வெள்ளி, 18 ஏப்ரல், 2014

தெய்வம் நின்று கொல்லும்அநீதி இழைப்பவர்களால் தொடர்ந்து அதை நமக்கு இழைத்துக் கொண்டே இருக்க முடியாது.
நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்குபவர்களால் காலத்திற்கும் அதை செய்து கொண்டே இருக்க முடியாது.

அதே சமயம், அவர்கள் செய்வது தவறு எனில், அதை தொடர்ந்து செய்வதற்கு அல்லாஹ் விடுவான். அதற்கான எல்லா வசதிகளையும் அல்லாஹ் செய்து கொடுப்பான்.

அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் வாசல்களையும் திறந்து விட்டோம். (6:44)

அவ்வாறு செய்வது தான் சரி என ஷைத்தான் அதை அவர்களுக்கு அழகாகவும் காட்டுவான்.

அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை ஷைத்தான் அவர்களுக்கு அழகாக்கிக் காட்டினான்.(6:43)

அநீதியிழைக்கப்படுவோர், அல்லாஹ்விடம் பொறுப்பை ஒப்படைத்து அதில் ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.
அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டும் உரியது என்பதால் நாம் அவசரம் காட்டி ஒன்றும் ஆகப்போவதில்லை.
நியாயம் என்பது நூல் பிடித்தாற்போல் அல்லாஹ்வின் அரசாங்கத்தில் அளக்கப்படும் என்கிற நம்பிக்கை கூட இல்லையெனில், முஸ்லிம் என்றும் மறுமையை நம்பக்கூடியவர்கள் என்றும் நம்மை நாமே சொல்லிக் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?

நான் என் இறைவனிடமிருந்து வந்த சான்றுடன் இருக்கிறேன். அதைப் பொய்யெனக் கருதுகிறீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவன் உண்மையை உரைக்கிறான். தீர்ப்பளிப்போரில் அவன் மிகச் சிறந்தவன்' என்றும் கூறுவீராக!(6:57)

நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால் எனக்கும், உங்களுக்கு மிடையே காரியம் முடிக்கப்பட்டிருக்கும். அநீதி இழைத்தவர்களை அல்லாஹ் அறிந்தவன்' என்றும் கூறுவீராக! (6:58)

அல்லாஹ்விடத்தில் அவசரம் கிடையாது. அநீதிக்காரர்களை அவன் விட்டு தான் பிடிப்பான்.

அவர்கள் அறியாத விதத்தில் விட்டுப் பிடிப்போம். (7:182)

இந்த அவகாசம் என்பது அவர்கள் திருந்துவதற்கு தரப்படும் அவகாசம்.

அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளேன். எனது திட்டம் உறுதியானது. (7:183))

இறுதியில், ஒரு நாள் வரும் !
அந்த நாளில், இத்தனை காலம் தான் செய்தது தவறு என அவர்களுக்கு போதிக்கப்படும்.
அன்றைக்கு அழிவை தவிர வேறெதுவும் அவர்களை அணுகாது. வேறு சந்தர்ப்பங்களும் தரப்படாது.

அவர்களுக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்திருந்த போது திடீரென அவர்களைத் தண்டித்தோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தனர். (6:44)

எனவே அநீதி இழைத்த கூட்டத்தி னர் வேரறுக்கப்பட்டனர். அகிலத்தின் இறை வனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.(6:44)

அவர்களே அறிந்திராத நிலையில் அல்லாஹ்வின் தண்டனை எதிர்பாரா வண்ணம் அவர்களை அடையும் !

அவர்கள் அறியாத நிலையில் திடீரென்று அவர்களைத் தண்டித்தோம். (7:95)

மனிதர்கள் அவசரப்படுவார்கள். அல்லாஹ் பொறுமையாளனுக்கெல்லாம் மிகப்பெரிய பொறுமையாளன் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக