திங்கள், 18 பிப்ரவரி, 2013

மரண தண்டனை சரியா? விவாதம் - இம்ரான் 2



Imran Sheriff 18 February


அரசு தான் சட்டம் இயற்றும் நாடு சட்டம் இயற்றாது, இந்த உண்மை புரியாதவர்களிடம் எப்படி விவாதம் செய்வது என்பதாக சொல்லியுள்ளீர்கள்.
நாடு சட்டம் இயற்றாது, அரசு தான் சட்டத்தை இயற்றும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே . "மக்களை ஆட்சி செய்யும் நாடு" என்பது அரசை தான் குறிக்கும் என்பது இதை படிக்கும் எவருக்கும் விளங்கும், சராசரி பேச்சு வழக்கில் அது கூறப்பட்டது. அப்படி இருக்கையில் இதை காரணம் காட்டி விவாதத்தை தொடர்வதை கேள்விக்குறியாக்குவது என்ன நோக்கத்திற்காக என்பதை நீங்களே விளக்கவும். 

சட்டங்கள் மக்களை நல் வழிப்படுத்துவதற்காக அல்ல, என்றும் முதலில் சொல்லி, பிறகு சட்டங்கள் நல் வழிப்படுத்தும் என்று எனக்கு நானே முரண்படுவதாக கூறி அதில் ஆச்சர்யமும் அடைவதாக கூறியுள்ளீர்கள். நான் சொன்னதில் எந்த முரண்படும் இல்லை. ஒரு நாடு சட்டங்கள் வகுப்பதன் முதல் நோக்கம் மக்களை நல்ல மக்களாக மாற்றுவதற்காக அல்ல, மாறாக மக்களை பாதுகாக்கத்தான். மக்களை பாதுகாப்பதற்காகவும் நாட்டில் அமைதி நிலைபெறுவதற்காகவும் இயற்றப்படும் சட்டமானது, மக்களை நல்வழிப்படுத்தும். இது தான் நான் ஏற்கனவே சொன்ன கருத்து. இதில் நீங்கள் ஆச்சர்யம் கொள்ளத்தக்க முரண்பாடு ஏதும் இல்லை.

எந்த சட்டங்களும் மக்களை நல்வழிப்படுத்திவிட முடியாது. ஆயிரத்துக்கும்
மேற்பட்ட ஆண்டுகள் பாரம்பர்யமான இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் உள்ள
நாடுகளில் குற்றங்கள் குறைந்து விட்டனவா? - ஜெய பிரகாஷ் 

சட்டங்கள் கடுமையாக்கப்படும் பட்சத்தில் நாட்டில் குற்றங்கள் குறையும். இது அடிப்படையான சிந்தனையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளும் வாதம். கடுமையான சட்டங்கள் விதிக்கப்படாத நாடுகளில் நடக்கும் குற்றங்களை விட கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் குற்றங்கள் குறைவு.
கருத்துக்கணிப்பின் படி கொலை , கற்பழிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதில் அமெரிக்க முதல் இடத்தில உள்ளது. நம் இந்தியா பத்தாவது இடத்தில உள்ளது. சவூதி, கத்தார் போன்ற வளைகுடா நாடுகள் 48, ஐம்பதாவது இடத்தில உள்ளது. (புள்ளிவிவரங்களை ஆதாரங்களுடன் கேட்டால் தரலாம் லிங்குகள் அனுப்ப கூடாது என்பதால் இங்கே தரவில்லை).மேலும் ஒவ்வொரு 100,000 பேரில் எத்தனை பேர் கொலை செய்யப்படுகிறார்கள் என்கிற கணக்கை பார்க்கையில் அமெரிக்க மற்றும் ஐரோப்பா நாடுகளின் ரேட் 15 க்கும் மேல். ஆப்ரிக்காவில் 17. ஆசியா கண்டத்தில் 3. ! ஆசிய கண்டத்தில் தான் இஸ்லாமிய சட்டங்களை உறுதியாக கடைபிடிக்கும் சவூதி, கத்தார், இரான் போன்ற நாடுகளும் இஸ்லாமிய சட்டதை அதிகமாக கடைபிடிக்கும் சிங்கபூர் போன்ற நாடுகளும் உள்ளன.

நாடுகள் வாரியாக எடுத்துக்கொண்டால், இந்தியாவில் 3.5 பேர், (ஒவ்வொரு 100,000) , அதுவே சவுதியில் 1, கத்தாரில் 0.8 என்கிற கணக்கில் உள்ளது என்றால், சட்டங்கள் கடுமையாக்கடுவது தான் குற்றங்கள் குறைவதற்கான ஒரே வழி என்பதை இதை விட எளிதாக புரிய முடியாது !

மனிதனின் பலகீனம் என்பது தவறிழைப்பது தான். தான் சார்ந்திருக்கும் மதத்திற்காக தவறிலிருந்து தவிர்ந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள். தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்காக தவறிலிருந்து தவிர்ந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள், சட்டங்களின் கடுமைக்கு பயந்து தவறில் இருந்து விலகி கொள்பவர்களும் இருக்கிறார்கள். சட்டங்கள் கடுமையாக்கடவில்லை என்றால், முதல் இரு தரப்பும் வழக்கம் போல் தவறிழைக்காமல் தான் இருப்பார்கள் ஆனால் மூன்றாவது தரப்பை தவறில் இருந்து பாதுகாப்பது எப்படி? என்பதற்கு நீங்கள் ஒரு வழி சொல்ல வேண்டுமல்லவா? பகுத்தறிவுடன் சிந்திப்பது என்றால் இது தானே?? இதற்கு பகரமாக சிந்திப்பவர்கள் உணர்வு அடிப்படையில் சிந்திப்பவர்கள் என்று தானே பொருளாகும்?
சட்டத்திற்கு பயந்து தவறு செய்யாமல் இருப்பார்கள் என்பது தவறான வாதம் என்பதை அத்தகைய சட்டத்தை இயற்றி நிரூபித்து விட்டு தானே நீங்கள் சொல்ல வேண்டும்?? 
ஆறு முறை சைக்கிள் திருடியவன் ஆறாவது முறையாக கைது செய்யப்படுகிறான் என்கிற செய்திகள் தின செய்திகளில் வருகிறதே ஏன்?? ஒரு முறை திருடினால் கைகளை வெட்டும் சட்டம் என்றால் யாருமே திருட மாட்டார்களே?? தவறுகளை தடுப்பதற்குரிய சரியான முறையை கையாண்டு விட்டு தானே, குற்றங்கள் குறைந்ததா இல்லையா என்பதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டும்??? வேலியை அடைக்காமல் ஆடு புகுந்து விட்டதே என்று அழுவதில் என்ன பயன்?? 

குண்டு வைத்தால் தடா பொடா தேசியப்பாதுகாப்பு சட்டம் துக்குதண்டனை என்று எத்தனையோ மிரட்டும் அங்கங்கள் இருந்தும் குண்டுகள் வெடிப்பது குறைந்துள்ளதா? 

என்று நீங்கள் கேட்டிருப்பதன் மூலம், மேலே நான் சொன்னது நிரூபணம் ஆகிறது.

குண்டு வைத்தால் தடா போடா தூக்கு தண்டனையா??? நீங்கள் எந்த நாட்டை பற்றி கேட்கிறீர்கள்?? நம்ம இந்தியாவை பற்றியா???  சுதந்திர இந்தியாவில் இதுவரை (புள்ளி விவரங்களின் படி) கிட்டத்தட்ட ஐம்பது மிக பெரிய வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் எத்தனை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டன???  ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விட்டதா?? குஜராத் கலவரத்தை நடத்தியவர்களுக்கு கொடுக்கப்பட்டதா?? கோத்ரா, சபர்மதி ரயிலை எரித்தவர்களுக்கு கொடுக்கப்பட்டதா??மாலேகான் குண்டு வெடிப்பை நடத்தியவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டதா??? 
கடும் சட்டங்கள் என்பது வெறும் ஏட்டில் உள்ளதா அல்லது நடைமுறையில் உள்ளதா?? வெறும் ஏடுகளில் சட்டத்தை வைத்துக்கொண்டு குண்டு வெடிப்பு குறைந்துள்ளதா என்று அப்பாவித்தனமாக கேட்கிறீர்களே!!! குண்டு வைத்தால் தூக்கு தண்டனை என்று சட்டங்கள் இருந்தால் குண்டு வெடிப்பு குறையாது, அதை செயல்படுத்தினால் குறைந்து விடும். 
இஸ்லாமிய சட்டங்களை உள்ளடக்கிய நாடுகளில் இது போன்ற சட்டங்கள் உள்ளன, அவற்றை தக்க முறையில், எந்த பண பலத்திற்கும், அதிகாரத்திற்கும் வளைந்து கொடுக்காமல் பயன்படுத்துகிறார்கள் அதனால் குற்றங்கள் குறைவு. நம் நாட்டில், பணத்திற்காக சட்டங்கள் வளைகின்றன, அதிகார பலதிற்காக வளைகின்றன என்பது தெளிவாக தெரிகிற போது குற்றம் செய்கிற ஒருவன் ஏன் பயப்பட வேண்டும்??

ஒருவரை கொலை செய்ய எனக்கு ஒரு கோடி பணம் தருகிறார்கள் நான் கூலி படை உதவியுடன் காரியத்தை முடிக்கிறேன், மாட்டிக்கொண்டால் மிஞ்சிப்போனால் ஒரு வருடமோ இரண்டு வருடமோ ஜெயில் தண்டனை, அதற்குள் காசு கொடுத்து வெளியே வரலாம், என்கிற சிந்தனை எனக்கு ஏற்பட்டால், நான் கொலை செய்வதற்கு ஏன் தயங்க வேண்டும்?? அப்படியே உயர் நீதி மன்றம் தூக்கு தண்டனை கொடுத்து விட்டால், உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டு வெளியே வந்து விடலாம். அதுவும் இல்லை என்றால், ஜனாதிபதி பரிந்துரைப்பார் , வெளியே வந்து விடலாம் என்கிற பல அடுக்கு பாதுகாப்பை இந்தியா எனக்கு வழங்கியிருக்கும் போது கொலை செய்வதற்கோ கற்பழிப்பு செய்வதற்கோ நான் ஏன் அஞ்ச வேண்டும்? என்று சிந்திக்கிற ஒரு சாதாரண மனிதனை உங்கள் சட்டம் என்றைக்கும் திருத்தாது.

இஸ்லாமிய சட்டங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் கற்பழிப்புகள் நடப்பதிலையா? பயத்தை விதைப்பதால்நீங்கள் ஒன்றையும் அறுவடை செய்து விட முடியாது.

நிச்சயமாக நடப்பதில்லை. இதை அறிவதற்கு சில புள்ளிவிவரங்களை படித்தாலே போதும். இஸ்லாமிய சட்டம் பேணப்படும் நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் 2003 முதல் 2010 வரையிலான வருடங்களின் கணக்குப்படி வருடத்திற்கு சராசரியாக 59 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகின்றன. கூட்டிப்பார்க்கையில் இந்த எட்டு வருடங்களில் மொத்தம் நடந்த கற்பழிப்புகளின் எண்ணிக்கை 472 (500 என்று வைப்போம்.) நம் இந்தியாவின் கணக்கு என்ன தெரியுமா?? 1,41,713 - அதாவது, ஒரு வருடத்தின் சராசரி கிட்டத்தட்ட 20,000 !!

இஸ்லாமிய சட்டத்தை பேணாமல், தப்பி தவறி கடும் குற்றங்கள் விதிக்கப்பட்டு விட்டால் கூட, பண பலம், அரசியல் பலம், ஜனாதிபதி கருணை மனு போன்ற ஆயுதங்களின் மூலம் வெளி வரக்கொடிய ஓட்டைகள் மிகுந்த இந்திய நாட்டில் கடந்த எட்டு வருட கற்பழிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தி நாற்பதாயிரம் !! அதுவே, எதற்கும் வளைந்து கொடுக்காத இஸ்லாமிய சட்டங்களை பேணக்கூடிய சவுதியில் வெறும் 500. இந்த புள்ளிவிவரங்கள் நாமாக உருவாக்கியவை அல்ல, விகீபீடியாவில் நீங்கள் சென்றாலும் காணக்கூடிய உண்மைகள்.

75 வரிகளுக்குள் சுருக்க வேண்டும் என்பதால் உங்கள் முதல் பதிவில் நீங்கள் எழுதியுள்ள சில தவறான கருத்துக்களுக்கான மறுப்புரையை அடுத்தடுத்த பதிவுகளில் தருகிறேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக