செவ்வாய், 5 நவம்பர், 2013

மக்கா முதல் மதினா வரை - 6


நபிகளாரின் தந்திரம் :
------------------------------

எதிரிகள் தமது ஹிஜ்ரத் பயணத்தை குறித்து மோப்பம் பிடித்து விட்டதையடுத்து, மக்காவை விட்டு பயணத்தை துவங்கினால் அது வெளிப்படையாக ஊருக்கே தெரிந்ததாக ஆகி விடும். காரணம், நீண்ட நெடிய பயணம் ஒன்றை துவக்கும் ஒருவர் அதற்கென பிரயத்தனப்படுவார், ஒட்டகத்தில் புறப்படுவார், அவர்களுடன் உணவு கட்டுகள் போன்றவைகளை சுமந்து கொள்வார். இதை பார்க்கும் போதே, இவர் எங்கோ வெளியூர் பயணம் மேற்கொள்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இப்படி வெளிப்படையாக செல்வது நபிக்கு தற்போது இயலாது என்பதால், அவர்கள் வேறொரு தந்திரத்தை மேற்கொள்கிறார்கள்.

எப்படியும் மதினா சென்றடைவது வரை வழிகாட்டி ஒருவர் அவசியம் என்கிற வகையில்,அப்துல்லாஹ் பின் அரீகத் என்பவரை வழிகாட்டியாக தேர்வு செய்த
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவருடன் ஒரு ஒப்பந்தமொன்றையும் செய்கிறார்கள்.

அதன் படி, தாங்கள் மதினா செல்லவிருப்பதையும், ஆனால் மக்காவிலிருந்தே புறப்பட்டு செல்வதற்கு பதில் மக்காவிலிருந்து சிறு தொலைவில் இருக்கக்கூடிய சவ்ர் குகையில் இருந்து மூன்று இரவுகளுக்கு பிறகு புறப்படுவது என்கிற தங்கள் திட்டத்தையும் சொல்லி, இதை வெளியில் எவரிடமும் சொல்லக்கூடாது என்றும் ஒப்பந்தமிடுகிறார்கள்.

அப்துல்லாஹ் பின் அரீகத் என்பவர் ஒரு யூதர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நம்பகமானவர் என்று நபி (ஸல்) அவர்கள் கருதியதால் தமது திட்டத்தை அவரிடம் தெரிவித்து, தங்கள் ஒட்டகங்களையும் அவரிடம் ஒப்படைக்கிறார்கள். ஒட்டகத்துடன் மூன்று இரவுகளுக்கு பிறகு சவ்ர் குகைக்கு வர வேண்டும் என்று பேசப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை இட்ட கையுடன், தோழர் அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்களையும், அவர்களது அடிமையான ஆமிர் பின் புகைரா (ரலி) அவர்களையும் அழைத்துக் கொண்டு சவ்ர் குகையை நோக்கி அந்த வரலாற்று பயணத்தை துவக்குகிறார்கள் நபி (ஸல்) அவர்கள்.

மேலே உள்ள செய்திகள் புஹாரி 2263 இல் விளக்கமாக பதிவாகியுள்ளது.

மூன்று இரவுகள் சவ்ர் குகையிலேயே இரு தோழர்களும் கழிக்க, உணவுக்காக, பகல் நேரத்தில் அபுபக்கர் அவர்களது அடிமையாக இருந்த புகைரா அவர்கள் ஆடு மேய்த்து விட்டு அதிலிருந்து கிடைக்கும் பாலையே அருந்தி வந்தார்கள்.

அது அல்லாமல், அபுபக்கர் அவர்களது அருமை மகன் அப்துல்லாஹ் அவர்கள் பகல் நேரங்களில் சவ்ர் குகைக்கு வந்து இவர்களை சந்தித்து விட்டு விடியும் முன் ஊருக்கு திரும்பி விடுவார். இந்த செய்திகள் புஹாரி 3905 இல் பதிவாகியுள்ளது.

குகையை சூழ்ந்த எதிரிகள் :
-------------------------------------

அனைத்தும் திட்டப்படி நடந்து வந்தாலும் சவ்ர் குகையில் கழித்த அந்த மூன்று நாட்களிலேயே நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது தோழருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

ஊர் முழுக்க தேடியும் நபியை காணாததால் வெறி கொண்ட எதிரிப்படை, நாலாபுறமும் பல குழுக்களாக‌ சிதறி, ஆவேசத்துடன் தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஒரு குழுவொன்று, இவர்கள் தங்கியிருந்த சவ்ர் குகை அருகில் வந்தது.

(எதிரிப்படை குகையை சூழ்ந்த பின் நடந்த சம்பவங்கள் அனைத்தும் புஹாரி 3653 இல் பதிவாகியுள்ளது)

நபியும் அவர்களது தோழரும் குகையினுள் பதுங்கிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் எதிரிப்படை குகைக்கு மிக அருகில் வந்து விட்டது. எந்த அளவுக்கென்றால், அபுபக்கர் (ரலி) அவர்கள் தலையை உயர்த்தி மேலே பார்த்தால் எதிரிப்படையின் கால்கள் அவர்களுக்கு தெரிந்தது !

(இதன் மூலம் சவ்ர் குகை என்பது நாம் கற்பனை செய்வது போல் மலையை துளைத்து அமையப்பெறும் குகையல்ல என்று தெரிகிறது, தரையில் அமையப்பெற்ற பதுங்குகுழி தான் சவ்ர் குகை, ஆகவே தான் தலை உயர்த்தும் போது எதிரிகளின் கால்கள் தெரிகிறது)

அதிர்ச்சியடைந்த நபியும் நபியின் தோழரும் அப்படியே குகையினுள் ஒளிந்திருக்க, எதிரிப்படை குகையை சூழ்ந்த்தது.

நாலா புறமும் சுற்றி நோட்டமிடுவதற்கு மனதில் எண்ணம் கொண்ட எதிரிகள், குனிந்து தங்கள் கால்களில் தேடினால் கூட இருவரும் ஒளிந்திருப்பதை கண்டு விடலாம் !

எதிரிகள் இவர்களை கண்டு கொண்டார்களா?

யா ரசூலில்லாஹ், நாம் வசமாக மாட்டிக் கொண்டோமே, என்று கவலைப்பட்ட தமது தோழருக்கு நபி (ஸல்) அவர்கள் என்ன ஆறுதல் சொன்னார்கள் ?

ஒப்பந்தப்படி அரீகத், மூன்றாம் இரவில் ஒட்டகங்களுடன் வந்தாரா??


தொடர்ந்து காணலாம், இன்ஷா அல்லாஹ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக