சனி, 21 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : பிரதமர் கனவில் ஜெயலலிதா


எந்த கட்சிக்கும் இம்முறை தனிப் பெரும்பான்மை கிடைக்காது என காங்கிரஸ் கட்சியே கூறி விட்ட நிலையில், அரசியல் சாணக்கியத்துடன் கூட்டணி அமைக்க மாநில கட்சிகள் முன் வந்து, வலிமையான மூன்றாம் அணி அமைப்பது ஏறக்குறைய‌ உறுதியாகி விட்டது.

கடந்த எந்த தேர்தலை போலும் அல்லாமல் இம்முறை தமிழக அளவில் இரு தேசிய கட்சிகளும் நட்டாற்றில் விடபட வாய்ப்புகள் உள்ள நிலையில், மூன்றாம் அணி டில்லி செங்கோட்டையை பிடிக்க வாய்ப்புகள் அதிகமுள்ளன என்கிற ஊடகங்களின் கணிப்புகளில் உண்மை உள்ளது !

40 எம்பிக்களை ஒரு கட்சி சொந்தமாக்கி கொள்ளும் பட்சத்தில், ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக அது திகழ தற்போது சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளன.

ஜெயலலிதாவை பிரதமராக்குவதற்கு எவருக்கும் தயக்கமில்லை.

ஏற்கனவே முஸ்லிம்களுக்கு அமலிலுள்ள 3.5% இட ஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தி தரும் பட்சத்தில், ஜெயலலிதா இம்முறை டில்லி செங்கோட்டையை பிடிப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமே !!

அதே சமயம், வாய்ப்பிருந்தும் தர மறுக்கும் பட்சத்தில், வேண்டுமென்றே முஸ்லிம் சமூகத்தை அவர் புறக்கணித்தார் என்று தான் எடுத்துக் கொள்வோம்.
புறக்கணிப்பையும் வஞ்சனைகளையும் இனியும் இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது.
அப்படியொரு நிலை உருவாகுமானால், அதிமுகவின் பிரதமர் கனவுக்கு வேட்டு வைக்கும் சக்தியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திகழும், இறைவன் நாடினால்.. !

இன்னும் 3 மாதங்கள் அவகாசம் உள்ளன.. The ball is in your court, Jeyalalithaa Madam !!

சீனக்காரன் வைத்த இணைவைப்பு


அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றலைப் போல் இறந்தவர்களுக்கும் உண்டு என்று ஏதேனும் ஹதீஸ் இருந்து (ஒரு வாதத்திற்கு), அதன் தமிழாக்கத்தை ஒரு சீன மொழி பேசக்கூடிய ஒருவனிடம் கூறினால், அவனும் "அல்லாஹ்வுக்கு இருக்கும் ஆற்றலைப் போல் இறந்தவர்களுக்கும் உண்டு" என்கிற தமிழாக்கத்தை திரும்ப சொல்வான், அதை புரியாமலேயே நம்புவான்.

அதுவே, அந்த தமிழாக்கத்தை சீன மொழியில் மொழிப்பெயர்த்து கொடுத்தால்,. ஆஹா.. இது ஷிர்க் அல்லவா? என்று கூறி தவிர்ந்து விடுவான்.

அப்படியானால், சீன மொழியில் மொழியாக்கம் செய்து கொடுப்பது வரை அவன் ஷிர்க்கை நம்பிய முஷ்ரிக், மொழியாக்கம் கிடைத்த பிறகு முஷ்ரிக் இல்லையா?

அந்த செய்தியை நம்புவது ஷிர்க் என்றாலும், சீன மொழியில் மொழியாக்கம் செய்வது வரை, அந்த செய்தியிலுள்ள ஷிர்க் என்ன என்பதை அவன் புரியவில்லை. ஆகவே அவனை முஷ்ரிக் என்று சொல்ல மாட்டோம்.

சீன மொழியில் மொழியாக்கம் செய்து கொடுப்பது வரை அவனுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளலாமா? என்றால் ஆம் என்பதே நமது பதில் !

சீன மொழியில் மொழியாக்கம் செய்து கொடுப்பது வரை அவன் பின்னின்று தொழலாமா? என்று கேட்டால் ஆம் என்பதே நமது பதில் !

மொழியாக்கம் கிடைத்த பிறகும் அவன் இதே நம்பிக்கையை தொடர்ந்தால்
அப்போது அவன் முஷ்ரிக் தான்,
அப்போது அவன் பின்னின்று தொழக்கூடாது தான்,
அவனுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளக் கூடாது தான் !!

கண் மூடித்தனமான மார்க்கமில்லை இஸ்லாம் ! சிந்தனை செறிவுள்ள மார்க்கம் !!

செவ்வாய், 17 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : தோல்வியை ஒப்புக்கொண்ட காங்கிரஸ்


பாஜக பிரதமர் வேட்பாளர் பெரும்பான்மையான மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர் என்பது நிதர்ஸனமான உண்மையாக இருப்பினும், அவருக்கென பிரத்தியேகமான ஆதரவலை வீசுவது போன்ற மாயை ஊடகங்களால் பொய்யாக பரப்பபடுகின்றன.

இது குறித்து ஊடகங்களை சாடுவது ஒரு புறமிருக்க, இது போன்ற மாயத் தோற்றம் உருவாவதற்கு, அதன் எதிரி கட்சியான காங்கிரஸ் கட்சியே முக்கிய காரணம்.

ஏற்கனவே திக்விஜய் சிங் மோடியை புகழ்ந்து பராட்டியது பற்றியும், மோடியை நாங்கள் கவனத்துடன் தான் எதிர்கொள்கிறோம் என மெத்தம் படித்த மன்மோகன் சிங் பேசியதும் முதிர்ச்சியற்ற பேச்சுக்கள் என்கிற குற்றசாட்டை நாம் வைத்திருந்தோம்.

அதன் தொடர்ச்சியாய், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் நேற்று உதிர்த்த முத்து இதோ..

"வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது" !!??!@@!!#@#

அதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது என்று வெட்கமில்லாமல் இப்போதே ஒப்புக்கொண்ட புண்ணியவான் நம்ம சிதம்பரம் அய்யா !!

நாம் வெற்றி பெறுவதற்கு நமது திறமையும் மக்கள் ஆதரவும் ஒரு வகையான காரணம் என்றால், எதிரிகளின் பலகீனம் இன்னொரு காரணமாக அமையும்.

இதை கூட புரிந்து கொள்ளாத முதிர்ச்சியற்றவர்கள் எவ்வாறு இந்தியாவில் அரசியல் செய்கிறார்கள் என்பது தான் ஆச்சர்யம் !!

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : கொள்கை முரண்


நபி (ஸல்) அவர்கள் தொப்பி, தலைப்பாகை அணிந்தார்கள் என்று நமக்கு தெரிந்திருந்தும் கூட, அவ்வாறு அணிவது மார்க்கமில்லை என்று நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். காரணம், அவர்கள் அணிந்தது உண்மை என்றாலும் கூட அணியுமாறு சொல்லவில்லை.

இதை செய்யுங்கள், இப்படி செய்யுங்கள் என்று அவர்கள் சொன்னால் தான் ஒரு காரியம் மார்க்க காரியம் என்று ஆகுமே தவிர, வெறுமனே அவர்கள் செய்தவை மார்க்கமாகாது, என்கிற நுணுக்கமான வேறுபாட்டை கூட துல்லியமாய் புரிந்து, பிறருக்கு விளக்கியும் வருகிறோம்.

இந்த நுணுக்கமான புரிதல் தான், இந்த சமூகத்தில் புரையோடிப் போன ஏராளமான நூதனங்களிலிருந்து மக்கள் விடுபடுவதற்கு முக்கிய காரணம்.

ஆனால், இந்த புரிதலில் தெளிவாக இருக்கும் சிலர், பிறை விஷயத்தில் விஞ்ஞான கணிப்பை ஏற்கலாம் என்கிற நிலைபாட்டில் இருப்பது கொள்கை முரண்பாடாகும்.

எப்படி தலைபாகை அணியுமாறு நபி அவர்கள் சொல்லாமல் வெறுமனே அணிய மட்டும் செய்தார்களோ அது போல் பிறை பார்த்து மாதங்களை தீர்மானிக்குமாறு அவர்கள் சொல்லாமல் வெறுமனே ஏதேனும் ஒரு முறையில் செயல்படுத்த மட்டும் செய்திருந்தால் அப்போது பிறையை கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்பது கட்டாயமில்லை எனவும், பார்க்கவும் செய்யலாம், பார்க்காமல் கணிக்கவும் செய்யலாம் என்கிற தொப்பி குறித்த நிலைபாட்டை போன்ற நிலைபாட்டை தான் எடுத்திருப்போம்.

ஆனால், பிறை பார்த்தலை அவர்கள் செயல்படுத்தியதோடு அல்லாமல் இவ்வாறு செயல்படுத்துங்கள் என்று சொல்லவும் செய்து விட்ட பிறகு, அவர்கள் எதை சொன்னார்களோ அது தான் மார்க்கம், எப்படி செய்ய சொன்னார்களோ அப்படி செய்வது தான் மார்க்கம் !!

மார்க்கத்தை பின்பற்றுவதில் இருக்கும் ஆர்வத்தை விட புரிய வேண்டிய முறையில் புரிந்து பின்பற்ற வேண்டும் என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது !!

பெண் வீட்டார் செலவு - ஒரு பார்வை


எதுவெல்லாம் சமூகத்தில் வழமையாக செய்யப்பட்டு அல்லது நம்பப்பட்டு வருகிறதோ அவையெல்லாம் சமூகத்தினால் ஒரு வகையில் நிர்பந்திக்கப்படும் காரியங்கள் என புரியலாம்.

திருமண நாளன்று முழு செலவையும் பெண் வீட்டார் ஏற்றெடுப்பதும் அவர்கள் சார்பிலேயே விருந்து வைப்பதும் கூட சமூகத்தில் வழமையாகிப்போன ஒன்று.

இது வழமையாகி போய் விட்டமையால் தான், அவர்களாக விரும்பி அதை செய்தால் கூட நாம் அதை கண்டிக்கிறோம், அங்கீகரிக்க முடியாது என்கிறோம். 

திருமண பேச்சுவார்த்தை நடக்கிறது, இரு வீட்டாரும் கலந்து பேசி இந்த தேதியில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு மேற்கொண்டு எதையும் பேசாமல் விட்டு விட்டார்கள் என்றால், திருமணத்திற்கென மண்டபம் பிடிப்பது, மணமக்கள் ஆடை அலங்காரங்கள், இன்னபிற ஆடம்பர செலவுகளை செய்வது, திருமண நாளன்று வைக்கப்படும் விருந்து என அனைத்துமே இயற்கையாகவே (default ஆகவே) மணமகள் குடும்பத்தாரின் தலையில் தான் சுமத்தப்படும். 

அதாவது, எதையுமே பேசவில்லையென்றால் பெண் வீட்டார் தான் செலவு செய்ய வேண்டும் என்றும், ஆண் வீட்டார் செலவு செய்வார்கள் என்று குறிப்பிட்டு சொன்னால் மாத்திரம் தான் அது ஆண் வீட்டார் கடமை என்றும் ஆகிறது என்று சொன்னால், 
இங்கே பெண் வீட்டார் மீது சுமத்தப்படும் விருந்து, செலவுகள் என்பது நம் சமூகம் அவர்கள் மீது சுமத்திய கட்டாயக்கடமை என்று புரிகிறது.

தம்மீது சுமத்தப்படும் இந்த கட்டாய சுமையை பலரும் சிரமப்பட்டு சுமப்பார்கள், சிலரோ அதை விரும்பி சுமப்பார்கள். 
அவர்கள் சிரமப்பட்டு செய்தால் அவ்வாறு சிரமப்பட வேண்டும் என்பது அவர்கள் மீது கடமையென்று ஆகும், 
அவர்கள் விரும்பி செய்தால், அது கடமை என்பதால் விரும்பி செய்கிறார்கள் என்று தான் ஆகும்.

சமூக அந்தஸ்து, மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள் என்கிற பார்வை, சமுதாயத்தின் உந்துதல் என பல காரிணிகளால் தூண்டப்படும் பெண்ணின் தகப்பனார் தம்மீது கடமையாகிப்போன காரியத்தை கூட விரும்பி ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தான் வருவார். 

பெண்ணின் தகப்பனார் செலவு செய்வது சமூகத்தில் பெருமைமிக்க காரியமாக இன்றும் கருதப்படுவதால் தான் அதை அவர் விரும்பி செய்கிறாரே தவிர, பெண் வீட்டு விருந்து என்பது ஒரு கேவலம் என்கிற கண்ணோட்டத்திற்கு இந்த சமூகம் மாறி விடும் போது அந்த கேவலமான நிலையையும் தாண்டி எந்த பெண்ணின் தந்தையும் விரும்பி கொடுக்க முன்வர மாட்டார். 
அப்போது அவரது விருப்பத்தை விட சமூகம் தம்மை கேவலமாக பார்க்குமே என்கிற அச்சம் தான் அவருக்கு பிரதானமாக தெரியும்.

ஆக, விரும்பி தான் கொடுக்கிறார்கள் என்கிற வாதம், நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானமாகத் தான் இருக்குமேயொழிய, இதில் நடுநிலை பார்வை சற்றும் இல்லை.

நாம் ஏற்கனவே சொன்னது போல, இயற்கையான அமைப்பு என்பது ஆண் வீட்டார் விருந்து என்றும், குறிப்பிட்டுப்பேசினால் மட்டும் தான் அது பெண் வீட்டாரின் செலவு என்றும் என்றைக்கு இந்த சமூகத்தில் மாறுதல் பெறுகிறதோ அப்போது, பெண்ணின் தகப்பனார், இதை நான் விரும்பி செய்கிறேன் என்று சொல்லட்டும், நாம் ஏற்போம் !!

சமூகம் மாற்றம் காணாதவரை விரும்பி கொடுத்தலும் மறைமுக வரதட்சணை தான் என்பதே உண்மை !!

அடுத்ததாக, இன்னொரு முக்கிய விஷயத்தையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். 

மணமகன் தான் திருமண விருந்து வைக்க வேண்டும் என்கிற அடிப்படையை சிந்திக்கையில், நபிகள் நாயகம் (சல்) அவர்கள் காலத்தில் அவ்வாறான விருந்துக்கு தான் மக்கள் அழைக்கப்படவும் செய்தனர். 

திருமணம் என்பது ஐந்து நிமிடத்தில் செய்யப்படும் ஒரு ஒப்பந்தம். அதை செய்வதற்கு என நபி காலத்தில் எவரையும் எந்த சஹாபியும் அழைத்ததாக சான்றுகள் இல்லை. நபி (ஸல்) அவர்கள் செய்த திருமணங்களில் கூட, நிக்காஹ் செய்வதற்கு என எந்த தோழரையும் அழைத்து உடன் வைத்திருக்கவில்லை. 

அவர்கள் அழைத்ததெல்லாம், அழைக்க சொன்னதெல்லாம் திருமணத்தை ஒட்டிய வலிமாவுக்கு தான். 

ஆக, திருமணத்தை நடத்தி, அதில் பெண் வீட்டார் சார்பில் விருந்தும் இடுவார்கள் எனில், அது ஒரு சமூக தீமை என்பது ஒரு புறமிருக்க, அவ்வாறான நாளில் மக்களுக்கு அழைப்பு கொடுப்பதற்கு கூட மார்க்கத்தில் ஆதாரமில்லை !

வெள்ளி, 13 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : மனோஇச்சை மார்க்கமாகாது


நாம் விரும்புகிற‌ விதத்தில் மார்க்கம் இருக்க வேண்டும் என்று எண்ணுவது ஒரு வகையான நோய்.

மார்க்கம் என்பது அல்லாஹ்வுக்குரியது. எது சரி, எது தவறு என்பதை அவன் நமக்கு சொல்லித் தர வேண்டும், நமக்கு விருப்பமில்லாமல் இருந்தாலும் சரியே.

இதை அடிப்படை செய்தியாய் மனதில் கொண்டோமேயானால், மார்க்கத்தின் சட்ட திட்டங்களை கேலி செய்யும் கூட்டம் உருவாகியிருக்காது.

தொடையை மறைக்கும் வகையில் ஆடை அணிவது என்பது நமது விருப்பமாய் இருந்தாலும் கூட, திறந்து வைக்கலாம், வெளிக்காட்டலாம் என்பது தான் அல்லாஹ்வின் அனுமதி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடை திறந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை, சத்தியம் !

இதை முஸ்லிம் 4414, புஹாரி 371, புஹாரி 3695,இப்னுமாஜா 793, புஹாரி 3661, புஹாரி 365 போன்ற ஏராளமான ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.

மார்க்கம் என்பது நபியின் சொல், செயல் தானே தவிர, நமது சுய விருப்பமோ மனோ இச்சையோ இல்லை.

வழக்கம் போல், குர்ஆன், ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்பதில் உறுதியாய் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் அனைவருமே இவ்விஷயத்தில் தங்கள் மனோ இச்சையை தான் மார்க்கமாகுவார்கள் !

வியாழன், 12 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : ஓரின சேர்க்கை


ஓரின சேர்க்கைக்கு தடை விதித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தை எதிர்த்து இப்போது ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. இந்த கூட்டம் ஓரின சேர்க்கை தான் அறிவுப்பூர்வமானது எனவும், அதை தடுப்பது தனி மனித சுதந்திரத்தை தடுப்பதாகும் எனவும் குரல் கொடுத்து வருகிறது.

இந்த கூட்டம், யாருக்கும் தெரியாத சிறு சிறு குழுக்களா? இல்லை. 

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற மக்கள் ஆதரவு பெற்ற கட்சிகள் தான் ஓரின சேர்க்கை எனும் அனாச்சாரத்தை ஆதரித்து குரல் கொடுக்கிறார்கள்.

தனி மனித ஒழுக்கத்தையும், அதன் வெளிப்பாடாய் சமுகம் பெறும் பாதுகாப்பையும் உள்ளடக்கியதாகத்தான் தனி மனித சுதந்திரம் பேணப்பட வேண்டுமேயல்லாமல், ஒழுக்கத்தை மீறிய தனி மனித சுதந்திரம் என்பது சுத்த பேத்தல் என்பதை இவர்கள் புரிய மறுப்பது வியப்பாய் உள்ளது.

தனி மனித சுதந்திரம் என்கிற அளவுகோல் கொண்டு மட்டும் சிந்திப்பதாக இருந்தால் மது அருந்துவதிலிருந்து, விபச்சாரம் புரிவதிலிருந்து சமூகத்தில் நிலவும் அனேக குற்ற செயல்களுக்கும் இதே அளவுகோலை பொருத்தி இவர்கள் அனுமதிக்க வேண்டும்.

விபச்சாரம் புரிகிறவனை சட்டமியற்றி தடுப்பது என்பது அவனது சுதந்திரத்தை பறிப்பதாக ஆகாதா? என்பதற்கு மெத்தம் படித்த மேதாவிகள் விடை சொல்வார்களா?