வெள்ளி, 26 ஜூன், 2015

உரிமையாளனுக்கே அதிகாரம் !


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


--- நாள் : 1---

உரிமையாளனுக்கே அதிகாரம் !


எந்தவொரு விஷயத்தை நாம் எடுத்துக் கொண்டாலும், அதற்கென்று சில அடிப்படை விதிகள், சட்ட திட்டங்கள் இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, மனிதனை எடுத்துக் கொண்டால், அவன் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவுகிறான் என்றால், அதற்கென சில விதிமுறைகளையும் சட்டங்களையும் வகுத்து தான் செயல்படுகிறான்.
அவ்வாறு விதிகள் வகுக்கும் போது தான் அவ்விஷயம் வெற்றியடையும்.
அந்த பள்ளிக்கூடம் செயல்படும் நேரம், யாரை சேர்க்க வேண்டும், யாரை பணியை விட்டு நீக்க வேண்டும், மாணவர்களுக்கான சீருடை போன்ற எதுவாக இருந்தாலும், அதன் நிறுவனர் எவரோ அவர் தான் அவற்றை தீர்மானிப்பார். அவர் முடிவு செய்ததன் அடிப்படையில் தான் அவை செயல்படவும் செய்யும்.
இதில் இன்னொரு நபர் சென்று தலையிட முடியுமா? தலையிட்டால் அவர் ஒப்புக் கொள்வாரா?
என்றால் நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டார். எனது பொறுப்பில் உள்ள ஒரு விஷயத்திற்கு நான் தான் முடிவுகள் செய்வேன் என்கிற இறுமாப்பு மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கத் தான் செய்கிறது.

இன்னும், நாம் கட்டும் வீடாக இருந்தாலும், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் ஆடை, நாம் பயன்படுத்தும் வாகனம்.. என எதுவாக இருந்தாலும், நமக்கு சொந்தமான ஒரு காரியத்தில் முடிவுகள் எடுப்பது நாம் தான்.
இன்னொரு நபரின் தலையீட்டை நாம் விரும்ப மாட்டோம்.
அற்பமான மனிதனுக்கே இத்தனை உரிமையும் இறுமாப்பும் இருக்கும் போது, இந்த மார்க்கத்தின் சொந்தக்காரன் அல்லாஹ், அவனுக்கு அவன் சொந்தம் கொண்டாடுகிற இந்த மார்க்கம் மீது எத்தனை உரிமை இருக்கும்?

மனிதன், தனக்கு என்னவெல்லாம் உரிமைப்பட்டதோ அவற்றில் சட்டம் வகுக்கிறான். அதுவே, தொழுகை விஷயத்திலோ நோன்பு விஷயத்திலோ சட்டம் வகுப்பது என்றால் அதை மனிதன் செய்ய முடியுமா?
முடியாது. அவற்றின் சொந்தக்காரன் அல்லாஹ். அவனுக்கே அந்த அதிகாரம் அனைத்தும் உள்ளது.

இந்த அடிப்படையை விளக்குவது தான் இந்த தலைப்பின் நோக்கம்.

இஸ்லாத்தில் சட்டம் வகுக்கும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் இருக்கிறது.
இந்த கொள்கை தான் இஸ்லாத்தின் ஆணி வேர். இந்த கொள்கையை சொல்லக் கூடிய ஒரே ஜமாஅத்தாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் இருக்கிறது.
மற்ற எந்த இயக்கமோ ஜமாஅத்தோ இந்த அடிப்படையில் இருக்கிறதா என்றால் இல்லை.
முன்னோர்கள் என்றும் சஹாபாக்கள் என்றும் இமாம்கள் என்றும் கொள்கையில் தடம் புரண்டு தான் நிற்கின்றனர்.
நமக்கும் அவர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கும் சண்டை சச்சரவுகளுக்கும் கூட அடிப்படை காரணம் இது தான்.

அந்த இமாமிடம் இது மக்ரூஹ், இந்த இமாமிடம் இது முஸ்தஹப்,
அந்த இமாமிடம் இது ஹலால், இந்த இமாமிடம் இது ஹராம்.. என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றால் மேலே நாம் சொன்ன அடிப்படை கொள்கையில் அவர்கள் இல்லை என்பது தெளிவாகிறது.
ஒரு இமாம் ஒன்றை சொல்வார், இன்னொரு இமாம் அதற்கு நேர் மாற்றமாக இன்னொன்றை சொல்வார், நாம் எதை பின்பற்றுவது?
இப்படி மார்க்கத்தில் சுய கருத்துக்களை புகுத்துவதை மார்க்கத்தின் சொந்தக்காரனான அல்லாஹ் எப்படி அங்கீகரிப்பான்?

நமக்கு சொந்தமான ஒரு வீட்டில் இன்னொருவன் நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதை நாம் விரும்புவோமா?
நாம் நிர்வகிக்கும் ஒரு அலுவலகத்திலோ பள்ளிக்கூடத்திலோ இன்னொரு மனிதர் நுழைந்து அதிகாரம் செலுத்துவதை நாம் வேடிக்கை பார்ப்போமா?

ஒரு விஷயத்திற்கு யார் சொந்தக்காரரோ, யார் அதற்கு உரிமையாளரோ அவர் தான் அந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முழு உரிமை படைத்தவர் என்று அற்பத்திலும் அற்பமான இந்த மனிதனே எண்ணும் போது,
சர்வ வல்லமையும் படைத்த அந்த அல்லாஹ் அப்படி எண்ண மாட்டானா?
அவனுக்கு சொந்தமான இந்த மார்க்கத்தில் அதிகாரம் செலுத்தும் உரிமையை இந்த அற்பமான மனிதன் கையில் வழங்கி விடுவானா?


ஆக, அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அவன் தான் அதிபதி என்பதையும், மார்க்கத்தில் சட்டமியற்றும் முழு அதிகாரம் அவன் ஒருவனுக்கே இருக்கிறது என்பதையும் அடிப்படையில் நாம் புரிய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக