செவ்வாய், 23 ஜூன், 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 5)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 5


இரண்டாக பிரிக்கப்படும் நபியின் வாழ்க்கை :


இதுவரை, அல்லாஹ் அருளியவற்றை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும் என்பதையும், இந்த மார்க்கத்திற்கு முழு உரிமைப்படைத்தவன் அல்லாஹ் தான் என்கிற வகையில், அவனது அதிகாரத்தில் பங்கு கொள்ளும் தகுதியோ அதில் தலையிடும் உரிமையோ வேறு எவருக்கும் கடுகளவும் கிடையாது என்பதையும் குர் ஆன், ஹதீஸ் சான்றுக வாயிலாக நாம் அறிந்து கொண்டோம்.

இவ்வாறு அருளப்படும் வஹீச் செய்தியினை அல்லாஹ்விடமிருந்து பெற்று அதை மனிதகுலத்திற்கு வழங்கிடும் பொறுப்பு நபிகள் நாயகம் (சல்) அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அதே சமயம், நபி (சல்) அவர்களது ஒட்டு மொத்த வாழ்க்கையும் அல்லாஹ்வின் வஹீ செய்தியின் படி உள்ளதா? என்று பார்த்தால் இங்கு தான் நாம் நுணுக்கமான சில புரிதல்களை கொள்ள வேண்டும்.

நபி (சல்) அவர்களது வாழ்க்கை தான் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முன்மாதிரி என்று நாம் சொல்லிக் கொண்டாலும் அடிப்படையில் அவர்களது வாழ்க்கையை இரண்டு விதமாக பிரித்து அதில் ஒன்றை தான் மார்க்கம் என்று நாம் பின்பற்றுகிறோம்.
இன்னொன்றை அவர்கள் மனிதன் என்கிற முறையில் செய்தவை என்பதால் அவை மார்க்கமல்ல (வஹீ அல்ல) என்று தான் நம்புகிறோம். 
அப்படித் தான் நம்பவும் வேண்டும் !

உதாரணத்திற்கு, இந்தியாவின் பிரதமர் உணவு அருந்தினார் என்று சொன்னால் அவர் பிரதமர் என்கிற அடிப்படையிலா உணவு அருந்தினார்? இல்லை. உணவு அருந்துவது மனித இயல்பு. மனிதனாய் இருக்கும் அனைவரும் உணவு உண்கிறோம். அந்த அடிப்படையில் தான் அவரும் உண்டாரே தவிர பிரதமர் என்கிற அடிப்படையில் அவர் அதை செய்யவில்லை.
அவர் பிரதமராக இல்லாவிட்டாலும் உணவு உண்ணத்தான் செய்வார்.

அதே சமயம், அமெரிக்க அதிபரை இந்தியப் பிரதமர் சந்தித்தார் என்று சொன்னாலோ, அல்லது ஏதேனும் அரசு கோப்புகளில் கையெழுத்து இட்டார் என்று சொன்னாலோ,  அவற்றை அவர் பிரதமர் என்கிற முறையில் தான் செய்கிறார்.
பிரதமர் அல்லாத ஒருவரால் அதை செய்ய இயலாது.
ஆக, ஒரு நாட்டின் பிரதமர் என்றாலும், அவரது வாழ்க்கையில் அவர் பிரதமர் என்கிற அடிப்படையில் செய்யக் கூடிய காரியங்களும் இருக்கும், வெறுமனே மனிதன் என்கிற முறையில் செய்யக்கூடியவைகளும் இருக்கும்.

இதே போன்று நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் தூதர் என்ற முறையில் செய்த காரியங்களும் இருக்கும், வெறுமனே மனிதன் என்கிற முறையில் செய்யக்கூடியவைகளும் இருக்கும்.

நாம் இங்கு புரிய வேண்டிய அளவுகோல் எப்படியிருக்க வேண்டும்?
எதையெல்லாம் அவர்கள் தூதர் என்கிற முறையில் செய்தார்களோ அது வஹீ. அது மார்க்கம், அவற்றை நாம் பின்பற்ற வேண்டும்.

எதையெல்லாம் அவர்கள் மனிதர் என்கிற முறையில் செய்தார்களோ அவை வஹீ இல்லை, அவை அல்லாஹ்வின் அனுமதி பெற்று செய்தவை அல்ல, அவை மார்க்கம் அல்ல, அவைகளை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை !

நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய ஹதீஸான அப்துல்லாஹ் இப்னு மக்தூம் (ரலி) என்கிற கண்பார்வையற்ற சஹாபியிடம் நபி (சல்) அவர்கள் கடுகடுத்ததாக வரக்கூடிய சம்பவம் இருக்கின்றதே, இதை அவர்கள் செய்தது வஹீயின் அடிப்படையிலா? என்றால் இல்லை.
இதை அவர்கள் மனிதன் என்கிற முறையில் செய்கிறார்கள், எனவே தான் அல்லாஹ் அதை கண்டிக்கிறான்.

இன்னும், நபி (சல்) அவர்கள் உணவு உண்பதோ ஒட்டகத்தில் பயணம் செல்வதோ, மலஜலம் கழிப்பதோ எல்லாமே அவர்கள் மனிதர் என்கிற முறையில் செய்பவை. அல்லாமல், வஹீயின் அடிப்படையில் அவர்கள் செய்யவில்லை.

நபி (சல்) அவர்களின் வழமையான உணவு கோதுமை ரொட்டியாக தான் இருந்தது என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் சான்றாக இருக்கின்றன.
இருப்பினும், கோதுமை ரொட்டி உண்பதை சுன்னத் என்று நாம் யாராவது சொல்கிறோமா?
நம்மை எதிர்க்கும் மாற்றுக் கொள்கையுடையவர்களாவது அப்படி சொல்கிறார்களா?
இல்லை.
அனைவருமே, இது மனிதர் என்கிற முறையில் அவர்கள் செய்தது தான் என்பதை ஒப்புக் கொள்கிறோம். அவர்கள் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன்பும் அதைத் தான் சாப்பிட்டார்கள், அவர்களது எதிரிகளும் அதை தான் சாப்பிட்டனர்.

அதே போன்று, நோய் நிவாரணத்திற்காக நபி (சல்) அவர்கள் செய்து கொண்ட மருத்துவங்கள் வஹீயின் அடிப்படையில் செய்தவையா?  இல்லை.
அவர்கள் நபியாக இல்லாமலிருந்தாலும் எந்த மருத்துவத்தை செய்திருப்பார்களோ அதை தான் நபியாக இருக்கும் போதும் செய்தார்கள்.
அந்த காலகட்டத்தில் எத்தகைய மருத்துவம் வாய்ப்பாக அமைந்திருந்ததோ அதை அவர்களும் சரி ஏனைய மக்களும் சரி பயன்படுத்திக் கொண்டார்கள்.
இதற்கும் வஹீக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

உதாரணத்திற்கு பார்ப்போமென்றால், உகது போரில் நபி (சல்) அவர்கள் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் மூர்ச்சை ஆன சம்பவத்தை இதற்கு முன் நாம் பார்த்தோம்.
அதற்கு அவர்கள் செய்து கொண்ட மருத்துவம் என்ன?
புஹாரி 243 ஹதீஸில் இது தொடர்பாக வரக்கூடிய செய்திகளில், ஆயிஷா (ரலி) அவர்கள் முதலில் நீரைக் கொண்டு காயமடைந்த பகுதியை சுத்தம் செய்தார்கள் எனவும்,
அதன் பிறகு ஈச்சமரத்தினால் செய்த பாய் ஒன்றை எரித்து அந்த சாம்பலை காயம் பட்ட இடத்தில் பூசிக் கொண்டார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இது தான் அன்றைக்கு அவர்களுக்கு இருந்த மருத்துவ முறை.

இன்று இத்தகைய மருத்துவ முறை பயன்படுமா என்றால், இந்த காலகட்டத்தில் சாம்பலை பூசுவது என்பது காயத்தை இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும்.
நாம் வாழும் கால சூழலுக்கு ஏற்ப நாம் மருத்துவம் செய்கிறோம், நபி (சல்) அவர்களது கால சூழலுக்கு ஏற்ப அவர்கள் மருத்துவம் செய்தார்கள்.
இதற்கும் வஹீ செய்திக்கும் எந்த சம்மந்தமுமில்லை.


இதே போன்று, நபி (சல்) அணிந்திருந்த ஆடை வஹீயின் அடிப்படையில் அணியப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. மனிதன் என்கிற முறையில் அக்காலகட்டத்தில் எது அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்ததோ அதை கொண்டு ஆடை செய்து கொண்டார்கள்.
ஒரேயொரு போர்வையையும் கீழே ஒரு வேட்டியையும் தான் அவர்கள் எப்போதும் அணிந்திருப்பார்கள்.
முழு கைகளும் வெளியே தெரியும், சமயங்களில் அவர்களது அக்குள் கூட தெரிகின்ற வகையில் தான் அவர்கள் அணிந்த ஆடை இருந்தது.
நபி (சல்) அவர்கள் மரணிக்கும் போது அணிந்திருந்த ஆடை என்று சொல்லி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறும் போது, எமன் நாட்டிலிருந்து கிடைத்த முரட்டு வேட்டி ஒன்றையும் மேலே ஒரு போர்வையையும் தான் அணிந்திருந்தார்கள் என்று அறிவிக்கிறார்கள்.

இந்த செய்தி புஹாரி 3108 இல் பதிவாகியிருக்கிறது.

இதை சுன்னத் என்று யாராவது சொல்கிறோமா? இப்படி ஆடை அணிவது மார்க்க கடமை என்று நாம் எவராவது எண்ணுகிறோமா? இல்லை. இவையெல்லாம் அவர்கள் மனிதர் என்கிற முறையில் செய்தவை  !

இன்னும், அவர்கள் உணவு உண்ட முறையை எடுத்துக் கொள்ளுங்கள், நாம் இன்று உணவை தட்டில் எடுத்து வைத்து உண்கிறோமே, அது போன்ற வழக்கம் நபி (சல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை.

தம்மிடமிருக்கும் துணி ஒன்றினை விரிப்பாக ஆக்கிக் கொள்வார்கள், ஹதீஸ்களிலே இது "சுப்ரா" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த துணியின் மீது உணவை வைத்து தான் உண்டு வந்தார்கள்.

இந்த செய்தி புஹாரி 5386 இல் பதிவாகியிருக்கிறது.

அது போல், படுப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய தலையணை என்பது சருகுகளாலும் இலை தழைகளாலும் ஆனவை என்று புஹாரி 6456 ஹதீஸில் பதியப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.

இன்று நாம் பஞ்சு மெத்தைகளிலும் தலையணைகளிலும் படுப்பது இதற்கு எதிரானதா? நபி (சல்) அவர்கள் பயன்படுத்தியதைப் போன்ற தலையணையை தான் நாமும் பயன்படுத்த வேண்டும் என்று யாராவது புரிகிறோமா? நிச்சயம் இல்லை.

நபி (சல்) அவர்கள் ஒட்டகத்திலும் கோவேரிக் கழுதையிலும் தான் தமது பயணங்களை மேற்கொண்டார்கள். அப்படித் தான் இன்றும் நாம் பயணம் செல்ல வேண்டும் என்று யாரும் சொல்வது கிடையாது.
அவர்கள் கோரம்பாயில் தான் படுப்பார்கள், விளக்கு கூட இல்லாமல் இருட்டில் தான் வாழ்க்கை நடத்தினார்கள்.
நபி காலத்தில் இந்த‌ வசதிகள் தான் இருந்தன, எவை இருந்ததோ அவற்றை பயன்படுத்தினார்கள், நபி (சல்) அவர்கள் இன்று வாழ்ந்திருந்தால் காரிலும் விமானத்திலும் பயணம் செய்திருப்பார்கள். மின்சார வெளிச்சத்தை பயன்படுத்தி வாழ்ந்திருப்பார்கள்..
இப்படி புரிவதிலிருந்து, இவையெல்லாம் மனிதர் என்கிற முறையில் அவர்கள் செய்தவை தானே தவிர இதற்கும் மார்க்கத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதனை நாம் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறோம்.

ஆக, அல்லாஹ்வின் தூதருடைய வாழ்க்கையையே நாம் இரண்டாக பிரித்து, இவையெல்லாம் வஹீ, இவையெல்லாம் வஹீ இல்லை, என்று பிரிக்கிறோம்.

வஹியுடன் எப்போதும் தொடர்புடைய நபி (சல்) அவர்களது வாழ்க்கையையே இவ்வாறு இரண்டாக பிரித்து வஹீயுடன் தொடர்பில்லாத காரியங்களைப் பின்பற்றத் தேவையில்லை என்று சொல்கின்ற தெளிவான சித்தாந்தத்தில் இருக்கிற நாம், எப்படி வஹீயே கிடைக்கப்பெறாத ஷாஃபி இமாம் செய்வதை மார்க்கம் என்கிறோம்?

வஹியோடு தொடர்பில்லாத சஹாபாக்களின் கூற்றுக்களையும், தாபியீன்களின் கூற்றையும் எப்படி மார்க்கம் என்போம்?


சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.


நபியின் சொல் செயல் வேறுபாடு :

நபி (சல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்றும் மார்க்கம் என்று நாம் பொதுவாக கூறி வந்தாலும், இதிலும் ஒரு நுணுக்கமான புரிதலை நாம் கொள்ள வேண்டும்.

நாம் ஏற்கனவே சொன்னது போன்று, நபி (சல்) அவர்களின் வாழ்வை இரண்டாக பிரித்து, மார்க்கமாக அவர்கள் வாழ்ந்து காட்டியவை வஹீ எனவும் உலக காரியங்களாக அவர்கள் காட்டியவை வஹீ அல்லாதவை என்றும் பிரித்து புரிவதைப் பற்றி பார்த்தோம்.

மார்க்கக் காரியமாக நபி (சல்) அவர்கள் எதை சொன்னாலும், எதை செய்தாலும், எதை அங்கீகரித்தாலும் அதில் மறு கேள்வியின்றி நாம் பின்பற்ற வேண்டும்.

அதே சமயம், உலகக் காரியங்களைக் பொறுத்தவரை, அவர்கள் எதையெல்லாம் வெறுமனே செயலில் மட்டும் காட்டினார்களோ அவை மட்டும் தான் வஹீக்கு அப்பாற்பட்டவை.
எந்த உலக விஷயத்திலாவது நபி (சல்) அவர்கள் "சொல்" வடிவிலான கட்டளையை விடுத்திருந்தார்கள் என்று சொன்னால் அப்போது அந்த உலக காரியமும் வஹீயாக மாறி விடும்.

இதை உதாரணத்துடன் நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால்,
தலைமுடி வளர்ப்பதையும் தாடி வளர்ப்பதையும் எடுத்துக் கொள்ளலாம்.

தலைமுடி வளர்ப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியிருக்கிறது, தோள் புஜங்கள் வரை கூட ஆண்கள் தலை முடி வளர்க்கலாம் என்று நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். 
நபி (சல்) அவர்கள் தலை முடியையும் தோள்புஜங்கள் வரை வளர்த்திருக்கிறார்கள், அது போன்று தாடியையும் வளர்த்திருக்கிறார்கள்.

இரண்டுமே உலகக் காரியங்கள் என்கிற வகையில் இரண்டுமே வஹீக்கு அப்பாற்பட்டவையாக நமக்கு தெரியலாம்.

ஆனால், தலைமுடி விஷயமாக வாய்மொழி கட்டளை எதுவும் நபி (சல்) அவர்கள் புறத்தில் இல்லை. இப்படி வளருங்கள், அப்படி வளருங்கள், நீளமாக வையுங்கள் என்றெல்லாம் எந்த சட்டத்தையும் அவர்கள் வாயால் சொல்லாத காரணத்தால் தலை முடியை வளர்ப்பது என்பது மார்க்கமாகாது.

அதே நேரம், தாடி வளர்ப்பது பற்றிய சட்டம் என்ன? அதை வளர்க்குமாறு நபி(சல்) அவர்கள் வாயினால் கட்டளை பிறப்பித்திருக்கிறார்கள். 

யூதருக்கு மாறு செய்யுங்கள், மீசையை கத்தரித்து தாடியை வளர விடுங்கள் என்று வாயினால் அது பற்றி சட்டம் பிறப்பித்து விட்டார்கள்.

எனவே தாடி வளர்ப்பது மார்க்க அந்தஸ்த்தைப் பெறுகிறது.

இது தான் வேறுபாடு !

மற்றுமொரு உதாரணத்தைப் பார்ப்போம்.

பெருமானார் (சல்) அவர்கள் பொதுவாக பேரீத்தம்பழத்தை அதிகமதிகம் உணவாக உட்கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அதே போன்று, நோன்பு திறக்கின்ற நேரத்திலும் பேரீத்தம்பழத்தையே உட்கொண்டார்கள்.

இவ்விரண்டு காரியமும் வஹீயோடு தொடர்பில்லாத உலகக் காரியமாக நமக்கு முதலில் தோன்றினாலும், நோன்பு திறக்கும் போது பேரீத்தம்பழம் உண்பதை சுன்னத் என்று எல்லாரும் அறிந்து வைத்திருக்கிறோம்,
அதுவே மற்ற மற்ற நேரங்களில் அதைச் சாப்பிடுவது சுன்னத் ஆகாது, மார்க்கமாகாது என்று கூறுகிறோம்.

என்ன வேறுபாடு?

நோன்பு திறக்கும் போது பேரீத்தம்பழத்தைக் கொண்டு நோன்பு திறங்கள், ஒற்றைப்படை அளவில் சாப்பிடுங்கள் என்றெல்லாம் நபி (சல்) அவர்களது வாய் மொழி கட்டளை ஹதீஸ்களில் கிடைக்கிறது.
அதுவே, மற்ற நேரங்களில் பேரீத்தம்பழத்தை உண்பதைப் பொறுத்தவரை, அவ்வாறான வாய் மொழி கட்டளை எதுவும் இல்லை.

ஆக, மற்ற நேரங்கள் அவர்கள் பேரீத்தம்பழம் உண்டார்கள் என்றால் மனிதன் என்கிற முறையில் அவர்கள் உண்டார்கள், அதற்கும் வஹீக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அதுவே நோன்பு திறக்கும் போது பேரீத்தம்பழம் உண்டது வஹி. அது மார்க்கம், அது சுன்னத் !

இந்த நுணுக்கமான வேறுபாட்டை நாம் அறிவது என்பது வஹீ செய்தி என்றால் என்ன என்பதை மிகவும் துல்லியமாகப் புரிந்து கொள்ள உதவும்.

இந்த நுணுக்கமான புரிதலை நாம் சுயமாக இட்டுக்கட்டிச் சொல்லவில்லை.
மாறாக, நபி (சல்) அவர்களே இதை தெளிவாக விளக்கிச் சென்றிருக்கிறார்கள்.

கீழ்காணும் ஹதீஸைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டுத் தொழில் செய்து வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இதைச் செய்யாதிருக்கலாமே?'' என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள்'' எனக் குறிப்பிட்டார்கள்.
(நூல்: முஸ்லிம் 4358)

மற்றொரு அறிவிப்பில், நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான்என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  (நூல்: முஸ்லிம் 4357)

ஆக, தான் ஒன்றை மார்க்கம் என்று கூறி சொல்வதற்கும், பொதுவாக தமது கருத்தினை கூறுவதற்கும் இடையேயான வேறுபாட்டினை மிக அழகாக விளக்கியிருக்கிறார்கள்.

மற்றொரு ஹதீஸும் இந்த அடிப்படையைத் தெளிவாக விளக்குகிறது.

பரீரா என்ற பெண் முகீஸ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அடிமையாக இருந்த பரீரா விடுதலை செய்யப்பட்ட பின் முகீஸுடன் வாழ்வது பிடிக்கவில்லை. எனவே அவரை விட்டு பரீரா பிரிந்து விட்டார். ஆனால் பரீரா மீது முகீஸ் அதிக அன்பு வைத்திருந்ததால் அவரால் அதைத் தாங்க முடியவில்லை. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து முகீஸுடன் சேர்ந்து வாழ அறிவுரை கூறினார்கள். அப்போது பரீரா "இது (மார்க்கத்தின்) கட்டளையா? (தனிப்பட்ட முறையில்) உங்கள் பரிந்துரையா?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கட்டளையில்லை; பரிந்துரை தான் என்று கூறினார்கள். அப்படியானால் எனக்கு முகீஸ் வேண்டாம்'' என்று பரீரா கூறி விட்டார்.
நூல்: புகாரி 5283


கணவரைப் பிடிக்காத போது அவரிடமிருந்து விலகிக் கொள்ளும் உரிமை பெண்களுக்கு உள்ளது. அந்த உரிமையைப் பயன்படுத்தி பரீரா விலகிக் கொண்டார்.
கணவன் மனைவியர் சண்டையிட்டுப் பிரிந்திருக்கும் போது இருவரும் சேர்ந்து வாழலாமே என்று நாம் அறிவுரை கூறுவோம். பிரியும் உரிமை இருந்தாலும் கொஞ்சம் அனுசரித்துப் போகலாமே என்ற எண்ணத்தில் இவ்வாறு ஆலோசனை கூறுவோம். இது போன்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆலோசனை கூறினார்களா? அல்லது இனிமேல் இந்த உரிமை கிடையாது என்ற அடிப்படையில் ஆலோசனை கூறினார்களா? என்று பரீராவுக்குச் சந்தேகம் வருகிறது.

எனவே தான் இது மார்க்கக் கட்டளையா? அல்லது உங்களின் சொந்தக் கருத்தா? என வினவுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்தக் கருத்து எனக் கூறியதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விருப்பத்தை ஏற்க அவர் மறுத்து விட்டார் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வஹீ என்ற அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட விருப்பத்தின்படி ஒன்றைக் கூறினால் அதை ஏற்காமல் இருப்பது குற்றமாகாது என்பதை நாம் இதிலிருந்து அறிகிறோம்.

வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை பரீரா ஏற்காததால் அவர் நபிகள் நாயகத்தை அவமதித்து விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கருதவில்லை. எந்த அறிஞரும் இவ்வாறு கருதியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான விஷயங்களிலேயே அனைத்தையும் பின்பற்றத் தேவையில்லை, வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் எனும் போது வஹீயுடன் தொடர்பில்லாத நபித் தோழர்களையோ, நல்லறிஞர்களையோ பின்பற்றுவதற்கு மார்க்கத்தில் எப்படி அனுமதி இருக்கும்? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வஹீ தொடர்பில்லாத நபித் தோழர்களின் சொற்களோ, செயல்களோ மார்க்கத்தின் ஆதாரங்களாக முடியாது என்று நாம் கூறினால் நபித் தோழர்களை இழிவுபடுத்துவதாகப் பிரச்சாரம் செய்வது எந்த அளவுக்கு அறியாமை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

மற்றுமொரு அளவுகோலை இங்கே நாம் கவனிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

நபியவர்கள் வெறுத்ததை நாமும் வெறுக்க வேண்டும் என்பது தான் மார்க்கச் சட்டம். 
ஆனால் அதே சமயம் நபியவர்கள் வெறுத்த ஒன்று இறைச் செய்தியின் அடிப்படையில் வெறுத்ததாக இருக்க வேண்டும்.
அவர்கள் மனிதர் என்ற அடிப்படையில் வெறுத்ததையும் நாம் மார்க்கம் என்று கருதி வெறுத்தால் இறைவன் ஹலாலாக்கிய ஒன்றை ஹராமாக்கிய மிகப்பெரும் பாவத்தில் வீழ்ந்து விடுவோம். 

இதனைப் பின்வரும் செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

வஹீயின் அடிப்படையில் இல்லாமல் சில பொருட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தன. அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அது மற்றவர்களுக்குத் தடுக்கப்பட்டதாக ஆகவில்லை என்பதற்கும் நபிவழியில் நாம் சான்றுகளைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்பு இறைச்சி பரிமாறப்பட்டது. அதை எடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கையை நீட்டிய போது "இது உடும்பு இறைச்சி'' என்று அங்கிருந்த பெண்கள் கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கையை எடுத்து விட்டார்கள். அருகிலிருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இது ஹராமா?'' எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "இல்லை. என் சமுதாயத்தவர் வாழ்ந்த பகுதியில் இது இருக்கவில்லை. எனவே இது எனக்குப் பிடிக்கவில்லை'' என்று விடையளித்தார்கள். காலித் பின் வலீத் அவர்கள் அதைத் தம் பக்கம் இழுத்து சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
 நூல்: புகாரி 5391, 5400, 5537

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உடும்புக் கறி பிடிக்காமல் போனது வஹீயின் காரணமாக அல்ல. தனிப்பட்ட அவர்களின் மனதுக்கு அது பிடிக்கவில்லை. எனவே தான் அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தும் அது மற்றவர்களுக்கு ஹராமாக ஆகவில்லை என்று புரிந்து கொள்கிறோம்.

நபியவர்கள் வெறுத்ததை நாம் வெறுக்க வேண்டும் என்ற அடிப்படையில் யாராவது உடும்புக் கறி ஹராம் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்களா? அப்படி வழங்கினால் அவர் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியுமா?
நபியவர்கள் உடும்பு இறச்சியை வஹீ அடிப்படையில் சாப்பிடாமல் இருந்திருந்தால் அது ஹராம். நாம் அதைச் சாப்பிடுவதும் ஹராம்.
நபியவர்களுக்குப் பிடிக்கவில்லை என்ற அடிப்படையில் சாப்பிடாமல் இருந்ததால் அது வஹீ அடிப்படையில் உள்ளது அல்ல.
 இதன் காரணமாகத் தான் நபியவர்கள் சாப்பிடாவிட்டாலும் நபித்தோழர்கள் உடும்பு இறைச்சியைச் சாப்பிட்டார்கள். 
இது இறைத்தூதருக்கு மாறு செய்தல் என்று யாராவது கூறமுடியுமா?

நபிக்கென்று சுயமாக பல விருப்பு வெறுப்புகள் இருந்தாலும் அவையெல்லாம் மார்க்கமாகாது. 
நபி (சல்) அவர்களுக்கு மருதாணி வாடை விருப்பமுள்ளதில்லை. ஆனாலும் மருதாணி பயன்படுத்துமாறு நமக்கெல்லாம் அனுமதித்து தான் இருக்கிறார்கள்.
அவர்களது சுய விருப்பம் இங்கு மார்க்கமாகவில்லை, மாறாக வஹி செய்தியாக அவர்கள் எதை நமக்கு சொன்னார்களோ அது மார்க்கம்.

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன?

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி தொடர்ந்து வந்திருந்தும் கூட அவர்களின் நடவடிக்கைகளே இரண்டு வகைகளாகப் பார்க்கப்படுகின்றது.

1. மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை.
2. இறைவனின் செய்தியைப் பெற்று, தூதர் என்ற அடிப்படையில் செய்தவை.

இதில் முதல் வகையான அவர்களின் நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமில்லை. 
இரண்டாவது வகையான அவர்களின் நடவடிக்கைகளைத் தான் பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். 
காரணம் இவை தான் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை.

இவ்வாறு இருக்கும் போது இறைவன் புறத்திலிருந்து வஹீ அறிவிக்கப்படாத நபித் தோழர்கள் உள்ளிட்ட எவரையும் பின்பற்றுவது, எவரது கருத்தையும் அல்லாஹ்வின் கருத்தாக ஏற்பது மாபெரும் இணை வைப்பாக ஆகிவிடும் என்பதையும் உணர வேண்டும்.நபி (சல்) அவர்களுக்கு பிறகு வஹீ வருமா?

நபி (சல்) அவர்கள் தான் இறுதி நபி என்பதற்கும், அவர்களது மரணத்துடன் அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கபட்ட வஹீயின் வருகையும் முற்றுப் பெற்று விட்டது என்பதற்கும் குர் ஆனிலும் ஹதீஸிலும் ஏராள்மான சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம் (சல்) அவர்களது இறுதி ஹஜ்ஜின் போது அரஃபா பெருவெளியிலே அவர்கள் உரையாற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் பேருரையிலே இன்றோடு இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்தி விட்டேன் என்கிற இந்த செய்தியை ஒட்டு மொத்த மனித சமூகத்திற்கும் தெளிவாக அறிவிப்பு செய்தார்கள்.

அல்லாஹ் குர் ஆனில் இது பற்றி கூறுகின்ற வசனங்களைப் பார்ப்போம்.

மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். (7:158)

(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (34:28)

இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான். (9:33)

எல்லா மார்க்க்த்தை விடவும் இதை மேலோங்கச் செய்கிறான் என்றால் இந்த வஹியை தாண்டி வேறொரு வஹீ இனிமேல் வராது என்று பொருள்.

இன்னும் குர் ஆன் சொல்வதைப் பாருங்கள்.

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். (33:40)

(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம். (21:107)


மேற்கூறிய எல்லா வசனங்களும், நபி (சல்) அவர்களை ஒட்டு மொத்த மனித சமூகத்தும் நபியாக அல்லாஹ் தேர்வு செய்திருப்பதையும், அவர்களே நபிமார்களின் முத்திரையாக இருக்கிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

முத்திரை என்று சொல்கின்ற போது, அத்துடன் புதிதாக ஒன்றை சேர்க்கவோ இங்கிருந்து ஒன்றை குறைக்கவோ இயலாது என்று பொருள்.
ஆக, நபிமார்களுக்கு முத்திரை என்று அல்லாஹ் சொல்கிறான் என்றால், முஹம்மது நபிக்கு பிறகு புதிதாக எந்த நபியும் வர மாட்டார், புதிதாக எந்த வஹீயும் வரவும் செய்யாது என்று பொருள்.

வஹீயின் வருகை முஹம்மது நபி (சல்) அவர்களோடு முற்றுப் பெற்று விட்டது என்பதற்கும், அவர்களுக்குப் பிறகு வேறு எந்த நபியும் கியாமத் நாள் வரை வர மாட்டார் என்பதற்கும் இவை சான்றுகளாக இருக்கின்றன.

தொடரும், இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக