செவ்வாய், 16 ஜூலை, 2013

சூரியனை கண்ணால் கண்டு தான் நோன்பு திறக்க வேண்டுமா?



இரவு முன்னோக்கி வருவதை "கண்டால்" நோன்பை முறியுங்கள் என்று வரக்கூடிய ஹதீஸின் அடிப்படையில், சூரியனையும் கண்ணால் கண்டு தானே நோன்பு துறக்கும் நேரத்தை முடிவு செய்ய வேண்டும்? நீங்கள் ஏன் அதை கணிக்கிறீர்கள்? என்கிற கேள்வி தற்போது முகநூலில் பரவலாக எழுப்பப்படுகிறது.

இதற்கு பதில் சொல்வதற்கு முன்னால்,இது போன்ற கேள்விகளை எழுப்புவோருக்கென்று எந்த நிலைபாடாவது இருக்கிறதா என்பதை மக்களுக்கு அறியத்தர விரும்புகிறோம். 
ஹதீஸில் சூரியனையும் கணிக்காமல் கண்ணால் பார்க்க தானே சொல்லி இருக்கிறது, நீங்கள் ஏன் கணிக்கிறீர்கள் என்று கேட்பதன் மூலம் இவர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்ன? தாங்கள் சூரியனை கணிக்கதான் செய்கிறார்கள் என்பதாகும்.

அதாவது, ஹதீஸில் கணிக்க கூடாது என்று தான் உள்ளதாம், ஆனால் நாங்கள் கணிப்போம் என்று, ஹதீஸுக்கு முரணாக நாங்கள் நடப்போம் என்று ஒப்புக்கொள்கிறார்கள். 
ஆனால், நம்மை நோக்கி, நீங்கள் மட்டும் ஹதீஸுக்கு முரணாக நடக்கலாமா? என்கிற கேள்வியை கேட்க வேண்டும் என்பது தான் இவர்களது ஒரே குறிக்கோள் என்பதால் தாங்கள் இந்த ஹதீஸை மறுத்து செயல்படுவதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு கூட சங்கூஜம் அடையகிறார்களல்லர்.

எப்போதுமே ஒரேயொரு இறை வசனத்தை அல்லது ஹதீஸை வைத்து எந்த சட்டமும் எடுக்க கூடாது. ஒரு செய்திக்கு துணையாக அல்லது விளக்கமாக வேறு ஏதேனும் செய்திகள் இருக்குமானால் இரண்டையும் இணைத்து தான் பொருள் செய்ய வேண்டும், இரண்டுக்கும் அர்த்தம் கொடுக்கின்ற வகையில் தான் சட்டம் எடுக்க வேண்டும். இது மார்க்கத்தை அணுக வேண்டிய சாதாரண முறை.

மது அருந்தி விட்டு தொழாதீர்கள் என்று ஒரு இறை வசனம் உள்ளது. அதை எடுத்து வைத்துக்கொண்டு, பார்த்தீர்களா, அல்லாஹ் தொழும் பொது மட்டும் தான் மது அருந்தாதீர்கள் என்கிறான், இதன் மூலம் தொழுகை அல்லாத நேரங்களில் மது அருந்துவது கூடும் என்று ,இந்த ஒரு வசனத்தை வைத்து மட்டும் சட்டம் இயற்றக்கூடாது. காரணம், இந்த சட்டம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இறங்கியது. இதன் பிறகு, பொதுவாக எல்லா நேரங்களிலும் மது அருந்துவது தடை என்கிற வசனமும் வந்து விட்ட காரணத்தால் முந்தைய வசனம் தற்காலிகமான சட்டமாக இருந்தது என்று கருத வேண்டும்.

அது போல, சூரியனை கண்டு நோன்பு திறக்கும் நேரத்தை முடிவு செய்யுங்கள் என்கிற ஒரேயொரு செய்தி மட்டும் தான் ஒட்டு மொத்த குர்ஆன் ஹதீஸில் இருக்கிறது என்றால், இன்றைக்கு நாம் சூரியனை கண்ணால் கண்டு தான் முடிவு செய்தாக வேண்டும். ஆனால், சூரியன் விஷயமாக இந்த ஒரு செய்தி மட்டும் இல்லை, இன்னும் ஏராளமான சட்டங்கள் உள்ளன.

தொழுகை நேரங்களை பற்றியும் குறிப்பாக நோன்பு திறக்கும் நேரமான மக்ரிப் நேரம் பற்றியும் பல்வேறு வார்த்தை அமைப்புகளை கொண்டு ஹதீஸ்கள் உள்ளன.

மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மை மறையும் வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1076

இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1074

அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1076

ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வந்த போது அஸ்ரை தொழுவித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: திர்மிதீ 138

லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகும் வரை, அதாவது அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1075

சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை உண்டு. 'சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1075

இது போன்ற எல்லா செய்திகளிலும் சூரியனை அடிப்படையாக கொண்டு நேரத்தை முடிவு செய்வது பற்றி தான் பேசுகிறது. ஆனால் இவற்றில் கண்ணால் கண்டு முடிவு செய்யுங்கள் என்று சொல்லப்படவில்லை, மாறாக, "அந்த நேரம் வந்தால்" என்று பொதுவாகவே சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் அந்த நேரம் வந்ததை எப்படி வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம் என்பது பொருள்.

நோன்பு திறக்கும் நேரமான மக்ரிப் நேரத்தை அறிவது பற்றி ஒரு இடத்தில "இரவு வருவதை கண்டால்", என்றும் இன்னொரு இடத்தில் சூரியன் மறைந்த நேரம் என்றும் கூறப்பட்டால், சூரியன் மறைந்ததை கண்ணால் கண்டும் முடிவு செய்யலாம், கண்ணால் காணாமல் வேறு வழிகளிலும் முடிவு செய்யலாம் என்று அர்த்தம்.

மேலும், நோன்பு திறக்கும் நேரத்தை பற்றி சொல்கிற மற்றொரு செய்தியில் "சூரியன் மறைந்து விட்டால்" என்றே இருக்கிறது, மறைந்ததை கண்டால் என்று சொல்லப்படவில்லை.

இரவு வந்து, பகல் போய், சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2006

அதே சமயம், இது போல பிறை குறித்து, பிறையை கண்டு நோன்பு வையுங்கள் என்று ஒரு பக்கமும், பிறை உதித்தால் நோன்பு வையுங்கள் என்று இன்னொரு பக்கமும் என  பல்வேறு வாசக அமைப்புடன் ஹதீஸ்களில் இருக்குமானால் அப்போது, சூரியனுக்கு என்ன நிலைபாட்டை சொல்கிறோமோ அதையே தான் பிறைக்கும் எடுத்திருப்போம். 
ஆனால் பிறை பற்றி சொல்லப்படும் எந்த செய்தியிலும் "பிறை உதித்தால் இதை செய்யுங்கள்" என்று  சொல்லப்படவில்லை, பிறையை கண்டால் இதை செய்யுங்கள் என்று மட்டும் தான் உள்ளது.

ஒன்றை பற்றி ஒரேயொரு விதமாகவும் இன்னொன்றை பற்றி பல்வேறு விதங்களாகவும் சட்டம் சொல்லப்படுமானால் முதலாவது விஷயத்தை அந்த ஒரு விதமாக தான் செய்ய வேண்டும், இரண்டாவதை பல்வேறு வழிகளில் செய்யலாம் என்பது சாதாரண சிந்தனை.

இன்னும் சொல்லப்போனால், இவர்கள் வாதப்படியே பார்ப்பதாக இருந்தாலும் மக்ரிப் நேரத்தை கண்ணால் கண்டு தான் முடிவு செய்ய வேண்டும் என்றால், நபி (ஸல்) அவர்களோ சஹாபாக்களோ கண்ணால் கண்டு முடிவு செய்யாமல் குச்சிகளின் நிழலை பார்த்து தான் அறிந்து கொண்டார்கள். ஹதீஸில் சூரியனை கண்டு அல்லது இரவு முன்னோக்கி வருவதை கண்டு முடிவு செய்ய சொல்லி இருக்கும் போது அவர்கள் குச்சியின் நிழலை பார்த்து முடிவு செய்தது மார்க்க முரண் என்று இவர்கள் சொல்வார்களா? 

மேலும், சூரியன் கண்களுக்கு புலப்படாத மேக மூட்டமான காலகட்டத்தில், சூரியனை கண்ணாலும் காணாமல், நிழல் வைத்தும் தீர்மானிக்காமல் அவர்களே சுயமாக கணித்து முடிவு செய்திருக்கிறார்கள் . இதற்கும் ஹதீஸ்களில் சான்றுகள் உள்ளன.
இது நிர்பந்தமான நிலை தானே என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால் அதுவும் அடிப்படையற்ற கேள்வி. காரணம், இந்த நிர்பந்தமான நிலையில் அவர்கள் சூரியனை கணித்து போல பிறை தென்படாத நிர்பந்தமான சூழலில் அவ்வாறு பிறையை கணிக்கவில்லை. நாட்களை முழுமைப்படுத்தி கொள்ளவே செய்தார்கள்.

நிர்பந்தமான இரு சூழல்களில் சூரியனுக்கு  ஒரு விதமாகவும் பிறைக்கு இன்னொரு விதமாகவும் அவர்கள் செயல்பட்டது, சூரியன் விஷயத்தில் வரம்புகளின்றி செயல்படுவதற்கும், பிறை விஷயத்தில் வரம்புக்கு உட்பட்டு செயல்படுவதற்கும் நபி அவர்கள் காட்டிய முன் மாதிரியாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமே அல்லாமல், இது நிர்பந்தத்திற்கு மட்டும் உரியது என்று தனியாக பார்க்க கூடாது, நிர்பந்தம் என்பது காரணம் என்றல் பிறை பற்றிய நிர்பந்தம் வந்த பொழுதும் இதையே அவர்கள் செய்திருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை.

இவை ஹதீஸ்கள் குறித்த நிலைபாடு. இப்போது குர்ஆன் இது பற்றி என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

சூரியன் விஷயமாக பல்வேறு வழிமுறைகள் உள்ளன என்று ஹதீஸ்கள் இருந்தாலும், குர்ஆனில் சூரியனை கணிப்பது கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளது.

(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன் றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்' என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவை யும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர் கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான்.  73:20

இந்த வசனத்தில் நேரத்தை துல்லியமாக அறிந்து கொள்ள இயலாத நிலையில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள் எனவும், அது தவறு எனவும், அதை துல்லியமாக கணிக்க அவர்களால் இயலாது என்பதால் அவர்களை தான் மன்னித்ததாகவும் அல்லாஹ் சொல்கிறான். 

துல்லியமாக கணிக்காமல் இருப்பது தவறு என்றும், அது இயலாது என்பதால் அல்லாஹ் மன்னித்தான் எனவும் அல்லாஹ் சொன்னால், அதை துல்லியமாக அறிவதற்குரிய ஆற்றலை பெற்றவர்கள் அவ்வாறு கட்டாயம் செய்ய வேண்டும் என்று பொருள்.

ஆக, இறை வசனங்களின் அடிப்படையில் நாம் சிந்திக்கையில், சூரியனை இன்றைய காலகட்டத்தில் கணித்து, துல்லியமான முறையில் நேரத்தை கணிக்க வேண்டும் என்று புரிகிறோம். 
இத்தகைய விதி எதுவும் பிறை விஷயமாக குர்ஆனிலோ ஹதீஸிலோ சொல்லப்படவில்லை எனும் போது, இப்போதும், சூரியனை ஏன் கணிக்கிறீர்கள், அது போல பிறையை ஏன் கணிப்பதில்லை என்கிற பாமரத்தனமான கேள்விகள் அர்த்தமற்றதாகின்றன.

குர்ஆன், சூரியனை கணித்து தான் முடிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு விட்ட பிறகு, இந்த கட்டளைக்கு முரணில்லாத வகையிலும், இது தொடர்பாக மேலே நாம் சுட்டிக்காட்டிய இன்னபிற ஹதீஸ்களுக்கு அர்த்தம் கொடுக்கின்ற வகையிலும் தான், இவர்கள் சுட்டிக்காட்டும் நோன்பு திறத்தல் பற்றிய ஹதீஸை புரிய வேண்டும்.

மேலும், ஹதீஸில் இரவு வருவதை கண்டால் நோன்பை விடுங்கள் என்று சொல்லப்பட்டாலும், இந்த நோன்பை விடுதல் தொடர்பாக குர்ஆனிலும் சட்டம் உள்ளது. 

ஆனால், அதில், ஹதீஸில் சொல்லப்பட்டது போல இரவு முன்னோக்கி வருவதை கண்ணால் கண்டு முடிவு செய்யுமாறு சொல்லப்படவில்லை.

இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!  2:187
இரவு வரை முழுமைப்படுத்த வேண்டும், என்று தான் குர்ஆன் சொல்கிறதே தவிர இரவு வருவதை காண்பது வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள் என்று சொல்லப்படவில்லை. இரவு வருவதை எந்த வகையிலும் தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது இதன் பொருள்.

ஆக, எந்த அடிப்படையிலும் சூரியனுக்குரிய பார்வை வேறு சந்திரனுக்குரிய பார்வை வேறு என்பது சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் நிரூபணம் ஆகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக