வெள்ளி, 26 ஜூன், 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 7)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 7
நபிகள் நாயகமே இறுதி நபி (தொடர்ச்சி) :

முஹம்மது நபி (சல்) அவர்கள் தான் இறுதி நபி என்பதற்கு குர் ஆனிலும் ஹதீஸிலும் இன்னும் ஏராளமான சான்றுகளை அல்லாஹ் நமக்குத் தந்திருக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்: 1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன். 2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது. 3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. 4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிட மாகவும் ஆக்கப்பட்டுள்ளது. 5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன். 6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிலி) நூல் : முஸ்லிம் (812)

ஆறு சிறப்புகள் தமக்கு உள்ளதாக சொன்ன நபி (சல்) அவர்கள்,  நான் மனித இனம் முழுமைக்கும் நபியாக ஆக்கப்ப்ட்டிருக்கிறேன் என்பது ஐந்தாம் சிறப்பு என்று சொல்லி விட்டு, தொடர்ந்து, நான் நபிமார்களுக்கு முத்திரையாக இருக்கிறென் என்று சொல்கிறார்கள் என்றால்
இங்கு சொல்லப்படும் முத்திரை என்பதற்கு இறுதி நபி என்பதைத் தவிர வேறு பொருள் இருக்கவே முடியாது.
மனித குலம் முழுமைக்கும் நபியாக இருப்பதால் எனக்குப் பிறகு வேறு நபி வர வேண்டிய அவசியமில்லை என்பதை தெள்ளத் தெளிவாக விளக்குகிறார்கள்.

மற்றொரு ஹதீஸை பார்ப்போம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி (3455)


முஹம்மது நபிக்கு பிறகு வேறு நபி வரவும் மாட்டார், வர வேண்டிய அவசியமும் இல்லை என்பதை தெளிவாக சொல்கின்றது இந்த ஹதீஸ்.

தவிர, இந்த ஹதீஸில் நபி (சல்) அவர்கள் பயன்படுத்திய வாசகத்தையும் நாம் கவனிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
எனக்குப் பிறகு தூதர் இல்லை என்று சொல்லாமல், எனக்குப் பின் "எந்த இறைத்தூதரும்"  இல்லை என்கிறார்கள்.

கடந்த நூற்றாண்டில் நானும் நபி என்று சொன்ன பொய்யர்கள் பின்னால் திரண்ட கூட்டம், அவனைப் பற்றி சொல்லும் போது, இவர் முஹம்மது நபியைப் போன்ற நபி அல்ல, இவர் சின்ன நபி, இவர் முஹம்மது நபியின் நிழல் என்றெல்லாம் சொத்தை வாதங்களை வைத்து தங்கள் கொள்கையை நியாயப்படுத்த முனைந்தனர்.
அத்தகைய அனைத்து சொத்தை வாதங்களுக்கும் பதில் சொல்கிறது இந்த ஹதீஸ்.

முஹம்மது நபிக்குப் பிறகு சின்ன நபியும் இல்லை, பெரிய நபியும் இல்லை, ஒரே செய்தியை மீண்டும் எடுத்துச் சொல்ல வந்த தூது நபி என்கிற வகையான நபி இல்லை, நிழல் நபி இல்லை,
"எந்த நபியும் இல்லை !!!

மற்றொரு ஹதீஸில் நபி (சல்) அவர்கள் இதே கருத்தை இன்னும் அழுத்தமாக தெளிவுப்படுத்துகிறார்கள்.

ஜுபைர் பின் முத்இம் (ரலிலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எனக்கு (ஐந்து) பெயர்கள் உள்ளன. நான் "முஹம்மத்' (புகழப்பட்டவர்) ஆவேன். நான் "அஹ்மத்' (இறைவனை அதிகமாகப் புகழ் பவர்) ஆவேன். நான் "மாஹீ' (அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் (ஏக) இறை மறுப்பை அழிக்கின்றான். நான் "ஹாஷிர்' (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள் என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்றுதிரட்டப்படுவார்கள். நான் "ஆகிப்' (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு வேறெந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (4342)

நான் தான் ஆகிப் (இறுதி), எனக்குப் பிறகு வேறெந்த தூதரும் கிடையாது என்று நேரடியான வார்த்தைகளின் மூலமும் இந்த செய்தியை நபி (சல்) அவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

இவை தவிர, அல்லாஹ் தமது திருமறையில் பல்வேறு வசனங்கள் வாயிலாக முஹம்மது நபியுடன் நபித்துவத்தை நிறைவு செய்து விட்ட தகவலை தெரிவிக்கிறான்.

அந்த வசனங்களின் தொகுப்பை கீழே காண்போம்.

''மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். (7:158)

முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம். (21:107)

(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழி முறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியதாக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன். (25:1)

இது மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக் கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக் கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள் வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற் காகவும் (இது அருளப்பட்டுள்ளது. (14:52)

மனிதர்களே! நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவன்' என்று (முஹம்மதே!) கூறுவீராக! (22:49)

அவர்களில் மற்றவர்களுக்காகவும்   (அவரை அனுப்பினான்) அவர்களுடன் இவர்கள் இன்னும் சேரவில்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (62:3)

இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது' 187 எனக் கூறுவீராக! (6:19)

இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை (38:87)

மேற்கண்ட எல்லா வசனங்களும், நபி (சல்) அவர்கள் ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் நபியாக அனுப்பப்பட்டிருக்கிறார்கள் எனவும் 
இந்த குர் ஆன் யாரையெல்லாம் சென்றடைகிறதோ அவர்கள் வாழும் காலம் வரை முஹம்மது தான் நபி என்பதையும் தெளிவுப்படுத்துகிறது.

இவ்விடத்தில் நமக்கு ஒரு கேள்வி எழலாம்.
முஹம்மது நபி (சல்) அவர்களுக்குப் பிறகு வேறு நபி கிடையாது என்று ஒரு பக்கம் சொல்கின்ற நாம், இன்னொரு பக்கம் ஈஸா நபி உயிரோடு வானில் உயர்த்தப்பட்டு இருக்கிறார் என்பதையும் கியாமத் நாளுக்கு சமீபமாக இவ்வுலகிற்கு மீண்டும் வருவார் என்றும் திருக் குர் ஆன் வசனங்களும் பல்வேறு ஹதீஸ்களும் சொல்கின்றனவே, இதை எப்படி நம்புவது? என்கிற சந்தேகம் நமக்கு எழலாம்.

இத்தகைய சந்தேகத்திற்கும் நபி (சல்) அவர்கள் விளக்கமளித்து சென்றிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள் வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கியே நிற்பார்கள். பிறகு மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வருவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர், "வாருங்கள், வந்து எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்துங்கள்!'' என்று (ஈசாவிடம்) கூறுவார். அதற்கு ஈசா (அலை) அவர்கள், "இல்லை (உங்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுவிக்க மாட்டேன்). உங்களில் சிலர்தாம் மற்ற சிலருக்குத் தலைவராக இருப்பார்; இது, அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும்'' என்று கூறிவிடுவார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல்: முஸ்லிம் 225

தாம் வாழ்ந்த காலத்தில் ஈஸா நபி அவர்கள் தொழுவிக்கும் இமாமாக இருந்தார்கள். இப்போது அவர்கள் முன்னின்று தொழும் இமாமாக இருக்கவில்லை. இந்த உம்மத்தைப் பின்பற்றியே தொழுகின்றார்கள். 
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஈஸா நபியவர்கள் இந்தச் சமுதாயத்தில் (உம்மத்தில்) ஒருவராகத் தான் வருகின்றார்கள். நபியாக வரவில்லை. 

அதாவது, ஈஸா நபிக்கு அவர்களது ஷரீஅத் இப்போது இல்லை. 
அவர்கள் மீண்டும் வரும் போது முஹம்மத் (ஸல்) அவர்களுடைய ஷரீஅத்தை தான் பின்பற்றுவார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் சான்றாக நிற்கிறது.

தஜ்ஜாலை கொலை செய்கின்ற பொறுப்பை அல்லாஹ் அவருக்கு வழங்கியிருக்கிறான், அந்த பொறுப்பினை நிறைவேற்றுவதற்காகவும், எல்லாம் மனிதர்களும் இவ்வுலகில் மரணித்து அடக்கம் செய்யப்பட வேண்டும் என்கிற அல்லாஹ்வின் பொது விதியை மெய்ப்பிக்கும் பொருட்டுமே ஈஸா நபி மீண்டும் வருகிறார்கள், இதை தவிர அவர்களுக்கு வேறெந்த கடமையும் இல்லை.

நபி (சல்) அவர்களுக்குப் பிறகு எந்த வஹீயும் எவருக்கும் வராது என்பதற்கு இத்தனை சான்றுகள் அடுக்கடுக்காக இருந்தும் கூட, இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு பொய்களையும் கட்டுக்கதைகளையும் நம்பி ஈமானை இழக்ககூடிய சமூகத்தார் நம்மில் இருந்து வருவது தான் வேதனைக்குரிய விஷயம்.

தப்லீக் நுற்களையும் பயான்களையும் கேட்கும் போது, நபிக்கு பிறகு வஹீ வந்த கதைகளை எந்தவித சங்கூஜமுமின்றி கட்டவிழ்த்து விடுவதை நாம் காணலாம்.

இந்த காலத்தில் இப்படியொரு மகான் இருந்தார், அவர் மரணித்த பிறகு கப்ரில் அடக்கப்பட்ட போது கப்ரில் ஒளி வீசியது, கப்ர் விசாலமானது, சொர்க்கம் காட்டப்பட்டது, உம்மை நான் பொருந்தி கொண்டேன் என்று அல்லாஹ் அவரிடம் சொன்னான், என்றெல்லாம் கதைகளை அவிழ்த்து விடுவதில் இவர்களுக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை.
கப்ரில் நடப்பவையெல்லாம் மறைவானவை, அதை நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அல்லாஹ்வின் வஹீ வேண்டும், அந்த வஹீயை பெற்றுத் தர ஒரு நபி வேண்டும்.

அப்படியிருக்க, இவர்களுக்கு அந்த மஹானின் கப்ரில் நடப்பவை குறித்து எந்த வஹீ வந்தது? யார் அந்த வஹீயை பெற்று இவர்களுக்கு சொன்னது?
இந்த கேள்விகளையெல்லாம் அவர்களை நோக்கி நாம் கேட்காத காராணத்தால் தான் இவ்வாறு பொய்களை ஜோடித்து நம்மை ஏமாற்றித் திரிகின்றனர்.

வஹீயை கொண்டு மட்டுமே சொல்ல முடிகின்ற செய்திகளையெல்லாம் இவர்கள் சர்வ சாதாரணமாக தங்கள் புத்தகங்களிலும் பயான்களிலும் எழுதியும் பேசியும் மக்களின் மூளையை சலவை செய்து வருகின்றனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.குர் ஆன் மட்டும் தான் வஹியா?

முஹம்மது நபிக்கு பிறகு வேறு வஹீ இல்லை என்பதை தெளிவாக அறிந்து கொண்ட நாம், இந்த சமூகத்தில் ஊடுருவியுள்ள மற்றொரு விஷக்கிருமியையும் அறிந்து கொள்ள வேண்டும்.

அது தான், குர் ஆன் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவையில்லை என்று சொல்கின்ற வழிகெட்ட கூட்டம்.

அல்லாஹ் அருளியதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதாக குர் ஆன் சொல்கின்ற வசனங்களை எடுத்துக் காட்டி, அல்லாஹ் அருளியது குர் ஆன் மட்டும் தான் என்றும், நபி (சல்) அவர்களின் சொல், செயல் என்பவை அல்லாஹ் அருளியவை இல்லை என்றும் சொல்லி வருகின்றனர்.

இந்த எந்த அளவிற்கு அபத்தமான கொள்கை என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் ஏற்றுக் கொண்ட குர் ஆனிலிருந்து மட்டுமே இவர்களுக்கு மறுப்புகள் சொல்ல முடியும்.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (42:51)

இவ்வசனத்தில், வஹீ செய்தி எந்த முறைகளிலெல்லாம் அருளப்படுகிறது என்பதை அல்லாஹ் விளக்குகிறான்.

அல்லாஹ் ஒரு நபியை தேர்வு செய்து அவருக்கு வஹீ செய்தியை இறக்குகிறான் என்றால் மூன்று வழிகளை அதற்கு அல்லாஹ் தேர்வு செய்கிறான்.

1. உள்ளங்களில் இடப்படும் செய்தி

2. திரைக்கப்பால் இருந்து நேரடியாக பேசுவது மூலம்

3. மலக்குகளை அனுப்பி தரப்படும் செய்தி

ஆக, மலக்குகளின் மூலம் அனுப்பப்பட்ட செய்தியில், குர் ஆனை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்கின்றவர்களுக்கு அதே குர் ஆனில் மறுப்பு இருக்கின்றது.

குர் ஆனை மட்டும் நம்ப வேண்டும் என்று சொல்பவர்கள் இந்த வசனத்தையும் நம்பியாக வேண்டும், அப்படி நம்பினால் குர் ஆன் தவிர, இன்னும் இரண்டு வழிகளில் வஹீ வந்திருக்கிறது என்பது அதிலேயே நிரூபணமாகி விடும்.


திரை மறைவிலிருந்து அல்லாஹ் நபிமார்களிடம் பேசுவான் என்பதற்கு சான்றாக மூஸா நபியிடம் அல்லாஹ் உரையாடியதை எடுத்துக் கொள்ளலாம். அல்லாஹ் மூஸா நபியுடன் உரையாடினான் என்று பல்வேறு இறை வசனங்கள் கூறுகின்றன.
அல்லாஹ்வை பார்க்க வேண்டும் என்று மூஸா நபி கேட்டதும், அதற்கு அல்லாஹ் பதில் சொன்னதும் திரை மறைவில் அல்லாஹ்வுக்கு மூஸா நபிக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள் தான்.

இது போக, உள்ளத்தில் போடப்படும்`செய்திகளையும் வஹீ என்றே அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!' என்று உமது இறைவன் தேனீக் களுக்கு அறிவித்தான். (16:68)

இதில் தேனீக்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்ததாக தான் சொல்லிக் காட்டுகிறான்.

ஆக, வஹீ என்பது திருக் குர் ஆன் மட்டும் இல்லை. குர் ஆனில் இல்லாத பல்வேறு சட்டங்களை வஹீ மூலமாக தான் நபி (சல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளினான்.
தொழுகையை பேணுங்கள் என்று குர் ஆன் மூலமாக அல்லாஹ் தந்த வஹீயில் இருக்கிறது.
அதுவே, எப்படி தொழ வேண்டும் என்று குர் ஆனில் அல்லாஹ் சொல்லியிருக்கிறானா என்றால் இல்லை.
அதை நபி (சல்) அவர்கள் செயல்வடிவில் விளக்கிக் காட்டினார்கள்.
அதை சுயமாகவே செய்தார்கள்?
அல்லாஹ்வின் கட்டளைப்படி தான் அதை செயல்படுத்திக் காட்டினார்கள் எனும் போது, நபி (சல்) அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் சில எண்ணங்களை இட்டு இதன் படி செய்யுமாறு கட்டளையிடுவான் என்று புரிகிறது.

இதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள உதவும் சில ஆதாரங்களைப் பார்ப்போம்.

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனு மதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்! (2:187)

இந்த வசனத்தில், நோன்பு காலங்களில் இரவில் மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முதலில் இருந்த தடை இன்று முதல் நீக்கப்படுகிறது, இனி முதல் இரவில் மனைவியுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ் சட்டம் அருளுகிறான்.

அதாவது, இதற்கு முன் அத்தகைய தடை இருந்ததாகவும், இப்போது முதல் அந்த தடை நீக்கப்படுகிறது என்றும் இந்த வசனம் சொல்கிறது.
அல்லாஹ் அருளிய சட்டங்கள் குர் ஆனைத் தவிர வேறு இல்லை என்கிற கொள்கை சரியென்றால், நோன்பு காலங்கள் இரவில் மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு இடப்பட்டிருந்த தடையும் இதே குர் ஆனில் இருந்திருக்க வேண்டும்.

அப்படியொரு வசனத்தை இந்த வழிகேடர்களால் எடுத்துக் காட்ட இயலுமா?

ஆக, முன்பு ஒரு சட்டம் இருந்தது என்று அல்லாஹ் சொல்கிறான், ஆனால் அந்த சட்டம் இடப்பட்ட செய்தி குர் ஆனில் இல்லை. அப்படியானால், குர் ஆன் அல்லாமல் வேறு வழிகளிலும் நபி (சல்) அவர்களுக்கு அல்லாஹ் சட்டமியற்றினான் என்று தெளிவாகிறது.

மற்றொரு சான்றை பாருங்கள்.

இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர் வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்.
(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்பு வீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள் (2:143, 144)

மக்காவில் நபி (சல்) அவர்கள் இருந்தது வரை கஃபதுல்லாஹ்வை தொழுகைக்கான கிப்லாவாக கருதி வந்தார்கள். அல்லாஹ்வும் அவ்வாறே சட்டமியற்றியிருந்தான்.
பின் மதினா வந்தபோது, கிப்லா பைத்துல்முகத்தஸ் நோக்கி மாற்றப்பட்டது.
இருந்தாலும், நபி (சல்) அவர்களுக்கு கஃபாவே விருப்பமுள்ளதாக இருந்த காரணத்தால் அல்லாஹ் அவ்வாறே சட்டமியற்ற மாட்டானா என்று எதிர்பார்த்த வண்ணம் இருந்தார்கள் என்றும், அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இன்று முதல் கஃபாவின் பக்கம் உன் முகத்தை திருப்பிக் கொள் என்பதாக அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்.

இதில் நாம் எழுப்பும் கேள்வி என்னவெனில், மதினாவிற்கு சென்ற போது பைத்துல் முகத்தஸ்ஸை கிப்லாவாக மாற்றிஅ அல்லாஹ் சட்டமியற்றினானே, அந்த சட்டம் குர் ஆனில் எங்கே?

பைத்துல் முகத்தஸை கிப்லாவாக ஆக்கி இடப்பட்ட சட்டம் குர் ஆனில் இல்லை. இதற்கு முன் இவ்வாறு இருந்த சட்டத்தை இப்போது முதல் மாற்றுகிறோம் என்று அல்லாஹ் சொல்வது தான் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அப்படியானால், குர் ஆன் தவிர வேறு வழிகளிலும் நபி (சல்) அவர்களுக்கு வஹீச் சட்டம் அருளப்படும் என்பது இதிலிருந்து விளங்குகிறது.

மற்றொரு சான்றை இங்கு காண்போம்.

பத்ர் யுத்தத்தின் அடிப்படையைப் பற்றி அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்.
நபி (சல்) அவர்கள் மதினா சென்று ஆட்சியமைத்த பிறகு, மக்காவிலிருந்து அபு சுஃபியான் தலைமையில் ஒரு வியாபாரக் கூட்டம் மதினா வழியாக செல்கிறது.

ஆட்சியாளர் என்கிற அடிப்படையில் தமது ஆட்சிக்கு கீழ் உள்ள நிலப்பரப்பையும் எல்லையையும் அந்நியர்களின் ஊடுருவலிலிருந்து பாதுகாக்கும் கடமையை பெற்ற நபி (சல்) அவர்கள், அந்த வியாபாரக் கூட்டத்தாரை தடுத்து நிறுத்துவதற்காக படை திரட்டி செல்கிறார்கள்.

இந்த செய்தியறிந்த அபுசுஃபியான், மக்காவில் காஃபிர்களின் உதவியை நாடுகிறார்.
செய்தியறிந்து மக்கத்து காஃபிர்களும், மதினா நோக்கி படைதிரட்டி வர, நபிகள் நாயகம் (சல்) அவர்கள் முன் இரண்டு கூட்டம் போருக்கு தயாராக வருகிறது.
இவ்விரண்டில், இந்த வியாபாரக் கூட்டத்தாருடன் போர் செய்தால், போரில் எதிரிகளிடமிருந்து கிடைக்கும் கனிமத் பொருட்களை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று சஹபாக்கள் கருதுகிறார்கள்.

மக்கத்து காஃபிர்களை எதிர்த்து போரிட்டால், அவர்களது கொட்டத்தை அடக்கி, இனி இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் தலைதூக்காதவாறு செய்து விடலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

இது பற்றி அல்லாஹ் குர் ஆனில் சொல்லும் போது,

''எதிரிகளின் இரண்டு கூட்டத்தி னரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்)'' என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்!  ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் 155 மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான். (8:7)

ஆயுதம் தாங்காத வியாபாரக் கூட்டத்தாருடன் போர் செய்ய நீங்கள் விரும்பினாலும், அல்லாஹ்வின் வாக்குறுதியானது, இரண்டு கூட்டத்தில் எதனோடு நீங்கள் போரிட்டாலும் உங்களுக்கு வெற்றி தான் என்பதே.. என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயமும், குர் ஆன் மட்டும் தான் வஹி என்று கூறுகிற வழிகேடர்களிடம் நாம் முன்வைக்கும் கேள்வியும் என்னவென்றால்,

இரண்டு கூட்டத்தாரில் எவரோடு நீங்கள் போரிட்டாலும், நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்பதாக இந்த வசனத்தில் அல்லாஹ் வாக்குறுதி அளிக்கவில்லை.
மாறாக, முன்பு நான் வாக்குறுதி அளித்திருந்தேனே, அதை எண்ணிப் பாருங்கள் என்று, முன்பு சொன்ன வாக்குறுதியினை இவ்வசனத்தில் நினைவுகூரத்தான் செய்கிறான்.

அப்படியானால், முன்பு அல்லாஹ் தந்திருந்த வாக்குறுதி குர் ஆனில் எங்கே?
முன்பு வாக்குறுதி தந்தேன் என்று இந்த வசனம் சொல்கிறது என்றால், அந்த வாக்குறுதியும் வஹீ தான்.
அந்த வஹீ குர் ஆனில் எங்குமே இல்லையென்றால், பின் நபி (சல்) அவர்களுக்கு எந்த வழியில் இந்த வாக்குறுதியை அல்லாஹ் அளித்தான்?

ஆக, வஹீ என்பது திருக் குர் ஆன் மட்டும் தான் என்கிற கொள்கை அடிப்படையிலேயே தவறானது என்பதற்கு மேற்கூறிய வசனங்கள் சான்றாக நிற்கின்றன.

நபி (சல்) அவர்களிடம் குர் ஆன் மூலமாகவும் அல்லாஹ் பேசினான், அதுவல்லாமல், உள்ளத்தில் செய்திகளை இட்டு அதன் மூலமும் வஹீயினை பரிமாறினான்.

பைத்துல் முகத்தஸ்ஸை கிப்லாவாக ஆக்கியதும், ரமலானில் இரவு நேரத்தில் மனைவியுடன் கூடுவதற்கு தடை விதித்திருந்த சட்டமும், இரண்டு கூட்டத்தாரில் எவரோடு போரிட்டாலும் அதில் உங்களுக்கு வெற்றி தான் என்பதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதியும் நபி (சல்) அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் இட்ட வஹீ தானே தவிர, இவையெதுவும் குர் ஆனி இல்லை.

குர் ஆன் தவிர, வேறு வஹீ செய்திகளும் உண்டு என்பதற்கு இவரை தெளிவான சான்றுகள்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக