இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!
(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)
நாள் : 3
மார்க்கத்தில் ஒற்றுமை :
மனிதன் என்கிற முறையில் நாம் பலவாறாக பிரிந்து இருக்கிறோம். மொழியால், இனத்தால், கோத்திரத்தால், நாட்டால், கலாச்சாரத்தால் பல்வேறு பிரிவுகள் நம்மிடையே இருந்தாலும் இத்தகைய பிரிவுகள் இஸ்லாம் தடுக்கின்ற பிரிவுகளல்ல.
இத்தகைய பிரிவு என்பது அல்லாஹ்வே ஏற்படுத்தி தந்திருக்கும் பிரிவு தான்.
மனிதர்களே, உங்களை ஒரு தாய் தந்தையிலிருந்து படைத்தோம், பின்னர் உங்களை நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டே உங்களை பல கோத்திரங்களாக பிரித்தோம் என்று அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.
எனவே, இத்தகைய பிரிவு இஸ்லாம் அனுமதித்த பிரிவு தான்.
அதே சமயம், இதிலெல்லாம் பிரிவுகளை ஏற்றுக் கொள்ளும் இஸ்லாம், மார்க்கத்தில் பிரிவு ஏற்படுவதை ஏற்றுக் கொள்ளுமா என்றால் நிச்சயம் ஏற்காது.
எனக்கு ஒரு முறையிலான தொழுகை, உனக்கு இன்னொரு முறையிலான தொழுகை, நான் ஹஜ் செய்வது இந்த முறையில், நீ ஹஜ் செய்வது வேறொரு முறையில்.. என்பதாக மார்க்கத்தில் வேற்றுமை காட்டுவதை அல்லாஹ் ஒரு போதும் ஏற்க மாட்டான்.
அல்லாஹ் தனது திருமறையில் சொல்லும் போது,
மார்க்கத்தை (தீனை) நிலை நாட்டுங்கள், அதில் பிரிந்து விடாதீர்கள் (42:13)
என்கிறான்.
இந்த பிரிவு தான் மிகவும் ஆபத்தானது, மறுமையில் தோல்வியை அளிக்கின்ற பிரிவு.
தீனில் நாம் பிரியாமல் இருப்பதற்கான ஒரே வழி, மார்க்கம் என்கிற பெயரில் ஒரு வழியை தேர்வு செய்து பின்பற்றுவது ஒன்று தான். பலரது கூற்றுக்களை மார்க்கமாக நாம் பின்பற்றினால் ஒவ்வொருவரும் நம்மை வெவ்வேறு வழிகளை நோக்கித் தான் இழுத்துச் செல்வார்கள்.
மதுஹபு படி தான் நான் வாழ்வேன் என்று சொல்கின்ற போது அதில் எவராலும் ஒற்றுமையை காண முடியுமா? நிச்சயம் முடியாது.
காரணம், ஷாஃபி மதுஹபில் ஒன்று கூடும், அதுவே ஹனஃபி மதுஹபில் கூடாது,
ஹனஃபி மதுஹபில் ஒன்றை மக்ரூஹ் என்பார்கள், அதையே மாலிகி மதுஹபில் சுன்னத் என்பார்கள்.
உதாரணத்திற்கு, ஈதுல் ஃபித்ரா என்ன அளவில் கொடுக்கச் சொல்லி இஸ்லாம் சொல்கிறது என்று ஒரு மதுஹபு இமாமிடம் கேட்டுப் பாருங்கள், முதலில் அவர் நம்மை நோக்கி, நீங்கள் என்ன மதுஹப்? என்று தான் கேட்பார்.
ஏனெனில், நாம் என்ன மதுஹப் என்று சொன்னால் தான் அதற்கேற்றாற்போல் அவரால் ஃபத்வா தர இயலும். காரணம், ஒவ்வொரு மதுஹபும் ஒவ்வொரு சட்டத்தை சொல்கின்றன.
இத்தனை குழப்பத்தையும் உருவாக்கி விட்டு, அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று வாயளவில் சொல்லிக் கொள்வார்கள். இதுவா அல்லாஹ் எதிர்பார்க்கின்ற ஒற்றுமை? நிச்சயம் இல்லை. இதுவெல்லாம் போலியான ஒற்றுமை.
அல்லாஹ்வின் வஹீ மட்டுமே பின்பற்றப்பட வேண்டிய ஒரே கொள்கை என்கிற நிலைபாட்டின் கீழ் அனைவரும் ஒன்றுபடும் போது தான் மார்க்கத்தில் ஒன்றுபட்டோம் என்று பொருளாகும், அது தான் உண்மையான ஒற்றுமையாக இருக்கும். அது தான் அல்லாஹ் மேற்கூறிய வசனத்தில் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய ஒற்றுமை. இதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் கயிற்றை அனை வரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள் என்பதாக 3:103 வசனத்தில் அல்லாஹ் சொல்வதும் மார்க்கத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தித் தான்.
அல்லாஹ்வின் கயிறு ஒன்றே ஒன்று தான். அது தான் அவனது வஹீ செய்தி.
அதுவல்லாமல் ஒவ்வொருவரும் வெவ்வேறான கயிறுகளைப் பற்றினால் இறுதியில் இந்த சமூகம் மார்க்கத்தில் பிளவுண்டு தான் போவார்கள்.
இன்னும் அல்லாஹ் தன் திருமறையில் சொல்கின்ற போது,
இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான் (6:153)
அல்லாஹ்வின் வஹியை பின்பற்றுவது ஒன்று தான் நேர்வழி என்று சொல்லி விட்டு, எதிர் மறையாக, பல வழிகளை பின்பற்றாதீர்கள் என்றும் அழுத்தமாக அல்லாஹ் சொல்வதிலிருந்து அத்தகைய நிலை அல்லாஹ்வால் எந்த அளவிற்கு வெறுப்புடன் பார்க்கப்படுகிறது என்று நம்மால் அறிய முடிகிறது.
அத்தோடு, நான் ஷாஃபி, நான் ஹனஃபி என்று பலவாறு பிரிந்து கிடந்து விட்டு, நாங்கள் அனைவரும் இஸ்லாத்தை தான் பேணுகிறோம் என்று சொல்லிக் கொள்பவர்களையும் அல்லாஹ் இவ்வசனத்தின் மூலம் கண்டிக்கிறான்.
எப்போது நாம் பல வழிகளை தேர்வு செய்து பின்பற்றுகிறோமோ அப்போதே அது நம்மை நேரான அந்த ஒரு வழியை விட்டும் பிரித்து விடும். நம்மை இறையச்சமில்லாதவராகவும் ஆக்கி விடும்.
இன்னொரு வசனத்தில் அல்லாஹ் சொல்லும் போது,
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர் கள் (8:46)
என்று சொல்கிறான். இதுவும் மார்க்கத்தில் நாம் பிரிந்து விடக் கூடாது என்கிற கருத்தை தான் சொல்கின்றது.
இதை கூட, முதல் பாதியை வெட்டி விட்டு, "முரண்படாதீர்கள்" என்கிற இரண்டாம் பாதியை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, பார்த்தீர்களா, நாம் ஒற்றுமையாக வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான், என்று காட்டுவார்கள்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்கிற அந்த வசனத்தின் முதல் பாதியை இலாவகமாக தவிர்த்து விடுவார்கள்.
இதுவும் அவர்களது வழிகேடான கொள்கையை படம்பிடித்துக் காட்டுகிறது.
நாம் முரண்படக் கூடாது தான். எதில்? மார்க்கத்தில் !
நாம் பிரிந்து விடக் கூடாது தான். எதில்? இஸ்லாம் போதிக்கின்ற அடிப்படையான வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்கிற இந்த சித்தாந்ததில் !!
சட்டமியற்றும் அதிகாரம் :
அல்லாஹ்வின் வஹீயை மட்டும் தான் நாம் பின்பற்ற வேண்டும் என்று சொல்கின்ற போது, சட்டமியற்றும் அதிகாரத்தை நாம் அல்லாஹ்வுக்கு முழுமையாக வழங்குகிறோம் என்று பொருளாகும்.
வஹீயை விட்டு விட்டு பல வழிகளை நோக்கி நாம் செல்லத் துவங்கினால் அதிகாரத்தை நாம் அல்லாஹ்வுடன் சேர்த்து மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கிறோம் என்கிற பாபாதக நிலையே ஏற்படும்.
அல்லாஹ் அனுமதித்ததை நாம் தடுத்துக் கொள்வதாகட்டும், அல்லாஹ் சொல்லாத ஒரு காரியத்தை மார்க்கம் என்கிற பெயரில் நாம் செய்வதாகட்டும், இவையெல்லாம் அல்லாஹ்வுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தும் காரியம் என்பதை பல்வேறு வசனங்கள் வாயிலாக அல்லாஹ் எச்சரிக்கை செய்து நமக்கு உணர்த்துகிறான்.
இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது' என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள் (16:116)
ஒன்றை ஹலால் என்று சொல்வதாக இருந்தாலோ ஹராம் என்று சொல்வதாக இருந்தாலோ அந்த அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது.
ஆனால், இன்றைய மதுஹபுவாதிகளிடம் வஹீயோடு உரசிப் பார்க்கும் இத்தகைய செயல்பாடு இருக்கிறதா என்று பார்த்தால் அதற்கு மாற்றமான நிலை இருப்பதையே காண முடிகிறது.
நண்டு சாப்பிடலாமா என்று இத்தகையோரிடம் கேட்டுப் பார்த்தால் கூடாது என்பார்கள். ஆனால், கூடாது என்பதற்கு அல்லாஹ்வின் வஹியில் இவர்களால் சான்றினை காட்ட இயலாது. வெறுமனே தங்கள் இமாம்கள், பெரியார்கள், முன்னோர்களின் கூற்றினை ஆதாரமாக கொண்டு இத்தகைய ஃபத்வாக்களை அள்ளி விடுவார்கள்.
ஆனால் அல்லாஹ்வோ, தமது திருமறை குர் ஆனில், கடலில் வாழும் எல்லா உயிரினங்களையும் நமக்கு ஹலாலாக்கி தந்திருப்பதாக சொல்கிறான்.
இவ்வாறு, அல்லாஹ் ஒன்றை சொல்லியிருக்க, அதற்கு மாற்றமாகவும், அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுக்கும் விதமாகவும் செயல்படும்
இவர்களைப் பார்த்து தான் அல்லாஹ் கடும் எச்சரிக்கை கணையை வீசுகிறான், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் என்று.
அவன் அனுமதிக்காத ஒன்றை வேறொருவர் அனுமதிக்கிறார் என்றால் அந்த நபரை நாம் அல்லாஹ்வின் இடத்தில் வைக்கிறோம்.
இதை நாம் சுயமாக சொல்லவில்லை, அல்லாஹ்வே குர் ஆனில் இதை சொல்லிக் காட்டுகிறான்.
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக் கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது. (42:21)
அல்லாஹ் அனுமதிக்காத ஒன்றை இன்னார் அனுமதித்தார் என்றால் அந்த நபர் நமக்கு தெய்வம், அவர் தான் நமக்கு அல்லாஹ் என்று நாம் சொல்வதாக அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான்.
இவ்வாறு ஹலால் ஆக்கியதோ ஹராம் ஆக்கியதோ மிகவும் அற்பமான காரியங்களாக நமக்கு தோன்றினாலும், அல்லாஹ் அந்த காரியம் என்னவென்று பார்க்க மாட்டான், மாறாக, அதெப்படி எனது இடத்தை இன்னொருவருக்கு நீ வழங்குவாய்? என்று கடுங்கோபம் கொள்கிறான்.
இதே கருத்தில் வரக்கூடிய மற்றொரு வசனம்..
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த தூயவற்றை தடுக்கப்பட்டவையாக ஆக்காதீர்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (5:87)
அல்லாஹ் ஒன்றை ஆகுமானதாக ஆக்கும் போது அதை மறுப்பது என்பது வெளிப்படையான வரம்பு மீறலாகும்.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், அல்லாஹ் ஹலால் என்று தந்த ஒரு பொருளை நாம் ஹராமாக்குவதால் அல்லாஹ்வுக்கு ஏதேனும் இழப்பு இருக்கிறதா?
இழப்பு ஏற்படும் என்பதாலா அல்லாஹ் கோபம் கொள்கிறான்? நிச்சயமாக இல்லை.
அல்லாஹ்வுக்கு இதனால் எந்த இழப்பும் இல்லை. இருப்பினும், அல்லாஹ் பார்ப்பது அந்த பொருளையோ அதன் முக்கியத்துவத்தையோ அல்ல, மாறாக தனக்கு மட்டுமே உரித்தான அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள இந்த அற்பத்திலும் அற்பமான மனிதன் யார்? என்பதே !
அல்லாஹ் அனுமதித்தவைகளில் நமக்கு சிலவை விருப்பமில்லாமல் இருக்கும். அதை காரணம் காட்டி அவற்றை உண்ணாமல் இருப்பது குற்றமில்லை, அதுவே, ஒட்டு மொத்த மனிதர்களுக்கும் அதை ஹராமாக்கி சட்டமியற்றுவது என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தை கையிலெடுப்பது என்பதை மேலே அல்லாஹ் சுட்டிக்காட்டும் எச்சரிக்கைகளின் வாயிலாக நம்மால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகிறது.
மேலும் அல்லாஹ் இது தொடர்பாக எச்சரிக்கும் வேறு வசனங்களைப் பாருங்கள்.
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்ற வர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக் கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் இழப்பு அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை. (6:140)
''தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?'' என்று கேட்பீராக!(7:32)
அல்லாஹ் அனுமதித்தவைகளை தடுப்பது அல்லாஹ்விடம் மிகக்கடுமையான குற்றமாக கருதப்படும் என்பதற்கு இது போன்ற இறை வசனங்கள் சான்றாக நிற்கின்றன.
ஆனால் நாமோ சர்வ சாதாரணமாக இறை வசனங்களைப் புறக்கணித்து முன்னோர்கள், இமாம்களின் சுய கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்குகிறோம்.
இமாம்கள் ஹராம் என்று சொல்லி விட்டார்களா, அது ஹராம், இமாம்கள் ஹலால் என்று சொல்லி விட்டார்களா, அது ஹலால் என்கிற அளவிற்கு மார்க்கத்தை கேலிகூத்தாக்குறோம்.
எந்த அளவிற்கென்றால், நமது பால்ய பருவங்களில் அரைக் கை சட்டை அணிவதை ஹராம் என்று உலமாக்களும், மதரசாவில் கற்றுத் தரும் ஆசிரியர்களும் ஃபத்வா கொடுத்ததை நாம் மறந்திருக்க முடியாது.
இதற்கு அல்லாஹ்வின் வஹீயில் ஏதேனும் ஆதாரம் காட்டினார்களா? வஹீயில் சான்று இருந்தால் மட்டும் தான் ஒன்றை ஹராமாக்க முடியும் என்று அன்றைய காலத்தில் நமக்கோ நம் முன்னோர்களுக்கோ தெரியவில்லை, அதனால், இப்படி நீங்கள் ஃபத்வா கொடுப்பதற்கு எது சான்றாக இருக்கிறது? என்று அந்த ஆசிரியரிடம் எதிர் கேள்வி கேட்கும் சிந்தனை எவருக்கும் எழவில்லை.
இதை தான் அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான்.
அல்லாஹ்வின் மற்றொரு எச்சரிக்கையை பாருங்கள்.
முஹர்ரம், துல் க அதா, துல்ஹஜ், ரஜப் ஆகிய நான்கு மாதங்களில் போர் செய்வதற்கு தடை என்று அல்லாஹ் கட்டளை விதித்திருந்தான்.
ஆனால், நபிகள் நாயகம் (சல்) அவர்கள் காலத்தில் எதிரிகளில் சிலர் இந்த கட்டளையை மீறினார்கள். எந்த அளவிற்கு அவர்கள் இதில் சுய கருத்தை திணித்தார்கள் என்றால், தடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு மாதத்தில் போர் செய்து விட்டு, ஏனைய எட்டு மாதங்களில் ஏதேனும் ஒரு மாதத்தை தடுக்கப்பட்ட மாதம் என்கிற பட்டியலில் இணைத்து விடுவது என்கிற அளவிற்கு அவர்கள் மார்க்கத்தை கேலிக் கூத்தாக்கினார்கள்.
இதைப் பற்றி அல்லஹ் தனது திருமறையில் மிகக் கடுமையாக கோபம் கொள்கிறான்.
(மாதத்தின் புனிதத்தை) தள்ளிப் போடுவது (இறை) மறுப்பை அதிகப்படுத் துவதே. இதன் மூலம் (ஏக இறைவனை) மறுப்போர் வழி கெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அதன் புனிதத்தை நீக்கி விடு கின்றனர். மறு வருடம் அதற்குப் புனிதம் வழங்குகின்றனர். அல்லாஹ் புனிதமாக்கிய எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் புனித மற்றதாக்கி விடுகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள் ளன. (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். (9:37)
இதே போன்றதொரு தவறினை இன்று பலரும் செய்கிறார்களா இல்லையா?
நோன்பு திறக்கும் நேரம் மாலை 6.30 என்று விஞ்ஞானப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்ட செய்தி கிடைத்தாலும் கூட, பேணுதல் என்று கூறி இவர்கள் 6.35 க்கு நோன்பு திறப்பதை நாம் காணலாம்.
உண்ணுவதற்கு அல்லாஹ் அனுமதியளித்த அந்த ஐந்து நிமிடத்தை இவர்கள் தங்கள் சுய கருத்தை திணித்து தடை விதிப்பது அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுப்பதாகும்.
எப்படி நபி (சல்) அவர்கள் காலத்தில் போர் செய்ய தடுக்கப்பட்ட மாதங்களை சிலர் தள்ளிப் போட்டு அல்லாஹ்விடம் குற்றவாளியாக ஆனார்களோ அதே குற்றத்தை தான் இவர்கள் நோன்பு நேரத்தை தள்ளிப் போடுவதிலும் செய்கின்றனர்.
இன்னும் சொல்லப்போனால், நோன்பு திறப்பதற்கு விரைந்து செயல்படும் காலமெல்லாம் நாம் நன்மையின் பக்கம் இருக்கிறோம் என்பதாக நபி (சல்) அவர்களின் வழிகாட்டுதலும் நோன்பு திறக்கும் நேரத்தை தாமதம் செய்வது கூடாது என்பதைச் சொல்கிறது.
நாம் நோன்பு வைக்கிறோம் என்றால் அல்லாஹ் அதை கட்டளையிட்டிருக்கும் காரணத்தால் தான் வைக்கிறோமே தவிர, நாம் அதற்கு முழுமையான சக்தி பெற்றவர்கள் கிடையாது.
அல்லாஹ்வின் கட்டளையை பேண வேண்டும் என்கிற அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவது தான் இதன் நோக்கம் எனும் போது அவன் எப்போது நோன்பு நோற்க சொல்கிறானோ அப்போது நோற்க வேண்டும், எப்போது அதை விடச் சொல்கிறானோ அப்போது விரைந்து விட்டு விட வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது தான் நாம் நமது பலகீனத்தையும் நமது அடிமைத்தனத்தையும் அல்லாஹ்வுக்கு முன்னால் முழுமையாக சமர்ப்பிக்கிறோம் என்று பொருளாகும்.
அல்லாமல், இவர்கள் செய்வது போன்று அறிந்து கொண்டே தாமதப்படுத்துவது என்பது அதிகப்பிரசங்கித்தனமாகவும் தலைக்கனத்துடன் நாம் செயல்படுவதாகவுமே அல்லாஹ் எடுத்துக் கொள்வான்.
ஆக, வஹீ செய்தி மட்டும் தான் மார்க்கம் என்கின்ற சித்தாந்தத்திலும், மார்க்கத்தில் சட்டங்களை உருவாக்குகின்ற அதிகாரம் அல்லாஹ்வை தவிர வேறு எவரது கைகளிலும் வழங்கப்படவே இல்லை என்கிற சித்தாந்தத்திலும் திருமறை குர் ஆன் எந்த அளவிற்கு கடுமையான நிலைபாட்டினை கொண்டிருக்கிறது என்பதை நம்மால் விளங்க முடிகிறது.
நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறுகிறார்கள் :
மார்க்கத்தில் ஒருவர் புதிதாக ஒன்றை சேர்த்தால் அது ரத்து செய்யப்படும் நூல் : புஹாரி 2697
மற்றொரு ஹதீஸில்,
நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறுகிறார்கள் :
எனது உத்தரவில்லாமல் ஒரு அமலை எவராவது செய்தால் அது ரத்து செய்யப்படும். நூல் : முஸ்லிம் 3442
இன்னும், பெருமானார் (சல்) அவர்கள் தமது ஒவ்வொரு குத்பா உரையின் போதும் வழமையாக ஒரு எச்சரிக்கையை மக்களுக்கு செய்பவர்களாக இருந்தார்கள்.
செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதம், வழிகாட்டுதல்களில் சிறந்தது முஹம்மது நபி (சல்) அவர்களின் வழிகாட்டுதல், காரியங்களில் மிகவும் கெட்டவை (எனக்குப் பிறகு உருவான) நூதனங்கள், இவை அனைத்தும் பித் அத், அனைத்தும் பித் அத்தும் வழிகேடு, எல்லா வழிகேடும் நம்மை நரகத்திற்கு இழுத்துச் செல்லும்
நூல் : நசாயி 1578
எனவே, நாம் செய்யக்கூடிய அமல்கள் அழகானவை தானே, நல்ல காரியத்தை தானே செய்கிறோம் என்றெல்லாம் காரணங்கள் கூறி அவற்றை நாம் நியாயப்படுத்தினால் நாளை மறுமையில் அல்லாஹ் அதை தூக்கி வீசி விடுவான்.
செய்யப்படும் காரியம் அழகா இல்லையா என்பது உரசிப்பார்க்கும் காரிணி அல்ல.
மாறாக, அந்த காரியத்திற்கு அல்லாஹ்வின் வேதத்தில் அனுமதியிருக்கிறதா என்று உரசிப்பார்க்க வேண்டும், அந்த காரியத்திற்கு நபிகள் நாயகம் (சல்) அவர்களிடத்தில் முன்மாதிரி இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும்.
உதாரணத்திற்கு, மிஹ்ராஜ் நோன்பு என்கிற பெயரில் ஒரு நோன்பை நம் சமூகத்தில் பலர் செய்து வருகின்றனர்.
இதற்கு மார்க்கத்தில் அனுமதியிருக்கிறதா?
அல்லாஹ்வின் வேதத்தில் இதற்கு ஆதாரம் இருக்கிறதா? இல்லை !
அல்லாஹ்வின் தூதரிடத்தில் இதற்கு வழிகாட்டுதல் இருக்கிறதா? இல்லை !
இன்னும் சொல்லப்போனால், எந்த நாளை இவர்கள் முக்கியத்துவப்படுத்தி நோன்பு வைக்கிறார்களோ அந்த மிஹ்ராஜ் பயணம் நடைபெற்ற நாள் எது என்பதற்கு கூட குர் ஆனிலோ ஹதீஸிலோ எந்த சான்றும் கிடையாது.
மிஹ்ராஜ் என்கிற விண்ணுலகப் பயணம் நடைபெற்றது என்று நாம் நம்ப வேண்டுமே தவிர, அது குறிப்பிட்டு இந்த நாள் தான் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் மார்க்கத்தில் கிடையாது என்பதே உண்மை.
இது இப்படியிருக்க, இவர்களோ, நன்மை தானே, நல்ல விஷயம் தானே, நோன்பு வைப்பது தவறான காரியமா? என்றெல்லாம் கேள்வியெழுப்பி மார்க்கத்தில் இல்லாத ஒரு நூதனத்தை இஸ்லாத்தில் புகுத்துகிறார்கள்,
ஆனால் இவை அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்பும் இல்லாதவை மட்டுமல்ல, இத்தகைய பித்அத்தை புகுத்தியமைக்காகவே அல்லாஹ் நாளை நரகிற்கு நம்மை தள்ளி விடுவான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தூதருக்கு அதிகாரம் உண்டா?
அல்லாஹ் அல்லாத ஒருவருக்கு சட்டமியற்றும் அதிகாரம் இருக்கும் என்று வைத்துக் கொண்டால் அதற்கு அதிகம் தகுதி வாய்ந்தது நபி (சல்) அவர்கள் தான்.
ஆனால், அவர்களுக்காவது இந்த அதிகாரத்தை அல்லாஹ் வழங்கியிருக்கிறானா?
ஒரு துளி கூட வழங்கவில்லை.
இது பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறும் போது,
அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் 'இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!' என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர். நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப் படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறு செய்து விட்டால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்' என (முஹம்மதே!) கூறுவீராக! (10:15)
தமக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து என்ன அறிவிக்கப்படுகிறதோ அதில் கடுகளவு மாற்றத்தை கூட செய்ய நபிக்கு அனுமதியில்லை. அல்லாஹ் வழங்கியதை அப்படியே பெற்றுத் தருகிற பணி தான் நபி (சல்) அவர்களுக்கும் உள்ளது என்று மேற்கூறிய வசனங்களும் இன்னும் ஏராளமான வசனங்களும் நமக்கு உணர்த்துகிறது.
ஒரு சில சந்தர்ப்பங்களில் நபி (சல்) அவர்கள் சுயமாக சில கட்டளைகளை பிறப்பித்த போது அவை மிகவும் அற்பமான காரியமாக இருந்த போதும் அல்லாஹ் அவர்களை மிகக்கடுமையாக எச்சரிக்கவே செய்கிறான்.
ஒரு முறை ஒரு மனைவியின் வீட்டிலிருந்து இன்னொரு மனைவியின் வீட்டிற்கு செல்கிறார்கள், மனைவியோ, உங்களிடமிருந்து துர் நாற்றம் வீசுகிறது என்கிறார்கள்.
அங்கிருந்து உண்டு விட்டு வந்த தேனைப் பற்றி தான் தனது மனைவி சொல்கிறார்கள் என்பதால் தேனை நான் இன்று முதல் ஹராமாக்கிக் கொண்டேன் என்று நபி (சல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கணவன் மனைவிக்கிடையே நடக்கும் சாதாரணமான சண்டையாக அல்லாஹ் இதை கருதவில்லை, மாறாக தனது அதிகாரத்தில் இந்த தூதர் எப்படி கை வைத்தார் என்று கோபம் கொள்கிறான்.
இது பற்றி அல்லாஹ் குர் ஆனில் சொல்கின்ற போது,
நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (66:1)
இவ்வாறு தமது அதிகாரத்தை கையில் எடுப்பதை பெருங்குற்றமாக நபி (சல்) அவர்கள் விஷயத்திலேயே அல்லாஹ் கருதுகிறான் என்றால் மற்ற மற்ற மனிதர்களெல்லாம் எம்மாத்திரம்?
என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
இன்னும்,
போர் காலங்களில் தம்மோடு போருக்கு வருமாறு மக்களை நபி (சல்) அவர்கள் அழைக்கும் போது அந்த சமூகத்தில் நபிக்கும் தெரியாமல் மறைந்திருந்து நல்லவர் வேடமிடும் முனாஃபிக்குகள், ஏதேனும் சால்ஜாப்புகள் சொல்லி போருக்கு வருவதை தவிர்ந்து வந்தனர்.
அவர்கள் முனாஃபிக்குகள் என்பதை அறியாத நபி (சல்) அவர்கள், அதற்கு அனுமதியும் வழங்கி விடுவார்கள்.
இதை அல்லாஹ் குர் ஆனில் கண்டிக்கிறான்.
(முஹம்மதே!) அல்லாஹ் உம்மை மன்னித்தான். உண்மை கூறுவோர் யார் என்பது உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியும் முன் அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்? (9:43)
போருக்கு வருவதன் மூலம் தான் அவர்கள் ஈமான் கொண்டவர்களா இல்லையா என்பதை அடையாளம் காட்ட முடியும் எனும் போது, நீர் எப்படி அவர்களுக்கு போருக்கு வராமலிருக்க அனுமதி கொடுத்தீர்? என்று அல்லாஹ் கோபம் கொண்டதோடு, இச்செயலை நான் மன்னிக்கிறேன் என்றும் சொல்கிறான்.
குற்றம் இழைத்தால் தான் மன்னிக்க வேண்டும். அந்த அடிப்படையில், நபி (சல்) அவர்கள் சுயமாக முடிவு செய்த இத்தகைய செயலை ஒரு குற்றமாகவே அல்லாஹ் கருதுகிறான்.
தமது அதிகாரம் என்று வரும் போது அதை அல்லாஹ் எவரோடும் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லை, அது அல்லாஹ்வின் நேசத்திற்குரிய முஹம்மது நபி (சல்) அவர்களாக இருந்தாலும் சரியே.
அல்லாஹ் சொல்கிறான்,
சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம்.
பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.
உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர். (69: 44 - 47)
அல்லாஹ் அருளிய வஹீ செய்தி அல்லாத வேறொன்றை அவனது தூதர் பெருமானார் (சல்) அவர்கள் வேண்டுமென்றே இட்டுக்கட்டி சொல்லக் கூடியவர்களே இல்லை.
அவர்களைப் போன்ற இறையச்சமுடையவர் அவர்களது சமுதாயத்தில் வேறு எவருமே இல்லை என்ற போதிலும், அல்லாஹ்வின் எச்சரிக்கை மிகக்கடுமையாக இருப்பதை நாம் சிந்திக்கும் போது, நபிக்கே இந்த நிலையென்றால், நாம் இமாம்கள் என்றும், பெரியார்கள் என்றும் முன்னோர்கள் என்றும் சொல்லிக் கொண்டு அவர்களது மார்க்க தீர்ப்பின் பின்னால் செல்கிறோமே, நமது கதி என்னவாகும்?
வஹீ மட்டும் தான் மார்க்க ஆதாரம் என்பதில் அல்லாஹ் எள்ளளவும் சமரசம் செய்து கொள்ளவே மாட்டான் என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்வதோடு, அவனது கடுமையான தண்டனைக்கு அஞ்சி நாம் நமது வாழ்வினை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொடரும், இன்ஷா அல்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக