வெள்ளி, 7 மார்ச், 2014

அரசியல் தந்திரம்


அரசியல் கட்சிகளின், குறிப்பாக தமிழக திராவிட கட்சிகளின் அரசியல் காய் நகர்த்தல்கள் என்பது எப்போதும் சுயநலமிக்கதாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருவரால் தமது கட்சிக்கு ஆதாயமிருக்கும் என்றால் அவரை அணைத்துக் கொள்வர். அணைத்துக் கொள்ளும் அதே வேளை, அந்த நபர் தம்மை விட அல்லது தம்மை போல் மக்கள் செல்வாக்கு பெற்றவரா என்பதையும் சேர்த்தே மதிப்பிடுவர். தம்மை போன்றோ அல்லது தம்மை விட அதிகமாகவோ செல்வாக்கு பெற்றவராக அவர் திகழ்வாரேயானால், இயன்ற வரை அவரை தன் வழிக்கு கொண்டு வர முயற்சிக்கும்.
இயலாது போனால், அவரை எட்டி உதைக்கும், ஊடக பலத்தின் மூலம் அவனுக்கு இருக்கும் செல்வாக்கினை இருட்டடிப்பு செய்யும், சமூகத்தில் அவன் தனித்துவம் பெற்றிடாத வகையில் அரசியல் விளையாட்டுக்களை செய்யும்.

இது தான் இரு பெரும் திராவிட கட்சிகள் கடந்து வந்த பாதை.

தமக்கு பணிய மாட்டார்கள், தமது கட்டுப்பாட்டுக்குள் நிற்க மாட்டார்கள் என்று எந்த இயக்கத்தை பற்றி இந்த திராவிட கட்சிகள் மதிப்பிடுமோ அந்த இயக்கத்திற்கு அவர்கள் பணிந்து போனதாய் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

அந்த இயக்கத்தின் செல்வாக்கு தனக்கு ஓட்டுக்களாய் மாறி வர வேண்டும் என்கிற ஆவல் இருந்தாலும் கூட, அதை மறைமுகமாய் பெற்றிட முயற்சிப்பார்களே தவிர, நேரடியாய் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

அரசியல் சதுரங்கத்தை குறித்து அறிந்த அனைவருக்கும் இந்த அடிப்படை தெரியும்.

அந்த வகையில், ஒட்டு மொத்த முஸ்லிம்களின் குரலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வாயிலாய் வெளியானது என்று அனைவருமே ஏக மனதாய் ஏற்றுக் கொண்ட சமீபத்திய இட ஒதுக்கீடு கோரிக்கையை கூட, தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொண்டதற்கிணங்க இதை பரிசீலிக்கிறோம் என்று ஆளும் கட்சி சொல்லாது.

காரணம், தவ்ஹீத் ஜமாஅத் என்பது தனித்துவம் பெற்ற அமைப்பு, அதிக மக்கள் செல்வாக்கு கொண்டிருந்த போதும், இவர்கள் இழுக்கும் இழுப்புகளுக்கெல்லாம் வளைந்து கொடுக்காத அமைப்பு.

இந்த அமைப்பைக் கொண்டு எந்த சுய ஆதாயங்களையும் திராவிட கட்சிகளால் பெற முடியாது, அதே வேளை, இந்த அமைப்பு தான் ஒட்டு மொத்த சமுதாய ஓட்டு வங்கியாகவும் செயல்படுகிறது என்கிற போது, இந்த அமைப்பை ஆரத் தழுவவும் மாட்டார்கள், பகைத்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
அது ஒரு அரசியல் சாதுரியம்.

பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதால் இந்த அமைப்பு முன் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாய் காட்டிக் கொள்வார்கள்.

அதிகம் நெருங்கி விடக்கூடாது என்பதால், இந்த அமைப்பினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த கோரிக்கையை பரிசீலிக்கிறோம் என்று பகிரங்கப்படுத்தவும் மாட்டார்கள்.

இது காலா காலமாக அரசியல் கட்சிகள் செய்து வரும் தந்திரம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கும்பகோணத்திலும் சென்னையிலும் பல உச்சகட்ட போராட்டங்களையெல்லாம் நிகழ்த்தி இட ஒதுக்கீடு என்றால் என்ன என்கிற விழிப்புணர்வை தமிழகத்தின் மூலை முடுக்கிலும் ஏற்படுத்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பெயரை முன்னிலைப்படுத்தாமல், காலத்திற்கும் தமக்கு அடிமை சேவனம் செய்து வந்த இந்திய தேசிய முஸ்லிம் லீகின் காதர் மொஹிதீன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இட ஒதுக்கீடு சட்டமியற்றுகிறேன் என்று கலைஞர் அன்று அறிவித்தது கூட இந்த வகையை சேர்ந்தது தான்.

எவர் தமக்காக வளைந்து கொடுக்க மாட்டார்களோ அவர்களை எந்த அரசியல் கட்சியும் முன்னிலைப்படுத்தாது, எந்த ஊடகமும் பிரபலப்படுத்தாது.
எவர்கள் லட்டர் பேடு இயக்கத்தை வைத்துக்கொண்டு தமக்காக கூழை கும்பிடு இடுவார்களோ அவரை அரசியல் அரங்கம் முன்னிலைப்படுத்த முயற்சிக்கும்.

அப்போது தான் அடிமை சேவனம் தொடரும், தமக்கு காரியமும் நடக்கும் !

அரசியல் செய்யவும் திறமை வேண்டும் என்று சொல்வதில் அர்த்தமில்லாமல் இல்லை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக