வியாழன், 17 ஏப்ரல், 2014

தவ்ஹீத் ஜமாஅத்தின் சாதுரியமான‌ அரசியல் !


தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலை மாற்றம் பற்றி விமர்சிப்பவர்களில் இரு வகையினரை காண முடிகிறது.

நாங்கள் தான் அப்பவே சொன்னோமே, அதிமுக ஆதரவு நிலை தவறு என்று..
என கூறுவோர் ஒரு வகை.

நேற்று வரை அதிமுகவை ஆதரிப்பதை நியாயப்படுத்தி விட்டு இன்று அதில் முரண்பட்டு விட்டார்கள் என்று விமர்சிப்பவர்கள் இன்னொரு வகை.

முதல் வகையினர், அதிமுக ஆதரவு என்கிற ததஜவின் முந்தைய நிலைபாடினை எதிர்ப்பவர்கள், இப்போதைய திமுக ஆதரவு நிலையை ஆதரிப்பவர்கள்.

இரண்டாமவர்கள், தங்களுக்கென எந்த கொள்கையையுமே வைத்துக் கொள்ளாதவர்கள், ததஜவின் நிலைபாட்டினை எதிர்ப்பது மட்டும் தான் இவர்களது ஒரே குறிக்கோள்.

எனினும், மேல் கூறப்பட்ட இரு தரப்பாரும் தங்களது இந்த விமர்சனத்தில் தவறிழைக்கத்தான் செய்கின்றனர்.

அதிமுகவை ஆதரிப்பது தவறு என்று அன்றைக்கே நாங்கள் சொன்னோம் என்று கூறுவோர், அரசியல் நுணுக்கங்களையும், திராவிட கட்சிகளின் போங்குகளையும் சரிவர புரியாதவர்கள் ஆவர்.

அன்றைக்கே சொன்னோமே..அன்றைக்கே சொன்னோமே.. என்று எந்த நாளை இவர்கள் சொல்கிறார்களோ அன்றைக்கு அதிமுகவை ஆதரிப்பது தான் சரியான முடிவாக இருந்தது.
அதை துளியளவும் மறுக்க முடியாது.
அவசியமான நேரத்தில் ஆதரிப்பதும், நமக்கு ஆபத்தான நேரத்தில் எதிர்ப்பதும் தான் ஒரு நியாயமான அரசியல் அமைப்பின் கடமையாக இருக்க வேண்டும்.

சமுதாய கண்ணோட்டத்தை மட்டுமே கருத்தில் கொள்ளும் ஒரு கட்சிக்கு தான் இத்தகைய விரிந்த பார்வையை கொண்டு, சூழ்நிலைக்கேற்றவாறு நிலைபாட்டினை மாற்றிக் கொள்ளவும் முடியும்.

ஒரு கட்சியை ஆதரித்து விட்டோம் என்பதற்காக அவர்கள் தரும் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி கூழை கும்பிடு இடுவோரால் இத்தகைய நிலை மாற்றத்தினை ஒரு போதும் எடுத்திருக்க முடியாது.

அரசியலில் நூறு சதவிகிதம் துல்லியமான நிலைபாட்டினை எவராலும் கொள்ள முடியாது. எனினும், இயன்ற அளவிற்கு சமூக கண்ணோட்டத்தில் அதை அமைத்துக் கொள்ளவும், மார்க்கத்திற்கு விரோதமில்லாத வகையில் அதை கொண்டு செல்லவும் இயலும்.

அந்த வரம்புகளில் நின்று கொண்டு துணிச்சலுடன் அரசியலில் விளையாடும் ஆற்றலை தவ்ஹீத் ஜமாஅத் பெற்றுள்ளது.

அதனால் தான், தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழுவிற்கு இத்தனை வரவேற்பு.
அதனால் தான் இந்த ஜமாஅத்தின் தேர்தல் நிலை மாற்றத்திற்கு பிறகு ஜெயாவின் பிரச்சார வியூகமும் மாற்றம் பெற்றது.
அதனால் தான் கலைஞரும் தன் பங்குக்கு பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தை இன்னும் வீரியப்படுத்தினார்.

மற்றபடி, இரு திராவிட கட்சிகளும் தவ்ஹீத் ஜமாஅத்தின் பார்வையில் சமமானவை தான் என்பதில் இந்த நொடியிலும் மாற்றமில்லை.

கைவசம் இருந்த வாய்ப்புகளில் அன்றைக்கு அதிமுகவை ஆதரித்தது தான் சரி.
இன்றைக்கு திமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்தது தான் சரி.

இயன்ற அளவிற்கு ஆதரவோ எதிர்ப்போ காட்டும் ஒப்பீட்டு வழிமுறை தான் அரசியல் என்பது.
குர் ஆன், ஹதீஸ் போல் துல்லியமானதல்ல !

இதை புரிந்து கொண்டு சிந்திப்பவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் சாதுரியமான‌ அரசியல் மதிப்பீட்டினை மெச்சவே செய்வர் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக