வெள்ளி, 26 ஜூன், 2015

கலிமாவின் சாராம்சம்



கலிமாவின் சாராம்சம் :

இஸ்லாத்தின் அடிப்படை கலிமா.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறில்லை என்பதும், முஹம்மது நபி (சல்) அவர்கள் அவனது தூதர் என்பதும் இந்த கலிமாவில் உட்பொருள்.

இந்த கலிமாவை ஒருவன் ஏற்றால் தான் அவனால் முஸ்லிமாக ஆக முடியும்.

கலிமாவை ஏற்பது என்றால் என்ன? வாயால் சொல்வதன் மூலம் கலிமாவை ஏற்றுக் கொண்டதாக முடியுமா? முடியாது.
வாயால் சொல்வது என்று பார்த்தால் அஃரிணைப் பொருட்கள் கூட சொன்னதையே திருப்பிச் சொல்லும், கிளி சொல்லும்.

ஆனால், கலிமாவை ஏற்பது என்பது உள்ளத்தால் அதை நம்புவது.
அதன் கருத்தை உள்ளத்தில் உள்வாங்குவது தான் அதை ஏற்பதற்கான முழு அர்த்தம்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் என்று சொல்லும் போது, அவனை எஜமானனாகவும் நம்மை அவனுக்கு அடிமையாகவும் நாம் நம்புகிறோம்.
அவனைத் தவிர வேறு எவருமே எனக்கு எஜமானன் இல்லை என்று நம்புகிறோம்.

இப்படி நம்பும் போது, மார்க்க கட்டளை என்று யாராவது சொன்னால் அதை நம்மால் ஏற்க முடியுமா? அது மேலேயுள்ள புரிதலில் அடங்குமா?
ஒருவனை எஜமானன் என்று நாம் ஏற்றுக் கொண்டு விட்டோம் என்றால், அவனைத் தவிர வேறு எஜமானன் இல்லை என்று நம்பி விட்டோம் என்றால் சட்டங்கள் இயற்றும் முழு அதிகாரம் அந்த எஜமானன் கைகளில் மட்டுமே தான் இருக்கிறது என்பதையும் சேர்த்தே தான் நாம் ஏற்கிறோம்.

அந்த எஜமானன் அல்லாத இன்னொருவரிடமிருந்து  ஒரு சட்டத்தை நாம் எற்றோம் என்றால் அவரை நாம் எஜமானன் ஆக்கி விட்டோம் என்று பொருள்.

அது போல், முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதராக நாம் ஏற்கிறோம் என்றால், அல்லாஹ்வின் கருத்தை தான் இந்த தூதர் நமக்கு சொல்வார் என்று நாம் நம்ப வேண்டும்.

இந்தியாவுக்கான வெளி நாட்டு தூதர் அமெரிக்கா செல்கிறார் என்றால், அவருக்கென்று சுய கருத்துக்கள் எத்தனை இருந்தாலும், அங்கே சென்று அவரது சுயக் கருத்த்துக்களை அவரால் பேச முடியாது.
இந்தியாவின் பிரதினிதியாக சென்ற காரணத்தால் இந்தியாவின் கருத்து எதுவோ அதை மட்டும் தான் அமெரிக்காவில் அவரால் பேச முடியும்.

தூதர் என்றாலே பொருள் அது தான்.

ஆக, முஹம்மது நபியை அல்லாஹ்வின் தூதராக நாம் நம்பினால், அந்த நம்பிக்கையில், அவர்கள் அல்லாஹ் சொன்னதை தவிர வேறு எதையும் சொல்ல மாட்டார்கள் என்கிற நம்பிக்கையும் சேர்ந்தே தான் இருக்கிறது. அப்படி தான் இருக்கவும் வேண்டும்.

இவ்விரண்டு விஷயங்கள் தான் கலிமா.
ஒருவர் புதிதாக இஸ்லாத்திற்கும் நுழைவதாக இருந்தாலும், இந்த இரு விஷயங்களை உளமாற அவர் நம்பினால் போதும். மூன்றாவதாக வேறெதையும் அவர் நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
அதனால் தான் இந்த கலிமாவே எதிர்மறையாக நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது.

அல்லாஹ் தான் வணக்கத்திற்குரியவன் என்று நேர் மறையாக போதிப்பதற்கு பதில், அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவரும் இல்லை என்று எதிர்மறையாக தம் கொள்கையை போதிக்கும் ஒரே சித்தாந்தம் இஸ்லாம் மட்டும் தான்.
இவ்வாறு எதிர்மறையாக போதிப்பதால் தான் அதன் கருத்து இன்னும் அழுத்தம் பெறுகிறது.
இதை சரியாக புரிந்து கொண்டோமேயானால், இந்த ஒட்டு மொத்த தலைப்பும் தெளிவாகி விடும்.

மார்க்கம் என்று நாம் எதை செய்வதாக இருந்தாலும், எதை நம்புவதாக இருந்தாலும், அதை அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும், அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்க வேண்டும்.
இது தவிர வேறு யார் சொன்னாலும், அது அடிப்படை கலிமாவுக்கு எதிரானது என்கிற வகையில் அதை நாம் நம்பக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக