திங்கள், 29 ஜூன், 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 10)


இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 10



சஹாபாக்களை பின்பற்றுவது அவசியமா? (தொடர்ச்சி) :


கலிஃபாக்களை பின்பற்றுதல் :

சஹாபாக்களின் கூற்றும் மார்க்கம் தான் என்று கூற அவர்களை பின்பற்றக் கூடிய கூட்டமானது, தங்கள் கொள்கையை நியாயப்படுத்துவதற்காக சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
அவற்றை நாம் ஒவ்வொன்றாக காண்போம்.

எனது சுன்னத்தை பின்பற்றுங்கள், எனது கலிஃபாக்களின் சுன்னத்தை பின்பற்றுங்கள் என்பதாக நபி (சல்) அவர்கள்
கூறுவதாக திர்மிதி 2600, அபூ தாவூத் 3991, இப்னு மாஜா 42, 43, முனத் அஹ்மத் 16519, 16521, 16522, தாரிமி 95 மற்றும் பல நூல்களில் ஹதீஸ்கள் பதியப்பட்டதை எடுத்துக் காட்டி, சஹாபாக்களை பின்பற்றலாம்,சஹாபாக்களின் வழியும் மார்க்கம் தான் என்று வாதம் வைக்கின்றனர்.

சஹாபாக்களின் கூற்றை மார்க்கமாக கருதுவதற்கு இந்த ஹதீஸ் இடம் தருகிறதா என்பதை பார்ப்பதற்கு முன்னால், இவர்கள் காட்டும் ஆதாரத்திற்கும் இவர்கள் கூறும் கொள்கைக்கும் எந்த தொடர்பாவது இருக்கிறதா என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும்.

கலிஃபாக்களின் வழியும் மார்க்கம் என்று இந்த ஹதீஸ் சொல்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், கலிஃபாக்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று இவர்களது கொள்கையை இவர்கள் மாற்றி அறிவித்து விட்டு அதன் பிறகு தான் இந்த ஹதீஸை சான்றாக எடுத்து வைக்க வேண்டும்.

ஒட்டு மொத்த சஹாபாக்களின் சொல்லும் மார்க்கம் என்று ஒரு பக்கம் கூறி விட்டு, அதற்கு ஆதாரம் என்று சொல்லி நான்கு கலிஃபாக்களை பின்பற்றுங்கள் என்கிற ஹதீஸை காட்டுவது இவர்களது கொள்கைக்கே எதிரானது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சரி, இந்த ஹதீஸ் கலிஃபாக்களை மார்க்க அடிப்படையில் பின்பற்றுமாறு தான் நமக்கு சொல்கிறதா?
ஹதீஸின் ஒரு பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைத்து வியாக்கானம் கொடுப்பதால் நேர்ந்த விளைவு இது.
இந்த ஹதீஸை முழுமையாக வாசிக்கும் போது, கண்ணை மூடிக் கொண்டு கலிஃபாக்களை மார்க்க அடிப்படையில் பின்பற்றுவதை இது சொல்லவில்லை என்பதை எளிதில் புரியலாம்.

இந்த ஹதீஸில், நபி (சல்) அவர்கள் வசியத் செய்தது போன்று இந்த சமூகத்திற்கு சில எச்சரிக்கைகளை இடுகிறார்கள்.

அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், செவியுறுங்கள், கட்டுப்படுங்கள், அவர் அபிசீனிய நாட்டு அடிமையாக இருந்தாலும் சரியே, என்று முதலில் கூறுகிறார்கள்.

இதன் பொருள் என்ன? இங்கு குறிப்பிடப்படும் "கட்டுப்படுதல்" என்பது மார்க்கத்தில் கட்டுப்படுவதை குறிக்காது. மாறாக, ஆட்சியாளருக்கு கட்டுப்படுதலை, இஸ்லாமிய அரசுக்கு கட்டுப்படுதலை தான் இது குறிக்கும்.

நாட்டின் ஜனாதிபதிகள் தான் கலீபாக்கள் எனப்படுகின்றனர். ஒருவர் முஸ்லிம்களால் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு சிதைந்து போய் விடும். ஜனாதிபதி என்ற முறையில் மார்க்க சம்மந்தமில்லாத நிர்வாக விஷயங்களில் அவர்கள் சில வழிமுறைகளை மேற்கொண்டால் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படிப் பொருள் கொண்டால் தான் மார்க்கம் முழுமையாகி விட்டது என்ற வசனத்திற்கும், வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் அமைந்த வசனங்களுக்கும் பொருள் இருக்கும்.


இதை சொல்லி விட்டு தொடர்ந்து அவர்கள் சொல்லும் போது,
நிறைய கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள், மார்க்கம் என்கிற பெயரில் புதிதாக உருவாக்கப்படும் அனைத்தும் வழிகேடு, உங்களுக்கு ஏதேனும் விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் எனது சுன்னத்தையும் நேர்வழி பெற்ற கலிஃபாக்களின் சுன்னத்தையும் பின்பற்றுங்கள் என்கிறார்கள்.

மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவை அனைத்தும் வழிகேடுகள் என்ற வாக்கியத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் எனும் போது,
மார்க்க விஷயம் இல்லாத மற்ற விஷயங்களில் தான் நேர்வழி பெற்ற கலீபாக்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட வாக்கியம் தெளிவுபடுத்தி விடுகிறது.


அபுதாவூதில் பதியப்பட்ட இதே ஹதீஸில், கலிஃபாக்களை பின்பற்றுங்கள் என்று கூறி விட்டு, புதிய காரியங்களை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன் எனவும் சேர்த்து சொல்கிறார்கள்.

இதிலிருந்து தெரிவது, கலிஃபாக்கள் நேர்வழி பெற்றவர்கள், அவர்களை பின்பற்றலாம். எதுவரை? மார்க்கத்தில் புதிதாக ஏதும் உருவாகாதவரை பின்பற்றலாம்.
எப்போது புதிதாக ஒரு விஷயம் மார்க்க அடிப்படையில் உருவாகுமோ, அதை விட்டும் நாம் விலகி விட வேண்டும்.
ஆக, நபி (சல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி கலிஃபாக்கள் செய்வதை மட்டும் தான் நாம் பின்பற்ற முடியும் என்பதற்கு தான் பல்வேறு எச்சரிக்கைகளையும் இணைத்து இந்த அறிவுரையை நபி (சல்) அவர்கள் சொல்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், எனது சுன்னத்தையோ அல்லது கலிஃபாக்களின் சுன்னத்தையோ பின்பற்றுங்கள் என்று அவர்கள் சொல்லியிருந்தால் தான் கலிஃபாக்களையும் தனியாக நாம் பின்பற்றலாம், எந்த நிபந்தனையுமின்றி பின்பற்றலாம் என்று கருத முடியும்.

எனது சுன்னத்தையும் கலிஃபாக்களின் சுன்னத்தையும் பின்பற்றுங்கள் என்று சொல்லும் போது, நபியின் சுன்னத் தான் கலிஃபாக்களின் சுன்னத், கலிஃபாக்களின் சுன்னத்தில் ஏதேனும் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் இருக்குமானால் நபியின் சுன்னத்தோடு உரசிப் பார்த்து விட வேண்டும்.

இது போக, நாம் இதுவரை கண்டு வந்த இஸ்லாத்தின் அடிப்படையான வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதையும், நபி (சல்) அவர்களுக்கு தவிர வேறு எவருக்கும் வஹீ அருளப்படாது என்பதையும் சாராம்சமாக கொண்டு இதை அணுகும் போது, அவைகளுக்கு முரணில்லாத வகையில் தான் இந்த ஹதீஸை நாம் புரிய வேண்டும்.

நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்பதைத் தொடர்ந்து ``அபீஸீனிய அடிமை என்றாலும் கட்டுப்பட்டு நடங்கள் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்.

இப்னு மாஜா 43, அஹ்மத் 16519

ஆட்சித் தலைவர் அபீஸீனிய அடிமை என்றாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதில் இருந்து நிர்வாக விஷயங்களில் கட்டுப்பட்டு நடப்பது பற்றியே கூறியுள்ளனர் என்பதை நாம் அறியலாம்.

நேர்வழி பெற்ற கலீபாக்கள் என்பது நான்கு கலீபாக்களைக் குறிக்கும் என்ற தவறான கருத்தும் இதன் மூலம் தகர்க்கப்படுகிறது. நான்கு கலீபாக்களில் ஒருவர் கூட அபீஸீனிய அடிமையாக இருக்கவில்லை. அபீஸீனிய அடிமையாக இருந்தாலும் கட்டுப்படுங்கள் எனக் கூறினால் கியாமத் நாள் வரை ஆட்சி செய்யும் கலீபாக்கள் அனைவருக்கும் மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் கட்டுப்பட்டு நடங்கள் என்பது தான் இதன் பொருள்.



மார்க்க விஷயத்தில் கண்ணை மூடிக் கொண்டு கட்டுப்படுதல் என்பது கிடையாது.


மார்க்க சம்மந்தமில்லாத விஷயத்தில் மட்டும் நிர்வாகத் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதற்குத் தான் அந்த உதாரணத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

மார்க்கத்தில் வேறு யாரையும் பின்பற்றி நடக்கும் நிலையில் நான் உங்களை விட்டுச் செல்லவில்லை என்று கூறிவிட்டு நேர்வழி பெற்ற ஆட்சியாளர்களைப் பின்பற்றுங் கள் எனக் கூறினால் அது நிர்வாக விஷயத்தைத் தான் குறிக்குமே தவிர மார்க்க விஷயத்தை அறவே குறிக்காது.


அபுபக்கர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் பின்பற்ற வேண்டுமா?


மற்றோரு ஆதாரத்தையும் இவர்கள் சஹாபாக்களை பின்பற்றுவதற்கு சான்றாக முன் வைப்பர்.

எனக்குப் பின்னர் அபூபக்ர், உமர் ஆகிய இருவரையும் பின்பற்றுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியையும் தங்கள் வாதத்துக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இந்த ஹதீஸ் திர்மிதி 3595, 3596, 3735, 3741, இப்னு மாஜா 94, அஹ்மத் 22161, 22189, 22296, 22328 மற்றும் பல நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனக்குப் பிறகு வரக்கூடிய இருவரை பின்பற்றுங்கள் என்பதாக அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகிய இருவரைக் குறிப்பிட்டு நபி (சல்) அவர்கள் சொல்வதாக இப்னுமாஜா, திர்மிதி உள்ளிட்ட பல்வேறு நூற்களில் பதிவாகியிருக்கும் ஹதீஸ் சஹாபாக்கள் அனைவரையும் பின்பற்றுவதற்கு சான்றா?

இதுவும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, இரண்டே இரண்டு சஹாபாக்களை பின்பற்றுவதைப் பற்றி தான் பேசுகிறது, எனவே, இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டக்கூடியவர்கள், இவ்விரண்டு சஹாபாக்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதாக தங்கள் நிலையை மாற்றி விட்டு அதன் பிறகு இதை முன்வைக்கட்டும்.
 சஹாபாக்கள் அனைவரையும் பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.

இந்த இருவரைத் தவிர மற்றவர்களைப் பின்பற்றச் சொல்லும் ஆதாரம் இல்லை என்பதால் இவ்விருவரை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் வாதம் செய்தால் மட்டுமே இதை ஆதாரமாக எடுத்துக் காட்ட முடியும்.

மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் இவ்விருவரையும் சிறந்த தலைவர்களாக ஏற்று நடங்கள் என்று தான் இதற்கும் பொருள் கொள்ள முடியும்.

அடுத்த ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் உமர் (ரலி) அவர்களின் வழிகாட்டுதலை ஏற்றுத் தான் அபூ பக்ரை மக்கள் கலீபாவாகத் தேர்வு செய்தனர். இது போன்ற விஷயங்களைத் தான் இது குறிக்குமே தவிர மார்க்க விஷயங்களில் பின்பற்றுவதைக் குறிக்காது.

தவிர, இதிலும் நாம் முந்தைய ஹதீஸுக்கு தந்த அதே புரிதலை தான் மேற்கொள்ள வேண்டும்.
வஹீ மட்டுமே மார்க்கம் என்பது இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரம். அல்லாஹ் அருளியதை மட்டுமே மார்க்கமாக கருத வேண்டும் என்று பல்வேறு இடங்களில் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
இந்த அடிப்படைக்கு எதிராக, சஹாபாக்கள் எதை சொன்னாலும் பின்பற்றுங்கள் என்கிற சித்தாந்ததை நிச்சயம் நபி (சல்) அவர்கள் சொல்ல மாட்டார்கள்.

மார்க்கம் முழுமையாகி விட்டது. வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்பன போன்ற எண்ணற்ற ஆதாரங்களுக்கு முரண்படாத வகையில் தான் இதற்கும் பொருள் கொள்ள வேண்டும்.

எனக்குப் பிறகு மார்க்கம் என்று எதை நீங்கள் உருவாக்கினாலும் அது ரத்து செய்யப்படும் என்கிற நபியின் எச்சரிக்கையையும் இந்த தருணத்தில் சேர்த்தே சிந்திக்கும் போது, கலிஃபாக்கள் என்றாலும், சஹாபாக்கள் என்றாலும், இஸ்லாத்திற்கு மாற்றமான கூற்றுகள் வராத வரை தான் அவர்களை பின்பற்றுதல் ஆகுமாகும் என்பது தெளிவாகப் புரிகிறது.


சஹாபாக்கள் விண்மீன்களைப் போன்றவர்கள் ?

மற்றுமொரு ஹதீஸை இவர்கள் முன்வைப்பார்கள்.

என் தோழர்கள் விண்மீன்களைப் போன்றவர்கள், அவர்களில் நீங்கள் யாரை பின்பற்றினாலும் வெற்றி பெறுவீர்கள்.

இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட பலகீனமான ஹதீஸாகும்.

முனத் அப்துபின் ஹுமைத் என்ற நூலில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு உமர் (ரலி) வாழியாக இதை ஹம்ஸா அன்னஸீபீ என்பவர் அறிவிக்கிறார். இவர் முற்றிலும் பலவீனமானவர்.

தாரகுத்னீ என்ற நூலிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபிர், (நபித் தோழரான ஜாபிர் அல்ல) ஜமீல் பின் ஸைத் இவ்விருவரும் யாரென்று அறியப்படாதவர்கள் என்று தாரகுத்னியே கூறுகிறார். இதுவும் பலவீனமானதாகும்.

இதன் அறிவிப்பாளரான அபுபக்கர் பஸ்ஸார் என்பவர் இதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி சொல்லும் போது, இது மிகவும் பொய்யான ஹதீஸ், ஆதாரப்பூர்வமான நபர்கள் வழியாக இது வரவில்லை, இட்டுக்கட்டப்பட்ட மோசமான ஹதீஸ் என்று சொல்லியிருக்கிறார்.
இந்தக் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல என்று அபூ பக்ர் அல்பஸார் கூறுகிறார். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான கற்பனையான செய்தியாகும் என்று இப்னு ஹம் கூறுகிறார்.

இன்னும் சொல்லப்போனால், இந்த ஹதீஸை தங்களுக்கு சாதகமாக முன்வைக்கும் கூட்டத்தார் கூட இது பலகீனம் தான் என்பதை ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள்.

தவிர, இதன் கருத்தும் சரியாக பொருந்தும் வகையில் இல்லை. ஒரு சில நட்சத்திரங்கள் வேண்டுமானால் கடல் பயணத்தின் போது வழி காட்டும் என்றாலும், ஒட்டு மொத்தமாக எல்லா நட்சத்திரங்களும் நமக்கு வழி காட்டவா செய்கிறது? இல்லை.

அப்படியிருக்க, நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு வழிகாட்டியோ அது போல் ஒவ்வொரு நபித்தோழரும் வழிகாட்டுவார்கள் என்ற உவமையும் தவறாக அமைந்துள்ளது.

எந்த நட்சத்திரத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம், அவை வழிகாட்டும் என்கிற கருத்துப் பட நபி (சல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்.
கருத்தின் அடிப்படையிலும் இந்த ஹதீஸ் ஏற்கத்தகுந்ததல்ல !



சஹாபாக்களிடமும் தவறுகள் ஏற்படும் :


சஹபாக்களின் சிறப்பையும், அவர்கள் கொண்டிருக்கும் இறையச்சத்தையும் நம்மால் குறைத்து மதிப்பிடவே முடியாது.
அவர்களைப் பின்பற்றக் கூடாது என்று சொல்வது அவர்களது அந்தஸ்த்தை குறைத்து மதிப்பிடுவதாகவும் ஆகாது.

அவர்களை மதிப்பது என்பது வேறு, அவர்களைப் பின்பற்றுவது என்பது வேறு. இந்த வேறுபாட்டை நாம் தெளிவாக புரிந்தால் தான் இஸ்லாத்தின் அடிப்படையான வஹீ மட்டுமே மார்க்கம் என்கிற கொள்கையில் நாம் தெளிவாக நிற்க முடியும்.

சஹபாக்கள் என்றாலும் அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும், அவர்களிடமும் தவறான மார்க்க புரிதல் ஏற்பட்டிருக்கின்றன என்பதற்கு ஏராளமான சான்றுகளை நம்மால் காண முடிகிறது.

உதாரணத்திற்கு ஒரு சிலவற்றை இங்கு காணலாம்.

தமத்து ஹஜ் :

உம்ராவுக்கு இஹ்ராம் கட்டி, உம்ராவை முடித்து விட்டு இஹ்ராம் இல்லாத நிலையில் மக்காவில் தங்கிக் கொண்டு ஹஜ்ஜுடைய காலம் வந்ததும் மற்றொரு இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வது தமத்துவு ஹஜ் எனப்படுகிறது.

ஆனால், இந்த தமத்து ஹஜ் முறையை உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சி காலத்தில் தடை செய்கிறார்கள். அல்லது தவறாக விளங்கிக் கொண்டு இதை எதிர்த்துள்ளார்கள்.


தமத்துவு ஹஜ் பற்றிய வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் இறங்கியது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தமத்துவு முறையில் ஹஜ் செய்தோம். இதை ஹராமாக்கி அல்லது தடை செய்து எந்த வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அருளப்படவில்லை. மனிதர்கள் தம் விருப்பம் போல் எதையோ (இதற்கு மாற்றமாக) கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல் : புகாரி, 1572, 4518

தமத்துவு முறையில் ஹஜ் செய்வதையும், ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் தடை செய்தார்கள். இதைக் கண்ட அலி (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள். ``எவரது சொல்லுக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை நான் விட்டுவிடுபவனாக இல்லை என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மர்வான் பின் அல்ஹகம்,

நூல் : புகாரி, 1563

இதைப் பற்றி சிரியாவை சேர்ந்த ஒருவர் இப்னு உமர் ரலி) அவர்களிடம் வினவிய போது, தமத்து ஹஜ் இஸ்லாம் அனுமதித்த ஒன்று எனக் கூறுகிறார்கள்.


உங்கள் தகப்பனார் இதை தடை செய்திருக்கிறார்களே என்று மீண்டும் கேட்ட போது, அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய விடை தான் கவனிக்கத்தக்கது.
நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ஒன்றை அனுமதிக்கிறார்கள், அதை எனது தகப்பனார் தடுக்கிறார். இப்போது, இருவரில் யாரை நான் பின்பற்ற வேண்டும் என்பதற்கு நீ பதில் சொல், என்று அவரிடம் திருப்பிக் கேட்கிறார்கள் இப்னு உமர் (ரலி) அவர்கள்.
நபி (சல்) அவர்களை தான் பின்பற்ற வேண்டும் என்று அவர் பதில் சொல்கிறார்கள்.

தமத்துவு முறையில் ஹஜ் செய்வது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு சிரியாவாசி கேட்டார். அது அனுமதிக்கப்பட்டது தான் என்று அவர்கள் விடையளித்தார்கள். உங்கள் தந்தை (உமர்) அவர்கள் அதைத் தடுத்திருக்கிறாரே அது பற்றிக் கூறுங்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ``என் தந்தை ஒரு காரியத்தைத் தடுக்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்துள்ளனர் என்றால் என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நீ பதில் சொல் என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ``அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையே பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துவு முறையில் ஹஜ் செய்துள்ளார்கள் என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸாலிம் பின் அப்துல்லாஹ்,

நூல் : திர்மிதி 753




வஹீ மட்டும் தான் மார்க்கம் என்பதில் சஹாபாக்கள் எந்த அளவிற்கு தெளிவான புரிதலில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.
சஹாபாக்களை பின்பற்றலாம் என்கிற தவறான கொள்கைக்கு சஹபாக்களே மறுப்பு தரக்கூடிய ஹதீஸ் இது.
நபியின் சுன்னத்தோடு ஒரு சஹாபியின் கூற்று மோதினால், நாம் பின்பற்ற வேண்டியது நபியை தான். சஹாபியின் கூற்றை ஏற்கக் கூடாது என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் விளக்கமளிக்கிறார்கள் என்றால் உமர் (ரலி) அவர்களை இப்னு உமர் திட்டி விட்டார் என்று இவர்கள் சொல்வார்களா?
சஹாபாக்களை இப்னு உமர் இழிவுப்படுத்தி விட்டார் என்று இதற்கு அர்த்தமா?

ஒரு போதும் கிடையாது.
நாம் என்ன கொள்கையை இன்றைக்கு பிரச்சாரம் செய்கிறோமோ அதை தான் இந்த ஹதீஸின் வாயிலாக இப்னு உமர் (ரலி) அவர்களும் தெரிவிக்கிறார்கள்.


 ருகூஹ்வின் போது கைகளை வைக்க வேண்டிய இடம் :


இதே இப்னு உமர் (ரலி) அவர்கள் தொடர்பாக மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.
துவக்க காலத்தில் தொழுகையில் செய்யப்படும் ருகூஹ்வின் போது கைகள் இரண்டையும் தொடைகளுக்கிடையே வைத்துக் கொள்ளும் வழக்கம் தான் இருந்தது,
அதை நபி (சல்) அவர்கள் மாற்றி முட்டுக்கால்களில் வைக்கும் சட்டத்தை கொண்டு வந்தார்கள்.


என் தந்தையின் அருகில் நான் தொழுதேன். அப்போது என் இரு கைகளையும் சேர்த்து அதை என் தொடைகளுக்கிடையே வைத்தேன். என் தந்தை அதைத் தடுத்தார். ``நாங்கள் இப்படிச் செய்து வந்தோம். பின்னர் தடுக்கப்பட்டோம். எங்கள் கைகளை முட்டுக்கால் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டோம் என்றும் என் தந்தை கூறினார்.

அறிவிப்பவர் : முஅப் பின் ஸஅத்,

நூல் : புகாரி 790

ஆனால், நபி (சல்) அவர்கள் மரணித்த பிறகும், இவ்வாறு மாற்றப்பட்ட சட்டத்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிந்திருக்கவில்லை.
தொடைகளுக்கிடையே கைகளை வைத்து தொழுது விட்டு இப்படி தான் நபி (சல்) தொழுது காட்டினார்கள் என்று சொன்னார்கள்.


அல்கமா, அல்அஸ்வத் ஆகிய நாங்கள் இருவரும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். ருகூவு செய்யும் போது எங்கள் இரு கைகளை முட்டுக் கால்கள் மீது வைத்தோம். அப்போது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் எங்கள் கைகளைத் தட்டி விட்டார்கள். பின்னர் தமது கைகளைச் சேர்த்து அதைத் தொடைகளுக்கிடையே வைத்தார்கள். தொழுது முடிந்ததும், ``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் செய்தனர் என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்போர் : அல்கமா, அல்அவத்

நூல் : முஸ்லிம் 831


ஆக, இதிலிருந்து நமக்கு விளங்குவது யாதெனில், சஹாபாக்களும் மனிதர்கள் தான், அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அனுப்ப மாட்டான், அவர்களிடம் ஏற்படும் பிழைகள், கவனக்குறைவுகள் போன்றவை அல்லாஹ்வால் சரி செய்யப்படாது, எனினும், அவர்களது தியாகத்தாலும், இறையச்சத்தாலும், ஈமானிய உறுதியினாலும், அத்தகைய சிறு குறைகளும் அல்லாஹ்வால் மன்னிக்கப்படும் என்பதில் தான் எந்த சந்தேகமுமில்லையே தவிர, அவர்களை பின்பற்றுவதற்கு எந்த நியாயமும் இல்லை.

சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்கிற கொள்கையுடையவர்கள் மேல் குறிப்பிடப்பட்ட இப்னு உமர் (ரலி) அவர்களின் தொழுகை முறையை தான் பின்பற்றுகின்றார்களா?
எந்த மதுஹபுவாதிகளாவது இதை சரி என்பார்களா?
எந்த கூட்டத்தாராவது, இப்படி தொழுவதும் சரி தான் என்று ஃபத்வா கொடுப்பார்களா? மாட்டார்கள்.
ஆக, அனைவரும் ஏக மனதாய் சொல்கிறோம், இப்னு உமரின் கூற்று வஹீக்கு மாற்றமானது, எனவே அதை நாம் பின்பற்ற முடியாது என்பது தானே?


வாடகைத் திருமணம் :


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆரம்ப காலத்தில் வெளியூர்களுக்குச் செல்லும் ஆண்கள் அங்குள்ள பெண்களைக் குறிப்பிட்ட காலம் வரை வாடகை பேசி திருமணம் செய்து வந்தனர். அதாவது ஒரு மாதம் வரை உன்னை மனைவியாக வைத்துக் கொள்கிறேன் என்பது போல் காலக்கெடு நிர்ணயித்து திருமணம் செய்வார்கள். காலக்கொடு முடிந்ததும் அப்பெண்ணை விட்டுவிட்டு ஊருக்கு வந்து விடுவார்கள். அரபுகளிடம் காணப்பட்ட இந்த வழக்கத்தை ஆரம்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யாமல் இருந்தனர். அதனால் நபித் தோழர்களில் சிலர் இந்த வழக்தத்தைக் கடைப்பிடித்தனர்.

கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்தனர்.

வாடகைத் திருமணத்தையும், வீட்டுக் கழுதைகளைச் சாப்பிடுவதையும் கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அலி (ரலி),

நூல் : புகாரி 4216, 5115, 5523, 6691


ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருடைய அறிவுக்கு அல்லாஹ்விடம் துஆ செய்தார்களோ அந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் இவ்வாறு வாடகைத் திருமணம் செய்யலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) மார்க்கத் தீர்ப்பு அளித்து வந்தார்கள்.


வாடகைத் திருமணம் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். யுத்த காலத்திலும், பெண்கள் பற்றாக் குறையின் போதும் தான் இந்த அனுமதியா? என்று அவரது ஊழியர் கேட்ட போது இப்னு அப்பாஸ் (ரலி) ஆம் என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு ஜம்ரா,

நூல் : புகாரி 5116

வாடகைத் திருமணம் கூடாது என்று நமக்கு இன்றைக்கு தெரிந்திருக்கிறது. இதை கூட அறியாமல் சஹாபாக்கள் இருந்திருக்கிறார்கள்.
இது அவர்களது குறையும் இல்லை. அன்றைக்கு இருந்த தகவல் தொடர்பு நிலை இது தான்.
அவர்களுக்கு வஹீ வராது என்பதால் அவர்கள் ஒன்றை தவறாக புரிந்திருந்தாலும் கூட அதை சரி செய்யும் பொருட்டு அல்லாஹ் வஹீ அருள மாட்டான்.
அப்படியிருக்க நாம் எப்படி சஹாபாக்களை பின்பற்றுவது?


அவர்கள் அனைத்தையும் சரியாக தான் புரிவார்கள் என்பதற்கு உத்திரவாதம் ஏதும் இல்லையே?

இதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


நபி (சல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தார்களா?

இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது; திருமணப் பேச்சும் பேசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி)

நூல் : முஸ்லிம் 2522, 2524, 2525, 2526

இந்தத் தடையை இப்னு அப்பாஸ் (ரலி) அறியாமல் இருந்ததுடன் தமது சின்னம்மா மைமூனா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் திருமணம் செய்தார்கள் எனவும் கூறி வந்தார்கள்.

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 1837, 4259, 5114

ஆனால் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள் இதை மறுத்திருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டாத நிலையில் தான் என்னைத் திருமணம் செய்தார்கள்.

அறிவிப்பவர் : மைமூனா (ரலி)

நூல் : முஸ்லிம் 2529

ஒரு பிரச்சனையில் சம்பந்தப்பட்டவரின் கூற்றும் சம்பந்தப்படாதவரின் கூற்றும் முரண்பட்டால் சம்பந்தப்பட்டவரின் கூற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இஹ்ராம் கட்டிய நிலையில் திருமணம் செய்யக் கூடாது என்ற விபரமும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தனது சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது.

தவறுகள் நிகழ வாய்ப்புள்ளவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று கூறுவது பொருத்தமானது தானா?


குளிப்பு கடமையான நிலையில் சஹரை அடைதல் :

ஒருவருக்கு குளிப்பு கடைமையாகி விட்டால் அந்த நிலையிலேயே சஹர் செய்து நோன்பு நோற்கலாம்.சுபுஹ் நேரம் வந்ததும் தொழுகைக்காகக் குளித்துக் கொள்ள லாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்.

ஆனால் அதிகமான ஹதீஸ்களை அறிந்திருந்த அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியாமல் இருந்து பின்னர் திருத்திக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் பஜ்ரு நேரத்தை அடைவார்கள். பின்னர் குளித்து விட்டு நோன்பைத் தொடர்வார்கள் என்று ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் தன்னிடம் கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் மதீனாவின் ஆளுநரான மர்வானிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட மர்வான் ``அல்லாஹ்வின் மீது ஆணையாக இதைப் பற்றி அபூ ஹுரைராவிடம் நீ கூறி எச்சரிக்கை செய்ய வேண்டும் எனக் கூறினார். ஆனால் அப்துர் ரஹ்மான் அபூ ஹுரைராவிடம் இது பற்றி பேச விரும்பவில்லை. பின்னர் துல்ஹுலைபா எனும் இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு வந்தது. அங்கே அபூ ஹுரைராவுக்குச் சொந்தமான நிலம் ஒன்று இருந்தது. அப்போது அப்துர் ரஹ்மான் ``நான் உங்களிடம் ஒரு செய்தியைக் கூறவுள்ளேன். மர்வான் உம்மிடம் கூறுமாறு சத்தியம் செய்திராவிட்டால் அதை உம்மிடம் நான் கூற மாட்டேன் என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் கூறினார். பின்னர் ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகியோர் கூறியதை அபூ ஹுரைராவிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ``எனக்கு பழ்ல் பின் அப்பாஸ் தான் இதைக் கூறினார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரே இது பற்றி நன்கறிந்தவர்கள் என்று விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 1926

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை மகனான பழ்ல் பின் அப்பாஸ் அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறை தெரியாமல் இருந்துள்ளது. அவர்கள் கூறியதை அபூ ஹுரைரா (ரலி) நம்பியும் இருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சில நடவடிக்கைகள் பற்றிய விளக்கம் நபித்தோழர்கள் சிலரிடம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.

இப்படியிருக்கும் போது, சஹாபாக்கள் என்ன சொன்னாலும், மார்க்கம், அவர்கள் எதை சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்கிற கொள்கை ஒரு போதும் நம்மை வெற்றியடைய செய்யாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக