சனி, 15 ஜூன், 2013

மூன்றாம் இரவில் இறங்குவது அல்லாஹ்வா அல்லாஹ்வின் அருளா?




கீழ் வானம் தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ் உண்மையில் என்ன தான் சொல்கிறது என்பதை விளக்குவதற்கு முன்பாக, ஒரு சில அடிப்படைகளை இங்கே விளக்க வேண்டியுள்ளது.

ஒரே நேரத்தில் அர்ஷிலும் இருந்து கொண்டு கீழ் வானத்திலும் இறங்குவது அல்லாஹ்வுக்கு சாத்தியமாகாதா? என்கிற அதி பயங்கர (?) கேள்வியை கேட்கிறார்கள்.  சிந்தனையை அடகு வைத்து விட்டு எதையும் அணுகுவதால் தான் இத்தகைய அபத்தமான கேள்வி எழுகிறது.

அல்லாஹ்வின் சிபத்துகளை பற்றி பேசக்கூடிய எந்த இடமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு சாத்தியமா சாத்தியமில்லையா என்கிற ரீதியில் சிந்திக்க கூடாது. எது அல்லாஹ் கற்றுத்தந்த இயற்கை நியதியோ அந்த நியதிக்குள் நின்று தான் சிந்திக்க வேண்டும்.

ஒரு நேரத்தில் இரண்டு இடங்களில் இருப்பது அல்லாஹ் கற்றுத்தந்த இயற்கை விதிக்கு முரண். இந்த வசனத்தில் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்கிற விதி தான் இயற்கையானது, அது தான் இயற்கையாக அல்லாஹ் கற்று தந்தது. அந்த விதிக்கு முரணாக, அல்லாஹ்வுக்கு எதுவும் சாத்தியம் தானே என்கிற கோணத்தில் நாம் சிந்திக்க தேவையில்லை.


அப்படி சிந்திப்பதாக இருந்தால் கபருக்குள் இருக்கும் மய்யித் அல்லாஹ்வின் ஆற்றலை பெற்று  குறைகளை கேட்டறிகின்றன என்று சொல்கிற முஷ்ரிக்குகளின் வாதத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். ஏன்? அல்லாஹ் நாடினால் கப்ருக்குள் இருக்கும் மய்யித்துக்கு தனது ஆற்றலை வழங்க முடியாதா?? முரணான ஒன்றை அல்லாஹ் நாடினால் முரண்பாடில்லாமல் புரிய முடியாதா என்று இதற்கும் கேள்வி கேட்கலாம்.

இரவும் பகலும் சமமாகாது என்று அல்லாஹ் சொல்வது கூட நம்மளவில் புரிய தான். உண்மையில் அல்லாஹ்வின் சிபத்திற்கு இது போன்ற முரண்பாடுகளை முரண்பாடு இல்லாமல் அமையும், இரவும் பகலும் அல்லாஹ்வின் புறத்தில் சமம் தான் என்று தான் புரிய வேண்டும் என்று கூட வாதம் வைக்கலாம்.

நன்மை தீமை சமமாகாது, படித்தவர் படிக்காதவர் சமமாக மாட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லும் ஏராளமான வசனங்களை இப்படி கூறிய பொருள் மாற்றி விடலாம்.

சரி இப்படி கேள்வி கேட்பவர்கள், தமக்கு தாமே முரண்படும் வகையில் இன்னொரு கேள்வியையும் கேட்கிறார்கள். என்னிடம் பாவ மன்னிப்பு கேட்பார் இல்லையா என்று அல்லாஹ்வின் அருள் பேசுமா?? என்று கேட்கிறார்கள்.

இவர்களது பாணியிலேயே நாம் இதற்கு பதில் சொல்லலாம். ஏன், அல்லாஹ்வுக்கு  தனது அருளை பேச வைக்க முடியாதா?? அல்லாஹ்வுக்கு ஒரே நேரத்தில் அர்ஷிலும் இருந்து கொண்டு கீழ் வானத்திற்கும் வர இயலும் என்று நம்புவது போல அல்லாஹ்வுக்கு தனது அருளை கூட பேச வைக்க முடியும், இப்படியும் நம்பலாம்.
இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? அல்லாஹ் தனது அருளை இறக்கினான் அருள் பேசியது, ஏனெனில் அல்லாஹ் நாடினால் எதுவும் நடக்கும் என்று இவர்கள் பாணியில் நாம் விளக்கம் கொடுப்பதற்கு எது தடையாக இருக்கும்??

இது முதல் விஷயம்.

இரண்டாவதாக, அல்லாஹ்வுக்கு ஒரே நேரத்தில் அர்ஷிலும் இருந்து கொண்டு கீழ் வானத்திற்கும் வர இயலும், அது அல்லாஹ்வுக்கு சாத்தியம் தான் என்று நம்பலாம் என்று சொல்பவர்கள், அவர்களின் கட்டடங்களின் அடிப்புறத்தில் அல்லாஹ் வந்தான். என்று வரக்கூடிய வசனத்திற்கு மட்டும் (16:26) அல்லாஹ்வின் ஆற்றல் வந்தது என்று ஏன் பொருள் செய்ய வேண்டும்?? 

அர்ஷில் இருந்து கொண்டே கட்டிடங்களின் அடியில் அல்லாஹ்வால் வர இயலாதா??

நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். என்று வரக்கூடிய வசனத்திற்கு மட்டும் (57:4), அல்லாஹ்வின் கண்காணிப்பும் பாதுகாப்பும்   நம்மை சுற்றியிருக்கும் என்று ஏன் பொருள் செய்ய வேண்டும்??? அர்ஷில் இருந்து கொண்டே நம்முடன், நாம் செல்லக்கூடிய கடை வீதி, அலுவலகம், பேருந்து நிலையம் என எங்கு வேண்டுமானாலும் அல்லாஹ்வால் வர இயலுமே.. இப்படி இவர்கள் ஏன் புரிவதில்லை?

ஆக, தெளிவான சந்தர்ப்பவாதமே இவர்கள் வாதங்களில் வெளிப்படுகிறது. உண்மையை அறியும் ஆர்வமும் இவர்களுக்கு இல்லை, அதற்கான தகுதியையும் இவர்கள் வளர்க்கவில்லை என்பதற்கு இவை சான்று.

அர்ஷில் இருந்து கொண்டே கீழ் வானத்திலும் இருக்கலாம் என்று சொல்வது முரண்பட்ட நம்பிக்கையாகும் என்றாலும், அது நமக்கு தான் முரண், அல்லாஹ்வின் சிபத்தில் இது போன்ற முரண்பாடுகள் நமது கற்பனைக்கே எட்டா வண்ணம் முரணில்லாமல் கூட இருக்கும், ஆகவே இதை முரண் என்று நாம் சொல்ல கூடாது என்றும் இவர்கள் வாதம் வைக்கிறார்கள். 

இது தான் வாதம் என்றால், அல்லாஹ் வேறொரு வசனத்தில், நிராகரிப்பாளர்கள், ஊசியில் காதில் ஒட்டகம் நுழைகின்ற வரை சுவர்க்கம் செல்லவே மாட்டார்கள் என்கிறான். 
இதன் சரியான பொருள், எந்த நிலையிலும் இவர்கள் சுவர்க்கம் செல்லவே மாட்டார்கள் என்று அடித்துக்கூற கூடிய வசனம் இது என்று எவருமே சொல்வர். 

மேலே உள்ள கீழ் வானம் ஹதீஸுக்கு சப்பைக்கட்டு கட்டும் சலபிகளிடத்தில் இந்த இறை வசனத்திற்கு விளக்கம் கேட்டால், நிராகரிக்கின்றவர்களால் சுவர்க்கம் செல்ல முடியாது தான், ஆனால் இங்கே அல்லாஹ் ஊசியின் காதில் ஒட்டகம் நுழைகிற வரை என்று ஒரு நிபந்தனையை சொல்கிறான், இந்த நிபந்தனை இயற்கை நியதிப்படி முடியாது என்றாலும் அல்லாஹ்வின் சிபத்திற்கு இது நடத்திக்காட்டக்கூடிய ஓன்று தான், இது அல்லாஹ்வுக்கு சாத்தியம் தான் என்பதால், அல்லாஹ், ஊசியின் காது வழியாக ஒட்டகத்தை புக செய்து நிராகரிப்பாளர்களை சொர்க்கத்திற்கு கொண்டு செய்வான் என்று பொருள் செய்வார்களா??

சரி இந்த ஹதீஸுக்கு சரியான புரிதல் தான் என்ன??

அல்லாஹ்வின் அருள் மூன்றாம் இரவின் போது நம்மை நெருங்குகிறது என்பது தான் இதன் பொருள். அப்படியானால் என்னிடம் பாவ மன்னிப்பு கேட்பவர்கள் இல்லையா? என்று அருள் பேசுமா?? என்று கேள்வி எழும். 

இங்கே தான் ஒரு நுணுக்கமான புரிதலை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இந்த ஹதீஸில் இரண்டு செய்திகள் உள்ளன. 

ஒன்று, அல்லாஹ் கீழ் வானத்தில் இறங்குகிறான் என்கிற செய்தி. 
இரண்டு, என்னிடம் பாவ மன்னிப்பு கேட்பவர்கள் உண்டா என்று அல்லாஹ் கேட்கிறான் என்கிற செய்தி. 

இரண்டையுமே அதன் நேரடி பொருளில் புரிந்தாலோ, ஏதேனும் ஒன்றை  அதன் நேரடி பொருளில் புரிந்தாலோ, இப்படி தான் சலபுகள் போல நுனிப்புல் மேய்ந்தவர்கலாக ஆவோம். 

உண்மையில் இந்த இரண்டு செய்திகளுமே உவமையான செய்திகள் தான்.

என்னிடம் பாவ மன்னிப்பு கேட்பவர்கள் உண்டா என்று அல்லாஹ் கேட்கிறான் என்கிற செய்தியை அல்லாஹ்வே பேசினான் என்று புரிய இயலவே இயலாது. 
அல்லாஹ் பேசினான் என்றால் யாரிடம் பேசினான்??? தூங்கிக்கொண்டிருக்கும் நம்மிடமா?? அப்படியானால் அல்லாஹ் பேசினான், அல்லாஹ் இப்படி கேட்டான் என்று ஒவ்வொரு மூன்றாம் இரவிலும் நாம் உணர்கிறோமா? நம் காதுகளில் அல்லாஹ் பேசுவது விழுகிறதா? 
இல்லை. இறை தூதர்களிடம் தவிர மற்றவர்களிடம் அல்லாஹ் பேசுவதில்லை, அப்படியே ஒரு வாதத்திற்கு அல்லாஹ் மற்றவர்களிடமும் பேசுவான் என்று சொன்னாலும் இங்கே கேட்பவர் எவருமின்றி அல்லாஹ் பேசுவதாகவே பொருள் வருகிறது. கேட்பவர் எவருமின்றி அல்லாஹ் பேசினான் என்று சொல்வது அல்லாஹ்வை கேலி செய்வதாகும். அர்த்தமில்லாத ஒன்றை அல்லாஹ் சொல்ல மாட்டான்.

ஆக அல்லாஹ் இவ்வாறு கேட்டான் என்பதற்கு, அல்லாஹ் இவ்வாறு எதிர்பார்க்கிறான் என்று பொருள் செய்வதே எல்லா விதத்திலும் பொருத்தமுள்ளதாக உள்ளது, முந்தைய வசனத்திற்கு, அல்லாஹ்வின் அருள் நம்மை நெருங்கும் என்று அர்த்தம் வைக்க இது உதவிகரமாகவும் இருக்கும்.
அல்லாஹ் தமது அருளை ஒவ்வொரு மூன்றாம் இரவிலும் அதிகமான அளவிற்கு நம்மீது பொழிய செய்து, இந்த அருளை, உங்கள் பாவ மன்னிப்பின் மூலமும் துஆக்களின் மூலமும் தொழுகைகளின் மூலமும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ் எதிர்பார்க்கிறான். 
இப்படி புரிவது தான் சரி, என்பது கருத்து.

ஏதேனும் தவறுகள் இருக்குமேயானால் மாற்றுக்கருத்துடையவர்கள் சுட்டிக்காட்டலாம்.


3 கருத்துகள்:

  1. மிக நன்றாக உள்ளது உன்மையை அறிய வேண்டும் என படிப்பவர்களுக்கு பலனுள்ளதாக அமையும்

    பதிலளிநீக்கு
  2. இதில் அல்லாஹ் மலக்குமார்களை நோக்கி தானே கேட்பதாக வரும்..அந்த ஹதீஸ் முழுமையாக தரவும் சகோ..

    பதிலளிநீக்கு
  3. மனிதர்களிடம் பேசுவதாக தான் உள்ளது..

    இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்துக்குத் தினமும் இறங்குகிறான். என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை ஏற்கிறேன். என்னிடம் கேட்டால் கொடுக்கிறேன். என்னிடம் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கிறேன் என்று கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி 1145

    பதிலளிநீக்கு