சனி, 4 ஜூலை, 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 14)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 14



மத்ஹப் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? (தொடர்ச்சி) :


இமாம்களுக்கு தொடர்பில்லாத மத்ஹப் :

மத்ஹப் என்பது அப்பட்டமான வழிகேட்டுக் கொள்கை என்பதை அதன் பெயரால் இவர்கள் போற்றிப் பாதுகாத்து வரும் நூற்களே சான்று பகரும்.

இன்னும் சொல்வதானால், எவரை இவர்கள் மதுஹப் இமாம்களாக போற்றுகிறார்களோ, எவர்கள் வாயிலாக இந்த மதுஹப் உருவானதாக சொல்கின்றார்களோ அந்த இமாம்களின் தனிப்பட்ட கொள்கைகே மாற்றமாக தான் இவர்கள் உருவாக்கியிருக்கும் மதுஹபு கொள்கை அமைந்திருக்கின்றது.

இவர்கள் எந்த நூலை மத்ஹப் நூற்களாக பாதுகாக்கிறார்களோ அந்த நூலுக்கும் அந்த இமாமுக்கும் கூட தொடர்பு கிடையாது.
இமாம்களின் காலத்திற்கெல்லாம் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு உருவான நூற்களை அந்த இமாம்களின் பெயரால் இவர்கள் பின்பற்றி வருவது தான் வேடிக்கை.

சரி, இது ஒரு பக்கமிருக்க, இவர்கள் எழுதி வைத்திருக்கும் இந்த நூற்களின் படியாவது இவர்களது வாழ்க்கை முறை இருக்கின்றதா? என்றால் அதுவும் இல்லை.
எதை மதுஹப் நூற்களில் சட்டமாக எழுதி வைத்திருக்கிறார்களோ அதற்கு நேர் மாற்றமான சித்தாந்ததை தான் மதுஹபும் மார்க்கம் தான் என்று கூறும் இன்றைய கூட்டம் கொள்கையாக நம்பி செயல்படுத்தி வருகிறது.

ஆக, மதுஹப் இமாம்களுக்கும் மதுஹபு நூற்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அந்த நூற்களுக்கும் இன்று மதுஹபை பின்பற்றுவதாக சொல்லும் மக்களுக்கும் தொடர்பு இல்லை.

வேடிக்கைக்கும் நகைப்புக்கும் உரியதாக திகழும் இந்த முரண்பாட்டை நாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

முதலில், உலகில் அதிகமான மக்களால் பின்பற்றப்பட்டு வரக்கூடிய ஹனஃபி மத்ஹபைப் எடுத்துக் கொள்வோம்.
இமாம் அபு ஹனீஃபாவை பின்பற்றுவோர் ஹனஃபி மதுஹபில் இருக்கிறார்கள்.

இந்த இமாம் அபு ஹனீஃபா அவர்கள் தமது கொள்கையாக என்ன சொன்னார்கள் என்பதை பார்க்கப்போனால்,

நாங்கள் கிடைக்கின்ற சான்றுகளை வைத்து சட்டம் சொல்கின்றோம், எப்போது சரியான ஹதீஸ் ஒன்று கிடைத்து விடுகிறதோ அப்போது முதல் அது தான் எனது மதுஹப் (எனது வழிமுறை) என்று அபு ஹனீஃபா இமாம் சொன்னதாக இவர்களது முக்கியமான நூற்களில் ஒன்றான துர்ருல் முக்தாரில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் அபு ஹனீஃபா இமாம் சொல்கிறார்கள்,
ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைக் கொண்டு உரசிப்பார்க்காமல் எனது கருத்தை ஏற்பது தடுக்கப்பட்ட காரியம்.
இதுவும் துர்ருல் முக்தாரில் பதிவாகியிருக்கிறது.

இன்னும் அனு ஹனீஃபா இமாம் சொல்வதை பாருங்கள்.

நான் ஒரு சட்டத்தை சொல்கிறேன், அது குர் ஆனுக்கும் சுன்னாஹ்வுக்கும் எதிராக இருக்குமேயானால் எனது சொல்லினை நீங்கள் புறந்தள்ளி விட வேண்டும், என்கிறார்கள்.

ஆக, அபு ஹனீடா இமாம் அவர்கள், இன்று தவ்ஹீத் ஜமாஅத் எந்த கொள்கையை சொல்கிறதோ அதை தான் சொன்னார்கள்.
குர் ஆன் ஹதீஸ் மட்டும் தான் மார்க்கமே தவிர, அவ்விரண்டை தாண்டி, தமது சொந்த கூற்றினை கூட மார்க்கமாக கருதக் கூடாது என்று தான் அபு ஹனீஃபா இமாம் கூறியிருக்கிறார்கள்.

இன்று அவர்கல் பெயரால் மதுஹப் நுல் உருவாக்கியிருப்போர் இந்த கொள்கையை பின்பற்றுகிறார்களா?
என்னை பின்பற்றாதீர்கள், குர் ஆன், ஹதீஸை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று சொன்னவரை பின்பற்ற வேண்டும் என்று வழிகெட்டு போயிருக்கின்றனர்.

மாலிக் இமாம் சொல்கிறார்கள்,

"நானும் மனிதன் தான், சிலவற்றை சரியாகவும் ஆய்வு செய்வேன், சிலவற்றை தவறாகவும் ஆய்வு செய்வேன். எனது கூற்றினை கவனத்துடன் ஆராய்ந்து, குர் ஆன் ஹதீஸுக்கு ஒத்ததாக எதை நான் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அதற்கு முரணாக நான் எதையாவது சொல்லியிருந்தால் அவற்றை விட்டு விடுங்கள்."

தூய இஸ்லாமிய கொள்கையை தான் மாலிக் இமாமும் போதித்திருக்கிறார்கள்.
இன்று, ஒரு கூட்டம், மத்ஹப் என்கிற பெயரில் இமாம்கள் எதை சொன்னாலும் அது மார்க்கம் தான் என்கிற பெயரால் இஸ்லாம் சொல்லாத பல்வேறு காரியங்களை மார்க்கமாக செயல்படுத்தி வருகிறார்களே, இவை எதற்குமே அந்த நான்கு இமாம்களிடம் எந்த அங்கீகாரம் கிடையாது.
அந்த இமாம்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் இவர்களது மத்ஹபை தான் முதலில் எதிர்த்திருப்பார்கள்.

மாலிக் இமாம் சொல்லக்கூடிய மற்றொரு கூற்றினைப் பாருங்கள்.

நபி (சல்) அவர்களது சொல் மட்டும் தான் முழுமையாக பின்பற்றத்தக்கது. மற்ற எவரது கூற்றாக இருந்தாலும், ஏற்கத்தக்கவையும் இருக்கும், நிராகரிக்கத்தக்கவையும் இருக்கும்.

மாலிக் இமாம் தொடர்பாக ஒரு சம்பவத்தையும் இவர்கள் தங்கள் நூஇல் பதிவு செய்துள்ளார்கள்.

அதாவது, ஒளு செய்கின்ற போது கைகளைக் கொண்டு கால் விரல்களை கழுக வேண்டுமா? என்று மாலிக் இமாமிடம் ஒருவர் சட்டம் கேட்ட போது, அதற்கு அவசியமில்லை என்று மாலிக் இமாம் விடையளிக்கிறார்கள்.
இதை கேட்ட இன்னொருவர், என்னிடம் இது தொடர்பாக நபி (சல்) அவர்களின் முன்மாதிரி ஒன்று இருக்கிறது என்பதாக கூறி அந்த ஹதீஸை சமர்ப்பித்தார்.
அதை கேட்ட மாலிக் இமாம், இந்த ஹதீஸை இந்த நிமிடம் வரை தாம் அறிந்திருக்கவில்லை என்று கூறி அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

அடுத்து, இதே கருத்தினை ஷாஃபி இமாம் கூறுவதைப் பார்ப்போம்.

எந்தவொரு மனிதராக இருந்தாலும் அவருக்கு எல்லா ஹதீஸ்களும் கிடைக்காது. இருப்பதை கொண்டு மார்க்கத்தை புரிவார், பல ஹதீஸ்கள் தவறி விடும்.
நான் ஒன்றை சொல்லி அது நபி (சல்) அவர்களின் கூற்றுக்கு மாற்றமாக இருக்குமானால், நபி (சல்) அவர்களின் கூற்று தான் எனது கூற்று.

இன்னும் ஷாஃபி இமாம் இது பற்றி அழுத்தமாய் சொல்கின்ற போது,

நபி (சல்) அவர்கள் வாயிலாக ஒரு செய்தி கிடைக்கும் போது, அதை புறக்கணிப்பது என்பது மார்க்கத்தில் ஹராமாகும் (தடுக்கப்ப‌ட்டதாகும்) என்று தான் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஏகமனதாய் முடிவு செய்திருக்கின்றனர்

என்று சொல்கிறார்கள்.



மற்றொரு சந்தர்ப்பத்தில் ஷாஃபி இமாம் சொல்லும் போது,

எனது வழிமுறையில் எதையேனும் நபி (சல்) அவர்களுக்கு மாற்றமாக நீங்கள் கண்டீர்களென்றால் அதை புறக்கணித்து விடுங்கள் என்று கூறுகிறார்கள்.

அதை விட்டும் நான் விலகி விட்டேன், என் மரணம் வரை விலகி விட்டேன், எனது மரணத்திற்கு பிறகும் விலகி விட்டேன்

என்று, இத்தனை கண்டிப்புடனும் கவனத்துடனும் தான் மார்க்கத்தை இமாம் ஷாஃபி அவர்கள் அணுகியிருக்கிறார்கள்.
அப்படியிருக்க, இவரது பெயரால் இன்று மத்ஹபை உருவாக்கி வைத்துக் கொண்டு ஷாஃபி இமாம் சொன்னால் மார்க்கம், ஹலால், ஹராம்களை அவரே தீர்மானித்து அறிவிப்பார் என்றெல்லாம் நம்புவது என்பது எந்த அளவிற்கு நம்மை வழிகேட்டில் ஈழ்த்தும் என்பதை சிந்திக்க வேண்டும்.

ஷாஃபி இமாமின் மற்றொரு அறிவிப்பைப் பாருங்கள்.

நபி (சல்) அவர்களின் ஹதீஸ் ஒன்று இருக்க, நான் அதற்கு மாற்றமாக ஒன்றை சொல்லவோ செய்யவோ செய்தாலோ, அறிந்து கொள்ளுங்கள், எனக்கு மூளை குழம்பி விட்டது என்று..

இப்படியும் ஷாஃபி இமாம் சொல்லியிருக்கிறார்கள்.
இதை கூட, ஷாஃபி இமாம் சொன்னதாக இந்த மத்ஹப் கூட்டம் தான் சொல்கிறதே தவிர, நாம் சுயமாக சொல்லவில்லை.

நாம் ஷாஃபி இமாமை மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று சொன்னதாக அப்போதும் நம்மை விமர்சனம் செய்யும் வேடிக்கையை பார்க்கலாம்.

ஷாஃபி இமாம் காலத்தில் நடந்த ஒரு சம்பவம்.

ஷாஃபி இமாம் ஒரு ஹதீஸை முன்வைத்து சட்டமொன்றை சொல்கிறார்கள்.
உடனே, ஷாஃபி இமாமின் மாணவர்களில் ஒருவர் ஷாஃபி இமாமிடம், " நீங்கள் இந்த ஹதீஸ் சொல்கிற கருத்தில் தான் இருக்கிறீர்களா?" என்று கேட்கிறார்.
உடனே கடுமையாக கோபம் கொண்ட ஷாஃபி இமாம், நான் ஹதீஸில் இருப்பதாக ஒன்றை சொல்கிறேன், பிறகு அந்த கருத்தில் நிற்காமல் நான் வேறெந்த கருத்திற்கு செல்ல முடியும்?
நீ எனக்கும் நபிக்கும் இடையே சண்டை உருவாக்கப் பார்க்கிறாயா?

என்றெல்லா, தமது மாணவரை கடுமையாக கண்டிக்கிறார்கள் இமாம் ஷாஃபி அவர்கள்.

இதிலிருந்தும், ஷாஃபி இமாமின் நிலை குர் ஆன், ஹதீஸ் மட்டும் தான் எனப் புரிகிறது.

அடுத்து, அஹமத் இப்னு ஹம்பல் அவர்களது கூற்றுக்களைக் காண்போம்.

அஹ்மத் இப்னு ஹம்பல் அவர்கள் ஷாஃபி இமாமின் மாணவர் ஆவார்.
அவர் சொல்கிறார்,

என்னை பின்பற்றாதீர்கள், எனது ஆசிரியர்களைப் பின்பற்றாதீர்கள், சுஃப்ஃபியானை (அவர் காலத்தில் வாழ்ந்த ஒரு மார்க்க அறிஞர்) பின்பற்றாதீர்கள், அவ்சாயி இமாமை பின்பற்றாதீர்கள்,
நாங்கள் எல்லாம் எப்படி குர் ஆன் ஹதீஸ்லிருந்து சட்டங்கள் எடுத்தோமோ அதே போன்று நீங்களும் சட்டம் எடுங்கள்.
அவர்கள் அனைவரது கூற்றும் சமமானவை தான், அவை அனைத்துமே அவர்களது சுய கருத்துக்கள் மட்டுமே. ஆதாரம் என்பது குர் ஆனும் ஹதீஸும் மட்டும் தான்.

என்ன தெள்ளெத்தெளிவான வார்த்தை பாருங்கள். குர் ஆனும் ஹதிஸும் மட்டும் தான் மார்க்கம் என்பதில் எந்த அளவிற்கு உறுதியாகவும் தெளிவாகவும் எல்லா இமாம்களும் இருந்தார்கள் என்பதை இத்தகைய கூற்றுக்கள் வாயிலாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
இன்று நாம் தவ்ஹீத் ஜமாஅத் என்று இயக்கம் வைத்து செயல்படுகிறோம், இதை உலக வசதிக்காக செய்து கொள்கிறோம், மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான் இது.
அந்த இமாம்களைப் பொறுத்தவரை, இத்தகைய இயக்கமாக கூட அவர்கள் செயல்படவில்லை, தனி நபர்களாக, குர் ஆனும் ஹதீஸும் மட்டும் மார்க்கம் என்கிற போதனைகளை பிரச்சாரம் செய்வது தான் அவர்களது ஒரே கொள்கையாக இருந்தது.



மத்ஹப் நூற்களின் காலத்திற்கும் நான்கு இமாம்களுக்கும் தொடர்பிருக்கிறதா?


சில வருடங்களுக்கு முன் ஜமாத்துல் உலமா சபை சார்பில் வெளியாகும் நூல் ஒன்றில் ஹனஃபி மத்ஹப் என்று நாம் இன்றைக்கு பின்பற்றுகிறோமே, அப்படியானால் அபு ஹனீஃபா எழுதிய நூற்கள் இன்றைக்கு எங்கே? என்பதாக ஒரு கேள்வியொன்று கேட்கப்பட்டது.
அதற்கு விடை சொன்ன ஜமாஅத்துல் உலமா சபையின் அப்போதைய தலைவர் கலீலுர் ரஹ்மான் ரியாஜி, அபு ஹனீஃபா இமாம் பல நூற்களை எழுதிருக்கிறார், ஆனால் எதிரிகள் அவற்றையெல்லாம் எரித்து விட்டனர் என்று பதில் சொல்லியிருந்தர்.

ஆக, அபு ஹனீஃபா பெயரால் இன்றைக்கு புழக்கத்தில் இருக்கும் நூற்கள் எதுவுமே அபு ஹனீஃபா இமாம் எழுதியவை இல்லை என்று தெளிவாகிறது.

ஒருவரது பெயரால் மத்ஹப் ஒன்று உருவாகின்றது என்று சொன்னால், அந்த நபரின் பேச்சுக்களோஒ எழுத்துக்களோ புழக்கத்தில் இருக்க வேண்டும், அப்போது தான் அவரது பெயரால் மத்ஹப் உருவாவதில் அர்த்தம் இருக்கும்.
அபுஹனீஃபா இமாம் எழுதிய எந்த நூலுமே இன்று இல்லையெனும் போது ஹனஃபி மத்ஹப் என்று இவர்கள் இன்றைக்கு உருவாக்கியிருப்பதில் எந்த அர்த்தமாவது இருக்கிறதா? 
அதற்கும் அபு ஹனீஃபா இமாமும் எந்த சம்மந்தமுமாவது இருக்கிறதா?
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சரி, இன்றைக்கு மதரசாக்களில் ஹனஃபி மத்ஹப் போதிப்பதற்காக சில மத்ஹப் நூற்கள் வைத்திருக்கிறார்களே, அவைகள் எப்போது, யாரால் எழுதப்பட்டன?

குத்ரி எனும் ஹனஃபி கிதாப், இதை மத்ஹப் மதரசாக்கள் அனைத்திலுமே பாட நூலாக வைத்திருப்பார்கள்.
இதை எழுதியவர் அஹ்மத் இப்னு முஹம்மத் என்பவர், இவரது காலமோ ஹிஜ்ரி 420.
ஆக, நபி (சல்) அவர்களுக்கும் 400 ஆண்டுகள் கழித்து, அபு ஹனீஃபா இமாமுடைய காலத்திற்கும் கிட்டத்தட்ட 360 ஆண்டுகள் கழித்து உருவான நூல் தான் இந்த ஹனஃபி நூல்.

மற்றொரு முக்கியமான ஹனஃபி மத்ஹப் நூல் ஹிதாயா.
இதன் காலமோ ஹிஜ்ரி 593.
ஆக, இதுவும் அபு ஹனீடா இமாமின் காலத்திற்கும் 500 ஆண்டுகள் கழித்து உருவானது.

ஹனஃபி மத்ஹப் என்று ஒரு மத்ஹபை உருவாக்கிய இவர்களுக்கு அபு ஹனீஃபா இமாமின் நூலை ஏன் கொண்டு வர இயலவில்லை?
,குறைந்த பட்சம், அவரது மாணவர்களின் நூற்களையாவது கொண்டு வந்தார்களா?
இல்லை.
இமாம்களின் காலத்தோடு எந்தத் தொடர்புமில்லாமல், எத்தனையோ ஆண்டுகள் கழித்து வந்தவர்கள் எழுதியவைகளையெல்லாம் ஹனஃபி நூல் எனக் கூறி இவர்கள் பாடம் நடத்துகிறார்கள் என்றால் இதில் ஒளிந்துள்ள காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹனஃபி மத்ஹப் நூல் என்று சொல்லி அபு ஹனீஃபா இமாம் சொன்னது என்றோ அவரது மாணவர்கள் எழுதியது என்றோ இவர்கள் நூற்கள் தயாரிப்பதாக இருந்தால், நாம் ஏற்கனவே பல்வேறு சான்றுகளுடன் சுட்டிக்காட்டியதைப் போன்று, அவர்கள் அனைவரது கொள்கையும் தங்களை எவருமே பின்பற்றக் கூடாது என்பது தான்.
தங்கள் பெயரால் மத்ஹப் உருவாவதை அவர்களே கண்டித்து விட்டு தான் சென்றிருக்கிறார்கள் எனும் போது, அவர்கள் பெயரால் மதுஹப் உருவக்கியவர்களால் அவர்கலது கூற்றையே நேரடியாக காட்டிக் கொண்டிருக்க முடியாது, அப்படி காட்டும் போது, மார்க்கத்தை இவர்களது வசதிற்கேற்ப வளைத்துக் கொள்ள இயலாது.
இமாமின் காலத்திற்கும் 300 ஆண்டுகள், 500 ஆண்டுகள் கழிந்து ஒருவர் எழுதுகிற நூல் எனும் போது, அவர் தமது சுய கருத்துக்களையெல்லாம் திணித்து எத்தகைய கட்டுக்கதைகளையும் அவிழ்த்து விடுவார், மார்க்கத்தின் பெயரால் பொய்கள் பல கூறி சம்பாதிக்கவும் அது உதவியாக இருக்கும்
அந்த வசதி இருப்பதால் தான் இவர்களும் இந்த நூற்களையே மதுஹப் நூற்களாக பேணி வருகின்றனர்.

கந்துத் தக்கைக் எனும் நூல்ம் மதரசாக்களில் பாடமாக நடத்தப்படும் ஹனஃபி நூற்களில் ஒன்று தான்.
இதன் காலமோ ஹிஜ்ரி 710.

இதை விட, இவர்கள் எல்லா நூற்களை விடவும் மேலானதாக கருதக்கூடிய துர்ருல் முக்தாரின் காலம் எது தெரியுமா?

ஹிஜ்ரி 1088 !

ஒருவர் மரணித்து 1000 ஆண்டுகள் கழித்து ஒரு நூல் ஒன்றை எழுதி வைத்துக் கொண்டு இது தான் அந்த மனிதரின் வழி.. என்று சொன்னால் இதை விட மடமை வேறு உண்டா?
ஹதீஸ்களை இன்று பதிந்திருக்கிறோம் என்றால், அதில் எந்த அளவிற்கு ஆழமாக சனதை அலசுகிறோம்?
இந்த செய்தியை இவருக்கு சொன்னது, யார், அவரிடம் சொன்னது யார், அவரிடம் சொன்னது யார்? என நபி (சல்) அவர்கள் வரையுள்ள சங்கிலித் தொடரை முழுமையாக கண்டறிந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் அனைவரும் நம்பிக்கையானவர்களா, உண்மையானவர்களா, நல்லவர்கள் என்று சமூகத்தில் பெயர் பெற்றவர்கள் தானா? என்றெல்லாம் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்கிறோமே, இவற்றில் எதையாவது இந்த மத்ஹப் நூலில் இவர்கள் கொண்டிருக்கிறார்களா?
சங்கிலித் தொடர் அறிவிப்பாளர் உண்டா? நம்பகத் தன்மை குறித்த ஆதாரங்கள் உண்டா?
எதுவுமே இல்லை.

அது போன்று, இவர்களது பிரதான நூற்களில் ஒன்றான நூர் இலாஹ் எனும் நூலின் வரலாற்றைப் பார்ப்போமென்றால் அது எழுதப்பட்டது ஹிஜ்ரி 1069 ஆம் ஆண்டில் தான்.

இவை ஹனஃபி மத்ஹப் நூற்களின் நிலை.

இதே போன்று ஷாஃபி மத்ஹப் நூற்களான அர்ரிசாலாஹ், அல் உம், இச்திலாஃபுல் கிதாப் போன்ற நூற்களை எடுத்துக் கொண்டால், இவற்றையெல்லாம் இவர்கள் தாங்கள் நடத்தும் மதரசாக்களில் கூட பாடமாக நடத்துவது கிடையாது.
அந்த அளவிற்கு மார்க்கத்திற்கு விரோதமான வண்டவாளங்கள் அவற்றில் நிறைந்து காணப்படுகின்றன.

ஃபத்உல் முஃஈன் எனும் நூல், இதை ஷாஃபி மத்ஹப் காரர்கள், தங்கள் மத்ஹப் நூலாக இன்றைக்கும் போற்றுகின்றனர்.
இதன் ஆசிரியல் யாரென்று பார்க்கப் போனால், கேரளாவைச் சேர்ந்த மலபார் சைனுத்தீன் என்பவரால் ஹிஜ்ரி 1000 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட நூல் தான் இந்த ஃபத்உல் முஃஈன்.

அதாவது, ஷாஃபி இமாமின் காலத்திற்கும் 987 ஆண்டுகள் கழிந்து உருவானது தான் இவர்கள் ஷாஃபி மத்ஹப் நூல் என போற்றுகின்ற நூல்.

அது போன்று, மற்றொரு ஷாஃபி மத்ஹப் நூலான ஏனதுல் தாயிபீன், ஹிஜ்ரி 1300 இல் எழுதப்பட்டது.

ஆக, இவர்கள் ஃபிக்ஹ் நூல் என்று கூறி மார்க்க சட்டங்கள் எடுக்கின்ற எந்த நூலுமே 500 ஆண்டுகளுக்கும், 700 ஆண்டுகளுக்கும் முன்னர் சாதாரண மனிதர்கள் வாயிலாக உருவானது தான்.
இவைகளுக்கும், அந்த இமாம்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது, ஏன், இமாம்களின் மாணவர்களுக்கு கூட இந்த நூற்களோடு தொடர்பு கிடையாது என்கிற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது எப்படி மார்க்க சட்ட நூலாகும்? இதன் போதனை எப்படி இஸ்லாமாகும்?

நபி (சல்) அவர்களின் வாழ்க்கையையே வஹீ, வஹீ அல்லாதது என இரண்டாகப் பிரிக்கிறோம்.
வஹி இல்லாத வாழ்க்கையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்கிறோம்.
வஹீ வராது என்கிற காரணத்தைக் காட்டி வஹி அருளப்படும் காலத்தில் வாழ்ந்த சஹாபாக்களின் சொந்த கூற்றுக்களையே மார்க்கமாக கொள்ளக் கூடாது என்கிறோம்.

இந்த அளவிற்கு மார்க்கத்தில் நுணுக்கமான புரிதல்களுடன் இருக்கின்ற நாம், இந்த மத்ஹப் நூற்களை மார்க்கமாக ஒரு காலும் ஏற்க மாட்டோம் !



மதுஹப் நூற்களுக்கும் இன்றைய ஆலிம்களுக்கும் தொடர்பிருக்கிறதா?


இமாம் காலத்து நூற்களையோ இமாம்களின் மாணவர்களின் கூற்றுக்களையோ ஏன் மத்ஹப் நூற்களாக இவர்கள் கருதவில்லை? என்கிற சந்தேகம் நமக்கு வரலாம்.

நாம் முன்னரே சுட்டிக் காட்டியதைப் போல், இதற்கும் காரணம் இருக்கின்றது.

இமாம்களின் கூற்றையோ, அவர்களின் மாணவர்களது கூற்றுக்களையோ நேரடியாக பெற்று சட்ட நூல் வடிப்பதாக இருந்தால், இன்று இவர்கள் மார்க்கம்  என்கிற பெயரில் செய்யும் அனேக அனாச்சாரங்களை இவர்களால் செய்திருக்க முடியாது. காரணம், அனைத்துமே தவறு என்று தான் அந்த இமாம்களும் சொன்னார்கள்.

இமாம் அபு ஹனீஃபா அவர்களின் பிரதான மாணவர் அபு யூசுஃப்.
இவர் சொல்வதைப் பாருங்கள்.

கப்ரை பூசுவது கூடாது. அதன் மீது தண்ணீர் தெளிப்பதும் கூடாது.
ஏனெனில், தண்ணீர் தெளிப்பது கூட பூசுகின்ற பொருளில் வந்து விடுகிறது.
மேலும், கப்ரில் கட்டிடம் கட்டுவது, அடையாளம் வைப்பது அனைத்துமே வெறுக்கத்தக்கது

என்று அபூ யூசுஃப் சொல்கிறார்.
மேலும் அவர் சொல்லும் போது,
கப்ருகளை அலங்கரிப்பது கூடாது, அலங்காரம் என்பதெல்லாம் வாழும் போது தான், மய்யித்திற்கு எதற்கு அலங்காரம்? இதுவெல்லாம் தவறு.
இன்னும், கப்ரிலிருந்து தோண்டப்பட்ட மண்ணைக் கொண்டு தான் கப்ரை மூட வேண்டுமே தவிர, அதை விட சிறு அளவு மண்ணை கூட அதிகப்படுத்தக் கூடாது

இவையெலலம் அபுஹனீடா இமாமின் மாணவரான அபு யூசுட் அவர்கள் சொன்னவை.


இவரது இந்த கூற்றினை இவர்களால் இன்று மத்ஹப் சட்டம் எனக் கூறி எழுதி வைக்க முடியுமா? அப்படி செய்தால் இவர்களது இன்றைய மார்க்க வியாபாரம் படுத்து விடும்.

கப்ரை அலங்கரிக்கக் கூடாது என்பது தான் மத்ஹப் சட்டம் என்று இவர்கள் சொன்னால் இன்று தர்காக்கள் இருக்குமா?
கப்ருகளை உயர்த்தவே கூடாது என்பது தான் மத்ஹப் சட்டம் என்று சொல்லும் போது தர்காவில் வியாபாரம் போணியாகி விடும்.

கப்ருக்கென்று அடையாளம் கூட வைக்கக் கூடாது என்பது இமாம்களின் கூற்றாக இருக்கும் போது, இவர்கள் கப்ரை கட்டி, அதை உயர்த்தி, அதற்கு அலங்காரங்கள் செய்து, நாகூர் ஆண்டவர் தர்கா, என்று பெயரையும் சூட்டிக் கொள்கிறார்கள் என்றால் மத்ஹப் இமாம்களின் கூற்றுக்களை அப்பட்டமாக மீறுவது இவர்கள் தான் என்பது தெளிவாகிறது.

மார்க்கத்தை தங்கள் விருப்பத்திற்கேற்றாற்போல் வளைத்துக் கொள்ள‌ இவையெல்லாம் தடையாக இருக்கும் என்பதால் தான் இந்த இமாம்களுக்கெல்லாம் பல ஆண்டுகள் கழித்து வந்தவர்கள் எழுதியவைகளை மார்க்க நூல் என வாதிடுகின்றனர்.

கப்ருகளை சுண்ணாம்பு கொண்டு பூசுவது வெறுக்கத்தக்கது என்று மாலிக் இமாம் சொல்லியிருக்கிறார், ஷாஃபி இமாம் சொல்லியிருக்கிறார், அஹமத் இப்னு ஹம்பல் இமாம் சொல்லியிருக்கிறார், இன்னும் ஹசன் பசரி, இப்ராஹிம் நஹயி , சவ்ரி போன்ற பல்வேறு இமாம்கள் கூறியிருக்கின்றனர்.

பூசுவது கூடாது என்று தான் இமாம்கள் சொன்னார்கள் என்று அப்பட்டமாக தெரிந்தும், அதை தங்கள் நூற்களில் பதிவு செய்து விட்டு, "இருப்பினும், இதையெல்லாம் செய்யலாம் என்பது தான் சரி" என்பதாக அடிக்குறிப்பு ஒன்றை  இவர்களாகவே சேர்த்துக் கொள்ளும் மோசடியையும் இவர்கள் செய்கின்றனர்.

எதை இமாம்கள் தடுத்தார்களோ, அதை அப்பட்டமாக மீறி விட்டு, நாங்கள் அந்த இமாமின் மத்ஹப் என்று சொன்னால் இதை விட கேலிக் கூத்து வேறு உண்டா?

இவர்கள் தங்களது கொள்கையை தான் தனி மத்ஹபாக உருவாக்குகிறார்களே தவிர, இமாம்களின் மத்ஹபுக்கும் இவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

எந்த கப்ரின் மீதும் கட்டிடம் கட்டக் கூடாது என்று இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் சொன்னார்கள் என்று எழுதி வைத்து விட்டு, அடிக்குறிப்பில், "பெரியார்கள், ஷேக்மார்கள் என்றால் விதிவிலக்கு என்று சொல்லப்பட்டிருக்கிறது" என்பதாக இவர்களாக சுய கருத்தை திணித்து தங்கள் வழிகேட்டை நியாயப்படுத்த முனைவதை பார்க்கலாம்.

எந்த கப்ராக இருந்தாலும் அதன் மீது கட்டிடம் கட்டக் கூடாது என்பது தான் அபூ ஹனீஃபா இமாமின் கூற்று. அப்படியிருக்கும் போது, பெரியார்களின் கப்ருக்கு இதில் விதிவிலக்கு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது என்றால் அதை சொன்னவர் யார்? அதற்கு என்ன ஆதாரம்?
இவர்களால் தர இயலாது. ஆக, தங்கள் சுய ஆதாயத்திற்காக பொய்களையும் புளுகுகளையும் சேர்த்தே மார்க்கம் என்கிற பெயரில் புனைவது தான் மத்ஹப்காரர்களின் போக்கு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

துர்ருல் முக்தாரில் கீழ்கண்டவாறு எழுதி வைத்திருக்கிறார்கள்.

அதாவது, கப்ரில் அடையாளங்கள் வைப்பதோ, தோற்றம், மறைவு என குறிப்பேடுகள் வைப்பதற்கு தடையில்லை.
நபி (சல்) அவர்கள் இதற்கு தடை விதித்திருந்தாலும் கூட, மக்களெல்லாம், இதை செய்து தான் வருகிறார்கள் என்பதால் இஜ்மாவின் அடிப்படையில் இதற்கு தடையில்லை.

எந்த அளவிற்கு துணிச்சல் என்பதை கவனியுங்கள். அதாவது, நபி (சல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள் என்பதையும் இவர்களே சுட்டிக் காட்டி விட்டு, இருந்தாலும் பரவாயில்லை, மக்களெல்லாம் செய்கிறார்கள் அல்லாவா எனவே தவறில்லை என்று, இந்த அளவிற்கு மார்க்கத்தோடு விளையாடுகிறார்கள் என்றால் இதற்கும் இமாம்களுக்கும் எந்த சம்மந்தமாவது இருக்குமா?


மக்களெல்லாம் செய்கிறார்கள் என்றால் மக்கள் மத்ஹப் என்று பெயர் சூட்ட வேண்டுமே தவிர, இதற்கு மாற்றமான கொள்கையை சொன்ன இமாம்களின் மத்ஹப் என்று இவர்கள் எப்படி சொல்லலாம்?

மய்யித் வீட்டில் செய்யக்கூடாதவை பற்றி ஹனஃபி இமாம் சொல்வதைப் பாருங்கள்.

மய்யித் வீட்டில் ஃபாதிஹா ஓதுதல், அங்கு சென்று சாப்பிடுதல் போன்றவை அருவருக்கத்தக்க பித் அத் ஆகும், அதோடு, குர் ஆன் ஓத ஆள் சேர்த்தல், ஒரு வாரம் ஃபாதிஹா, மூன்றாம் ஃபாதிஹா, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுதல், சிறுவர்களை அழைத்து பாட சொல்லுதல், குர் ஆன் ஓத கூலி வாங்குதல், போன்றவை எல்லாமே தவறானவை.

என்பதாக ஹனஃபி இமாம் சொல்வதாக எழுதி வைத்திருக்கிறார்கள்.
ஆனால், இன்றைய மத்ஹப்வாதிகள் எவராவது இதை பேணி நடக்கின்றார்களா?
இதற்கு நேர் முரணான காரியங்களில் தான் ஈடுபடுகின்றனர். அவர்களது செயலுக்கும் இந்த மத்ஹப் நூற்களுக்கும் கூட எந்த தொடர்பும் இல்லை என்பதை இது போன்ற பல்வேறு சான்றுகள் வாயிலாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.


இன்னும் ஷாஃபி மத்ஹப் நூற்களில் எழுதிருப்பவற்றை பார்க்கையில், இதே போன்று,
கப்ரை பூசுவது கூடாது, கப்ரில் கட்டிடம் கட்டுவது கூடாது, கப்ரை முத்தமிடுவது கூடாது, எந்த கப்ரும் வழிபாட்டுத் தலமாக ஆகி விடக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

மய்யித்தை அடக்குவதற்காக தோண்டப்படும் குழியை, அதிலிருந்து வெளியேற்றப்பட்ட மண்ணைக் கொண்டு மட்டுமே மூட வேண்டுமெ தவிர, அதனோடு சிறு அளவு கூட மண்ணை அதிகப்படுத்தக்கூடாது, கப்ரில் என்ன பெருமை இருக்கிறது? வாழும் போது தான் மக்களுக்கு பெருமை, மய்யித் ஆன பிறகு எந்த பெருமையும் இல்லை,
அன்சாரிகள், முஹாஜிரீன்கள் ஆகியோரது கப்ருகளை நான் பார்வையிட்டேன், எந்த ஒன்றுமே பூசப்பட்டதாக‌ இல்லை,
எனது காலத்திலுள்ள ஆட்சியாளர்கள் அனைத்து கப்ருகளையும் தகர்த்தெறிந்தனர், எவருமே அதை விமர்சிக்கவில்லை
என்றெல்லாம் ஷாஃபி இமாம் சொன்னதாக எழுதி வைத்துள்ளனர்.

இவற்றில் எந்த ஒன்றையாவது இவர்கள் பேணுகிறார்களா?
கப்ரை கட்டை, அதை பூசி, அதன் மேல் கட்டிடம் எழுப்பி, அலங்கரித்து, அதை வழிபாட்டுத் தலமாக ஆக்கி எந்த இமாமின் மத்ஹபை பின்பற்றுவதாக வெற்று கோஷம் இடுகிறார்களோ அந்த இமாமின் கூற்றுக்கள் ஒவ்வொன்றையும் அப்பட்டமாக மீறுவது தான் இவர்களது ஒரே கொள்கை.

திராணி இருந்தால் மவுண்ட் ரோட் தர்காவிலிருந்து ஒரு செங்கலை எடுத்து வா என்று நம்மைப் பார்த்து சவால் விடுகிறார்களே, இவர்களுக்கு வெட்கம் இருக்கிறதா?
இப்படி சவால் விடுகின்ற எந்த உரிமையாவது இவர்களுக்கு உண்டா?
இவர்கள் பின்பற்றும் ஷாஃபி இமாம் இன்றைக்கு இருந்திருந்தால் இதை அங்கீகரித்திருப்பாரா அல்லது கண்டித்திருப்பாரா?
மவுண்ட் ரோட் தர்காவையே இடிக்க வேண்டும் என்று தான் ஷாஃபி இமாம் சொல்லியிருப்பார்.

ஆக,
மத்ஹப் நூற்களுக்கும் மத்ஹப் இமாம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை,
இன்றைய ஆலிம்களுக்கும் இந்த மத்ஹப் நூற்களுக்கும் கூட எந்த தொடர்பும் இல்லை.

இமாம்களின் கூற்றை புறக்கணித்து அவர்களை இழிவுபடுத்தும் வகையில் தான் இவர்கள் நூற்கள் எழுதியுள்ளனர்.
அதே போன்று, அந்த நூற்களில் காணப்படும் ஓரிரு சரியான செய்திகளை கூட இன்றைய ஆலிம்கள் அப்பட்டமாக மீறத் தான் செய்கின்றனர்.
இது தான், இன்றைய மத்ஹப் வழிகேடர்களின் பரிதாப நிலை.

தொடரும், இன்ஷா அல்லாஹ்










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக