ஞாயிறு, 7 ஜூன், 2015

குசைமா ரலி ஹதீஸ் தொடர்பாக அப்பாஸ் அலியின் மறுப்புக்கு மறுப்பு :



குசைமா ரலி ஹதீஸ் தொடர்பாக சகோ. பிஜெவின் விளக்கம் தவறு எனக் கூறி அப்பாஸ் அலி எழுதியிருந்த மறுப்புக்கு மறுப்பு :

( பிஜெவுக்கு நான் மறுப்பு எழுதினேன் என்று மட்டும் சொன்ன அப்பாஸ் அலி, பிஜே அதற்கு பதிலும் எழுதினார் என்பதை சொல்லாமல் மறைத்து விட்டார்.
அந்த மறுப்பினை சாராம்சமாகக் கொண்டு இது தயாரிக்கப்பட்டது)



அப்பாஸ் அலியின் வாதம் :



நபி (ஸல்) அவர்கள் அந்த கிராமவாசியிடம் விலைக்கு வாங்கியது உறுதியான தகவல். மேலுள்ள ஹதீஸில் பல இடங்களில் நபி விலைக்கு வாங்கினார்கள் என்பது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.





நமது பதில் :



வாங்கினார்கள் என்ற சொல் இடம் பெற்றுள்ளதை வைத்து இந்த வாதத்தை வைத்திருக்கிறீர்கள்

ஆனால் இந்த ஹதீஸ் எதன் மீது நிறுவப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கவனிக்கத்தவறி விட்டீர்கள்.



இந்த ஹதீஸை அறிவிப்பவர் நபிகளுக்காக சாட்சி கூறிய குஸைமாவின் சகோதரராவார்.



இந்த ஹதீஸின் மையக் கருத்து என்னவென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், கிராமவாசிக்கும் நடந்த வியாபாரம் சம்மந்தமான பேச்சு வார்த்தைக்கு எந்த சாட்சியமும் இல்லை என்பதுதான் அடிப்படை.



அதாவது கிராமவாசிக்கும் நபி (சல்) அவர்களுக்கும் நடந்த பேச்சுக்கு குஸைமாவும் சாட்சியாக இருக்கவில்லை.



இதை அறிவிக்கும் குஸைமாவின் சகோதரரும் இதற்கு சாட்சியாக இருக்கவில்லை.



வாங்கினார்கள் என்று மீண்டும் மீண்டும் மீண்டும் சொல்லும் இந்த அறிவிப்பாளர் இதற்கு சாட்சியாக இருந்திருந்தால் அவர் இதற்கு உண்மையான சாட்சியத்தைச் சொல்லி இருப்பார். குஸைமா பொய்யாக சாட்சி சொல்லும் நிலை ஏற்பட்டு இருக்காது.



வாங்கினார்களா இல்லையா என்பதை நேரில் ஒருவரும் அறியவில்லை என்று இந்த ஹதீஸே சொல்லும் போது வாங்கினார்கள் என்று இந்த அறிவிப்பாளர் சொல்வது என்பது அவர் நேரடியாகப் பார்த்ததன் அடிப்படையில் அல்ல. குஸைமா சாட்சியத்தின் அடிப்படையில் தான் இவர் சொல்லி இருக்கின்றார் என்பதை அடிப்படையில் நீங்கள் புரியவில்லை.





சாட்சியத்தைக் கொண்டு வாருங்கள் என்று கிராமவாசி கேட்ட போது, நான் சாட்சி சொல்கிறேன் என்று இந்த அறிவிப்பாளர் வந்து சொல்லி இருக்கலாமே?

அபப்டி ஏன் அவர் சாட்சி சொல்ல முன்வரவில்லை?



இதில் இருந்து அறிய வேண்டிய விஷயம் கிராமவாசி விற்றாரா இல்லையா என்பதை இவர் அறியவில்லை. அறியவில்லை என்று இந்த ஹதீஸ் சொல்லும் போது வாங்கினார் என்று இவர் சொல்வது தனது நம்பிக்கையின் அடிப்படையில் தான்  என்பது பளிச்சென்று தெரிகிறது.





அப்பாஸ் அலியின் விமர்சனம் :



நபி (சல்) அவர்கள் விலை பேசி முடித்தவுடன் கிராமவாசி நபி (ஸல்) அவர்களை பின்தொடர வேண்டிய அவசியம் என்ன?





நமது பதில் :





இதற்கும்  முதலில் சொன்ன பதில் தான்.

அவர் எதற்குப் பின் தொடர்ந்து வந்தார் என்பதை இவர் அறிந்திருக்கவில்லை.



பணம் வாங்குவதற்காகத் தான் பின் தொடர்ந்தார் என்று அந்தக் கிராமவாசி சொல்லவில்லை.

நபி (சல்) அவர்களும் சொல்லவில்லை. என்ன பேச்சுவார்த்தை நடந்தது என்பதை நேரில் கண்டும் இவர் ஊகம் செய்யவில்லை. தனது நம்பிக்கையின் அடிப்படையில் தான் இவர் சொன்னார் என்பது தெளிவாகத் தெரிகிறது !



பொதுவாக எல்லா அறிவிப்புகளிலும் இப்படி நாம் கவனிக்க மாட்டோம். அதற்கு தேவையும் இல்லை. ஆனால் இந்த ஹதீஸ் நடந்தது என்ன என்பதற்கு எந்த சாட்சியும் இல்லை என்று கூறும்போது அதற்கு ஏற்ப விளங்காமல் பொதுவாக மற்ற ஹதீஸ்களை விளங்குவது போல் எப்படி விளங்குவது என்பதே கேள்வி.





கிராமவாசி பொய் சொல்லி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. அவர் ஒன்றை நினைக்க நபிகள் நாயகம் வேறு விதமாகப் புரிந்து கொண்டிருக்கவும் வாய்ப்பு உள்ளது.

நபிகள் நாயகம் நிச்சயம் பொய் சொல்லி இருக்க மாட்டார்கள். ஆனால் கிராமவாசி தெளிவாக சொல்லத் தெரியாததால் வேறு விதமாகப் அவர்கள் புரிந்திருக்கலாம், அதற்கு வாய்ப்பு உள்ளது.



இது கொடுக்கல் வாங்கல் பிரச்சனை என்பதால் அதற்கேற்ற முறை என்னவோ அதன்படி தான் முடிவு செய்ய வேண்டும். அதுதான் நபிகள் காட்டிய வழியாகும்.

சாட்சியோ ஆதாரமோ இல்லாத போது யாரையும் பொய்யாக்காமல் சகோ. பிஜெ, தமது இணையத்தில் கொடுத்த பின்வரும் விளக்கத்தில் எந்த  தவறும் இருப்பதாக தெரியவில்லை.



நபிகள் நாயகம் விலைக்குக் கேட்ட போது அந்தக் கிராமவாசி மவுனமாக இருந்ததால் விலைக்கு அவர் ஒப்புக் கொண்டார் என்று நபிகள் நாயகம் நினைத்திருக்கிறார்கள். ஆனால் விலைக்கு விற்று விட்டேன் என்று சொல்லாததால் அதை விற்கவில்லை என்று கிராமவாசி நினைத்திருக்கிறார். கிராமவாசி இப்படி நினைத்ததால் தான் நீங்கள் நான் சொன்ன விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா? மற்றவருக்கு விற்றுவிடட்டுமா என்று கேட்கிறார்.



கிராமவாசி திட்டமிட்டு பொய் சொல்கிறார் என்பதுதான் இதன் விளக்கம் என்றால் அதற்கு உரிய ஆதாரம் வேண்டுமல்லவா? அந்த ஆதாரம் இல்லை என்று இந்த ஹதீஸே சொல்லும் போது என்ன ஆதாரத்தை நீங்கள் காட்ட போகிறீர்கள்?





அப்பாஸ் அலியின் வாதம் :



கிராமவாசி பித்தலாட்டம் செய்தார் என ஹதீஸ் தெளிவாகக் கூறும் போது கிராமவாசியின் பக்கம் நியாயம் இருப்பது போலவும் நபியின் புரிந்துணா்வில் கோளாறு ஏற்பட்டது எனவும் விளக்கம் கொடுப்பது பொருத்தமல்ல.







நமது பதில் :



கிராமவாசி பித்தலாட்டம் செய்தார் என்று ஹதீஸ் தெளிவாக கூறவில்லையே? சம்பவத்துக்கு சாட்சியாக இல்லாத ஒருவர் தானே சொல்கிறார். வார்த்தை தெளிவாக இருந்தாலும் அவர் அறியாத்தை சொல்கிறார் என்பதையும் நீங்கள் கவனிக்கவில்லை.





அப்பாஸ் அலியின் வாதம்



எனவே குஸைமா (ரலி) பொய்சாட்சி சொல்லவில்லை. உண்மைக்குத் தான் சாட்சி சொல்லியிருக்கிறார்.





நமது பதில் :



அவர் பொய்யாகத் தான் சாட்சி கூறினார் என்று ஹதீஸ் தெளிவாகச் சொல்கிறது. ஆனால் நீங்கள் உண்மைக்கு சாட்சி சொன்னதாக தலைகீழாக விளங்குகிறீர்கள். தான் கண்ணால் பார்த்ததை பார்த்ததாக சொல்வது உண்மை. தான் கண்ணால் காணாமல் இருந்தும் நீ இதை நபிகளுக்கு விற்றாய் என்று சொன்னது பொய். இதை உண்மை என்கிறீர்கள். இது ரொம்ப புதுமையான புரிதலாக தெரிகிறது.



ஹதீஸை எப்படியாவது நியாயப்படுத்த முனைவதால் ஏற்படும் விளைவு இது.

தவறை தவறு என்று ஒப்புக் கொள்ளும் போது இது போல் அர்த்தமில்லாத புரிதலை மேற்கொள்ள வேண்டி இருக்காது.







அப்பாஸ் அலியின் வாதம் :



மேலும் குஸைமா (ரலி) அவர்கள் சொன்ன சாட்சியத்தை ஆதாரமாகக் கொண்டு நபியவர்கள் அந்த கிராமவாசியிடம் ஆட்டை கேட்டதாக எந்த தகவலும் குறித்த ஹதீஸில் இல்லை. எனவே அந்த கிராமவாசி தன்னுடைய பித்தலாட்டத்தை உணர்ந்து தானாக நபிக்கு அந்த ஆட்டை கொடுத்திருக்கலாம். அல்லது இந்த சாட்சியை ஏற்காமல் மறுத்திருக்கலாம். இதன் பின் கொடுத்தாரா? மறுத்தாரா என்ற விபரம் இல்லை. பிறகு ஏன் இந்த ஹதீஸை மறுக்க வேண்டும்?





நமது பதில்:



இந்த வாதமும் உங்கள் கவனக்குறைவைக் காட்டுகிறது.



ஹதீஸில் தெளிவாக உள்ள ஒரு விபரத்துக்கு மாற்றமாக எழுதுகிறீர்கள்.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு கிராமவாசி விற்றார் என்பதற்கு சாட்சியம் இல்லை.

குஸைமா காணாததைக் கண்டதாக சொல்கிறார்.

இப்போது கூட கிராமவாசிக்கு எதிரான தீர்ப்பை அளிக்க முடியாது.

எனவே குஸைமா என்ற ஒருவர் சொன்ன சாட்சியை நான் இருவரின் சாட்சியாக ஆக்குகிறேன் என்று நபியவர்கள் சொன்னால் அதன் அர்த்தம் என்ன?

நான் சொல்வது தான் சரி என்பதற்கு ஒரு சாட்சி (அதுவும் பொய்யான சாட்சி) இருந்தாலும் அவர் இரு சாட்சிகளுக்கு சமம். எனவே என் வாதம் தான் சரி என்று நபிகள் சொன்னதாக ஹதீஸ் தெளிவாகச் சொல்கிறது. இரு சாட்சியாக ஆக்கியதே ஆட்டை கிராமவாசி விற்றார் என்று தனக்கு சாதகமான தீர்ப்புக்காக என்று இந்த ஹதீஸ் நபியின் மீது இட்டுக்கட்டுகிறது என்பது புரியாமல் இப்படி கேட்கிறீர்கள்.





அப்பாஸ் அலியின் வாதம் :





நீ கலந்துகொள்ளாமல் எப்படி சாட்சி சொல்கிறாய்? என்று நபி கேட்டதிலிருந்து இந்த சாட்சியத்தை கொண்டு தீர்ப்பு கூற முடியாது என்பதை நபி அறிந்துள்ளார்கள் என்பதைத் தான் இந்த சம்பவம் கூறுகிறது.





நமது பதில் :



மீண்டும் வியப்புக்குரிய வாதம் !

நபிகள் ஒருவரின் சாட்சியத்தை இருவரின் சாட்சியமாக கருதி தீர்ப்பு அளித்தார்கள் என்று ஹதீஸ் கூறும் போது அதற்கு மாற்றமாக உங்களின் இந்த வாதம் அமையவில்லையா?





அப்பாஸ் அலியின் வாதம் :



நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய விசயத்தில் அநீதி இழைப்பவர்களை மன்னிக்கக் கூடியவராகவே இருந்தார்கள். மேலும் பொய் சொன்னால் அதற்கு குற்றவியல் தண்டனை ஒன்றும் இஸ்லாத்தில் இல்லை. எனவே பொய் சொன்னவரை ஏன் தண்டிக்கவில்லை என்ற வாதமும் தவறானது.





நமது பதில்



இதுவும் உங்களுக்கு தகுந்த வாதமாக இல்லை. பொய்க்கு தண்டனை வழங்க வேண்டும் என்று சகோ. பிஜெ எங்கே எழுதியிருக்கிறார்???



சகோ. பிஜெ எழுதியது இதுதான்..

"அப்படி பொய் சொல்லி இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கன்டித்து இருப்பார்கள்."



கண்டித்து இருப்பார்கள் என்று அவர் எழுதினால் பொய்க்கு என்ன தண்டனை என்று கேட்டு அவர்  எழுதாததை எழுதி அவரை மடையனாக காட்ட பார்க்கிறீர்களா?

பொய் சொன்னால் ஏன் பொய் சொன்னாய் என்று கண்டிப்பது கூட மார்க்கத்தில் இல்லையா?

அல்லாஹ்வே அறிந்தவன்



இது போக, சகோ. பிஜெவின் விளக்கம் தவறு என்று கூறி எழுத புகுந்தவர் அவர் அதில் கேட்டிருக்கும் எல்லா கேள்விகளுக்கும் விடையளித்தாரா?

இல்லை.



சகோ. பிஜெ கேட்ட கேள்விகள் :



பேச்சு வார்த்தையின் போது சாட்சிகள் யாரும் இருக்கவில்லை என்ற நிலையில் பொருளைக் கைவசம் வைத்திருப்பவன் சொல்வதைத் தான் ஏற்க வேண்டும்.

என்று அவர் எழுதியது தவறா? இதை ஏன் விமர்சிக்கவில்ல?



இதற்காக குஸைமா பொய் சொல்லத் தேவை இல்லை. இது தலை போகிற காரியமும் அல்ல. ஒரு ஏழைக்கும் நாட்டின் அதிபருக்கும் உள்ள கொடுக்கல் வாங்கல் பிரச்சனை. அப்படி பொய் சொல்லி இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்து இருப்பார்கள்.

அதுதான் அவர்களின் இயற்கை குணமாகும்.

இதற்கு உங்கள் பதில் என்ன?



என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன் என்றும், வலியவனுக்கு ஒரு நீதி எளியவனுக்கு ஒரு நீதி என்ற கெட்ட கொள்கையால் தான் முந்தைய சமுதாயம் அழிந்த்து என்று சொன்னவர்கள் அவர்கள். (பார்க்க புகாரி 3475)

இதற்கு உங்கள் பதில் என்ன?



நபிகள் நாயகத்துக்குப் பதிலாக இன்னொருவர் சம்மந்தப்பட்ட வழக்காக இது இருந்திருந்தால் நபிகள் நாயகம் என்ன தீர்ப்பு அளிப்பார்களோ அதையே தான் தனக்கும் தீர்ப்பாக அளித்திருப்பார்கள்.

இதற்கு உங்கள் பதில் என்ன?



சாட்சியம் குறித்து அல்லாஹ் கூறும் எச்சரிக்கைகளைப் பாருங்கள்.



நீங்கள் பயணத்தில் இருக்கும் போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள்! அதை மறைப்பவரின் உள்ளம் குற்றம் புரிந்தது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:283



நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோஇச்சையைப் பின்பற்றாதீர்கள்! நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:135



நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 5:8



இவ்வசனங்களுக்கு மாற்றமாக குஸைமா சொன்னார் என்றும் அதை நபிகள் ஏற்றார்கள் என்பதும் உண்மையாக இருக்க முடியுமா?



பொதுவாக கொடுக்கல் வாங்கலுக்கு இரு சாட்சிகள் அவசியம். 2:282 வசனத்தில் இதைக் காணலாம்.

நபிகள் நாயகத்துக்காக ஒருவர் சாட்சி சொல்கிறார். அதுவும் அவர் காணாததைக் கண்டதாகச் சொன்ன பொய்யான சாட்சி. இப்போது இன்னொரு சாட்சி தேவை.



இதற்கு நபிகள் நாயகம் சொன்ன தீர்வாக என்ன சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒருவர் சாட்சி இருவர் சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறி கிராமவாசிக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எல்லோருக்கும் இரு சாட்சிகள், நபிகளுக்கு மட்டும் ஒரு சாட்சியே இரு சாட்சிக்கு சமம் என்பதைச் சொல்லத்தான் நபியவர்கள் வந்தார்களா?



இதற்கு உங்கள் பதில் என்ன?



அதுவும் குஸைமா பொய் சாட்சி சொன்ன இந்த சம்பவம் உண்மை என்றால் இவரது சாட்சி இனி ஏற்கப்படக் கூடாது என்று தான் நபியவர்கள் கூறுவார்கள். பொய் சொன்னவர் என்று தெரிந்தும் தனது சொந்த ஆதாயத்துக்காக இரு சாட்சிக்கு சமம் என்று கிரீடம் சூட்டுவார்களா? என்ன?

இதற்கு உங்கள் பதில் என்ன?





நம்பகமானவர்கள் அறிவித்த ஒரு காரணத்திற்காக ஒரு ஹதீஸை, அது அர்த்தமற்றதாக இருந்தாலும், குர் ஆனுக்கு முரணாக இருந்தாலும் நபி (சல்) அவர்களின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிப்பதாக இருந்தாலும், ஏற்றுத் தான் ஆக வேண்டும் என்கிற மனப்போக்கு தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்.



பலகீனமானவர் என்று அறியப்பட்டவர் அறிவிக்கும் ஹதீஸை ஏற்கக் கூடாது என்று முடிவு செய்கிறோமே, அவர் பலகீனமானவர் என்று அல்லாஹ்வே நேரடியாக வந்து சொல்லவில்லை, நபியே நேரடியாக வந்து இந்த அறிவிப்பாளர் பலகீனமானவர் என்று சொல்லவில்லை,

நம்மைப் போன்ற மனிதர்கள் தான் அவரை பலகீனமானவர் என்று கருதுகிறோம்.

அது போல், ஒருவரை பலமானவர் என்றும் நம்மைப் போன்றவர்கள் தான் கருதுகிறோம்.



நாமே ஒன்றை கருதும் போது நம்மையும் மீறிய கவனமின்மை, நம் அறிவிக்கு எட்டாத தகவல்கள் இருக்கத் தான் செய்யும்.



இந்த அடிப்படையை சரியாக புரியும் போது, புஹாரியில் வந்து விட்டதா, கண்ணை மூடி நம்பு, முஸ்லிமில் பதியப்பட்டு விட்டதா, அது குறித்து வாய் திறக்காதே.. என்கிற மாதிரியான வழிகேடான வியாக்கானங்கள் இந்த சமூகத்தை விட்டு ஒழியும் !








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக