புதன், 7 மே, 2014

தமிழன் மானெங்கெட்டவன்


சினிமா கூத்தாடியை தன் வாழ்க்கையின் லட்சிய நாயகனாக போற்றிப் புகழும் தமிழ் ரசிகப் பைத்தியங்களின் ஓட்டுக்களை இலக்காக கொண்டு, சென்னை வந்த நரேந்திர மோடி, மெனெக்கெட்டு போயஸ் தோட்டம் சென்று ரஜினியை சந்தித்து சிரித்தபடி போஸ் கொடுக்கிறார்.
அதை அனைத்து பத்திரிக்கையிலும் வெளிவர செய்கிறார்.

தமக்கென எந்த விதமான உயர்ந்த லட்சியமும் தமிழனுக்கு இல்லையா?அவனுக்கென தொலை நோக்கு பார்வைகள் இல்லையா?
அவனுக்கென‌ எத்தகைய அரசியல் கொள்கைகளும் இல்லையா??
இந்தியாவின் எதிர்கால திட்டங்கள் குறித்த வியூகங்கள் எதுவும் ஒரு தமிழனுக்கு இல்லையா?

வெறுமனே, தமது தலைவனை (?) ஒரு அரசியல்வாதி சந்தித்து சிரித்தபடி போஸ் கொடுத்து விட்டால், ஆஹா நமது தலைவனையல்லவா இவர் சந்தித்திருக்கிறார் என வாய் பிளந்து, அந்த அரசியல்வாதியிடம் மூளையை அடகு வைத்து அவனுக்கு தமது வாக்குகளை செலுத்தி விடும் அற்பமான மூளையை தான் தமிழன் கொண்டிருக்கிறானா?

என்னை ஆள வேண்டுமென்றால், எனக்காகவும் என் சமூகத்துக்காகவும் என்னவெல்லாம் நீ செய்வாய் என்பதை சொல்,
இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறாய் என்கிற பட்டியலை கொடு,
உன் கட்சி கொண்டிருக்கக் கூடிய தொலை நோக்கு பார்வைகளை விரிவாக எம்மக்களுக்கு விளக்கு,
நாட்டின் பாதுகாப்புக்கும், அமைதியான வாழ்விற்கும் உன் கட்சியும் ஆட்சியும் எந்த வகையிலெல்லாம் உறுதுணையாக நிற்கும் என்பதை சொல்..

என்று கேட்க வேண்டிய சொரணையுள்ள தமிழன், அந்த அரசியல்வாதி, ரஜினி, விஜய் என சில கூத்தாடிகளை சந்தித்து பேசி, அதை தமது அரசியல் சுய நலத்திற்கு பயன்படுத்தும் நோக்கில் பத்திரிக்கைகளில் பரவ விட்டால் அதை கண்டு கை தட்டி ஆர்பரிக்கிறது என்றால், தமிழன் மானெங்கெட்டவன் என்று சொல்வதில் என்ன தவறிருக்கிறது?

அது மட்டுமில்லாமல், நூறு சதவிகிதம் அரசியல் சுயநலம் தான் இது போன்ற சினிமா கூத்தாடிகளுடனான மோடியின் சந்திப்பு என்பது பட்டவர்த்தனமாக தெரியும் போது, அதை மக்கள் மத்தியில் விளக்கி இது போன்ற அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தை தோலுரிக்க வேண்டிய இடத்தில் இருக்கும் எதிரிக்கட்சியான காங்கிரஸ் கூட, இதை மிகவும் மென்மையாக கையாளும் நிலையை பார்க்கிறோம்.

ரஜினியுடனான மோடியின் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, இது வெறும் அரசியல் உள் நோக்கம் கொண்டது என்றெல்லாம் விமர்சிப்பார் என்று தான் நாமும் எதிர்பார்த்தோம்.

ஆனால், ரஜினி என்பவர் அவர்களுக்கு மட்டும் உரியவரல்ல, அவர் பொதுவானவர் தான் என்று அப்பாவித்தனமாக பதில் சொல்லியிருக்கிறது காங்கிரஸ்.

பொதுவான ஒருவரை தேர்தல் நெருக்கத்தில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் ஒருவர் வீடு தேடி வந்து சந்திக்க வேண்டிய அவசியம் என்ன வந்து விட்டது?
என்று கேள்வி எழுப்ப எந்த எதிர் கட்சிக்கும் வக்கில்லை என்றால், தமிழ் பொது ஜனத்திற்குமா இல்லை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக