வியாழன், 17 ஏப்ரல், 2014

வாதத்திற்கு பின்னுள்ள வாழ்க்கை


தான் நபியென வாதிட்ட பிறகுள்ள‌ வாழ்க்கை சமூகத்தில் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுகிறது என்கிற அளவுகோல் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் என அடையாளம் காட்டிக் கொள்ள உதவாது.

இதை ஒரு அளவுகோலாக காதியானி மதத்தவர் சொல்வது வேடிக்கையான ஒன்று.

ஒருவர் நபியென தன்னை வாதிடுவாரானால், அதை காரண காரியங்களுடனும், பொய், புரட்டுகள் இல்லாத அப்பழுக்கற்ற சித்தாந்தங்களை முன்வைப்பதின் மூலமும், மெய் சிலிர்க்கும் முன்னறிவிப்புகள் மூலமாகவும் தான் அதை நிலை நாட்டிட முடியுமே அல்லாமல்,
நான் நபியென என்னை அறிவிப்பு செய்த பிறகு, பார்த்தீர்களா, என்னை செருப்பால் அடிக்கிறார்கள், அப்படியானால் நான் நபி தான் என்று சொல்வது அறிவற்ற வாதமாகும்.

இதற்கு பொருந்தாத இறை வசனங்களையும் எடுத்துக் காட்டி சமூகத்தை ஏமாற்றி, இத்தகைய அர்த்தமற்ற வாதங்களை பரப்பி வருகின்றனர் இந்த மதத்தவர்கள்.

ஒருவர் தன்னை சமூகத்தில் பரபரப்பாக பேசப்பட வைக்க, எதையாவது புதிதாக செய்ய வேண்டும், அல்லது சொல்ல வேண்டும்.
அதுவரை அவரை எவருமே சீண்டவில்லையென்றால், அவர் பரபரப்பாக எதையும் சொல்லவில்லை என்பது அதற்கான காரணம்.
பரபரப்பையும் சமூகத்தில் அதிர்ச்சியையும் உருவாக்கவல்ல காரியங்களை எப்போது ஒருவர் செய்கிறாரோ அந்த நொடி முதல் தான் அவரை உலகம் உற்று நோக்கும்.

அவர் கூறிய கூற்றினை அந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமேயானால் அவரை போற்றிப் புகழும், அதை மறுக்குமேயானால், எட்டி உதைக்கும்.

அதுவரை சாதாரண பெண்ணாக இருந்த தஸ்லீமா என்பவள் என்றைக்கு பெண்களுக்கும் கர்ப்பப்பை சுதந்திரம் வேண்டும் என்று எழுதி சமூகத்தில் பரபரப்பை உருவாக்கினாளோ அன்றைக்கு தான் புகழும் அடைந்தாள்.

அன்றைய நாள் தொட்டு இன்று வரை சமூகத்தின் இழிபிறவியாகவே அவள் பார்க்கப்படுகிறாள்.

வாதத்திற்கு பின்னுள்ள வாழ்க்கை என்றால் இப்படி தான் ஏச்சும் பேச்சும் வரும், ஆகவே தஸ்லீமா சொன்னது சரியான கூற்று தான் என்று எந்த அறிவுள்ளவரும் கூற மாட்டார்.

இன்னும் சொல்லப்போனால், எனக்கு பிறகு முப்பது போலி நபிமார்கள் தோன்றுவார்கள் என்று நபிகள் நாயகம் (சல்) அவர்கல் முன்னறிவிப்பும் செய்து விட்டு சென்றிருக்கும் நிலையில், அந்த முப்பது நபரும், தான் நபி தான் என்று தன்னை பிரகடனப்படுத்திய நாள் முதல் சமூகத்தால் செருப்படி வாங்கத்தான் செய்வர்.

நபியென்று கூறி விட்ட பிறகு செருப்படி வாங்கியவர், ஆகவே இவர் தன்னை நபியென்று கூறுவது சரி தான் என்று ஒரு வாதம் வைத்தால், இவர்கள் கருத்துப்படி அந்த முப்பது பேருமே நபி தான் ! காரணம், அந்த முப்பது பேருமே சமூகத்தால் புறக்கணிக்கப்படுபவர்களாக தான் இருப்பார்கள்.

இது போன்ற வாதங்களில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை இந்த முரண்பாடே நமக்கு தெளிவாக விளக்கி விடுகிறது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக