செவ்வாய், 8 அக்டோபர், 2013

அரபாவில் ஒன்று கூடுவதை கண்ணால் பார்த்த பிறகும் நோன்பு வைக்கக்கூடாதா?


அரஃபாவில் ஹாஜிகள் கூடுவதை நாம் நமது கண்ணால் காண்கிறோம். இருந்தும், நோன்பு வைக்க மறுப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? என்ற சந்தேகம் தவ்ஹீத்வாதிகளிடமே இன்று பரவலாக நிலவுகிறது.

நாம் கவனிக்க தவறிய விஷயம் என்னவெனில், ரசூல் (ஸல்) அவர்கள் பிறையை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பதை வெறும் வாயளவில் மட்டும் சொல்லி தந்து விட்டு செல்லவில்லை. மாறாக, அதை செய்தும் காட்டியிருக்கிறார்கள்.
நாம் கேட்பது, ரசூல் (ஸல்) அவர்கள், பத்து வருடங்கள் மதினாவில் வாழ்ந்து வந்தார்களே, அந்த பத்து வருடங்களில் அவர்களது அரபா தினங்களை, அவர்களது ஹஜ்ஜ் பெருநாட்களை எவ்வாறு தீர்மானித்தார்கள்?

இன்று நாம் இந்தியாவில் இருந்து கொண்டு அரபா தினத்தை அடைவதும், அன்று ரசூல் (ஸல்) அவர்கள் மதினாவில் இருந்து அரபா தினத்தை அடைந்ததும் ஒன்று தானே!

இன்று, நாம் இதை எப்படி புரிய வேண்டும் என்பதற்கு ரசூல் (ஸல்) அவர்களது மதினா வாழ்க்கையில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தில் நம்மால் ஆதாரம் பெற முடியாதா?

மதினாவில் இருந்த ரசூல் (ஸல்) அவர்கள் பிறையை பார்த்து தான் நோன்பு பெருநாளையும், ஹஜ்ஜ் பெருநாளையும் வைக்க சொன்னார்கள். அது மதினாவிலிருக்கும் பிறை தானே தவிர மக்காவில் அது எந்த பிறை என்று ரசூல் (ஸல்) அவர்கள் பார்க்கவில்லை, பார்க்க சொல்லவில்லை. பார்க்கதாக ஆதாரமும் இல்லை.

அன்றைக்கு மதினாவிலிருந்து கொண்டு மக்காவின் பிறையை அறிந்து கொள்ள இயலாது என்றும் சொல்ல முடியாது, காரணம் , தலைப்பிறையை கண்டு விட்டு அந்த இரவே இத்தனை நெடுந்தொலைவு பயணம் செய்து தகவல் சேர்ப்பது தான் சிரமம். துல்ஹஜ் மாதத்தின் அரஃபாத் தினம் என்பது அம்மாதத்தின் 9 ஆம் நாளாகும்.

மக்காவில் தலைப்பிறை பார்த்து விட்டு அங்கிருந்து மதினாவிற்கு அத்தகவலை பரிமாறிக் கொள்ள 4,5 நாட்கள் போதுமானது.

இத்தகைய வசதி அக்காலத்தில் இருந்தும் அதை நபி (சல்) அவர்கள் பயன்படுத்தவில்லை என்பது இங்கே கவனிக்க வேண்டியது.

அவர்கள் , மதினாவிலிருக்கும் போது , மக்காவில் பிறை எது என்பதை அறிய முயற்சி செய்யாத போது, இந்தியாவில் இருக்கும் நாம் மட்டும் மக்காவில் பிறை எது என்பதை அறிய முயற்சி செய்ய வேண்டுமா?

ரசூல் (ஸல்) அவர்களே இது குறித்து அலட்டிக்கொள்ளாத போது, நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?

உண்மையில் மதினாவில் ரசூல் (ஸல்) அவர்கள் இருந்த சமயம், மதினாவில் ஒரு பிறையும் மக்காவில் வேறு பிறையுமாக இருந்திருந்தால் அதை அல்லாஹ்வே ஏற்றுக்கொண்டு விட்டான் எனும்போது, ரசூல் (ஸல்) அவர்களுக்கு கிடைக்காத பிறையை, அவர்கள் அடைய முயற்ச்சிக்காத பிறையை, நாம் அடைய முயற்சிப்பது ஏன்?

இதுவே அடிப்படை கேள்வி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக