செவ்வாய், 5 நவம்பர், 2013

சூனியப் பிரியர்களுக்கு நெற்றியடி !


நன்றி சகோ. அப்பாஸ் அலி அவர்கள்

நபிமொழி விளக்கம்...

مسند أحمد - (ج 45 / ص 477)
26212 - حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
விதியை மறுப்பவன் நிரந்தரமாக மது அருந்துபவன் சூனியத்தை உண்மை என்று நம்புபவன் (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழையமாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி

இந்த நபிமொழி தொடா்பாக எழுந்த சர்ச்சைகளையும் அவைகளுக்கு தெளிவான விளக்கத்தையும் இதற்கு முன்பு நாம் கூறியிருக்கின்றோம். இந்தத் தொடரில் இந்த நபிமொழி கூறும் கருத்தைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள இருக்கின்றோம்.

சூனியத்தை உண்மை என்று நம்புபவன் சுவனம் செல்ல முடியாது என்று இந்த நபிமொழி கூறுகின்றது. சூனியம் குறித்து ஒரு இறைநம்பிக்கையாளனின் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் என தெள்ளத் தெளிவாக இந்த நபிமொழி எடுத்துரைக்கின்றது.

அதாவது சூனியம் என்று ஒரு வேலை உள்ளது என்று நம்பலாம். ஆனால் அதை உண்மை என்று நம்பக்கூடாது. அப்படியானால் இதன் பொருள் என்ன? சூனியத்தின் பெயரால் அதை செய்ய முடியும். இதை செய்ய முடியும் என்று பலவிதமான கருத்துக்களை வழிடேர்கள் கூறுவார்கள். அதை உண்மை என்று நாம் நம்பக்கூடாது. அவை பொய் என்றே நம்ப வேண்டும். இதைத் தான் இரண்டாவது கருத்திற்கு இடமின்றி தெளிவாக மேற்கண்ட நபிமொழி கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் இதே அடிப்படையில் இன்னொரு செய்தியை குறிப்பிட்டுள்ளார்கள்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنْ اللَّيْلَةِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹுதைபியா' எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள்.-அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, "உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று கூறினர்.
அப்போது "என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். "அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது' எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்' என இறைவன் கூறினான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி (846)

இந்த ஹதீஸில் முஃமினும் பில்கவாகிபாக இருக்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது நட்சத்திரத்தில் நம்பிக்கை வைக்கக்கூடாது என்று சொல்லப்படுகின்றது. நட்சத்திரம் ஒன்று உள்ளது என்று நம்பினால் அது தவறல்ல. அதை இந்த நபிமொழி மறுக்கவில்லை. மாறாக நட்சத்திரத்தால் மழை பெய்யும் என்றும் எதிர்கால விசயங்களை அதன் மூலம் கணிக்க முடியும் அதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவதை இந்த ஹதீஸ் மறுக்கின்றது. யாராவது இந்த அடிப்படையில் நட்சத்திரத்தை நம்பினால் அவன் அல்லாஹ்வை நம்பவில்லை. நட்சத்திரத்தையே ஈமான் கொண்டுள்ளான்.

சக்தி இல்லாத பொருளுக்கு சக்தி இருப்பதாக நம்பக்கூடாது என்ற அடிப்படையில் பின்வரும் குா்ஆன் வசனமும் அமைந்துள்ளது.

{أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَؤُلَاءِ أَهْدَى مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا (51) } ளالنساء: 51ன

வேதம் எனும் நற்பேறு வழங்கப் பட்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் சிலைகளையும், தீய சக்திகளையும் நம்புகின்றனர். (ஏக இறைவனை) மறுப்போரைப் பற்றி "இவர்கள் நம்பிக்கை கொண்டோரை விட நேர் வழியில் உள்ளவர்கள்'' எனக் கூறுகின்றனர்.

அல்குா்ஆன் (4 - 51)

யுஃமினுான பில்ஜிப்தி (சிலைகளை நம்புகின்றனா்) என்று அல்லாஹ் கூறுகிறான். உலகத்தில் சிலைகளே கிடையாது என்று அல்லாஹ் கூறவில்லை. சிலைகள் தேவைகளை நிறைவேற்றும். செவியேற்கும். என அவைகளுக்கு சக்தி இருப்பதாகவும் தாக்கம் இருப்பதாகவும் நம்பக்கூடாது என்றே அல்லாஹ் கூறுகிறான்.

சூனியத்தை உண்மை என்று நம்பக்கூடாது என்று கூறும் நபிமொழியும் இதைத் தான் கூறுகின்றது. சூனியக்காரர்கள் சூனியத்தால் எதையெல்லாம் செய்ய முடியும் என்று சொல்வார்களோ அதை எதையும் நம்பக்கூடாது. பொய் என்றே நம்ப வேண்டும். சூனியம் என்பது பொய். பித்தலாட்ட வேலை. உண்மை இல்லை. அதனால் யாருக்கும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று நம்ப வேண்டும்.

ஆனால் சில சகோதரர்கள் சில தவறான தகவல்களை நம்பி இதற்கு மாற்றமான கொள்கையில் விழுந்துவிட்டனா். சூனியத்தால் ஒரு மனிதனை கொலை செய்ய முடியும். கை கால்களை முடக்க முடியும். சிந்தனையில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். ஆணை பெண்ணாக காட்ட முடியும். பெண்ணை ஆனாக காட்ட முடியும். கணவனின் பாலுணா்வை அகற்றிவிட முடியும். சூனியக்காரர்கள் எதையெல்லாம் செய்ய முடியும் என்று சொல்கின்றார்களோ அவற்றில் ஒன்றை கூட மறுக்காமல் உண்மை தான் என்று சூனியத்தையும் சூனியக்காரர்களையும் இவர்கள் உண்மைபடுத்திவருகின்றனா். இதற்கு எதிராகத் தான் மேற்கண்ட நபிமொழி அமைந்துள்ளது.

இந்த நபிமொழி இவர்களின் நம்பிக்கைக்கு முற்றிலும் முரணாக இருப்பதால் சிலா் இதனுடைய பொருளை திரித்து கூறும் வேலையில் ஈடுபடுகின்றனா். சூனியத்தை கொண்டு அதனால் மட்டும் பாதிப்பு ஏற்படும் என்று நம்பக்கூடாது. அல்லாஹ்வின் துணையுடன் சூனியத்தின் மூலம் பாதிப்பு ஏற்படும் என்று வியாக்கியானம் கூறுகின்றனா்.

இவர்கள் கூறும் இந்த வியாக்கியானத்தின் அடிப்படையில் நட்சத்திரத்தை கொண்டு நம்பக்கூடாது என்று வரும் நபிமொழியையும் சிலைகளைக் கொண்டு நம்பக்கூடாது என்று கூறும் குா்ஆன் வசனத்தையும் புரிந்தால் ஏற்படும் விபரீதம் சாதாணமானதல்ல.!!!

நட்சத்திரத்தைக் கொண்டு மட்டும் மழை வரும் என்று நம்பக்கூடாது. அல்லாஹ்வின் அனுமதியுடன் நட்சத்திரத்தால் மழை வரும் என்று நம்பலாம் என்று கூற வேண்டிவரும். இப்படி எந்த முஸ்லிமாவது கூறுவானா?

சிலைகளைக் கொண்டு மட்டும் நன்மைகள் ஏற்படும் என்று நம்பக்கூடாது. அல்லாஹ்வின் அனுமதியுடன் சிலைகளால் நன்மை ஏற்படும் என்று நம்பினால் பிரச்சனையில்லை என்று குறித்த வசனத்திற்கு கூற முடியுமா?

ஆமினுா பில்லாஹ் அல்லாஹ்வை நம்புங்கள் என்று குா்ஆன் கூறுகின்றது. இவர்களின் விளக்கத்தின் படி இங்கு சிந்தித்தால் அல்லாஹ்வை மட்டும் நம்பக்கூடாது. அல்லாஹ்வுடன் இன்னொன்றையும் நம்ப வேண்டும் என்று பொருள் செய்ய முடியுமா?

எனவே சிஹ்ரை ஈமான் கொள்ளக் கூடாது என்றால் அதை போலியான விசயம். எந்த உண்மையும் அதில் இல்லை என்று நம்ப வேண்டும் என்றே மேற்கண்ட நபிமொழி கூறுகின்றது. இது விளங்க முடியாத அளவுக்குள்ள நுணுக்கமான விசயமல்ல. இந்த நபிமொழியை பார்த்தவுடன் பளிச்சென்ற தெரியும் தெள்ளத் தெளிவான விசயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக