சட்டமியற்றும் தகுதி மனிதனுக்கு இருக்கிறதா? :
சட்டம்மியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் இருக்கிறதே தவிர, மனிதனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பது ஒரு புறமிருக்க, அவ்வாறு மார்க்கத்தில் சட்டமியற்றுகின்ற தகுதியாவது மனிதனுக்கு இருக்கிறதா?
இந்த மனித இனத்திற்கு, ஏனைய எந்த படைப்புக்கும் வழங்கப்படாத ஏராளமான அருள்களை அல்லாஹ் புரிந்திருக்கிறான்.
பல சாதனைகளையும், பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்ற ஆற்றலையும் அறிவையும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான்.
சாதாரண குண்டூசியில் துவங்கி இன்று விஞ்ஞானத்தின் உச்சத்தில் நிற்பதாக சொல்கிறோமே, அவை அனைத்துமே மனிதனின் அறிவால் வந்தது தான்.
இதை மனதில் கொண்டிருப்பதால் தான் நாம் என்ன எண்ணுகிறோம் என்றால், இவ்வளவு பிரமிக்க வைக்கும் அறிவை கொண்டிருக்கும் மனிதனுக்கு மார்க்கத்தின் நன்மை தீமையை கண்டறியும் அறிவும் இருக்கும் என்று.
மனிதனுக்கு மார்க்கத்தில் சட்டமியற்றும் அதிகாரத்தை சர்வசாதாரணமாக நாம் வழங்கி விடுவதற்கு இந்த எண்ணம் தான் காரணமாக இருக்கிறது.
மதுஹப் இமாம்களா? அவர்கள் சொன்னால் அது தான் மார்க்கம், அவர்கள் சரி என்று சொன்னால் சரி, தவறு என்று சொன்னால் தவறு.. என்கிற அளவிற்கு நாம் அவர்களை நம்பி விடுவதற்கு என்ன காரணம்?
மனிதனுக்கு மிகப்பெரிய அறிவை அல்லாஹ் வழங்கியிருப்பதை நாம் பார்க்கிறோம். அதைக் கொண்டு பலவிதமான நவீன காரியங்களை அவன் உருவாக்கியிருப்பதை நாம் அறிகிறோம்.
இதையெல்லாம் செய்யும் அறிவு அவனுக்கு இருக்கும் போது மார்க்கத்தில் சரி எது தவறு எது என்பதை தீர்மானிப்பதற்கும் அவனுக்கு அறிவு இருக்கும் என்று நாம் பாமரத்தனமாய் நம்பி விடுறோம்.
ஆனால், மனிதனின் அறிவு, அவனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆற்றல், திறன் இவையெல்லாம் உலகத்தில் அவன் தன் திறமையை காட்டுவதற்கு தான் பயன்படுமேயொழிய, இஸ்லாமிய மார்க்கத்தில் எது சரி எது தவறு என்பதை அவனால் சரிவர முடிவு செய்ய முடியுமா?
நான்கு இமாம்களிடம் ஒரு மார்க்க சட்டம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்கள். அவரவர் சொல்வது தான் சரி என்று ஒவ்வொருவரும் கூறுகின்றனர் என்பதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம்.
அந்த நான்கில் ஒன்று தான் சரி. அது எந்த ஒன்றாக வேண்டுமானாலும் இருக்கட்டும், மீதமுள்ள மூன்றும் தவறு என்று அதிலேயே விளங்குகிறது தானே?
அந்த மூன்று நிலைகளை சொன்ன இமாம்கள் தவறிழைத்திருக்கிறார்கள் என்பதும் அதிலேயே விளங்குகிறது தானே?
கம்முனிஸம் தான் சரி என்று ஒருவர் சொல்வார், அவரும் உலகின் மிகப்பெரிய அறிவாளி என்று அறியப்பட்டவராக தான் இருப்பார்.
அதற்கு மாற்றமாக, கம்முனிஸ சித்தாந்தம் தவறு என்று பிரச்சாரம் செய்பவரை எடுத்துக் கொண்டால் அவரும் உலகின் மிகப்பெரும் அறிவு ஜீவியாக தான் இருப்பார்.
இன்னும், அரசியல் சாசனத்தை நிறுவுவதாகட்டும், குற்றவியல் சட்டங்களை உருவாக்குவதாகட்டும், எதிலுமே முரண்பட்ட பல்வேறு நிலைபாடுகளை மனிதர்கள் கொண்டிருக்கத் தான் செய்கின்றனர். அவர்கள் அனைவருமே கற்றறிந்த மேதைகளாக தான் காட்சியும் அளிக்கின்றனர்.
இவ்வாறு, இரண்டு அறிவு ஜீவிகள் இருவேறு முரண்பட்ட நிலைபாட்டை கொண்டிருப்பதிலிருந்து நாம் விளங்க வேண்டியது, மனிதனின் சிந்தனை என்பது சில வரையறைக்கு உட்பட்டது தான். அவனுடைய புரிதலிலும் சறுகல்கள் ஏற்படும். தவறுகளும் கவனக்குறைவுகளும் ஏற்படும், இன்னும் சொல்லப்போனால், ஏதேனும் உலகாதாயங்களை கருத்தில் கொண்டு வேண்டுமென்றே தவறிழைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
மிகப்பெரும் விண்கலன் ஒன்றை மனிதன் கண்டுபிடிக்கிறான், அதற்கு தேவையான உபகரணங்கள், ராக்கெட் என பிரமிக்க வைக்கும் பல காரியங்களை தனது அறிவைக் கொண்டு அவன் உருவாக்குகிறான்.
பார்க்கும் நமக்கு அவனது அறிவை எண்ணி பிரமிப்பாய் இருக்கும்.
அனைத்தையும் செய்து விட்டு, அவனது கண்டுபிடிப்பின் வரைபடத்தையோ அதன் மாதிரியையோ எடுத்துக் கொண்டு கோவிலில் சிலைக்கு முன் வைத்து பூஜை செய்கிறான்.
இது பளிச்சென்று தெரிகிற முரண்பாடா இல்லையா?
பெரும் பெரும் விஞ்ஞான படைப்புகளை உருவாக்குகின்ற திறமையும் ஆற்றலும் அறிவுக்கும் பெற்ற மனிதனுக்கு, தான் நிற்பது வெறும் கல்லுக்கு முன்பு தான் என்பது தெரிந்ததா?
அந்த கல்லுக்கு எந்த சக்தியும் இல்லை, நமக்கு எந்த நன்மையும் தீமையும் செய்வதற்கு அந்த கல் சக்தி பெற்றிருக்கவில்லை என்பது புரிந்ததா?
இல்லை.
ஆக, பெரிய அறிவாளிகள் என்று அறியப்பட்டோர் எல்லாம், எல்லா சந்தர்ப்பங்களிலும் தங்கள் அறிவை சரிவர செயல்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.
அறிவை கொண்டு சிலவற்றை சரியாக புரிவாவார்கள், சிலவற்றை முரண்பட்டு, தவறாகவும் புரிவாவார்கள்.
இன்னும் சொல்லப்போனால், இன்று சமூக தீமைகள் மலிந்து கிடக்கின்றதே அவற்றிலெல்லாம் யார் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்று சிந்தித்தால் பெரும் அறிவு படைத்தவர்கள் தான் ஈடுபடுகின்றனர்.
அரசியல்வாதிகளில் துவங்கி, ஊடகம், சினிமா துறைகள், மருத்துவத் துறை, கல்வித் துறை என எல்லா துறைகளிலும் முறைகேடுகள் மலிந்து தானே காணப்படுகிறது? அங்கெல்லாம் இருப்பது பெரும் அறிவு ஜீவிகள் தானே?
மாகி நூடுல்ஸ்ஸில் கலப்படம் எனக் கூறி இன்று அதை அரசாங்கம் தடை செய்திருக்கிறது என்றால், இந்த கலப்படத்தை இன்றைக்கு தான் அரசாங்கம் கண்டுபிடித்ததா?
எத்தனையோ ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்த பொருள் தான், ஆனால் அப்போதெல்லாம் முறைகேடாக அவை அனுமதிக்கப்பட்டு வந்தது என்றால் இதிலெல்லாம் ஈடுபடுவதும் கற்றறிந்த கல்விமான்கள் தானே?
வரதட்சணை வாங்குவது தீமை என்று கற்றறிந்த மக்களுக்கு தெரியாதா? அவர்கள் தானே இன்றைக்கு அதிகம் வரதட்சணை வாங்குகின்றார்கள்?
எனவே, அறிவு இருக்கிறது, எதையும் உருவாக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதெல்லாம் ஒன்றை அவன் சரியாக தான் செய்வான் என்பதற்குரிய காரிணிகளாகுமா என்றால் நிச்சயம் ஆகாது.
உலக காரியங்களுக்கே இது தான் நிலை என்று சொல்லும் போது மார்க்கத்தில் நன்மை, தீமையை உருவாக்குகின்ற அதிகாரத்தை மனிதன் கையில் வழங்க முடியுமா?
நிச்சயம் முடியாது.
ஆக, இதன் காரணமாகவும் மார்க்கத்தின் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டும் தான் என்பது புலனாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக