம் : 1

இஸ்லாத்தில் நிர்பந்தம் இருக்கிறது என்ற மோசமான கருத்தை நிலை நாட்ட பின் வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை முஹம்மது" அல்லாஹ்வின் தூதர் என்று மனிதர்கள் உறுதியாக நம்பி தொழுகையை நிலைநிறுத்தி ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போர் புரிய வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தமது உயிர் உடைமைகளை என்னிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வார்கள் இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது. 
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (25)
இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வரை அவர்களிடம் போர் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். எனவே வாளால் இஸ்லாம் பரவியது என்று இஸ்லாமிய விரோதிகள் கூறும் கூற்று உண்மை தான் என்று இவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். 
நமது விளக்கம்
இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது இவர்கள் கூறுவது சரி போலத் தெரியும். ஆனால் போர் புரிவதற்கு இஸ்லாம் வகுத்துள்ள விதிமுறைகளைக் கவனித்தால் இந்த ஹதீஸை இவ்வாறு விளங்கக் கூடாது என்ற முடிவிற்கே நியாயமானவர்கள் வருவார்கள். திருக்குர்ஆன் அழகான இந்த விதிமுறைகளைக் கூறுகிறது. 

வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் :

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் (2 : 190)
தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.
அல்குர்ஆன் (9 : 13)

சொந்த ஊரை விட்டு விரட்டியவர்களுடன் தான் போர் :

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.
அல்குர்ஆன் (2 : 191)
"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்;
அல்குர்ஆன் (22 : 40)

போரிலிருந்து விலகிக்கொள்வோருடன் போரில்லை :

(போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் (2 : 192)
அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள் பெண்கள் சிறுவர்களுக்காகவே போர். போரை முதலில் துவக்கக் கூடாது : 
"எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்து வாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?
அல்குர்ஆன் (4 : 75)
"போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்'' என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன். "எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்; 
அல்குர்ஆன் (22 : 39)

சமாதானத்தை விரும்புவோருடன் போர் இல்லை :

(முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் (8 : 61)

மதத்தைப் பரப்பப் போரில்லை : 

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் (2 : 256)
இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுபவர் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.
அல்குர்ஆன் (9 : 6)
(ஏக இறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' என (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் (109)
குர்ஆன் மேற்கண்ட விதிமுறைகளைக் கூறுவதால் எதிர்த் தரப்பினர் சுட்டிக் காட்டிய ஹதீஸை குர்ஆனுடைய விதிமுறைகளுக்கு உட்பட்டே விளங்கிக் கொள்ள வேண்டும்.
1. ஹதீஸில் இடம்பெற்றுள்ள மக்கள் என்ற வார்த்தை எல்லோரையும் எடுத்துக் கொள்ளாது மாறாக அநியாயமாகப் போர் செய்ய வருபவர்களை மாத்திரம் எடுத்துக் கொள்ளும்.
2. மதத்தைப் பரப்புவதற்காகப் போரில்லை என்று குர்ஆன் கூறுவதால் இஸ்லாத்திற்கு பிறரைக் கொண்டு வருவதற்காகப் போர் செய்யுமாறு நபியவர்கள் கட்டளையிடப்பட்டார்கள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மாறாக அநியாயத்தைத் தட்டிக் கேட்பதற்காக அக்கரமக்காரர்களிடம் போர் செய்யும் போது அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதாக ஒத்துக் கொண்டால் இதற்கு மேல் அவர்களிடம் போரிடக் கூடாது. அக்கிரமத்தை ஒழிப்பது தான் போரின் நோக்கமே தவிர இஸ்லாத்திற்கு நிர்பந்தமாக இழுத்து வருவது நோக்கமல்ல. இஸ்லாமியர்களோடு இணைந்து கொள்கிறேன் என்று அவன் கூறுவதன் மூலம் போரை நிறுத்திக் கொள்ள விரும்புகிறான். 
அக்கிரமக்காரர்களுடன் செய்யும் போர் பின்வரும் காரணங்களால் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
1. அவர்கள் சாமாதானத்தை விரும்பினால் இதற்கு மேல் போர் செய்யக் கூடாது. 
2. ஜிஸ்யா வரி கொடுப்பதாகக் கூறினாலும் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும். 
3. இஸ்லாத்தில் இணைந்து கொள்வதாக கூறினாலும் போர் செய்வது கூடாது 
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்த மூன்று காரணங்களில் ஒன்று மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. அந்த ஹீதீஸின் இறுதியில் இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தமது உயிர் உடைமைகளை என்னிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வார்கள் என்று இடம் பெற்றுள்ள இந்த வாசகம் இதைத் தெளிவாக உணர்த்துகிறது. பின்வரும் சம்பவங்கள் இது தான் இந்த ஹதீஸின் நோக்கம் என்பதைத் தௌவாக உணர்த்துகிறது.
மிக்தாத் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது : நான் (நபி (ஸல்) அவர்களிடம்) இறை மறுப்பாளர்களில் ஒருவனை நான் சந்தித்தேன். அவன் என்னிடம் சண்டையிட்டான். அப்போது அவன் என் கைகளில் ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்து விட்டான். பிறகு அவன் என்னை விட்டு ஓடிப் போய் ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து கொண்டு) அல்லாஹ்விற்கு அடிபணிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன் என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனைக் கொல்லாதே என்றார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே அவன் என் கையைத் துண்டித்து விட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான் என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனை நீ கொல்லாதே. அவ்வாறு நீ அவனைக் கொன்று விட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன் அவனிருந்த (குற்றவாளி எனும்) நிலைக்கு நீ சென்று விடுவாய் என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : மிக்தாத் (ரலி)
நூல் : முஸ்லிம் (155)
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது : எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஹுரக்கா கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போய்ச் சேர்ந்தோம். அவரை நாங்கள் சுற்றி வளைத்துக் கொண்ட போது அவர் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்ல அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன் நாங்கள் (திரும்பி) வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு இச்செய்தி எட்டவே அவர்கள் என்னிடம் உஸாமா அவர் லாயிலாஹ இல்லல்லாஹு என்று மொழிந்தப் பிறகுமா அவரைக் கொன்றாய்.? என்று கேட்டார்கள். அவர் உயிரைப் பாதுகாக்கவே (அவ்வாறு கூறினார்) என்று நான் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் அவர் லா யிலாஹ இல்லல்லாஹு என்று சொன்ன பிறகுமா அவரைக் கொன்றாய்? என்று (மீண்டும்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் நான் (அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நான்றாயிருக்குமே (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே) என்று கூட ஆசைப்பட்டேன்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல் : முஸ்லிம் (159)
ஆயுதத்தை அஞ்சித்தான் அவர் இவ்வாறு கூறினார் அல்லாஹ்வின் தூதரே என்று நான் சொன்னேன். அதை அவர் (உளப்பூர்வமாக) சொன்னாரா இல்லையா என்று அறிய அவருடைய இதயத்தை நீ பிளந்து பார்த்தாயா? என்று (கடிந்து) கேட்டார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா (ரலி) 
நூல் : முஸ்லிம் (158)
அக்கிரமத்திற்கு எதிராக மட்டும் தான் போர் இருக்க வேண்டும். அக்கிரமத்திற்கு எதிராக நடத்தப்படும் போரில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக கூறி விட்டால் அவருடைய கூற்றைப் புறந்தள்ளிவிட்டு அவரைக் கொன்று விடக் கூடாது. மாறாக அவருடைய கூற்றை ஏற்று அவரைத் தாக்காமல் விட்டுவிட வேண்டும். இதைத் தான் எதிர்த் தரப்பினர்கள் எடுத்துக்காட்டிய ஹதீஸ் கூறுகிறது.
இஸ்லாம் அல்லாதவர்களின் மீது இஸ்லாத்தைத் திணிக்கக் கூடாது என்பதற்காகத் தான் ஜிஸ்யா என்ற வரியை இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்களின் செல்வங்களுக்கு ஜகாத் வாங்கப்படுவதைப் போல் இவர்களிடம் இந்த வரி வாங்கப்படும். இந்த வரியை செலுத்திக் கொண்டு இஸ்லாத்தை ஏற்காதவர்கள் தங்கள் கொள்கையில் இருந்து கொள்ளலாம். 
இஸ்லாம் நிர்பந்தத்தை ஏற்படுத்தும் மார்க்கமாக இருந்திருந்தால் இஸ்லாத்திற்கு வருவதைத் தவிர வேறு வழியே இல்லை. வராதவர்கள் கொல்லப்படுவார்கள் என்ற ஒரு சட்டத்தை மாத்திரம் கூறியிருக்கும். நிர்பந்தம் இல்லை என்பதாலே இதற்கான மாற்று வழியாக ஜிஸ்யாவை ஆக்கியுள்ளது. 

ஆதாரம் : 2

மதம் மாறியவன் யாராக இருந்தாலும் அவனைக் கொல்ல வேண்டும் என்பதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. அவை
1. திருமணமானவன் விபச்சாரம் செய்வது.
2. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாக கொலை செய்வது. 
3. ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை விட்டுவிட்டவன். 
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : முஸ்லிம் (3465)
மார்க்கத்தை விட்டுவிட்டவனைக் கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள். 

நமது விளக்கம்

மார்க்கத்தை விட்டு விட்டவன் என்ற சொல் இஸ்லாத்தை விட்டு முழுமையாக வெளியேறியவனை மட்டும் குறிக்காது. இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாமியக் கடமைகளைப் புறக்கணிப்பவனும் மார்க்கத்தை விட்டவன் தான். தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் மார்க்கத்தை விட்டவனாக இருக்க முடியும். 
உதாரணமாக இஸ்லாத்தை விட்டும் வெளியேறாமல் ஸகாத்தை மட்டும் மறுத்தவர்களிடத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் போர் செய்தார்கள். இவர்கள் வேறொரு மதத்திற்குச் சென்று விடவில்லை. மாறாக ஸகாத் என்ற தீனை விட்டுவிட்டார்கள். 
மேலும் இந்த ஹதீஸ் ஒரு முஸ்லிமை மூன்று காலக்கட்டத்தில் மட்டும் கொல்லலாம் என்று கூறுகிறது. முஸ்லிமைக் கொல்வதைப் பற்றி பேசுகிறதே தவிர மதம் மாறிய காஃபிர்களைப் பற்றி பேசவில்லை. எனவே ஹதீஸில் மூன்றாவதாக சொல்லப்பட்டவன் யாரென்றால் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து கொண்டே ஆட்சியாளருக்குக் கட்டுப்படாமல் எதிராகக் கிளம்பியவன் தான்
இஸ்லாத்தை முழுமையாக விட்டு விட்டவனை இந்தச் செய்தி குறிக்கும் என்று வைத்துக் கொண்டாலும் இந்த ஒரு தன்மையுடன் இன்னொரு தன்மையான ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறியவன் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துச் சொல்கிறார்கள். 
இந்த அடிப்படையில் ஒருவன் மதம் மாறினாலும் அவன் இஸ்லாமிய அரசாங்கத்திற்குக் கட்டுப்பட்டுக் கொண்டு தான் விரும்பிய மார்க்கத்திற்குச் சென்றால் அவன் கொல்லப்பட மாட்டான். மாறாக அரசாங்கத்திற்குக் கட்டுப்படாமல் அதற்கு எதிராகக் கிளம்புபவன் தான் கொல்லப்படுவான். ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இதே மாதிரியான ஹதீஸ் இதைத் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது. 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று தன்மைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலே தவிர (வேறெந்த நிலையிலும்) முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணம் முடித்த பிறகும் விபச்சாரம் செய்தவன் கல்லெரிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றே கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான் அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான் அல்லது நாடு கடத்தப்படுவான். 
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல் : நஸயீ (3980)

ஆதாரம் : 3

மதம் மாறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். 
அபூ மூஸா (ரலி) அவர்கள் கூறியதாவது : (யூதராயிருந்த) ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டுப் பின்பு யூதராக மாறி விட்டார். அந்த மனிதர் என்னிடம் இருந்த போது முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் வந்தார்கள். இவருக்கு என்ன? என்று முஆத் கேட்டார்கள். நான் இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டு யூதராகி விட்டார் என்று சொன்னேன். முஆத் (ரலி) அவர்கள் நான் இவருக்கு மரண தண்டனை அளிக்காதவரை அமர மாட்டேன். இது தான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பாகும் என்று சொன்னார்கள். 
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
நூல் : புகாரி (7157)
மதம் மாறிய யூதரைக் கொல்ல வேண்டும். இது தான் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் தீர்ப்பு என்று முஆத் (ரலி) அவர்கள் கூறுவதால் மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று எதிர்த் தரப்பினர் கூறுகிறார்கள்.

நமது விளக்கம்

முஆத் (ரலி) அவர்கள் குர்ஆனுடைய ஒரு வசனத்தை அல்லது நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸைச் சுட்டிக்காட்டி இது அல்லாஹ்வுடைய தீர்ப்பு இன்னும் அவனது தூதருடைய தீர்ப்பு என்று கூறவில்லை. மாறாக எந்த ஆதாரத்தையும் காட்டாமல் பொதுவாகவே இப்படிச் சொல்கிறார்கள். 
அல்லாஹ்வுடைய தீர்ப்பு என்றால் எந்த வசனத்தில் அல்லாஹ் மதம் மாறியவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளான்?. குர்ஆனில் அப்படி ஒரு கட்டளை இல்லவே இல்லை. மதம் மாறியவர்களைக் கொல்வது ரசூலுடைய தீர்ப்பு என்றால் ரசூல் எந்த ஹதீஸில் இவ்வாறு தீர்ப்பு வளங்கியுள்ளார்கள்? நபி (ஸல்) அவர்கள் மதம் மாறியவர்களைக் கொல்லுமாறு சொல்லவில்லை என்பதை மேலே நிரூபித்திருக்கிறோம். 
சஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் கூறாததை அவர்கள் பெயரால் இட்டுக்கட்ட மாட்டார்கள் என்பதில் எள்ளளவும் நமக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு வசனத்தையோ அல்லது ஹதீஸையோ புரிந்து கொள்வதில் மனிதன் என்ற அடிப்படையில் தவறு அவர்களிடம் வர வாய்ப்புண்டு. அவர்கள் எந்த ஆதாரத்திலிருந்து இதை விளங்கினார்களோ அந்த ஆதாரத்திலிருந்து முறையாக இவர்கள் தீர்ப்பளித்திருக்கவும் வாய்ப்புள்ளது. புரிந்து கொள்வதில் தவறு ஏற்பட்டு தவறாக தீர்ப்பளிக்கவும் வாய்ப்புள்ளது.
 ஏனென்றால் இச்சட்டத்தை நேரடியாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதாக முஆத் (ரலி) அவர்கள் சொல்லவில்லை. அல்லது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு யாருக்காவது தீர்ப்பளித்ததைக் கண்டதாகவும் அவர்கள் கூறவில்லை. ஒரு ஹதீஸிலிருந்து தானாக விளங்கியும் இவ்வாறு கூற முடியும். 
சரியாகவும் தவறாகவும் கூறியிருக்க வாய்ப்பு இருக்கும் போது இதைக் கொண்டு வந்து நிறுத்தி ஒருவரைக் கொல்வது சம்பந்தமான விஷயத்தை நிறுவக் கூடாது. 
இதற்குச் சிறந்த உதாரணமாக பின்வரும் செய்தியை எடுத்துக் கொள்ளலாம்.
இப்னு உமர் (ரலி) அவர்களிடம் பால்குடியைப் பற்றி ஏதோ கேட்கப்பட்டது. பால்குடி சகோதரியை அல்லாஹ் (திருமணம் புரிய) தடைசெய்துள்ளான் என்பதைத் தவிர வேறெதுவும் நமக்குத் தெரியாது என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். உடனே நான் முஃமின்களின் தலைவர் இப்னு ஜுபைர் அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ உறிஞ்சுப் பால் குடிப்பதால் பால்குடி உறவு ஏற்படாது என்று கூறுகிறார்கள் என்று கூறினேன். அதற்கு இப்னு உமர் அவர்கள் உனது மற்றும் உன்னுடன் இருக்கும் முஃமின்களின் தலைவரின் தீர்ப்பை விட அல்லாஹ்வின் தீர்ப்பு சிறந்தது என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : அம்ர் பின் தீனார் 
நூல் : சுனனு சயீத் பின் மன்சூர் பாகம் : 3 பக்கம் : 30 
ஒரு தடவை அல்லது இரு தடவை பால்குடிப்பதால் மட்டும் பால்குடி உறவு ஏற்படாது என்று இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் கூறுவது தான் சரி. ஏனென்றால் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இப்னு உமர் (ரலி) அவர்கள் இதை மறுத்து கொஞ்சம் பால் குடித்துவிட்டாலே பால்குடி உறவு ஏற்பட்டு விடும் என்று கூறுகிறார்கள். 
ஏனென்றால் ஹதீஸில் சொல்லப்பட்ட இச்சட்டம் குர்ஆனில் இல்லை. இந்த ஹதீஸ் இப்னு உமருக்குக் கிடைக்காத காரணத்தினால் தவறாக விளங்கிக் கொண்டு அதை அல்லாஹ்வுடைய தீர்ப்பு என்று கூறுகிறார். இப்னு உமர் அல்லாஹ்வுடைய தீர்ப்பு என்று கூறி விட்டதால் அவர்கள் கூறுவதை ஏற்றுக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு ஜுபைர் கூறுவதை விட்டுவிட முடியுமா? 
எனவே முஆத் (ரலி) அவர்கள் இது அல்லாஹ் மற்றும் அவனது தீர்ப்பு என்று எந்த ஆதாரத்தை வைத்துச் சொன்னார்களோ அந்த ஆதாரம் நமக்கு காண்பிக்கப்பட்ட பிறகு தான் இது உண்மையில் அல்லாஹ்வுடைய தீர்ப்பா இல்லையா? என்று முடிவு செய்ய முடியும். 
ஒரு பிரச்சனைக்கு சரியான முடிவைக் காணுவதாக இருந்தால் அது தொடர்பாக வரும் அனைத்து ஆதாரங்களையும் ஒன்று சேர்த்துத் தான் முடிவைக் காண வேண்டும். மதம் மாறியவர்களாக இருந்தாலும் அவர்கள் இஸ்லாமிய விரோதிகளாக மாறும் போது தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதை பல ஹதீஸ்களின் மூலம் முன்பே நிரூபித்தோம். 
எதிர்த் தரப்பினர் எடுத்துக் காட்டிய ஹதீஸில் யூதன் மதம் மாறி இஸ்லாத்திற்கு எதிராகச் சென்றவன் என்றோ அல்லது எதிரி அல்ல என்றோ இடம் பெறவில்லை. பொதுவாக மதம் மாறியவன் என்று தான் வருகிறது. இஸ்லாமிய விரோதியாக மாறியவனைத் தான் கொல்ல வேண்டும் என்று பல ஹதீஸ்கள் கூறுவதால் இந்த யூதன் இஸ்லாத்திற்கு விரோதமாகச் சென்றதால் முஆத் (ரலி) அவர்கள் கொல்லும் படி கூறினார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும். இது தான் ஹதீஸையும் நபித்தோழர்களின் செயலையும் இணைத்து விளங்கியதாக அமையும்.
மதம் மாறியதோடு எதிராகச் செல்பவனைக் கொல்ல வேண்டும் என்பதைத் தான் ஹதீஸ் சொல்கிறது என்பதை குர்ஆன் ஹதீஸ் வாயிலாகத் தெரிந்து கொண்டோம். கொல்லுங்கள் என்ற இந்தக் கட்டளை கூட கட்டாயம் கொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதல்ல. மாறாக இப்படிப்பட்டவர்களைக் கொலை செய்வது குற்றமல்ல. ஆகுமானது என்பதற்காகத் தான் சொல்லப்பட்டுள்ளது. 
ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் இச்சட்டத்தை சிலருக்கு செயல்படுத்தியிருக்கிறார்கள். சிலருக்கு செயல்படுத்தாமலும் இருந்திருக்கிறார்கள். இத்தலைப்பு சம்பந்தமாக நாம் சுட்டிக் காட்டிய ஆதாரங்களிலிருந்தே இதைப் புரிந்து கொள்ள முடியும். 

நடைமுறை சிக்கல்கள்

இச்சட்டம் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பதுடன் பல நடைமுறைச் சிக்கல்களையும் தோற்றுவிக்கிறது. 
1. மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று நாம் கூறினால் இஸ்லாத்திற்கு வந்தவன் இஸ்லாத்தைப் பற்றி சிந்திக்கப் பயப்படுவான். அவனுக்கு ஏற்படும் சந்தேகங்களை வெளிக்கொணர அஞ்சுவான். ஆனால் இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறினால் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கூறி விளங்கிக் கொள்ள முயற்சிப்பான். அவன் மேலும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கு இம்முறை உதவும். இல்லையென்றால் இந்தச் சந்தேகங்கள் அவனுக்கு மிகைத்து இறுதியில் மதம் மாறுகின்ற நிலைக்குத் தள்ளப்படுவான். 
2. அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் உண்மையானதென்றும் தெளிவானதென்றும் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலைத் தரக்கூடியதென்றும் நாம் நம்பும் போது ஏன் இப்படி ஒரு சட்டத்தை இயற்றி நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்?
3. மாற்று மதத்திற்கு மாறியவனைக் கொலை செய்வது மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல் மதவெறியைத் தான் உருவாக்கும். இஸ்லாமியருடன் பழக்கம் வைப்பதை மக்கள் விட்டுவிட்டு இஸ்லாத்தின் எதிரிகளோடு இணைந்து கொள்வார்கள்.
4. இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறினால் தான் இஸ்லாத்தை விளங்காத மக்கள் கூட விளங்கிக் கொள்வதற்காக இஸ்லாத்தில் இணைந்து கொள்வார்கள். இதன் மூலம் அவர்கள் உண்மையான முஸ்லிமாவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். மதம் மாறியவரைக் கொலை செய்வோம் என்றால் விளங்க நினைப்பவர்கள் கூட பயந்து கொண்டு இதில் இணைய மறுத்து விடுவார்கள். 
5. இதை இஸ்லாமியச் சட்டம் என்றால் உலக மக்களிடையே இஸ்லாம் கொடூரமான மார்க்கம் என்ற தவறான கொள்கை எளிதாக பரவிவிடும். இன்னும் இஸ்லாம் தவறான கொள்கையுள்ள மார்க்கம் என்பதால் தான் சவாலை எதிர் கொள்ளாமல் நிர்பந்தப்படுத்துகிறது என்ற எண்ணமும் அவர்களுடைய மனதில் எழும்.
6. இஸ்லாம் ஒளிவு மறைவு இல்லாத மார்க்கம் என்பதால் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறுபவர்கள் மேடை அமைத்து இச்சட்டத்தைப் பகிரங்கப்படுத்துவார்களா? பகிரங்கப்படுத்த முடியாத ஒரு சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குச் சொல்வார்களா?
7. இஸ்லாத்தை விரும்பாதவர்களை இஸ்லாமிய சமுதாயத்தில் நிர்பந்தப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தால் அவன் இச்சமுதாயத்திற்கு தீங்கு செய்ய நினைப்பானே தவிர நன்மை செய்ய நாட மாட்டான். 
8. இஸ்லாத்தை விட்டு யாரும் வெளியேறக் கூடாது. அப்படி வெளியேறினால் கொல்லப்படுவார்கள் என்று ஒரு புறம் நாம் கூறிக் கொண்டு இன்னொரு புறம் மாற்று மதத்தார்களை நோக்கி உங்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு எங்கள் மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்று கூறுவது நம்மை வெறி பிடித்தவர்களாக மக்கள் மன்றத்தில் காட்டும். முஸ்லிம்கள் நம் மார்க்கத்திற்கு வர தடைபோடும் போது நாம் அவர்களுடைய மார்க்கத்தைக் கேட்பதற்கு ஏன் செல்ல வேண்டும் என்று மக்கள் கருதினால் இது நம்முடைய அழைப்புப் பணிக்கு பெரும் முட்டுக்கட்டையாக வந்தமையும்.
9. இஸ்லாம் அழகிய மார்க்கம் என்று நாம் அனைவரும் ஒத்துக் கொண்டுள்ளோம். மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது என்றால் இச்சட்டம் அறிவுப்பூர்வமானது. அழகானது என்பதை நிரூபிக்கும் கடமை இச்சட்டத்தைக் கூறுபவர்களுக்கு உண்டு. இவர்கள் இந்தக் கோரமான சட்டத்தை அழகானது அறிவிப்பூர்வமானது என்று எப்படி நிரூபிப்பார்கள்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக