வியாழன், 18 ஜூலை, 2013

மூஸா நபி சூனியத்தால் பாதிக்கப்பட்டார்களா? குர்ஆனுடன் விளையாடும் சலபி கூட்டம்




சூனியக்காரர்களின் வாதம் :

மூஸா நபி சூனியம் செய்யப்பட்டவர் என்று பிர்அவ்ன் கூறுவதை குர்ஆன் பல இடங்களில் மறுக்கிறது, அவ்வாறு அவன் கூறியதால் அவன் அழிவுக்குள்ளாக்கப்படுபவன்என்று 17:102 வசனத்தில் மூஸா நபி சொல்வதாக அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். 
இது ஒரு பக்கம் இருக்க, பிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் மூஸா நபிக்கும் இடையே நடந்த போட்டியில் பிர்அவ்ன் கூட்டத்தார் செய்து காட்டிய சூனியத்தை பார்த்து மூஸா நபி பயந்தார்கள் என்று 20:67 வசனத்தில் வருகிறது. 
இப்போது 17:102 வசனமும் 20:67 வசனமும் ஒன்றுக்கொன்று முரண் என்று தவ்ஹீத் ஜமாஅத் சொல்லுமா? இரண்டும் வேறு வேறு அர்த்தம் என்று தானே சொல்லும்? 
அது போல 17:48 வசனத்தில் முஹமது நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை என்று அல்லாஹ் சொல்வதும், புஹாரி ஹதீஸில் நபிக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாக வரும் ஹதீசும் முரண் என்று கூற கூடாது.


நமது பதில் :

பல நாள் யோசித்து, இவர்களது இணை வைப்பு சித்தாந்தமான சூனிய கொள்கையை நியாயப்படுத்த எந்த சான்றும் கிடைக்காது போனதும் மிரண்டு போன இந்த சலபி கூட்டம் எதையாவது சொல்லி தங்கள் இணை வைப்பு கொள்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மேற்கண்ட அர்த்தமற்ற வாதம் ஒன்றை வைத்துள்ளது. 

இது ஏன் அர்த்தமற்றது என்பதை பார்ப்பதற்கு முன்னால், இது போன்ற வாதம் புரிகிறவர்கள் தங்களது வறட்டு கொள்கையை நியாயப்படுத்த எத்தகைய கீழ்நிலைக்கெல்லாம் செல்கிறார்கள் என்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். எத்தகைய கீழ் நிலை என்றால், மூஸா நபியை கூட பிர்அவ்ன் தமது சூனியத்தால் வென்று விட்டானாம், அவனது சூனியத்திற்கு மூஸா நபி கூட ஆட்கொள்ளப்பட்டுவிட்டார்களாம். அடப்பாவிகளா ! ஒரு பொய்யான ஹதீஸை தூக்கி கடாசுவதை விட்டு விட்டு அதை நியாயப்படுத்த வேண்டி இப்படியுமா இட்டு கட்ட வேண்டும்?

மூஸா நபி விஷயம் எப்படி முரண்பாடில்லையோ அது போல முஹமது நபி விஷயமும் முரண்பாடில்லையாம், இப்படி நாம் புரிய வேண்டுமாம்.

மூஸா நபி தொடர்பான இந்த விஷயம் முரண்பாடில்லை என்றால் தானே முகமது நபி குறித்தும் அதே போல புரிய வேண்டும் ?? 
இவர்கள் கூறுவது போல மூஸா நபி தொடர்பான அந்த வசனங்களுக்கு அர்த்தம் செய்வதாக இருந்தால் அந்த இரு வசனங்களும் முரண்பாடு தான், சந்தேகமேயில்லை.

ஆனால், அந்த வசனம் (20:67), இவர்கள் சொல்லும் அர்த்தத்தை தருமா? உண்மையில் மூஸா நபி பிர்அவ்னின் சூனியத்திற்கு ஆட்கொண்டார்கள் என்று தான் அந்த வசனம் சொல்கிறதா ?? நிச்சயமாக இல்லை. 

இவர்களது வறட்டு கொள்கையை நிலைநாட்டுவதற்காக இவர்களாக கற்பிக்கும் போலி அர்த்தம் தான் இது. 
இதை குறித்து விளக்கமாக காண்பதற்கு முன், நுனிப்புல் மேயும் இந்த சலபு கூட்டத்தின் மற்றுமொரு அறியாமையையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இவர்கள் வாதம் என்ன? எப்படி மூஸா நபிக்கு சூனியம் செய்யப்படவில்லை என்று வரக்கூடிய 17:102 வசனமும், மூஸா நபி பிர்அவ்னால் சூனியம் செய்யப்பட்டார்கள் என்று வரக்கூடிய 20:67 வசனமும் முரண் என்று சொல்ல மாட்டோமோ (??), அது போல 17:48 வசனத்தில் முஹமது நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை என்று அல்லாஹ் சொல்வதும், புஹாரி ஹதீஸில் நபிக்கு யூதன் ஒருவன் சூனியம் செய்ததாக வரும் ஹதீசும் முரண் என்று கூற கூடாது என்கிறார்கள்.

அதாவது முரணான இரு செய்திகள் குர்ஆனில் இருக்கிறதாம். ஆனால் நாம் அதை முரண் என்று சொல்ல மாட்டோமாம். முரணாக இரு செய்தி குர்ஆனில் இருக்கிறது என்று இவர்கள் ஒப்புக்கொண்டால், அதை எப்படி முரணில்லாமல் புரிய வேண்டும் என்பதை விளக்கி விட்டு தானே, இதை எப்படி இவ்வாறு முரணில்லாமல் புரிகிறோமோ அது போல முகமது நபி பற்றிய செய்தியையும் முரணில்லாமல் புரிய வேண்டும் என்று கூற வேண்டும்?

முரண் என்று இவர்களே ஒத்துக்கொண்ட விஷயத்தை முரணில்லாமல் புரிவது எப்படி என்று சொல்லாமல், "மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தான்"  கதையாக, அது முரண் என்றாலும் முரணில்லை என்று எப்படி நாம் சொல்கிறோமோ அது போல.... என்று கூறி, தாங்கள் நிஜமான ஞான சூனியங்கள் தான் என்பதை பறைசாற்றியுள்ளனர்.

இந்த அறியாமை கூட்டம் விளக்காவிட்டாலும், அந்த இரு வசனங்களும் ஏன் முரணில்லை என்பதை இங்கே நாம் விளக்குவோம். 
இந்த விளக்கத்தின் மூலம் மூஸா நபி சூனியத்தால் பாதிக்கப்படவில்லை என்கிற உண்மை அனைவர்க்கும் புரியும்.

முதலில் சம்மந்தப்பட்ட ஒரு வசனங்களையும் எடுத்துக்கொள்வோம்.


தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீ லின் மக்களிடம் கேட்பீராக! 'மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்' என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான். 'வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியே இவற்றைச் சான்றுகளாக அருளியுள்ளான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஃபிர்அவ்னே! நீ அழிக்கப்படுபவன் என்றே நான் கருதுகிறேன்' என்று அவர் கூறினார். (17:101,102)


இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்வது என்ன? மூஸா நபிக்கு சூனியம் செய்யப்படவில்லை, அவ்வாறு சூனியம் செய்யப்பட்டதாக கூறுபவன் அழிவிற்குரியவன்.

இப்போது இவர்கள், மூஸா நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக சொல்லும் வசனம் என்று எடுத்துக்காட்டும் வசனத்தை பார்ப்போம்.

அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார் (20:66,67)

இதில், சூனியக்காரர்கள் செய்த சூனியத்தை கண்டு மூஸா நபி அச்சமுற்றார் என்று வருகிறது, ஆகவே மூஸா நபி அந்த சூனியக்காரர்களால் சூனியம் செய்யப்பட்டு விட்டார் என்கிறார்கள்.

இரு விஷயங்கள் முரண்பாடானவை என்று எப்போது வரும்? ஒன்றை ஒரு இடத்தில் சொல்லி அதையே இன்னொரு இடத்தில மறுத்தால் தான் முரண்பாடு என்று வரும்.

அந்த கூட்டத்தால் அப்துல்காதரை அடிக்க முடியாது என்று ஒரு பக்கம் சொல்லி விட்டு, இன்னொரு இடத்தில் அந்த கூட்டம் அப்துல்காதரை அடித்தது என்று சொன்னால் இது முரண்பாடு.

அந்த கூட்டத்தால் அப்துல்காதரை அடிக்க முடியாது என்று ஒரு பக்கம் சொல்லி விட்டு, இன்னொரு பக்கம், அந்த கூட்டம் அடிப்பதற்கு கையை ஓங்கியது என்று சொன்னால் இது முரண்பாடா?
அல்லது அந்த கூட்டம் அடிக்க வரும் போது அப்துல் காதர் ஓடினார் என்று சொன்னால் இது முரண்பாடா? நிச்சயமாக முரண்பாடில்லை. 
கையை ஓங்கியது என்று சொன்னாலும் அப்துல் காதர் ஓடினார் என்று சொன்னாலும், அந்த கூட்டம் அடிக்கவில்லை என்று ஏற்கனவே சொன்னது பொய்ப்பிக்கப்படவில்லை ! 

ஏனெனில், அந்த கூட்டத்தில் இலக்கு, அப்துல் காதரை அடிக்க வேண்டும் என்பது, அவர்கள் கையை ஓங்கினாலும், அப்துல் காதர் அதை பார்த்து ஓடினாலும், அவர்களது அடிப்படை இலக்கான அப்துல் காதரை அடிப்பது என்பது அங்கே நிறைவேறவில்லை.

அது போல, மூஸா நபிக்கு சூனியம் செய்ய முடியாது என்று குர்ஆன் சொல்வது அடிப்படை செய்தி.

இதற்கு முரணாக குர்ஆன் பேச வேண்டுமானால், மூஸா நபிக்கு பிர்அவ்னின் கூட்டம் சூனியம் செய்தது, அதனால் அவர் பாதிக்கப்பட்டார் என்று வர வேண்டும். அப்படி வந்தால் தான் முரண்பாடு. 
மூஸா நபிக்கு சூனியம் செய்வது தான் அவர்களது இலக்காக இருந்து, அந்த இலக்கை அடைந்தார்கள் என்றால், அப்போது சூனியத்தால் மூஸா நபி பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்லலாம், அப்போது முதல் வசனத்திற்கு இது முரண் என்று ஒப்புக்கொள்ளலாம்.

ஆனால், பிர்அவ்னின் நோக்கமாக குர்ஆன் கூறுவது, மூஸா நபிக்கு சூனியம் செய்ய வேண்டும் என்பதல்ல, மாறாக, தன்னை கடவுளாக அந்த மக்கள் முன்னிலையில் நிரூபிக்க வேண்டும். அது தான் அவனது ஒரே குறிக்கோள்.
இந்த குறிக்கோளை நிறைவேற்றும் பொருட்டு, சூனியம் என்கிற தந்திர வித்தை மூலம் மக்களின் கண்களை ஏமாற்றி, தன்னிடம் இறை சக்தி இருப்பது போல காட்டி அதன் மூலம் அந்த மக்களை அல்லாஹ்வை மறுப்போராக ஆக்க வேண்டும் என்பதற்காக தான் சூனியக்காரர்களை அழைக்கிறான், மூஸா நபியுடன் போட்டிக்கு வருகிறான்.

ஆக, அவனது நோக்கம், சூனியம் செய்து மக்கள் தன்னை வணங்கும் படி செய்ய வேண்டும், தான் இறை சக்தி பெற்றவன் என்று நம்பும்படி செய்ய வேண்டும்.

இந்த நோக்கம் நிறைவேறினால் தான் மக்கள் அவனது சூனியத்தால் பாதிக்கப்பட்டனர் என்று கூற வேண்டும். 

ஆனால் இந்த வசனங்களின் தொடர்ச்சியாக அல்லாஹ் சொல்லும் போது அவனது நோக்கம் நிறைவேறவில்லை என்கிறான் !


உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்' (என்றும் கூறினோம்.)
உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தா வில் விழுந்து, 'மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்' என்றனர் (20:69, 70)


மேற்கண்ட வசனங்களில், எந்த நோக்கத்திற்காக பிர்அவ்னின் கூட்டம் சூனியம் செய்ததோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை என்றும், பிர்அவ்னின் கூட்டத்தாரே தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டனர் என்றும் அல்லாஹ் சொல்கிறான். 
சூனியம் செய்வதற்காக வந்து அந்த சூனியத்தின் மூலம் கொண்ட நோக்கம் நிறைவேறவில்லை என்றால், பிர்அவன் காட்டிய சூனியத்தை யாரும் நம்பவில்லை என்று பொருள், அந்த சூனியம் யாரையும் பாதிக்கவில்லை என்று அர்த்தம்.  

சூனியம் செய்ய வந்தவர்களே தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்று குர்ஆன் சொல்கிற போது அந்த கூட்டத்தாரால் மூஸா நபி சூனியத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்  என்று கூறுவது இறை வசனத்திற்கு எதிரானது !

அவர்களது செயலை பார்த்து அச்சமடைவது, சூனியத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்கிற பொருளை தராது. அப்படியானால், நாம் ஏற்கனவே சொன்னது போல, மூஸா நபிக்கு அச்சமூட்ட வேண்டும் என்பதற்காகவே அந்த கூட்டம் சூனியம் செய்து, இறுதியில் மூஸா நபி அச்சப்பட்டார் என்றால், பார்த்தீர்களா, அந்த நோக்கத்திற்காக தான் சூனியம் செய்தார்கள், அந்த நோக்கம் நிறைவேறியது, ஆகவே சூனியத்தால் பாதிக்கப்பட்டார் என்று கூறலாம். 

ஆனால், இங்கு மூஸா நபி, உண்மை போல் அவர்கள் காட்டும் சூனியத்தை பார்த்து பயந்தார் அவ்வளவுதான்., எதையும் பார்த்து பயப்படுவது மனித இயல்பு. அந்த பலகீனத்திற்கு மூஸா நபியும் விதிவிலக்கல்ல என்கிற செய்தியை தான் இந்த வசனம் தருகிறதே தவிர, அவர்கள் செய்த சூனியத்தால் இவர் பாதிக்கப்பட்டார் என்று ஆகாது. 

அப்படி இந்த சலபு கூட்டம் சொல்லுமானால், மூஸா நபி அந்த கூட்டம் செய்து காட்டிய சூனியத்தை உண்மை என்று நம்பி விட்டார் என்று கூறுவதாக பொருள் வரும், பிர்அவ்ன் கடவுள் தான் என்று மூஸா நபியே நம்பி விட்டதாக (நவூதுபில்லாஹ்) பாரதூரமான அர்த்தத்தை தான் கொடுக்க வேண்டி வரும்.

வெறுமனே பயப்படுவது, சூனியத்திற்கு உள்ளாக்கப்படும் காரியம் என்று இவர்கள் சொன்னால், மேலே உள்ளவைகளும் அந்த அர்த்தத்தில் அடங்கும். இதை இவர்கள் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், இவர்கள் வாதப்படியான அர்த்தம் இது தான்.

அதாவது, சூனியத்தை கண்டு மூஸா நபி பயந்ததன் மூலம் சூனியத்தால் பாதிக்கப்பட்டு விட்டார் என்று இவர்கள் சொல்வார்கள் என்றால்,

அந்த சூனியம் அற்புதம் என்று மூஸா நபி ஒப்புக்கொண்டு விட்டார் என்று ஆகும்,
அல்லாஹ்வுக்கு இணையாக பிர்அவ்னுக்கும் ஆற்றலுண்டு என்று ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்றும் அர்த்தமாகும்.

இந்த பாரதூரமான அர்த்தம் வராமல் நாம் பொருள் செய்யும் போது, பொய்யான காரியத்தை நிஜம் போல காட்டும் போது எந்த மனிதனாக இருந்தாலும் அவன் உள்ளத்தில் அச்சம் ஏற்படும். அவர் அச்சப்பட்டு விட்டதே தோல்விக்கான அர்த்தமல்ல.

மேலும், நபிமார்களையும் சூனியக்காரர்களையும் தொடர்புபடுத்தி குர்ஆன் கூறும் எல்லா வசனங்களுமே, நபி சூனியத்திற்கு உள்ளாவது, நபித்துவத்திற்கு தடையாக இருக்கும் என்கிற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த மனிதர் சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகள் கூறுவதும் கூட, இதன் காரணமாக இவர் நபியில்லை என்று நிரூபிப்பதற்கு தான். 
அதை மறுத்து, இவர் சூனியம் செய்யப்பட்டவரில்லை என்று அல்லாஹ் சொல்வதும் கூட, இவர் நபி தான் என்று நிரூபிப்பதற்கு தான்.

எதிரிகள் நபிமார்களை பார்த்து பொய்யர், ஏமாற்றுகாரர், பைத்தியக்காரர் என்றெல்லாம் வசை பாடினார்கள் என்றால் அதற்கு காரணம் பொய் பேசுவதும் ஏமாற்றுவதும், பைத்தியக்காரராக இருப்பதும் நபித்துவத்திற்கு இழுக்கு. ஆகவே தான் இந்த விமர்சனங்களை செய்தனர், 

அந்த வரிசையில் தான் சூனியக்காரர் என்றும் சூனியம் செய்யப்பட்டவர் என்றும் சொன்னார்கள்.

ஆக, இவர்கள் வாதப்படி எதிரிகள் நபிமார்களுக்கு சூனியம் செய்தனர் என்றால், அந்த சூனியத்தின் மூலம் நபிக்குரிய அந்தஸ்தையே அந்த நபி இழக்க வேண்டும், அப்போது தான் சூனியத்தால் அந்த நபியை இவர்கள் பாதிப்படைய செய்தார்கள் என்று ஆகும். 

இந்த அளவுகோலை கொண்டு பார்க்கும் போது, வெறுமனே அவர்களது செயலை பார்த்து அச்சப்படுவது, மூஸா நபியின் நபித்துவத்தை கேள்விக்குறியாக்குமா? என்றால் ஆக்காது. அவர்களது நபித்துவ அந்தஸ்து கேள்விக்குறியாக்கப்படவில்லை என்றால் அவர்களை எந்த சூனியமும் பாதிக்கவில்லை என்று பொருள் !

அதே சமயம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது நிலை இப்படியா? எந்த பலகீனம் நபிக்கு இருப்பதாக எதிரிகள் விமர்சனம் செய்து வந்தார்களோ, எந்த பலகீனம் இருந்தால் அது நபித்துவ அந்தஸ்துக்கு இழுக்கோ, அந்த பலகீனத்தை நபி அவர்கள் கொண்டிருந்ததாகவே புஹாரி ஹதீஸ் சொல்கிறது.

ஆக, 
  • அந்த இறை வசனத்தில், மூஸா நபி சூனியத்தால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படவில்லை, 
  • அதனால் அவர்களது நபித்துவத்திற்கு களங்கமோ இழுக்கோ இல்லை.
  • ஆகவே, அந்த வசனம் மற்ற மூஸா நபிக்கு சூனியம் செய்ய இயலாது என்று சொல்கிற இறை வசனங்களுக்கு முரணில்லை.

அதே சமயம், 
  • புஹாரி ஹதீஸில்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று நேரடியாகவே சொல்லப்பட்டுள்ளது.
  • இதனால் அவர்களது நபித்துவம் களங்கப்படுகிறது.
  • ஆகவே, நபிக்கு சூனியம் செய்ய இயலாது என்று சொல்கிற இறை வசனங்களுக்கு இது தெளிவான முரண் !!

மேலும்,சூனியம் என்றாலே அது ஷைத்தானின் தீண்டல் தான் என்கிறார்கள். 
ஆனால், ஷைத்தானால் நபிமார்களை தீண்ட முடியுமா? என்றால் முடியாது என்று குர்ஆன் திட்டவட்டமாக கூறுகிறது.


நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு அதிகாரம் இல்லை. 16:99

அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்' என்று கூறினான். 15:40

ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். 26:221,222
.

அல்லாஹ்வால் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான் நபிமார்கள். அத்தகையவர்கள் மீது ஷைத்தானுக்கு எந்த அதிகாரமுமில்லை என்று அல்லாஹ் திட்டவட்டமாக கூறி இருப்பதும், மூஸா நபி, முஹமது நபி ஆகியோர் சூனியத்தால் பாதிக்கப்பட்டனர் என்கிற இவர்களது கொள்கையை தவிடு பொடியாக்குகிறது.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன் (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். 
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி), நூல் : அஹ்மது (26212)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக