செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

பெண் குழந்தை ஒரு பாக்கியம்




பெண் குழந்தை பிறப்பதை விரும்பாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். பெண் குழந்தை என்றாலே அது ஒரு பாரம்,குடும்ப தலைவருக்கு பொருளாதார சுமை என்று எண்ணுகிற மக்கள், அத்தகைய சிந்தனை இஸ்லாத்திற்கு வெளியில் நின்று கொண்டு தான் நமது உள்ளத்தில் ஏற்பட வேண்டுமே தவிர, ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு இத்தகைய எண்ணமே நம் மனதில் எழக்கூடாது என்பதை உணர வேண்டும்.

இந்த உலகில் ஐம்பது வருடமோ அறுபது வருடமோ வாழ்ந்து விட்டு மரணிக்கும் நாம், இயன்ற வரை மறுமை வெற்றிக்காக பல காரியங்களை செய்கிறோம். தொழுகிறோம் நோன்பு நோற்கிறோம், ஏழைகளுக்கு உணவளிக்கிறோம் சகாத் வழங்குகிறோம், இன்னும் ஏராளமான நல்லறங்களை செய்கிறோம்.
இதை செய்வதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது ஒன்றே ஓன்று தான். அது மறுமையில் அல்லாஹ் நம்மை அன்பு பார்வை பார்க்க வேண்டும். அல்லாஹ் நம்மை நல்லவன் என்று அங்கீகரிக்க வேண்டும்.
இந்த எண்ணத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்தக்கூடிய நாம், அல்லாஹ்வும் அவன் தூதரும் எதையெல்லாம் செய்யுமாறு சொல்லியுள்ளார்களோ , அதை இயன்றவரை செய்யக்கூடியவர்களாகவும் எதை விட்டெல்லாம் தவிர்ந்து கொள்ள சொல்கிறார்களோ அதை எல்லாம் விட்டு தூரமாகி கொள்பவர்களாகவுமே தான் நாம் வாழ வேண்டும்.

இந்த உலகில் ஒரு சில நல்லமல்களை செய்து விட்டு மரணித்து விடும் நாம், நமது மரணத்திற்கு பிறகும் நமக்கு நன்மையை ஈட்டு தரக்கூடிய ஒன்றை இந்த உலகில் விட்டு செல்கிறோம் என்றால் அது நமது குழந்தைகள் !


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்கள் தவிர மற்ற அனைத்துமே நின்று விடுகின்றன. 
1. நிலையான தர்மம். 2. பிறருக்கு பயன்பெறும் வகையில் அவன் கற்றுக்கொடுத்த கல்வி. 3. அவனுக்காக பிரார்த்தனை செய்கிற நல்ல குழந்தைகள்.
முஸ்லிம் 3358

எந்த குழந்தையாக இருந்தாலும், அவர்களை நாம் அன்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்ப்போம் என்றால், நாம் மரணித்த பிறகும் நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், சொர்க்கத்தில் ஒரு அடியானின் தகுதியை உயர்த்துவான். யா அல்லாஹ், இது எனக்கு எப்படி கிடைத்தது? என்று அவன் கேட்கும் போது, உனக்காக உன் குழந்தை பாவ மன்னிப்பு கேட்டது அதனால் தான், என்று அல்லாஹ் விடையளிப்பான்.
அஹ்மத் 10202 

அத்தகைய பாக்கியம் நமக்கு கிடைப்பதற்கு நாம் எந்த வகையிலாவது உழைக்க வேண்டுமா பாடுபட வேண்டுமா?? எதுவும் இல்லை, நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தாலே போதும்.

குழந்தைகள் நமக்கு கிடைத்த பாக்கியமாக நாம் கருத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கும் போது, பெண் குழந்தைகளை நாம் வெறுப்பது என்பது, நபியை விட்டு நாம் விலகி செல்கிறோம் என்பதையே காட்டும்.


இவ்வாறு தாங்கள் பெற்ற பெண் குழந்தைகளை கண்டு வெறுப்பு அடைகிற பெற்றோர்களை அல்லாஹ் கடுமையாக சாடுகிறான்.


அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (6:140)

என்று கண்டிக்கிற அல்லாஹ், இன்னொரு வசனத்தில் 

அவர்களில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்த நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்கு கூறப்பட்ட கேட்ட செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து வாழ்கிறான்.இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா அல்லது மண்ணில் புதைத்து விடுவதா? (என்று எண்ணுகிறான்). கவனத்தில் கொள்ளுங்கள் அவன் தீர்பளிப்பது மிகவும் கேட்டது. (16:58)

என்று கூறுகிறான்.

பெண் குழந்தைகளை வெறுப்பதோ அதனால் கவலைப்படுவதோ, அதை இழிவானதாக கருதுவதோ, அதை கொலை செய்து விடவதோ அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவமான காரியமாக இருக்கிறது.

இதை கண்டிப்புடன் சொன்ன அல்லாஹ், பெண் குழந்தை பிறந்த செய்தியை பற்றி சொல்கிற போது அது ஒரு நற்செய்தி என்கிறான் !!

பெண் குழந்தைகளை வெறுப்பவர்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். பெண் குழந்தைகள் நமக்கு பாரமாக இருக்கும் என்றால், அல்லாஹ் அதை நற்செய்தி என்று சொல்வானா?? அப்படியானால் நிச்சயம் அதில் ஏதோ ஒரு நற்செய்தி இருக்கத்தான் செய்யும்.

ஹதீஸ்களில் இதற்கு விடை கிடைக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் இரு பெண் குழந்தைகளை அவர்கள் பருவ வயது அடைகிற வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ, அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம் என்று சொல்லி தமது இரு விரல்களையும் இணைத்து காட்டினார்கள் முஸ்லிம் 5127


முதல் ஹதீஸில், நல்ல சாலிஹான குழந்தைகள் நமக்காக பிரார்த்தனை செய்வதன் மூலம் சொர்க்கத்தில் நம் அந்தஸ்து உயர்த்தப்படுகிறது என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், இந்த ஹதீஸில், பெண் குழந்தைகளை ஒழுக்கமான முறையில் வளர்த்து ஆளாக்கும் போது அதுவே நாம் சொர்கத்திற்கு செல்வதற்கு காரணமாகி விடுகிறது என்பதை விளக்குகிறார்கள் என்றால், நாம் எந்த அளவிற்கு பெண் குழந்தைகளை அன்புடனும் பாசத்துடனும் வளர்க்க வேண்டும் என்பதை புரிய வேண்டும்.

இந்த பெண் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்று கொள்கிறார்களோ, அவர்கள் நரகம் சென்று விடாமல் தடுக்கும் தடையாக இந்த குழந்தை இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி 5995

அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் கட்டளைகளை ஏற்று செயல்படுத்த கூடிய ஒரு முஸ்லிம், என்றைக்கும் தனது குழந்தைகளை, அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அன்புடனும் பாசத்துடனும் வளர்த்து, அதன் மூலம் சொர்க்கம் செல்லவே ஆசைப்பட வேண்டும்.

பொருளாதார சுமை அதிகரிக்கும் என்று எண்ணி கூட நமது பெண் குழந்தைகளை கொன்று விடகூடாது.

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் என்று அல்லாஹ் 17:31 வசனத்தில் எச்சரிக்கிறான். 

இந்த எச்சரிக்கையோடு சேர்த்து நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பு என்கிற வாக்குறுதியையும் தருகிறான். 

நமக்கும் நமது குழந்தைக்கும் தேவையானவற்றிற்கு அல்லாஹ் பொறுப்பு என்று அவன் வாக்குறுதி தந்து விட்ட பிறகு, அதை பொருட்படுத்தாமல் நாம் செயல்படுவது அல்லாஹ்வின் வாக்குறுதியை கூட நாம் மதிக்காதது போல ஆகும் என்பதையும் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பெண் குழந்தைகளை நமக்கு கிடைத்த பாக்கியமாக கருதி வளர்ப்போம், மறுமையில் வெற்றி பெறுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக