சனி, 27 ஜூன், 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 8)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 8குர் ஆன் மட்டும் தான் வஹியா? (தொடர்ச்சி)


வஹீ என்பது குர் ஆன் மட்டுமல்ல, மாறாக நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாழ்க்கையும் சேர்த்தது தான் வஹீ.
இதற்கு ஏராளமான சான்றுகளை குர் ஆனிலிருந்தே நாம் கண்டோம்.

சில தர்க்க ரீதியிலான சான்றுகளை முன்வைத்தும் இந்த கருத்தினை நிறுவலாம்.

நபிகள் நாயகம் (சல்) அவர்களை அல்லாஹ் தன் தூதராக நியமித்து மக்களிடையே பிரச்சாரம் செய்யுமாறு ஏவினான்.
அவர்களது பிரச்சாரம் மிகவும் இலகுவாகவா இருந்தது? இல்லை. 
சொல்லணா துயரங்கள், அடி உதைகள், போர்கள், படுகாயங்கள் என தமது தூதுத்துவ பணியை செவ்வனே செய்வதற்காக பல்வேறு தியாகங்களை நபி (சல்) அவர்கள் மேற்கொண்டார்கள்.

இந்த வழிகேடர்கள் சொல்வது போன்று, குர் ஆன் மட்டும் தான் நாம் பின்பற்ற வேண்டியது எனவும் நபி (சல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் நாம் பின்பற்ற தேவையில்லை எனவும் இருக்குமானால், நபி (சல்) அவர்களை அல்லாஹ் தூதராக அனுப்ப வேண்டிய அவசியமென்ன?

குர் ஆன் என்கிற நுலைக் கொண்டு நாம் நேர்வழியை அடைந்து விடுவோம், அதை விள‌க்குவதற்கு எவரும் தேவையில்லை என்பது தான் சரியான கொள்கையாக இருக்குமானால், குர் ஆனை அல்லாஹ் நேரடியாகவே அருளியிருக்கலாமே, ஒரு மலக்கை அனுப்பி இதை தந்து விட்டு செல்லுமாறு ஏவியிருக்கலாமே?

நமக்கு ஒரு தந்தி வருகிறது, அதை ஒரு தபால்காரர் நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பார். அத்துடன் அவரது வேலை முடிந்து விட்டது.
அந்த தந்தியை பிரித்துப் படித்து நமக்கு விளக்கித் தருகிற கடமை அவருக்கு இருக்கிறதா என்றால் இல்லை.

அப்படியொரு தந்தியைப் போன்று தான் இந்த குர் ஆனை இவர்கள் கருதுவார்கள் என்றால் அதை தருவதற்கு ஒரு மலக்கு போதும், மனிதர்களிலிருந்து ஒருவரை நியமித்து அதை அருள வேண்டிய அவசியம் இல்லை.
இன்னும் சொல்லப்போனால், மனிதர்களிலிருந்து ஒருவரை தூதராக அல்லாஹ் நியமிக்கும் போது இங்கு இரண்டு வேலை. முதல் வேலை இந்த மனிதர் இறைத் தூதர் தான் என்று மக்களை நம்ப வைக்க வேண்டும்.
அதன்பிறகு தான் இவர் கொண்டு வந்த குர் ஆன் இறை வேதம் தான் என்பதை நிறுவ முடியும்.

இவ்வாறு நபி (சல்) அவர்கள் தன் நபி தான் என்று அம்மக்களிடம் நிரூபிப்பதற்கு கூட பல முயற்சிகள் எடுத்ததை திருக் குர் ஆன் எடுத்துக் காட்டுகிறது.

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்' என்று அவர்களின் தூதர்கள் கூறினர். (14:11)

இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்ப தையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந் துவதையே இவரும் அருந்துகிறார்' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறை வனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதினார்களோ, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர். (23:34)


குர் ஆனைத் தவிர வேறு வஹீ இல்லையென்று இருக்குமானால், குர் ஆனை நாமே படித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்றிருக்குமானால் 
மனிதரிலிருந்து தூதரை அனுப்பி, அவரை உண்மையாளர் என்று நிரூபித்து, பின் அவர் கொண்டு வந்த வேதத்தை உண்மை என்று நிரூபிப்பதற்கு பதில் நேரடியாக அந்த வேதத்தை மட்டும் நிரூபித்தால் போதும்.
ஒரு மலக்கை அனுப்பி வேதத்தை தந்து விட்டு செல்ல சொல்லியிருக்கலாம்.
இன்னும் சொல்லப்போனால், மக்கத்து காஃபிர்கள் கூட அதை தான் விரும்பினார்கள்.

இவருடன் ஒரு மலக்கு வந்திருக்கக் கூடாதா, இவருக்கு பதில் ஒரு மலக்கு வந்திருக்கக் கூடாதா? அல்லாஹ் வானிலிருந்து நேரடியாக இதை ஒரு புத்தகமாக அனுப்பியிருக்கக் கூடாதா? என்றெல்லாம் அவர்கள் கேட்டதாக குர் ஆன் நமக்கு சொல்கிறது.

(முஹம்மதே!) ''வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும்'' என்று வேதமுடையோர்  உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மூஸாவிடம் கேட்டுள் ளனர். ''அல்லாஹ்வைக் கண்முன்னே எங்க ளுக்குக் காட்டு'' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது. (4:153)


இந்த வேதமானது வானிலிருந்து இறங்கியிருக்கலாமே என்று வேதக்காரர்கள் கேட்டதாக அல்லாஹ் இங்கு சுட்டிக் காட்டுகிறான்.


இப்படி எளிமையாக அவர்களுக்கு சத்தியத்தை உணர்த்துவதற்கு வழி இருந்தும் அதை செய்யாமல், மனிதர்களிலிருந்தே தூதரை அனுப்புகிறான் என்றால் இந்த குர் ஆனை அவர்கள் தமது வாழ்வில் விளக்கிக் காட்ட வேண்டும் என்கிற ஒரு நோக்கத்தைத் தவிர வேறில்லை.

ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்திடமும் மூஸாவையும் அவரது சகோதரர் ஹாரூனையும் நமது அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுடனும் அனுப்பினோம். அவர்கள் பெருமையடித்தனர். அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கூட்டமாக இருந்தனர். 
'இவ்விருவரின் சமுதாயத்தினர் நமக்கு அடிமைகளாக இருக்கும் நிலை யில் நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் நம்புவோமா?' என்றனர். (23:45 47)

நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் தவிர வேறில்லை. அளவற்ற அருளாளன் எதையும் அருளவில்லை. நீங்கள் பொய் சொல்வோராகவே இருக்கிறீர்கள்' என்று (அவ்வூரார்) கூறினர் (36:15)

'நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!' (என்றும் கூறினர்) (26:154)

'நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.' (26:186)

நம்மைச் சேர்ந்த ஒரு மனிதரையா நாம் பின்பற்றுவோம்? அப்படிச் செய்தால் வழி கேட்டிலும், சிரமத்திலும் நாம் ஆகி விடுவோம்.
நம்மிடையே இவருக்கு மட்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதா? இல்லை. இவர் கர்வம் கொண்ட பெரும் பொய்யர். (என்றனர்) (54:24,25)

அவர்களிடம் அவர்களது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வருவோராக இருந்தும், ஒரு மனிதர் எங்களுக்கு வழி காட்டுவதா? என்று அவர்கள் கூறி (ஏக இறைவனை) மறுத்துப் புறக்கணித்ததே இதற்குக் காரணம். அல்லாஹ் அவர்களை புறக்கணித்தான். அல்லாஹ் தேவை யற்றவன்; புகழுக்குரியவன். (54:6)

மேற்கண்ட எல்லா வசனங்களும் நமக்கு சுட்டிக்காட்டுவது என்ன?

மனிதர்களிலிருந்து ஒரு தூதரை அல்லாஹ் தேர்வு செய்த காரணத்தால் அம்மக்கள் அவ்வளவு எளிதாக அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்றுக் கொள்ளவில்லை.
எங்களைப் போல் உண்ணுகிறார், எங்களைப் போல தூங்குகிறார், எங்களைப் போல வியாபாரத்தில் ஈடுபடுகிறார், இவர் எப்படி தூதராக இருப்பார்? என்பதே அவர்களது முக்கியக் கேள்வி.

ஒரு வேளை நபி (சல்) அவர்களுக்குப் பதில் ஒரு மலக்கை நேரடியாக அனுப்பி குர் ஆனை அல்லாஹ் தந்திருந்தால் அப்போது இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது.

இருப்பினும், அல்லாஹ் அவ்வாறு செய்தானா? இல்லை.
நம்புவதற்கு மக்கள் சிரமப்படுவார்கள் என்றாலும் பரவாயில்லை, மனிதர்களிலிருந்து தான் தூதரை அனுப்புவேன் என்பதில் அல்லாஹ் மிகவும் உறுதியாகவே இருந்தான்.


அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்.

'மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?' என்று அவர்கள் கூறுவது தான், மனிதர்களிடம் நேர் வழி வந்த போது அவர்கள் நம்புவதற்குத் தடையாக இருந்தது
'பூமியில் வானவர்கள் நிம்மதியாக நடமாடி (வசித்து) வந்தால் அவர்களுக்கு வானத்திலிருந்து வானவரையே தூதராக அனுப்பியிருப்போம்' என்பதைக்  கூறுவீராக! (17:94,95)


மலக்குகளிலிருந்து தூதர் வேண்டும் என்று இவர்கள் கேட்பதாக இருந்தால் பூமியில் இவர்களெல்லாம் என்ன மலக்குகலாகவே இருக்கிறார்கள்? என்று அல்லாஹ் கேட்பதிலிருந்து என்ன புரிகிறது?

மலக்குகள் இருக்கும் சபைக்கு ஒரு வேதம் வந்தால் அதை விளக்கித் தர ஒரு மலக்கால் தான் முடியும்.
அதுவே, மனிதர்களுக்கு ஒரு வேதம் அருளப்பட்டால் மலக்கினால் அதை விளக்க முடியுமா?
குர் ஆனை விளக்குவது என்றால் மனிதர்களிடையே குர் ஆனின் போதனைகளின்படி வாழ்வதை தான் அது குறிக்கும்.
எப்படி வியாபாரம் செய்வது, எப்படி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது, எப்படி மலஜலம் கழிப்பது என்பன போன்ற காரியங்களை அவர் தமது வாழ்க்கையில் செய்து காட்ட வேண்டும்.
அப்படியானால் இதற்கு தகுதியானவர் மலக்கா அல்லது மனிதனா? என்று அல்லாஹ் கேட்கிறான்.

இன்னும் அழுத்தமாக அல்லாஹ் சொல்லும் போது, அப்படி ஒரு மலக்கையே நாம் அனுப்புவதாக இருந்தால் கூட அவரையும் மனிதராக மாற்றி தான் அனுப்புவோம் என்று சொல்லி, தூதர் என்பது மனிதர் தான் என்பதையும், மனிதராக இருந்தால் தான் வேதத்தை அவரால் விளக்க முடியும் என்பதையும் சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் தெளிவுப்படுத்துகிறான்.

இவருடன் வானவர் இறக்கப் பட்டிருக்க வேண்டாமா?' என அவர்கள் கூறுகின்றனர்.  வானவரை நாம் அனுப்பியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டு விடும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள். 
வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தி யிருப்போம். (6:8,9)வஹீ செய்தி என்பது குர் ஆன் மட்டுமல்ல, மாறாக அதை விளக்கும் தூதரின் வாழ்க்கையும் சேர்ந்தது தான்.
வேதம் மட்டும் போதும் என்றால் தூதரின் அவசியமே இல்லை.
இன்னும் சொல்லப்போனால், சில சமூகங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தூதர்கள் கூட அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

மூஸா நபிக்கு அல்லாஹ் தவ்ராத் எனும் வேதத்தை அனுப்பி, ஃஃபிர் அவ்ன் கூட்டத்தாரிடம் சென்று இந்த வேதத்தை விளக்குமாறு பணிக்கிறான்.
மூசா நபிக்கு இயல்பில் திக்கு வாய் எனும் குறை இருந்த காரணத்தால், இதை தெளிவாகவும் அழகாகவும் விளக்கிக் காட்டுவதற்காக தம்முடன் தமது சகோதரரான ஹாரூன் (அலை) அவர்களையும் அனுப்புமாறு மூஸா நபி வைத்த வேண்டுகோளை அல்லாஹ் ஏற்று ஹாரூன் நபியையும் சேர்த்து அனுப்புகிறான் என்றெல்லாம் குர் ஆன் சொல்கிறது என்றால் இங்கு நாம் புரிய வேண்டியது, வேதம் என்பது வெறுமனே வழிகாட்டாது. அதை விளக்கித் தந்து, வழிகாட்டுவதற்கு ஒரு தூதர் தேவை.

அல்லாஹ் திருக் குர் ஆனில் சொல்கிறான்

அவர்கள் முரண்பட்டதை அவர் களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்கு வதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது (16:64)

இந்த வேதமே எதற்கு தான் அருளப்பட்டது? நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அதை விளக்கித் தர வேண்டும் என்பதற்காக தான் இது அருளப்பட்டது என்கிறான் அல்லாஹ்.

ஆக, வெறுமனே வேதத்தை வாங்கி நமக்கு தருவதோடு நபி (சல்) அவர்களின் வேலை முடிந்து விடவில்லை, மாறாக அதை நமக்கு விளக்கித் தருகிற இன்னொரு வேலையும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம் (16:44)

இந்த வசனத்தின் வாயிலாகவும் இதே கருத்தை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

எப்படி அவர்கள் ஓதிக் காட்டக் கூடிய வேதம் என்பது வஹீயோ அது போன்று, நபி (சல்) அவர்கள் அந்த வேதத்திற்கு தருகிற விளக்கமும் வஹீ தான்.
இந்த அடிப்படையை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னும் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்.

அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் 67  கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார். (2:151)

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும்  கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழி கேட்டில் இருந்தனர் (3:164)

இந்த வசனங்களின் மூலமும் நபி (சல்) அவர்களின் பணிகள் என்னன்ன என்பதை அல்லாஹ் விளக்குகிறான்.

வேத வசனங்களை ஓதுவார், அதை கற்றும் தருவார் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்து வெறுமனே வேதத்தை தருவதோடு நபியின் பொறுப்பு நிறைவுபெற்று விடவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.
ஓதிக் காட்டிய வசனங்களை கற்றும் தர வேண்டும்.

கற்றுத் தருதல் என்றால் இவ்விடத்தில் என்ன பொருள்? அலிஃப், பே எனும் அரபு வார்த்தையை கற்றுத் தருவதையா அல்லாஹ் சொல்கிறான்? மொழியை கற்றுத் தருவதைப் பற்றியா அல்லாஹ் சொல்கிறான்?
இல்லை.
நபி (சல்) அவர்களுக்கு அரபுசொற்களை வாசிக்கவும் தெரியாது, எழுதவும் தெரியாது எனும் போது, வேதத்தை கற்றுத் தருதல் என்பது நிச்சயம் மொழியைக் குறிக்கவில்லை.
மாறாக, அந்த வசனங்களை விளக்குதல், தன் வாழ்க்கையில் அதை பிரதிபலிக்கச் செய்து நமக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்தல், இது தான் வேதத்தைக் கற்றுத் தருதல் என்பதற்கான பொருள்.

இதை அல்லாஹ் கீழ்காணும் வசனத்தில் தெளிவுப்படுத்துகிறான்

அவனே எழுதப்படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களைக் கூறுகிறார். அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் 67  கற்றுக் கொடுக்கிறார்.   அவர்கள் இதற்கு முன் தெளிவான வழி கேட்டில் இருந்தனர். (62:2)

எழுதப்படிக்காத சமூகத்தில் இருந்து வந்த தூதர் தான் இந்த வசனத்தை கற்றுக் கொடுத்தார்கள் என்று இந்த வசனம் தெளிவுப்படுத்துகிறது.

அந்த அடிப்படையில் நாம் சிந்திக்கும் போது, வஹீ என்பது குர் ஆன் மட்டுமல்ல, மாறாக, நபி (சல்) அவர்களின் வாழ்க்கையும் சேர்ந்தது தானென்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் புரிகிறது.

நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய உதாரணத்தின் படி, ஒரு தந்தியை ஒரு தபால்காரர் நம்மிடம் கொண்டு வந்து தருகிறார்.
அந்த தந்தியை விளக்கித் தர அந்த தபால்காரரின் உதவியை நாம் நாடுவோமா? மாட்டோம்.
நம்மிடம் கொண்டு வந்து தருவதோடு அவரது வேலை முடிந்து விட்டது.

ஆனால், இந்த வேதத்தை கொண்டு வந்த நபி (சல்) அவர்கள் அப்படியில்லை.

அல்லாஹ் இது பற்றி சொல்வதைப் பாருங்கள்.

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பி னோம். (14:4)

தூதராக யாரை அனுப்பினாலும், அந்த சமுதாயம் என்ன மொழியை பேசுகிறதோ அந்த மொழி பேசுபவரையே அனுப்பினேன் என்று அல்லாஹ் சொல்வதிலிருந்தும் நமக்கு புலப்படுவது யாதெனில், வேதத்தை தந்து விட்டு செல்வது மட்டும் நபியின் வேலையல்ல, தந்ததோடு அதை விளக்கியும் காட்ட வேண்டும்.
அதனால் தான் அதே மொழி பேசக்கூடியவரை அல்லாஹ் தேர்வு செய்கிறான்.

மேற்கண்ட அடுக்கடுக்கான சான்றுகள் அனைத்தும் குர் ஆன் மட்டும் போதும் என்கிற வழிகேட்டுக் கூட்டத்தாருக்கு தெளிவான மறுப்பாக அமைந்திருக்கிறது.
குர் ஆன் மட்டும் தான் வஹீ என்பதை குர் ஆனே ஒப்புக் கொள்ளவில்லை.
குர் ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்கள் குர் ஆனையே நம்பவில்லை என்பது தான் இதன் இறுதி நிலையாக இருக்கிறது.

இந்த வழிகேட்டுக் கூட்டத்தாரின் கொள்கை அனைத்தும் தவறானது, கொடிய இறை நிராகரிப்பு என்பதையெல்லாம் நாம் புரிகிற அதே வேளை, ஏன் இந்த கொள்கையை இவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதையும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எந்த சித்தாந்தத்தை எடுத்துக் கொண்டாலும், அதை மேம்போக்காக சொல்லி, விட்டு விட்டால் அதில் மனிதன் தன் சுய கருத்துக்களை சொருகிக் கொள்ள பல வசதிகள் இருக்கும், அந்த சித்தாந்தத்தைப் பின்பற்றுவதற்கும் இலகுவாக இருக்கும்.

அதுவே, அதை தெளிவான முறையில் விளக்கிச் சொல்லும் போது, அதை பின்பற்றுவது என்று எடுத்துக் கொண்டாலும், சுய விருப்பு வெறுப்புகளை அதன் மீது மனிதன் திணிப்பதை எடுத்துக் கொண்டாலும், சாத்தியமில்லை.

தொழுகையை பேணுமாறு அல்லாஹ் குர் ஆனில் மேம்போக்காக சொல்கிறான்.
அதுவே, தமது தூதர் வாயிலாக தொழுகை என்றால் என்ன, அதை எப்படி தொழ வேண்டும், ஒரு நாளில் எத்தனை முறை தொழ வேண்டும், எந்தெந்த நேரத்தில் தொழ வேண்டும் என எல்லா சட்டதிட்டங்களையும் ஆழமாக விளக்கி விடுகிறான்.

இப்போது, குர் ஆன் மட்டும் போதும் என்று சொல்லக்கூடிய இந்த வழிகேடர்கள் தொழுகையை பேணுகிறார்களா? மாட்டார்கள்.

ஏனென்று சொன்னால், குர் ஆனில் சொல்லப்படும் தொழுகை என்பது அகராதிப்படி நாம் இன்று செய்கின்ற தொழுகையான ஒளு செய்து, தக்பீர் சொல்லி ருகூஹ், சஜதா என்று செய்கிறோமே அதை குறிக்காது, மாறாக, துஆ, பிரார்த்தனை என்கிற பொருளில் தான் பயன்படுகிறது என்று இவர்களாக சுய விளக்கமொன்றினை கொடுப்பார்கள்.

கொடுத்து விட்டு, இதோ நாங்களும் துஆ செய்கிறோம், ஆகவே நாங்களும் தொழுது விட்டோம் என்பார்கள்.

சகாத் கொடுக்குமாறு அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்.
எப்படி கொடுப்பது, எவ்வளவு கொடுப்பது என்பதையெல்லாம் நபி (சல்) அவர்கள் தான் விளக்குகிறார்கள்.

இதைப் பற்றி இந்த வழிகேடர்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா?
சகாத் என்பதற்கான அகராதி பொருள் தூய்மை என்பது தான்.
நாங்கள் தூய்மையாக தான் இருக்கிறோம் என்பார்கள்.

அல்லாமல், ஹதீஸை பின்பற்ற சென்றால் சகாத் என்கிற பெயரில் பணம் செலவாகும், அதிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் மார்க்கத்தை இவர்களது சுய கருத்தின் மூலம் வளைக்க முனைகின்றனர்.

இன்னும் ஹஜ் பற்றி எடுத்துக் கொண்டாலும் கூட, அகராதிப் பொருள் என்று பார்க்கும் போது " நாடுதல்" என்பது பொருள்.
ஹதீஸே தேவையில்லை என்று சொல்லி, ஹஜ் எனும் மகத்தான புனிதப் பயனத்தையே மறுக்கும் இவர்கள், நாங்களும் உள்ளத்தால் அல்லாஹ்வை நாடத் தான் செய்கிறோம் என்று அல்லாஹ்வின் வஹீயை கேலிக்கூத்தாக்கும் நிலையை நாம் காண்கிறோம்.தொடரும், இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக