வெள்ளி, 15 நவம்பர், 2013

மக்கா முதல் மதினா வரை - 12


ஹிஜ்ரத் முடிந்து உலகளாவிய இஸ்லாமிய தலைமைத்துவத்தையும் நிறுவிய நபி (ஸல்) அவர்கள், உலகில் எவரும் கற்பனை கூட செய்ய இயலாத, இரண்டு வகையான‌ சகோதரத்துவத்தை மதினாவில் உருவாக்கினார்கள்.

நபி அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதினாவை அடைந்த சந்தர்ப்பத்தில் மதினாவாசிகள் பலரும் இஸ்லாத்தை தழுவியிருந்தாலும் கூட அவர்கள் தங்களுக்கிடையே அவ்ஸ் ‍ கஜ்ரத் என இரு கோத்திரமாய் பிரிந்திருந்தார்கள்.

அந்த இரு கோத்திரமும் இஸ்லாத்தை தழுவுவதில் ஒன்றுபட்டிருந்தாலும் கூட தங்களுக்குள் பெரும் பகைமை பாராட்டிக்கொண்டு தான் இருந்தனர்.

அத்தகைய பிரிவையும் பகைமையையும் உடைத்தெறிந்த நபி (ஸல்) அவர்கள், அன்று முதல் கோத்திர ரீதியிலான பிரிவினையை அவர்கள் மறக்கும் அளவிற்கு ஒட்டு மொத்த சமூகத்தையும் ஒரே அணியில் கொண்டு வருகிறார்கள்.

அவர்கள் அனைவரையும் அன்சாரிகள் என ஒரே பெயர் கொண்டு அழைத்தார்கள். ஹிஜ்ரத்திற்கு முன்பாக அவ்ஸ் என்றும் கஜ்ரத் என்றும் பெயர் கூறப்பட்ட எந்த மனிதரும் நபி அங்கே வந்த பிறகு அவ்வாறு அழைக்கப்படவில்லை.
இத்தகைய சகோதரத்துவத்தை அந்த‌ ஹிஜ்ரத் பயணம் உருவாக்கியது.

மேலும்,மக்காவிலிருந்து அனைத்தையும் துறந்து மதினா வந்த சஹாபாக்களை மதினாவில் இஸ்லாத்தை ஏற்றிருக்கும் அன்சாரிகள் அரவணைக்க வேண்டும் என்பது நபியின் கட்டளை.
அரவணைப்பு என்றால், ஒரு மக்காவாசிக்கு ஒரு மதினாவாசி என்கிற வீதம் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, உணவிலிருந்து பண்ட பாத்திரங்களிலிருந்து, இன்னும் சொத்துக்கள்,வியாபாரம் ஆகிய அனைத்திலும், சொல்லப்போனால் தங்கள் வாழ்க்கையையே இரு பங்காக பிரித்து ஒரு பங்கை தமக்கும் மற்றொரு பங்கை முன்பின் அறிமுகமே இல்லாத ஒரு மனிதருக்கும் கொடுக்க வேண்டும் என்கிற கட்டளை வெறும் வாயளவிலான கட்டளையாக மட்டும் விதியாக்காமல் அதை நடைமுறைப்படுத்தி, வரலாற்றில் அதற்கு முன்னும் பின்னும் கற்பனையில் கூட நிகழாத ஒரு அற்புதத்தை அல்லாஹ்வின் பேருதவியால் நிகழ்த்தி காட்டினார்கள் பெருமானார் !

பிறந்த ஊரை தியாகம் செய்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்ட மக்காவாசிகள் மிகப்பெரும் தியாகிகள் என்றால், தங்களது வாழ்வையே இவர்களுக்காக அற்பணம் செய்த மதினாவாசிகள் அதே அளவிற்கு தியாகிகளாகி விட்டனர்.

இம்மை வாழ்வை அலட்சியம் செய்து மறுமை தான் முக்கியம் என்கிற ஈமானிய உறுதிமிக்க சமூகமாக அந்த சமூகம் இருந்த ஒரே காரணத்தால் தான் இத்தகைய சகோதரத்துவம் சாத்தியமானது !

இதை குர் ஆனில் அல்லாஹ் மிகவும் சிலாகித்து சொல்கிறான்.

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர் வழி பெறு வதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். (3:103)

ஹிஜ்ரத் செய்து மதினா வந்த சஹாபாக்கள் முஹாஜிர்கள் எனவும் அவர்களை அரவணைத்த மதினாவை சேர்ந்த சஹாபாக்கள் அன்சாரிகள் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.
அவர்கள் அனைவருக்காகவும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் துஆ செய்ததோடு (புஹாரி 3132)அவர்கள் அனைவரையும் பல வகைகளில் புகழ்ந்து பாராட்டுகிறார்கள்.
உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தைச் செலவிட்டாலும் அவர்களின் இரு கையளவு அல்லது அதில் பாதியளவுக்கு அது ஈடாகாது (புகாரி : 3673) என்று அவர்களது தியாகங்களை பற்றி மெச்சுகிறார்கள்.

இந்த ஹிஜ்ரத் பயணம் என்பது முஸ்லிம் சமுதாயத்திற்கு ஓர் படிப்பினை !

(முற்றும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக