ஞாயிறு, 28 ஜூன், 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 9)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 9





குர் ஆன் மட்டும் தான் வஹியா? (தொடர்ச்சி)


குர் ஆன் மட்டும் தான் வஹீயாக ஏற்கப்பட வேண்டியது என்கிற கொள்கையுடையவர்கள் முன்வைக்கும் மற்றொரு வாதம், ஹதீஸ் என்பது மனிதர்களால் அறிவிக்கப்பட்டது, குர் ஆன் தான் அல்லாஹ் நேரடியாக அருளியது என்பதாகும்.

இது எந்த அளவிற்கு அபத்தமானதும் அர்த்தமற்றதுமாக இருக்கிறது?
ஹதீஸ்கள் மனிதர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதற்காக அதை ஏற்கக் கூடாது என்றால் இதே வாதம் குர் ஆனுக்கும் பொருந்தத் தான் செய்யும் என்பதை இவர்கள் புரியவில்லை.

குர் ஆனை அல்லாஹ்வே நேரடியாக தந்தான் என்கிறார்கள். நேரடியாக இவர்களது கைகளிலா அல்லாஹ் தந்தான்? ஏதோ அல்லாஹ் குர் ஆனை நம் ஒவ்வொருவரின் கைகளில் நேரடியாக ஜிப்ரீலை அனுப்பி அருளியதைப் போன்ற ஒரு தோரணையில் இவர்கள் பேசுகின்றனர்.

ஹதீஸ் எப்படி நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறியதாக மனிதர்கள் அறிவிக்கிறார்களோ அது போன்று இது தான் குர் ஆன் என்று நபி (சல்) அவர்கள் கூறியதையும் அதே மனிதர்கள் (சஹாபாக்கள்) தான் அறிவித்தனர்.
அவர்கள் அறிவித்ததை அடுத்த தலைமுறைக்கு கடத்தினர், பின் அடுத்த  தலைமுறை.. என மனிதர்கள் மூலமாக தான் குர் ஆன் வசனங்களும் நமக்கு கிடைத்தது.

அல்லாமல், குர் ஆனை இவர்கள் நேரடியாக ஜிப்ரீலிடமிருந்து பெற்று வரவில்லை.

ஒரே வேறுபாடு, குர் ஆனை அதிகமான அறிவிப்பாளர்கள் அடுத்த தலைமுறைக்கு கடத்தினர், அதுவே ஹதீஸ்களைப் பொறுத்தவரை அதை அறிவித்ததும் அடுத்த தலைமுறைக்கு கடத்தியதும் ஒரு சிலராக இருப்பர்.

எனவே, இந்த வாதத்தை மையப்படுத்தி தான் இவர்கள் ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்றால் இவர்கள் குர் ஆனையும் ஏற்கக் கூடாது, ஏற்க முடியாது.

அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்,

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் மறுத்து, ''சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்போம்'' எனக் கூறி, அல்லாஹ் வுக்கும், அவனது தூதர்களுக்குமிடையே வேற்றுமை பாராட்டி  இதற்கு இடைப்பட்ட வழியை உருவாக்க யார் எண்ணுகிறார்களோ அவர்கள் தாம் உண்மையாகவே (நம்மை) மறுப்பவர்கள். மறுப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாரித்துள்ளோம் (4:150,151)


அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் வேற்றுமை பாராட்டுபவர்கள் காஃபிர்கள் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் அறிவிக்கிறான்.
வேற்றுமை பாராட்டுவது என்றால் என்ன?
அதையும் இந்த வசனமே நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ் கூறியதை ஏற்போம், தூதர் சொல்வதை ஏற்க மாட்டோம் என்பதாக எவர்கள் அல்லாஹ்வின் வஹீ செய்தியையே வேறுபடுத்திப் பார்ப்பார்களோ அவர்களைப் பற்றி தான் இந்த வசனம் பேசுகிறது.

இன்னும், நபி (சல்) அவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது,

அல்லாஹ்வையும், இறுதி நாளையும்  நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது (33:21)

என்கிறான்.

முன்மாதிரி என்று எப்போது சொல்வோம்? ஒருவர் ஒரு கட்டளையை பிறப்பிக்கிறார், அதை நாம் ஏற்று செயல்படுகிறோம். அப்படியானால் அவரை நாம் முன்மாதிரியாக கொண்டோம் என்று ஆகுமா?
ஆகாது.
அதுவே அவர் ஒரு செயலை செய்து காட்டி, இதே போன்று நீங்களும் செய்யுங்கள் என்று சொன்னால் அதில் நாம் அவரை முன்மாதிரியாக கருதினோம் என்று ஆகும்.

முன்மாதிரி என்கிற சொல்லாக்கமே ஒரு செயலை செய்து காட்டக் கூடியவரை பின்பற்றுவற்கு தான் பயன்படுத்தப்படும்

வேதத்தை தமது வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டி நமக்கெல்லாம் முன்மாதிரியாக ஒருவர் திகழ வேண்டும் என்று சொன்னால் அதை நம்மைப் போன்ற ஒரு மனிதரால் தான் செய்ய முடியுமே தவிர ஒரு மலக்கால் செய்ய முடியாது.
எனவே தான் மனிதர்களிலிருந்து தூதரை நியமித்ததாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
அவர்கள் நம் முன் வாழ்ந்து நமது அன்றாட செயல்பாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.

இது போக, குர் ஆன் நெடுகிலும் ஏராளமான வசனங்களில், அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள், அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்கிற எச்சரிக்கையை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக் கும் கட்டுப்படுங்கள்!' எனக் கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர் வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை (24:54)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக் கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் (தன்னை) மறுப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (3:32)

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப் படுங்கள்! எச்சரிக்கையோடு இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் தெளிவாக எடுத்துச் சொல்வதே நமது தூதரின் கடமை என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (5:92)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (9:71)

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (4:65)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடன், உண்மையாளர்களுடன், உயிர்த் தியாகிகளுடன் மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.(4:69)


நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்! (8:20)


நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! (47:33)

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (3:132)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! இத்தூத ருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.(24:56)


மேற்கண்ட அனைத்து வசனங்களும் அல்லாஹ்வுக்கு கட்டுபடுவது எப்படி முக்கியமோ அதே போன்று அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுவதும் முக்கியம் என்பதையும், அவ்வாறு கட்டுப்படுவதினால் கிடைக்கும் நற்பேறுகள் என்னென்ன என்பது பற்றியும், கட்டுப்படாமல் புறக்கணிப்போருக்கு நேரும் இழி நிலை பற்றியும் தெளிவுபடுத்துகிறது.

இவை அனைத்திற்கும் முத்தாய்பாக அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப் பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர் களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை. (4:80)

அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்படுவது என்பதன் பொருள் நாம் அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டோம் என்பதுதான்.
தூதரை புறக்கணித்தால் நாம் அல்லாஹ்வையே புறக்கணித்தோம் என்று பொருளாகும் என்பதாக அல்லாஹ் சொல்வதிலிருந்து குர் ஆன் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவையில்லை என்கிற கொள்கையுடையவர்கள் எந்த அளவிற்கு வழிகேட்டில் சிக்கியிருக்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாக புரிகின்றது.


இதுவரை, வஹீ என்றால் என்ன என்பதற்காக அடிப்படைகளை அறிந்தோம். இந்த அடிப்படைக்கு மாற்றமாக என்னன்ன சித்தாந்தங்கள் எல்லாம் சமூகத்தில் ஊடுருயிருக்கின்றன, அவை என்னன்ன வகைகளிலெல்லாம் தவறானவை என்பதை இனி ஒவ்வொன்றாக பார்ப்போம்.


சஹாபாக்களை பின்பற்றுவது அவசியமா?

குர் ஆனும் ஹதீஸும் எப்படி மார்க்க ஆதாரமோ அது போன்று சஹாபாக்களின் கூற்றுக்களும் மார்க்க ஆதாரம் என்பதாக பிரச்சாரம் செய்கின்ற கூட்டம் தற்போது கிளம்பியிருக்கிறது.

இந்த கொள்கையானது நாம் இதுவரை அறிந்து வந்த இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமான கொள்கையாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (சல்) அவர்களின் கூற்றுக்களும் மார்க்கம் என்று ஒரு பக்கம் சொல்கின்ற நாம், அதை கூட, அவர்கள் மார்க்கம் என்கிற முறையில் சொன்னவை, அவர்கள் மனிதன் என்கிற முறையில் சொன்னவை என இரண்டாக வகைப்படுத்தி மார்க்கம் என்று அவர்கள் எதை செய்து காட்டினார்களோ அவை மட்டும் தான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட வஹீ எனவும், மனிதன் என்கிற முறையில் அவர்கள் சொன்னவையோ செய்தவையோ வஹீயின் அடிப்படையில் இல்லை எனவும் தீர்க்கமான கொள்கையை வைத்திருக்கின்றோம்.

இப்படிப்பட்ட அடிப்படையில் வார்த்தெடுக்கப்பட்ட நாம் எப்படி வஹீயே வராத சஹாபாக்களின் கூற்றை மார்க்கம் என்போம்?

வஹீயுடன் நேரடித் தொடர்பிலிருக்கும் நபி (சல்) அவர்களின் கூற்றிலேயே ஒரு சிலது தான் வஹீ, ஒரு சிலது வஹீ இல்லை என்று கூறி, வஹீ அல்லாதவற்றை நபியே சொல்லியிருந்தாலும் அதை ஏற்கத் தேவையில்லை என்று சொல்லும் போது வஹீயோடு எந்த தொடர்புமற்ற சஹாபாக்களின் சொல், செயலை எப்படி மார்க்கம் என்று சொல்வது?

சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இனி, சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்வோர் முன்வைக்கக் கூடிய ஆதாரங்கள் சிலவற்றையும் அவை எப்படி அவர்களது கருத்துக்கு எதிராக இருக்கின்றன என்பதையும் தொடர்ந்து காணலாம்.

முதலில் இவர்கள் முன்வைக்கும் வாதமானது, "என் தோழர்களை திட்டாதீர்கள்", என்று நபி (சல்) அவர்கள் சொல்லி விட்டார்கள், தவ்ஹீத் ஜமாஅத் சஹாபாக்களை திட்டுகிறது, என்றொரு வாதம் வைக்கிறார்கள்.

இது எந்த அர்த்தமுமற்ற வாதம்.

நபி (சல்) அவர்களின் கூற்றுக்களை இவை வஹீ, இவை வஹீ இல்லை என‌ இரண்டாக பிரிப்பது அவர்களை இழிவுப்படுத்தும் காரியமா? இல்லை.
அப்படி நாம் கருதுவதும் இல்லை.
அது போன்று, சஹாபாக்களுக்கு வஹீ வராது, எனவே அவர்களை பின்பற்ற முடியாது என்று சொல்வதும் அவர்களை இழிவுபடுத்தும் கருத்து அல்ல.

சஹாபாக்களை பின்பற்றக் கூடாது என்று சொல்வது எப்படி அவர்களை திட்டுவதாக ஆகும்? திட்டுதல் என்றால் என்ன என்கிற அடிப்படை கூட இவர்களுக்குத் தெரியவில்லை.

கீழ்காணும் மற்றொரு ஹதீஸையும் இவர்கள் தங்கள் கருத்துக்கு சாதகம் எனக் கருதி முன் வைப்பார்கள்.

என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கி விடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத் தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல் : திர்மிதி : 3797

இந்த ஹதீஸுக்கும் சஹாபாக்களின் கூற்றும் மார்க்கம் என்று சொல்வதற்கும் ஏதெனும் தொடர்பு இருக்கின்றதா?

இந்த ஹதீஸி நபி (சல்) அவர்கள் என்ன சொல்கிறார்கள்? சஹாபாக்களுக்கு தொல்லை தராதீர்கள், அவர்களை வெறுக்காதீர்கள், அவர்களை நேசியுங்கள், அவர்களை மதியுங்கள்..
இது தானே அவர்கள் சொல்வது?

சஹாபாக்களுக்கு வஹீ வராது என்று சொன்னால் மேற்கண்டவற்றையெல்லாம் நாம் மீறுகிறோம் என்று ஆகுமா?

சஹாபாக்களுக்கு வஹீ வராது என்று சொன்னால் நாம் சஹாபாக்களை வெறுக்கிறோம் என்று பொருளா?
சஹாபக்களை பின்பற்றக் கூடாது என்று சொன்ன்னால் அவர்களை நேசிக்கவில்லை என்று பொருளா?

என்ன அர்த்தமற்ற வாதம் ?

சஹாபாக்களை மதிப்பது என்பது வேறு, அவர்களை பின்பற்றுவது என்பது வேறு.
சஹாபாக்களை மதிப்பதில் நாம் எந்த குறையும் வைக்கவில்லை, இவர்களையெல்லாம் விட மிகவும் உயர்வான அந்தஸ்தை நம் உள்ளத்தில் அவர்களுக்காக ஒதுக்கி வைத்திருக்கிறோம்.

இக்கட்டான நிலைகளில் உறுதியான ஈமானிய நம்பிக்கையை உள்ளத்தில் கொண்டு இந்த மார்க்கத்திற்காக தியாகங்கள் பல செய்தவர்கள் அவர்கள்.
நாமெல்லாம் அத்தகைய சோதனைகளை சந்தித்திருந்தோமேயானால், இஸ்லாத்தில் நீடிப்போமா என்று கூட உத்திரவாதம் கிடையாது.
அந்த அளவிற்கு உயிராலும், உடைமைகளாலும் எண்ணிலடங்கா தியாகங்களை செய்தவர்கள் அவர்கள்.

ஹிஜ்ரத் செய்து இந்த மார்க்கத்திற்காக வந்தவர்களுக்காக தன் சொத்தில் சரி பாதியை கொடுத்தவர்கள் அந்த உத்தம சஹாபாக்கள், இதுவெல்லாம் சாதாரண விஷயமா?
நாம் மலையளவு தர்மம் செய்தாலும் அது சஹாபாக்காளின் கையளவு தர்மத்திற்கு ஈடாகாது என்றூ அல்லாஹ் சொல்வதை முழுமையாக நம்பி அவர்களை நாம் மிக உயர்வாய் மதிக்கிறோம்.

அதே சமயம், இப்படி உயர்வாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதனால் அவர்கள் பின்பற்றவும் தகுதியானவர்கள் என்று எப்படி எடுத்துக் கொள்வது?
பின்பற்றத் தகுதியானது அல்லாஹ்வின் வஹீ தான் என்று நாம் இதுவரை அறிந்து வைத்திருந்த எல்லா அடிப்படைக்கும் மாற்றமல்லவா அது?

ஒருவரை சிறந்தவர் என்று போற்றுவது என்பது வேறு, அவரை பின்பற்றுவது என்பது வேறு.

இந்த அடிப்படையை சரியாக புரியாததால் தான் இது போன்ற வாதங்களையெல்லாம் முன்வைத்து சஹாபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்கின்றனர்.

சஹாபாக்களின் சிறப்பைப் பற்றி இன்னும் ஏராளமான குர் ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் நமக்கு விளக்கத் தான் செய்கின்றது.

உங்களில் சிறந்தவர் என் காலத்தவரே. அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். உங்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் வரும். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப் படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல் : புகாரி 2651


இதையும் நாம் மறுக்கவில்லை. நபி (சல்) அவர்களது காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் அதிக தியாகம் செய்தவர்கள். அந்த வகையில் மற்ற எவரையும் விட சிறப்புக்குரியவர்கள் அவர்கள் தான்.
ஆனாலும், சிறப்புக்குரியவர் என்பதால் ஒருவர் பின்பற்ற வேண்டியவர் என்கிற நிலையை ஒரு போதும் அடைய மாடார்.

நாம் வாழும் காலத்தில் கூட எத்தனையோ பேர் தொழுகை நோன்பு என இபாதத்திலேயே வாழ் நாளை கழிப்பவராக காட்சி தருவார்.
கொடை வள்ளலாக காட்சி தருவார்.
மக்கள் எல்லாரும் அவரை சிறந்த மனிதர் என்றூ போற்றுவார்கள்.
அதற்காக அவர் என்ன சொன்னாலும் மார்க்கம் என்று கருதி விட முடியுமா?

இன்னும் சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு சான்றாக இவர்கள் முன்வைக்கும் இறை வசனங்களைப் பார்ப்போம்.

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்.  (9:100)

அல்லாஹ் பொருந்திக் கொண்டான் என்று வசனம் இருக்குமானால்ல் பொருந்திக் கொண்டான் என்று மட்டும் தான் அர்த்தமாகும். அல்லாமல்,  சஹாபாக்களின் கூற்றும் மார்க்க ஆதாரம் என்று கூற இந்த வசனம் இடமளிக்கிறதா? இல்லை !



இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித் தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன். (9:117)

சிரமமான காலகட்டத்தில் நபி (சல்) அவர்களுக்கு உறுதுணையாக நின்றது சஹாபாக்கள் தான் என்கிற வகையில் அவர்கள் சிறப்புக்குரியவர்கள், எனவே அவர்களை மன்னித்ததாக அலலஹ் இங்கு சொல்கிறான்.
அல்லாஹ் மன்னிக்கிறான் என்றாலே அவர்களும் தவறிழைப்பவர்கள், அவர்களுக்கு வஹீ வராது என்பது புரிகிறது.

எனவே சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்பதற்கு இந்த வசனத்திலும் எந்த சான்றும் இல்லை.

இன்னும்,

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். (57:10)

அவர்களுக்கு முன்பே நம்பிக்கை யையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக் கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர் களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர். (59:9)


இது போன்ற பல்வேறு வசனங்கள் சஹாபாக்கள் சிறப்புக்குரியவர்கள், அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றவர்கள் என்கிற கருத்தினை தருகின்றன.
இவற்றை நாம் மறுக்கிறோமா? இவையெல்லாம் பொய், சஹாபாக்கள் எந்த சிறப்புமற்றவர்கள் என்றா நாம் சொல்கிறோம்??
இல்லை.
அவர்களது சிறப்பை நாம் மிகவும் உயர்வாய் தான் மதிக்கிறோம், சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் மதிப்பதை விடவும் அதிகமாக மதிக்கிறோம்.
அதே சமயம், வஹீ என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் மட்டும் உள்ளது என்கிற அடிப்படைக்கும்,
வஹீ செய்தியை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்கிற அல்லாஹ்வின் கட்டளைக்கும் மாற்றமாக 
வஹீ செய்தி கிடைக்கப்பெறாத சஹாபாக்களின் கூற்றையும் மார்க்க சட்டமாக நாம் ஏற்க வேண்டும் என்பதை ஒரு போதும் நாம் அங்கீகரிக்க முடியாது.
சஹபாக்களே இன்றைக்கு உயிருடன் இருந்தால் கூட, நாம் கூறுகிற இந்த அடிப்படையை தான் சரி காண்பார்கள்.

தொடரும், இன்ஷா அல்லாஹ் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக