செவ்வாய், 5 நவம்பர், 2013

மக்கா முதல் மதினா வரை - 3


ஹிஜ்ரத்திற்கான கட்டளை :
--------------------------------------

அல் அகபா உடன்படிக்கை வெற்றிகரமாக நிறைவேறியதற்கு பிறகு தான், வாழ்வதற்கு தகுதியற்றதாய் திகழும் தங்களது சொந்த ஊரை விட்டு இடம் பெயரும் எண்ணம் நபி (ஸல்) அவர்கள் மனதில் எழுகிறது.

இருப்பினும், அல்லாஹ்விடமிருந்து அது குறித்து எந்த கட்டளையும் வராத காரணத்தால் மதினா தான் ஹிஜ்ரத்திற்கான இலக்கு என்பதை அவர்கள் முடிவு செய்யவில்லை.
மாறாக, மக்காவிலிருந்து வெளியேற விருப்பம் தெரிவிக்கும் தோழர்கள் அனைவருக்கும் வெளியேறுவதற்கான ஒப்புதலை மட்டும் வழங்கினார்கள்.

அந்த வகையில், அன்றைக்கு எந்தெந்த நாடுகளெல்லாம் வசதியானதாகவும் பாதுகாப்பானதாகவும் சஹாபாக்கள் கருதினார்களோ அங்கெல்லாம் இடம் பெயர துவங்கினார்கள்.

முதல் கட்டமாக, உஸ்மான் (ரலி) அவர்கள், தமது மனைவியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது புதல்வியுமான ருகைய்யா அவர்களை அழைத்துக் கொண்டு அபிசீனியா நாட்டுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள்.

இவ்வாறு, சஹாபாக்கள் அனைவரும் ஹிஜ்ரத்திற்கான ஏற்பாடுகளுடன் இருந்த காலகட்டத்தில் தான் அல்லாஹ்விடமிருந்து ஹிஜ்ரத் குறித்த கட்டளை நபிகளாரை வந்தடைந்தது.

இரண்டு கருங்கல் மலைகளுக்கு இடையே பேரீச்சம்மரங்கள் நிறைந்த ஊரில் ஹிஜ்ரத் செய்யுமாறு அல்லாஹ்விடமிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளை வந்த செய்தி புஹாரி 3622 வில் பதிவாகியுள்ளது.

இது மதினா நகரை தான் குறிக்கும் என்பதை உணர்ந்து கொண்ட நபிகள் பெருமானார், அனைத்து தோழர்களையும் மதினாவை நோக்கி ஹிஜ்ரத் செய்ய ஆயுத்தப்படுத்தினார்கள்.

மூன்று குழுக்களாக‌ ஹிஜ்ரத் பயணிகள் பிரிந்தனர்.

முதல் குழுவில் முஸ்ஹப் பின் உமைர் (ரலி), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) போன்ற முக்கிய சஹாபாக்கள் புறப்பட்டனர்.

அடுத்த குழுவில் பிலால் (ரலி), அம்மார் (ரலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) போன்றவர்கள் செல்ல, இன்னொரு குழு உமர் (ரலி) அவர்கள் தலைமையில் புறப்பட்டது.

இதற்கிடையே, அபீசீனியா சென்ற உஸ்மான் (ரலி) அவர்களும், மதினா தான் ஹிஜ்ரத்திற்கான இலக்கு என்பதை அறிந்து கொண்டு அங்கிருந்து நேரடியாக மதினா சென்றார்கள்.

மேலே உள்ள செய்திகள் அனைத்தும் புஹாரி 3927 இல் விளக்கமாக பதிவாகியுள்ளது.

ஹிஜ்ரத் செல்ல அல்லாஹ் அனுமதித்தாலும் கூட அந்த அனுமதியானது சஹாபாக்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி தானே தவிர, அப்போதும் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்வதற்கு அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

கிட்டத்தட்ட, தமது தோழர்கள் அனைவருமே நாடு துறந்து செல்வது வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கான அனுமதி அல்லாஹ்விடமிருந்து கிடைக்கவில்லை.

தம்மோடு தமது உயிர் தோழரான அபுபக்கர் (ரலி) அவர்கள் மட்டும் துணையிருக்க, ஹிஜ்ரத்துக்கான அனுமதியை எதிர்ப்பார்த்து காத்திருந்தார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்..


தொடரும், இன்ஷா அல்லாஹ் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக