செவ்வாய், 1 ஏப்ரல், 2014

கேள்வி கேட்பதற்கே பிறந்தவர்கள்


மார்க்கத்திற்கான முழு முதற்சொந்தக்காரன் படைத்த இறைவன் தானே தவிர, தனி நபர்களோ ஒரு குழுவோ அதற்கு உரிமை கொண்டாடுபவர்களல்ல !

மார்க்கத்தை ஆய்வு செய்ய வேண்டிய கடமையும், பிறருக்கு எத்தி வைக்கும் உரிமையும் நம் ஒவ்வொருவரின் மீதும் விதியானது தான் என்பதுடன், பிறரிடம் மார்க்க சட்ட திட்டங்கள் குறித்து கேள்வியெழுப்புவதும் ஒவ்வொருவரின் உரிமை சார்ந்தது தான்.

ஆனால், மார்க்கம் பேசுகிறோம் என்கிற பெயரில் இன்று கேள்வி கேட்பதற்காகவே சிலர் திரிவதை பார்க்க முடிகிறது. இவர்களுக்கென எந்த கொள்கையும் கிடையாது என்பதால் தவ்ஹீத் கொள்கையை உயிர் மூச்சாய் கொண்டவர்களிடம் எதிர் கேள்வி கேட்பது ஒன்றையே தங்கள் வாழ்நாள் கொள்கையாக வகுத்து வைத்திருக்கின்றனர்.

எப்படி நடுநிலைப் பேர்வழிகள் என ஒரு கும்பல் அலைகிறதோ அது போன்று இது கேள்விக்கு பிறந்த கும்பல்.
கேள்வி கேட்பது மட்டுமே இவர்களுக்கு தெரிந்த ஒன்று !

இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு என்று அடுக்கடுக்காக பல சான்றுகளை முன் வைத்து நாம் விள்க்குகிறோம் என்று வைப்போம். கேள்விக்கு பிறந்த கூட்டம் என்ன செய்யும் தெரியுமா?
அதெப்படி? நீ என்ன முட்டாளா?? அன்றைக்கு இரண்டையும் இரண்டையும் கூட்டினால் ஐந்து என்று இன்னார் எழுதியுள்ளாரே? என்பர்.

அப்படியானால் உனது நிலை என்ன? இரண்டையும் இரண்டையும் கூட்டினால் ஐந்து வரும் என்பது தானா? என்று நாம் திருப்பிக் கேட்டால் பதில் வராது.
அல்லது, இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு தான் வரும் என்பதற்கு நாம் அடுக்கடுக்காக தந்த ஆதாரங்களுக்கு உன்னிடம் மறுப்பு உள்ளதா? என்று கேட்டால் அதற்கும் பதில் வராது.

அதாவது, அவரிடம் நாம் எதையும் கேட்கக் கூடாது, அவர் தான் நம்மிடம் கேட்பார்.
அவரிடம் நாம் கேள்வி கேட்டால், கேள்வி பல்வேறு வழிகளில் பிரியும், ஒன்றில் இல்லையென்றாலும் இன்னொன்றில் வசமாக சிக்குவார், தமது முரண்பாடு அம்பலத்திற்கு வரும், அதற்கு அஞ்சக்கூடியவர் தம்மை சுற்றி இடக்கூடிய‌ பாதுகாப்பு வேலி தான் கேள்வி மட்டும் கேட்பது !

முஹ்ராஜ் இரவை கொண்டாடுவது கூடாது என நாம் சான்றுகளை முன் வைத்து விளக்கினால், அந்த சான்றுகளுக்கு பதில் சொல்வதை விட்டு, அல்லது குறைந்த பட்சம், மிஹ்ராஜ் இரவை கொண்டாடலாம், அது தவறில்லை என்று கூட வெளிப்படையாக சொல்வதை விட்டு விட்டு,
இதை இதற்கு முன்பு எந்த அறிஞராவது சொல்லியிருக்கிறாரா? என்று கேட்பர்.
இது தான் கேள்விக்கு பிறந்தவர் என்பது.

மிஹ்ராஜ் இரவை கொண்டாடலாம் என்பது தான் எனது நிலைபாடு என்று வெளிப்படையாக அறிவித்து விட்டாரேயானால், அதற்கு நாம் குர் ஆன், ஹதீஸில் ஆதாரம் கேட்போம், விழி பிதுங்க வேண்டி வரும்,
நபி இப்படி சொன்னார்களா என்று கேட்போம், உளர வேண்டி வரும்,
நல்ல விஷய்த்தையெல்லாம் செய்யலாம் என்றால் லுஹரை ஆறு ரக்காஅத் தொழலாமா? என்று கேட்போம்,
ஹிஹி என பல்லிளிக்க வேண்டி வரும்,

இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், தமது நிலை என்ன என்பதை சொல்லக்கூடாது, மாறாக இதை இதற்கு முன் எவராவது சொல்லியிருக்கிறாரா என்று நம்மை நோக்கி ஒரு கேள்வி கேட்க வேண்டும்,
பிறகு, நபியை புகழ்வது உங்களுக்கு பிடிக்காதா? என்று கேட்க வேண்டும்.
உங்கள் நூலில் உங்கள் அறிஞர் அப்படி எழுதியிருக்கிறாரே, இப்படி எழுதியிருக்கிறாரே? என்று சம்மந்தமில்லாத கேள்விகளையாக கேட்க வேண்டும்.

இப்படி கேள்விகளை மட்டுமாக கேட்டுக் கொண்டிருந்தேயிருந்தால், தமது அறியாமை வெளியுலகிற்கு தெரியாது, தமது நிலைபாடு எத்தகைய கூமுட்டைத்தனமானது என்பது பிறர் மத்தியில் சந்தி சிரிக்காது,
நானும் கேள்வி கேட்டேன் என்று கூமுட்டை சபையில் தம்மையே மெச்சிக் கொள்ளலாம் !

இது தான் இந்த பிறவிகளின் உன்னத கொள்கை !

மார்க்கத்தில் கேள்வி கேட்பதற்கு மட்டுமாக எவரையும் அல்லாஹ் படைத்து அனுப்பவில்லை. அது போல் ஆதாரங்களை தேடி தேடி பதில் சொல்ல வேண்டியவர் என்று தனியாக எவரையும் அல்லாஹ் படைக்கவில்லை.

கேள்வி கேட்கும் உரிமை இருப்பவனுக்கு பதில் சொல்லும் கடமையும் இருக்கிறது.
பதில் சொல்லும் கடமையை பெற்றவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையும் இருக்கிறது.

மார்க்கத்தில் இது எனது நிலை, இது உனது நிலை. எனது நிலைக்கு இது ஆதாரம், உனது நிலைக்கு நீ ஆதாரம் காட்டு? என்று பரஸ்பரம் உரையாடுகிற, அனைவருக்கும் பொதுவான சித்தாந்தம் தான் இஸ்லாம் !

இதை கேள்விக்கு பிறந்த கூட்டம் புரிந்தால் அவர்களுக்கு நல்லது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக