சனி, 28 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (A)


இரு தரப்பு ஆதாரங்கள்

ஈசா நபி மரணிக்கவில்லை (Part 1)
-----------------------------------------------------------

ஈஸா நபி இறந்து விட்டதாக தவறான நம்பிக்கை கொள்பவர்கள் குர் ஆனையும் ஹதீஸையும் முழுமையாக அறியாத, மார்க்க ஞானம் அறவே இல்லாத, எதையுமே நுனிப்புல் வாரியாக மேய்ந்து விட்டு நிலைபாடுகளை எடுக்கும் கொள்கையற்றவர்கள் தான் என்பது இந்த தொடரில் கடுகளவு சந்தேகத்திற்கும் இடமில்லா வண்ணம் தெளிவாக்கப்படும்.

எதையுமே ஆணி வேரிலிருந்தே புரிந்து தெளிவு பெற்று விட்டோம் என்றால் எந்த தவறான கொள்கையும் நம்மை அசைக்காது.

ஈஸா நபி மரணிக்கவில்லை, அவர்கள் அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டார்கள், கியாமத் நாளுக்கு சமீபமாய் மீண்டும் இவ்வுலகில் வருவார்கள்.
இது தான் குர் ஆன் கூறும் தெளிவான கூற்று.

இதை குர் ஆனைக் கொண்டே அடுக்கடுக்கான சான்றுகளுடன் நிரூபிக்கும் முன்பு, ஈஸா நபி இறந்து விட்டதாக இவர்கள் கூறுவதற்கு என்னன்ன சான்றுகளை முன் வைக்கிறார்கள் என்பதை முதலில் பார்போம்.

-‍‍-> நிரந்தரமாக வாழும் வாழ்க்கையை எவருக்கும் கொடுக்கவில்லை என்கிற இறை வசனம்.

--> பூமியில் தான் வசிக்க முடியும், உணவு உண்ணாத உடலை எவருக்கும் அளிக்கவில்லை என்கிற இறை வசனம்.

--> முஹம்மது நபிக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற இறை வசனம்.

--> பொய் கடவுள்கள் இறந்து விட்டார்கள் என்கிற இறை வசனம்.

--> ஈஸா நபி தூதரே தவிர வேறில்லை, அவருக்கு முன் வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற இறை வசனம்.

இந்த ஐந்து சான்றுகளை தான் இந்த காதியானி மதத்தவர்கள் திரும்ப திரும்ப எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் எங்கே, எத்தனை முறை ஈஸா மரணித்து விட்டார், மரணித்து விட்டார் என்று பேசி திரிந்தாலும், அதற்கு சான்றாய் இவர்கள் வைப்பது இந்த ஐந்து ஆதாரங்களை தான்.

இந்த ஐந்து போக, இவர்கள் இன்னும் வைக்காத இன்னொரு ஆதாரத்தையும் நான் இங்கே வைத்து, அதுவும் ஒரு சிலரால் ஈஸா நபி இறந்து விட்டதற்கு சான்றாய் முன்வைக்கப்படுகிறது என்பதை நினைவூட்டுகிறேன்.

--> ஈஸா நபியை அழைத்து அல்லாஹ் மறுமையில் விசாரிக்கும் போது, அவர்களுடன் இருந்த போது அவர்களை நான் கண்காணித்தேன், என்னை நீ கைப்பற்றி விட்ட பிறகு எனக்கு எதுவும் தெரியாது..
என்பதாக ஈஸா நபி சொல்வதாய் வரக்கூடிய வசனம்.
இங்கே "கைப்பற்றி விட்ட பிறகு" என்கிற இடத்தில் அல்லாஹ் பயன்படுத்தியிருக்கும் சொல் வஃபாத்.
ஆகவே ஈஸா நபி வஃபாத்தாகி விட்டார்கள் என்பது இதன் மூலம் இவர்கள் வைக்கும் வாதம்.

இந்த ஆறு சான்றுகள் தான் ஈஸா நபி இறந்து விட்டார்கள் என்பதற்கு இவர்களானாலும் சரி, உலகில் எவர் அத்தகைய தவறான நம்பிக்கையை கொண்டிருந்தாலும் சரி, வைக்கும் ஆதாரங்கள்.

ஆனால், ஈஸா நபி இன்னும் இறக்கவில்லை, மீண்டும் இவ்வுலகிற்கு வந்த பிறகு தான் இறப்பார்கள் என்பதற்கு நாம் வைக்க இருக்கும் சான்றுகள் ஏராளம்.

--> எதிரிகளால் கொலை செய்யப்படுவதிலிருந்து அல்லாஹ் அவரை உயர்த்திக் கொண்டான் என்கிற இறை வசனம்.

--> ஈஸாவுக்கு முன்னுள்ளவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற இறை வசனம்

--> அவர் உணவு உண்பதால் அவர் கடவுள் இல்லை என்கிற இறை வசனம்

--> கியாமத் நாளுக்கு அடையாளமாக அவர் இருக்கிறார் என்கிற இறை வசனம்

--> அவர் இறப்பதற்கு முன்பாக வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு விடுவார்கள் என்கிற இறை வசனம்

--> ஈஸா நபி வஃபாத் ஆனார்கள் என்கிற இறை வசனம்

--> ஈஸா நபி வானத்திலிருந்து இறங்கி வருவார்கள், தஜ்ஜாலை கொல்வார்கள், நீதமாக ஆட்சி புரிவார்கள் என்பதாக வரக்கூடிய ஏராளமான ஹதீஸ்கள்

என ஏழு வகையான ஆதாரங்கள், ஈஸா நபி இன்னும் இறக்கவில்லை என்பதையும் மீண்டும் இவ்வுலகிற்கு திரும்ப வருவார்கள் என்பதையும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நமக்கு சொல்கிறது.

எதிர் கொள்கையுடையவர்கள் என்னன்ன ஆதாரங்களை வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது, சத்தியத்தை தெளிவாக புரிந்து கொள்வதற்கு தேவையான முக்கியமான அடிப்படையாகும்.

அந்த வகையில், எதிர் கொள்கையுடையவர்கள் வைக்கும் ஆறு ஆதாரங்களையும் தெளிவான முறையில் நாம் புரிந்து கொண்டு விட்டு, அதன் பிறகு, ஈஸா நபி இறக்கவில்லை என்பதற்கு நாம் வைக்க இருக்கும் ஏழு ஆதாரங்களை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இந்த தொடர் முடியும் போது, ஈஸா நபி இறக்கவில்லை என்று நடுநிலையுடன் சிந்திக்கும் காதியானிகள் கூட ஏற்றுக் கொள்வார்கள், இன்ஷா அல்லாஹ்.

தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக