செவ்வாய், 1 ஏப்ரல், 2014

பாஜகவிற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் பெயர்தாங்கிகள்


பாஜக வெற்றி பெறக்கூடாது என்கிற அக்கறை உண்மையிலேயே இருக்குமானால், ஒட்டு மொத்த எதிர்ப்பு வாக்குகளும் ஒரு அணிக்கு சென்று சேர வேண்டும்.
இந்த சாதாரண உண்மையை புரிந்தவர்கள் எவரானாலும் அவர்கள் எதிர்க்க வேண்டியது தனித்து நிற்கிறோம் என்கிற பெயரில் முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்கும் சுயேட்சைப்பிரிவுகளை தானே?

பல கட்சிகளுடன் கூட்டணி பேரம் நடத்தி, எதுவுமே சரிபட்டு வராத நிலையில், நாடெங்கிலும் நாற்பது தொகுதிகளில் தனித்து நிற்கிறோம் என்று அறிவிக்கிறது ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி கட்சி.

பலமான இரண்டோ மூன்றோ கட்சிகள் போட்டியிடுகின்ற ஒரு தொகுதியில் குறைந்த அளவிற்கு செல்வாக்கு உடைய ஒரு கட்சி தனித்து நிற்கிறது என்றால் அதன் பொருள் என்ன? அதன் விளைவு என்ன?

பாஜக பெரிய கட்சி, சரி. அதை தோற்கடிக்க அதே போன்ற பெரிய கட்சிக்கு தானே வாக்களிக்க வேண்டும்? ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் ஓரணியில் திரண்டால் தானே பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தில் சிறிதேனும் அர்த்தமிருக்கும்?

இராமனாதபுரத்தில் நான்கு முனை போட்டி. முஸ்லிம்கள் செல்வாக்கு அதிகமுள்ள அந்த தொகுதியில், முஸ்லிம் மானம் காக்கப்போகிறோம் என்று சொல்பவர்களது நிலை என்னவாக இருக்க வேண்டும்? எந்த பக்கம் நின்றால் பாஜகவை தோற்கடிக்க முடியுமோ அந்த பக்கம் நிற்க வேண்டும். அதற்கு ஒரே வழி, பெரும்பான்மை முஸ்லிம்கள் எதன் பக்கம் நிற்கிறார்களோ அதற்கே ஆதரவளிப்பது தான்.

அல்லாமல், தனித்து நின்று 2000 ஓட்டுகளை தனியே பிரித்தெடுப்பதால் யாருக்கு என்ன இலாபம் என்று கூட சிந்திக்க தெரியாத அறியாமை சமூகமல்ல நம் சமூகம் !

2000 ஓட்டுக்காக, தனித்து களமிறங்கி வேறு வேறு கட்சி முஸ்லிம் வேட்பாளர்களையெல்லாம் இவர்கள் தோற்கடிப்பார்களாம், முஸ்லிம் லீக் பெரும்பான்மையாக உள்ள கேரளா போன்ற மாநிலங்களிலெல்லாம் அவர்களை கூட எதிர்த்து களமிறங்குவார்களாம்,
ஆனால், ஒரு வழ்வாதார கோரிக்கையை முன்வைத்து அதிமுகவை ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆதரிக்கையில் அதை விமர்சனம் செய்வார்களாம்.

அதிமுகவை ஆதரிப்பதால் பாஜகவிற்கு நன்மையா அல்லது இது போன்று தனித்து போட்டியிடுவதால் பாஜகவிற்கு நன்மையா? என்பதை மட்டும் வைத்து தனியாக ஆய்வு செய்தால் கூட தனித்து போட்டியிடுவதால் ஏற்படும் சமுதாய பலகீனமே மிகப்பெரிய பாதிப்பு என்பதை உணரலாம்.

தனித்து நிற்கிறோம் என்கிற ஒற்றை முழக்க‌மொன்றே போதும், இவர்கள் பாஜக எதிர்ப்பு போர்வையில் செயல்படும் சுயந‌லவாதிகள் என்பதை அறிந்து கொள்ள !

இதை புரிந்து செயல்படும் சமூகமாக இஸ்லாமிய சமூகம் வளர்ந்து விட்டதால் இது போன்ற செல்லாக்காசுகளின் அரசியல் நாடகங்கள் விரைவில் சந்தி சிரிக்கும் என்பதில் ஐயமில்லை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக