சனி, 24 மே, 2014

இல்லாத இணையை நம்புவது எப்படி பாவமாகும்?


சூனியம் என்பதே இல்லை என்றால் இல்லாத சூனியத்தையா அல்லாஹ் பாவமான செயல் என்கிறான்? என்று சிலர் கேள்வியெழுப்பி வந்தனர்.

இல்லாததை இல்லாததாகவே காட்டினால் அது பாவமில்லை.
இல்லாததை இருப்பது போன்று காட்டுவது தான் பாவம்.

மேஜிக் நிகழ்ச்சி நடக்கிறது, அதில் காட்டப்படும் காரியங்கள் நமக்கு வியப்பை ஏற்படுத்தும் காரியங்கள் தான். ஆனால் அவை கற்பனைக்கே எட்டாத அற்புதங்கள் என்கிற ரீதியிலா செய்யப்படுகின்றன? இல்லை.

மேஜிக் ஒன்றை செய்கிறார் என்றால் அது உண்மையில் அற்புதமில்லை, ஏதோ தந்திர வித்தை தான் அதில் ஒளிந்துள்ளது என்று பார்ப்பவரும் நம்புகிறார், அதை செய்பவனும் அதை வெளிக்காட்டும் விதத்தில் தான் வித்தை காட்டுவான்.

இல்லாதததை அற்புதத்தில் கொண்டு வருகிறேன் என்று அவன் செய்து காட்டுவது கிடையாது.

இது தான் சூனியம். இந்த சூனியம் பாவமில்லை. காரணம் இது அற்புதமில்லை என்று செய்பவனும் ஒப்புக் கொள்கிறான், பார்ப்பவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.

அதுவே, சாய்பாவா வாயிலிருந்து லிங்கம் எடுத்தார் என்றால் இதுவும் சூனியம் தான், ஆனால் இங்கே அதை செய்த சாய் பாபா அதை வித்தை என்று கூறி செய்யவில்லை, இல்லாததை இருப்பதாக காட்டும் அற்புதத்தை செய்து காட்டுவதாக தான் சொன்னார்.
பார்ப்பவர்களும் அவர் அற்புதம் செய்வதாக தான் நம்பினர்.
ஆகவே இந்த வகை சூனியம் என்பது பாவம்.

சூனியம் என்பது ஒன்று தான், என்ன நம்பிக்கையில் அதை செய்கிறோம் என்பதைப் பொறுத்து அது பாவமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

இது ஒரு பக்கமிருக்க, இவர்கள் எழுப்பிய‌ இதே வாதத்தை இவர்களை நோக்கி நாம் திருப்பி வைக்கிறோம்.

அல்லாஹ் தமக்கு இணை வைப்பதை மிகப்பெரிய பாவமான காரியம் என்கிறான்.
இதன் மூலம் இவர்கள் என்ன புரிகிறார்கள்?

அல்லாஹ்வுக்கு இணையான ஒன்றும் உலகில் இருக்கிறது அதனால் தான் அல்லாஹ்வுக்கு இணையாக எதையும் கருதாதே என்கிறான் என்று சொல்வார்களா?

இல்லாத சூனியம் எப்படி பாவமாகும் என்று மேதாவித்தனமாக கேள்வி கேட்பவர்களிடம், இல்லாத இணை வைப்பு எப்படி பாவமாகும் என்கிற கேள்வியை நாம் திருப்பிக் கேட்கிறோம் !

ஆக, அல்லாஹ்வுக்கு இணையில்லை தான். இணையிருப்பதாக நீ நம்பாதே என்பது தான் அல்லாஹ்வின் கட்டளை

சூனியத்தால் எதுவும் செய்ய முடியாது தான். செய்ய முடியும் என்று நீ நம்பாதே என்பது தான் அல்லாஹ்வின் கட்டளை.

இல்லாத இணை துணை இருப்பதாக நம்புவதும் பாவம்.. இல்லாத சூனியம் இருப்பதாக நம்புவதும் பாவம் !

புரிய வேண்டிய விதத்தில் புரிந்தால் மார்க்கம் எளிமையானது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக