வியாழன், 3 பிப்ரவரி, 2011

மானம் காப்பார்களா? மானமிழந்து நிற்பார்களா?

சென்ற பாராளுமன்ற தேர்தலில் ம.ம. கட்சி என்ற மனிதநேய மக்கள் கட்சியினர் கொடுத்த பில்டப்புகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். நாங்கள் கைதேர்ந்த அரசியல்வாதிகள் என்பதை தங்களது பில்டப்புகள் மற்றும் புருடாக்களின் வாயிலாக நிரூபித்தனர்.

ஆம்! தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறிதற்கு இவர்கள் கூறிய காரணங்களைப் பட்டியல் போட்டால், சிரிப்பு தாங்க முடியாது. அது ஒரு பெரிய காமெடி ஷோ. தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் அவர்கள் ஆடிய காமெடி ஷோ பற்றி உணர்வு வாசகன் என்ற முறையில் உங்களிடம் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

ம.ம. கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம்:
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிப்பதற்காகத் தான் ம.ம.க.வே தொடங்கப்பட்டுள்ளது என்று தங்களது அதிகாரப்பூர்வ இதழில் அறிவித்தனர்.

இரண்டு எம்.பி சீட் பெறுவது தான் சமுதாய மானம் காப்பதாம்!

ஒரு எம்.பி சீட்டைக் கொடுத்து முஸ்லிம்களைத் திராவிட அரசியல் கட்சிகள் ஏமாற்றி வருவதாகவும், இந்தத் தேர்தலில் ஒரு எம்.பி சீட்டை வாங்கிக் கொண்டு மானம் இழக்க மாட்டோம் என்றும், இரண்டு எம்.பி சீட் வாங்கி சமுதாயத்தின் மானத்தைக் காபோம் என்றும் தங்களது அதிகாரப்பூர்வ இதழில் சூளுரைத்தனர்.

முதல் கட்டம்:
நாங்கள் அதிகமான தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம். வேலூர், மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளிலிருந்து ஏதாவது மூன்று தொகுதிகள் தேவை என ம.ம.க. சார்பில் தி.மு.க விடம் கேட்கப்பட்டுள்ளதுஎன்று முதலில் அறிவித்தனர்.

இரண்டாம் கட்டம்:
பூஜ்யத்திலிருந்து புறப்பட்டு ஒரு தொகுதி என்ற நிலையிலேயே திமுக தரப்பு நின்றது. ம.ம.க. குழுவினர், ‘இரண்டு தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபாவும்என்ற நிலைக்கு வந்தனர். கடைசியாக, ‘இரண்டு தொகுதிகள் தந்தால் சரிஎன்ற மனநிலைக்கு ம.ம.க. தரப்பு மனதளவில் தயாராக இருந்தது. தங்கள் பலத்திற்கேற்ப குறைந்தது 2 தொகுதிகளைத் தாருங்கள் என்று தான் ம.ம.க. கேட்டது. அடிமை அரசியலை விட தன்மான அரசியலே முக்கியம் என்ற நிலையில் ம.ம.க.வும் உறுதி காட்டியது என்று இரண்டாம் கட்டமாக அறிவித்தனர்.

மூன்றாம் கட்டம்:
ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னொரு தொகுதிக்கு பதிலாக யூனியன் பிரதேசம் ஒன்றுக்கான கவர்னர் பதவியும், சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தூதர் பதவியும் காங்கிரஸ் சார்பில் தரப்படும்என்றும், ம.ம. கட்சியின் மகத்துவம் கருதி காங்கிரஸே தங்களுக்கு தி.மு.க வழங்கும் தொகுதியில் ஒரு தொகுதியை விட்டுத் தரும் என்று காங்கிரஸ் தரப்பிலிருந்து சொன்னார்கள் என்று மூன்றாம் கட்டமாக அறிவித்தனர்.

அத்தோடு மட்டுமில்லாமல் தங்களை நூற்றுக்கணக்கான அமைப்புகள் ஆதரிப்பதாகச் சொல்லி ஒரு நீண்ட…… பட்டியலையும் வெளியிட்டனர்.
பட்டியல் விபரம்:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, ஜமாஅத்தே இஸ்லாமி, தேசிய லீக் (நிஜாமுதீன்), கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் பேரவை, AIOBC, இஸ்லாமியர் விழிப்புணர்வுக் கழகம், தமிழ் மீனவ விடுதலை வேங்கைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் சங்கம், தமிழக உரிமை இயக்கம், அருந்ததியர் நல அமைப்பு போன்ற அமைப்புகளும் மற்றும் பல்வேறு அரசு சாரா அமைப்புகள், சங்கங்கள் ஆகியவை மனித நேய மக்கள் கட்சியை ஆதரித்துள்ளன. இவற்றில் பல அமைப்புகள் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
ஆக இவர்கள் அனைவரும் தங்களை ஆதரிக்கின்றார்கள் என்று இந்த ம.ம. கட்சிக்காரர்களே அறிவித்துள்ள நிலையில் இப்போது இவர்களது நிலை குறித்து நாம் ஆய்வுசெய்வோம்.

பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிப்பதற்காகத் தான் ம.ம.க.வே தொடங்கப்பட்டுள்ளது என்றும், ஒரு தொகுதியைப் பெறுவது தன்மானத்திற்கு இழுக்கு என்றும், சமுதாயத்தின் மானம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் என்பது தான் இவர்களது வாதம். மேலும், சமுதாயத்தின் மானம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான், அதாவது இரண்டு எம்.பி சீட்டுக்கள் வேண்டும் என்பதற்காகத் தான் கீழ்க்கண்ட மாபெரும் தியாகங்களை(?) செய்ததாக பட்டியலிட்டனர்.

1.வக்புவாரியப் பதவியை துச்சமாக மிதித்து தூக்கி எறிந்தோம்
2. சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தூதர் பதவியைத் தர காங்கிரஸ் தாயாராக இருந்தும் அதையும் துச்சமாக மிதித்து தூக்கி எறிந்தோம்.
3. யூனியன் பிரதேசம் ஒன்றுக்கான கவர்னர் பதவியையும் காங்கிரஸ் தரப்பில் தரத் தயாராக இருந்தும் அதையும் துச்சமாக மிதித்து தூக்கி எறிந்தோம்.
4.ஒரு தொகுதியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஆற்காடு வீராசாமி எங்களது கையைப் பிடித்து கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சினார். நாங்கள் ஏற்கவில்லை. எங்களுக்கு சமுதாயத்தின் மானம் தான் முக்கியம். ஒரு தொகுதியை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக நின்றோம்.
(என்னங்க! இவுங்க விடுகின்ற புரூடாவுக்கு ஒரு அளவில்லையா? எனக் கேட்டு மனதுக்குள்ளே சிரிப்பு வருதா? அது தான் ம.ம. கட்சிங்கிறது)
இத்தனை புரூடாக்களும் எதற்கென்றால், நாங்கள் மானம் காத்து நான்கு தொகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றோம் என்பதற்காகத் தானாம்.

18 தொகுதிகள் தராவிட்டால், கூட்டணியை விட்டுவெளியேறி மானம் காக்க வேண்டும்”:

இவர்கள் ஏற்கனவே சொன்ன கணக்குப் பிரகாரம் 3பாரளுமன்ற தொகுதிகள் இவர்களுக்குத் தேவை. மூன்று தொகுதிகள் இல்லாவிட்டாலும் இரண்டு தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபாவும் தேவை. அப்போது தான் சமுதாயத்தின் மானம் காக்கப்படும். இல்லாவிட்டால் நமது இஸ்லாமிய சமுதாயம் மானமிழந்து நடுத்தெருவில் நிற்கும்(?). எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் நமது சமுதாயத்தின் மானத்தைக் காக்க வேண்டும் என்றால் 3 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு இணையான சட்டமன்ற தொகுதிகளை இவர்கள் பெற்றாக வேண்டும்.

ஒரு பாராளுமன்றத் தொகுதி = ஆறு சட்டமன்ற தொகுதிகள்.

அதாவது ஆறு சட்டமன்ற தொகுதிகள் இணைந்தது தான் ஒரு பாராளுமன்றத் தொகுதி.

அப்படியானால், இவர்கள் தி.மு.க விடம் கேட்ட பிரகாரம் இவர்களது அசுர பலத்தை(?) கருத்தில் கொண்டு அதிமுகவில்,
மூன்று பாராளுமன்றத் தொகுதி X ஆறு சட்டமன்ற தொகுதிகள் = 18 சட்டமன்றத் தொகுதிகள்.

அதாவது மூன்று பாராளுமன்றத் தொகுதிகளுக்கு நிகரான பதினெட்டு சட்டமன்றத் தொகுதிகளை இவர்கள் பெற வேண்டும்.
ஆக, இவர்கள் கேட்ட மூன்று பாராளுமன்றத் தொகுதிகளுக்கு இணையான பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளை இவர்கள் அதிமுக கூட்டணியில் பெற்றால் தான் சமுதாயத்தின் தன்மானம் காப்பாற்றப்படுமே அல்லாமல், அதற்குக் குறைவான தொகுதிகளை வாங்கிக் கொண்டு இவர்கள் பல்லிலித்துக் கொண்டு கூட்டணியைத் தொடர்ந்தால் இவர்களுக்கு மானமில்லை என்று இவர்களே தங்களது நெற்றியில் எழுதி ஒட்டியதாகத் தான் மக்கள் இவர்களை காரித் துப்புவார்கள். இவர்கள் குறிப்பிட்டது போல சமுதாயத்தின் மானமும் கப்பலேறிவிடும்.

அதிமுக கூட்டணியில் இவர்கள் பதினெட்டு தொகுதிகளுக்கு குறையாமல் வாங்கி தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போது தான் சமுதாயத்தின் தன்மானம் காப்பாற்றப்பட்டு, அவர்களது மானமும் கப்பலேறாமல் இருக்கும். அப்படி அதிமுக பதினெட்டு சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்க மறுத்தால் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டு தன்மானத்தை நிலை நாட்டுவார்கள் என்று நம் சமுதாய மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ம.ம.கட்சியினர் 18 தொகுதிகளுக்குக் குறைவாக அதிமுக ஒதுக்கினால் அதைப் புறக்கணித்து விடுவதாக முடிவு செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். மேலும் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது போல் அதற்கு நிகராக 24 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட்டு மானம் காத்தே தீருவது என்று உறுதியான முடிவு செய்து விட்டதகவும் 24 வேட்பாளர் பட்டியல் தயாராக இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பு:
நாங்கள் போட்டியிட்ட தொகுதியில் எல்லோரும் எங்களது சின்னத்தில் தான் பொத்தானை அமுக்கினார்கள். ஆனால், அது வேறு சின்னத்தில் விழுந்து விட்டது. எனவே மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும். அப்படி வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வந்தால் தான் அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம் என்று அதன் பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் ஒரு தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் உறுதிபடத் தெரிவித்திருந்தார். மின்னனு எந்திரங்களைப் பயன்படுத்தி வரக்கூடிய தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்றால் தங்களது கொள்கை உறுதியை வெளிப்படுத்தி தேர்தலைப் புறக்கணிப்பார்கள் என்று நாம் பலமாக நம்புகின்றோம். ஏனென்றால் இவர்கள் தான் கொள்கையில் ரொம்ப உறுதி(?)யனவர்களாச்சே!

கடைசியாக வந்த செய்தி:

அதிமுக அணியில் இவர்களது கொள்கை உறுதி காரணமாக, 15தொகுதிகள் வரை தருவதாகவும், இவர்கள் இன்னும் மூன்று தொகுதிகளை சேர்த்து 18 தொகுதிகள் தந்தால் தான் கூட்டணியில் நீடிப்போம். எங்களுக்கு சமுதாய மானம் தான் முக்கியமே தவிர, சீட்டுக்கள் முக்கியமல்ல என்று உறுதியாக நிற்பதாகவும், அப்படி அதிமுக தலைமை கூடுதலாக மூன்று இடங்களை ஒதுக்கி 18தொகுதிகளை தரமறுக்கும்பட்சத்தில் 24தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக அவர்களிடத்திலிருந்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உணர்வு வாசகர் மன்றம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக