புதன், 20 நவம்பர், 2013

இணைவைப்பாளர்களுக்கு சலாத்தை கொண்டு முந்தலாமா?




மாற்று மதத்த‌வருக்கு நாமாக சலாம் சொல்லக் கூடாது என்றும், அவர்கள் சலாம் சொன்னால் மட்டுமே நாம் பதில் சொல்ல வேண்டும் எனவும் சில நுனிப்புல் மேயும் நபர்களால் முகனூலில் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இது பற்றிய இவர்களது வாதங்களை பார்ப்பதற்கு முன், குர்ஆன் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

மாற்று மதத்தவருக்கு சலாம் சொல்லலாம் என்பதற்கு குர் ஆனே நேரடியாய் அனுமதியளிக்கிறது.

தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுங்கள் புகாரி 12

தெரியாதவர் என்பதில் மாற்று மத்ததவரும் வருவார். மாற்று மதத்தவர்களை இது குறிக்காது என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.

யார் ஸலாமைக் கொண்டு ஆரம்பிக்கிறாரோ அவரே மனிதர்களில் சிறந்தவர் புஹாரி 6077

சலாத்தை கொண்டு யாரிடம் ஆரம்பிக்க வேண்டும் என்கிற வரம்பு இங்கே குறிப்பிடப்படவில்லை. யாரிடமும் ஆரம்பிக்கலாம் என்பது தான் இதன் பொருள்.

வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர். 'எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்' எனவும் கூறுகின்றனர். திருக்குர்ஆன் 28:55

இந்த வசனத்தில், வீணான செய்திகளை காஃபிர்கள் சொல்லக்கேட்டு அதற்கு பதிலாக தான் சலாம் சொல்லப்படும் என்று வைத்துக் கொண்டாலும், இங்கு சலாத்திற்கு பதில் சொல்லப்படுகிறதா அல்லது நாம் தான் சலாத்தை முதலில் சொல்கிறோமா?

நாம் தான் முதலில் சொல்கிறோம். அவ்வாறு தான் அல்லாஹ் சொல்ல சொல்கிறான்.
ஆகவே சலாம் சொன்னால் பதில் தான் சொல்ல வேண்டும், நாமாக சலாத்தை கொண்டு முந்தக் கூடாது என்கிற வாதம் தவறாகிறது.

அவர்களை அலட்சியப்படுத்துவீராக! ஸலாம் எனக் கூறுவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள்! திருக்குர்ஆன், 43:89

மேற்கண்ட வசனத்திலும் இணை வைப்பாளர்களை புறக்கணிக்குமாறு சொன்ன இறைவன், அவர்களுக்கு சலாத்தை கொண்டு முந்துமாறு தான் சொல்கிறான்.
இங்கு இணை வைப்பவர் எவரும் நபியிடம் வந்து சலாம் சொல்லவில்லை. இருந்தும் அவர்களுக்கு சலாம் சொல்லுமாறு அல்லாஹ் பணிக்கிறான்.

உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் என்னிடம் அன்பு மிக்கவனாக இருக்கிறான்' என்று (இப்றாஹீம்) கூறினார். திருக்குர்ஆன் 19:47

இணை வைக்கும் தந்தைக்காக சலாத்தை கொண்டு முந்துகிறார்கள் இப்ராஹிம் நபி அவர்கள்.
இப்ராஹிம் நபியின் தந்தை இப்ராஹிம் நபியிடம் சலாம் சொல்லவில்லை. அதற்கு பதிலாக இப்ராஹிம் நபி சலாம் சொல்வதாய் இங்கு சொல்லபப்டவில்லை,
மாறாக இப்ராஹிம் நபி தான் சலாத்தை முந்தி சொல்கிறார்கள்.

ஆக, முஸ்லிம்களுக்கும் சலாம் சொல்லலாம், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் சலாம் சொல்லலாம்.
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சலாத்தை கொண்டு முந்தவும் செய்யலாம் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.

அதே சமயம், ஓரிரு ஹதீஸ்கள், இணை வைப்பாளர்களுக்கு சலாத்தை கொண்டு முந்தக்கூடாது என்கிற கருத்தை தருகின்றன.

யூத கிறிஸ்தவர்களைப் பாதையில் சந்தித்தால் அவர்களுக்கு ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்காதீர்கள். அதிலே அவர்கள் ஒதுங்கிச் செல்லும்படி அழுத்தம் கொடுங்கள்.(முஸ்லிம்)

இணைவைப்போரைப் பாதையில் சந்தித்தால் அவர் களுக்கு ஸலாத்தைக் கொண்டு ஆரம்பிக்காதீர்கள். அதிலே அவர்கள் ஒதுங்கிச் செல்லும்படி அழுத்தம் கொடுங்கள்.(அஹ்மத்)

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களை முன் வைக்கும் எதிர் கருத்துடையவர்கள், இதிலிருந்து, இணை வைப்பவர்களுக்கு சலாத்தை கொண்டு முந்தக்கூடாது என்று தெரிவதாக வாதம் வைக்கிறார்கள்.

ஆனால் இது குர்ஆன் ஹதீஸ் குறித்த குறை மதியின் காரணமாய் எழும் வாதமாகும்.

மாற்று மதத்தவர்களுக்கும் சலாம் சொல்லலாம், சலாத்தை கொண்டு முந்தவும் செய்யலாம் என்று குர்ஆன் அனுமதித்து விட்ட பிறகு, அதற்கு முரணாய் ஏதேனும் ஹதீஸ்கள் வருமானால் அத்தகைய ஹதீஸ்களுக்கு இயன்ற வரை மாற்று விளக்கங்கள் கொடுக்கவே முயற்சி செய்ய வேண்டும்.

மாற்று மத்தவர்களுக்கு, யூத கிறித்தவர்களுக்கு சலாம் சொல்வதை பொறுத்தவரை, அவர்களுக்கு சலாம் சொல்லலாம் என்பதும் சலாத்தைக் கொண்டு முந்தலாம் என்பதும் தான் பொதுவான விதி.

அந்த பொதுவான விதியிலிருந்து விலக்கு பெற்றது தான் மேற்கண்ட அறிவிப்புகள்.

இதை நாம் சுயமாக சொல்லவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் காரணமும் கூறாமல் பொதுவாக ஒரு கட்டளையிட்டால் அதை நாம் அப்படியே முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணத்தைக் கூறி அதற்காக ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தால் அதைப் பொதுவான தடை என்று கருதக் கூடாது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொண்ட விதியாகும்.

வேதமுடையோரின் ஸலாமுக்கு பதில் கூறுவதைப் பொருத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஅலை(க்)கும் என்று கூறச் சொன்னதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தி விட்டனர்.

யஹதிகள் உங்களுக்கு ஸலாம் கூறினால் அவர்கள் (அஸ்ஸலாமு அலைக்க எனக் கூறாமல்) அஸ்ஸாமு அலைக்க என்று தான் கூறுகின்றனர். (உம்மீது மரணம் உண்டாகட்டும் என்பது இதன் பொருள்) எனவே வஅலைக்க (உன் மீதும் அவ்வாறு உண்டாகட்டும்) என்று கூறுங்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 6257

யஹதிகள் அஸ்ஸலாமு எனக் கூறாமல் அஸ்ஸாமு என்று கூறும் காரணத்தினாலேயே அவர்களுக்கு ஸலாம் என்ற வார்த்தையைக் கூற வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் முறையாக மறுமொழி கூறினால் நாமும் அவர்களுக்கு முறையாக மறுமொழி கூறலாம் என்பதைத் தான் இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

இதை பற்றி அல்லாஹ்வும் தமது திருமறையில் விளக்குகிறான்.

(முஹம்மதே!) அவர்கள் உம்மிடம் வரும் போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம். அல்குர்ஆன் (58  8)

ஆக, எவரெல்லாம் நம்மை சபிக்கும் நோக்கில் நம்முடன் பழக முன் வருவார்களோ அவர்களுக்கு சலாத்தை கொண்டு முந்த வேண்டாம் என்பது தான் நபியின் கட்டளை.

அந்த அடிப்படையில், நம்முடன் நல்லுறவில் இருக்கும் மாற்று மத அன்பர்களுக்கு நாம் சலாத்தை கொண்டு முந்துவதில் எந்த மார்க்க முரணும் இல்லை என்பது மட்டுமல்லாமல், அவ்வாறு முந்துவது நன்மையை தான் ஈட்டுத் தரும்.

இதோ அல்லாஹ் கூறுவதை பாருங்கள்.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன் (60 : 8)

ஆக, முஸ்லிம் அல்லதோருக்கும் சலாம் சொல்லலாம், சலாத்தை கொண்டு முந்தவும் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக