மார்க்கத்திற்கு சொந்தக்காரன் யார்?
அல்லாஹ் தமது திருமறையில் கூறும் போது,
இந்த மார்க்கம் எனக்கு சொந்தமானது என்று சொல்கிறான்.
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (39:3)
நாம் ஒரு வீட்டுக்கு சொந்தம் கொண்டாடுகிறோம் என்றால், அதன் அனைத்து உரிமைகளும் நமது கைகளில் மட்டும் தான் இருக்கிறது என்று பொருள்.
நமது வீட்டின் ஒரு பகுதியை இன்னொருவர் வந்து ஆக்கிரமித்தால் அதை நாம் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
அற்பமான ஒரு வீடு தொடர்பாக அற்பமான இந்த மனிதனுக்கே இத்தனை ரோஷமும் உரிமையும் இருக்கும் போது, இந்த மார்க்கத்தின் சொந்தக்காரன் என்று தன்னைப் பற்றி கூறும் அல்லாஹ்வுக்கு இந்த மார்க்கத்தில் எந்த அளவிற்கு உரிமை இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவனது தூதரான முஹம்மது நபி (சல்) அவர்களுக்கு கூட இந்த மார்க்கத்தில் எந்த உரிமையும் கிடையாது. அதை இந்த வசனத்தின் வாயிலாக அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
மனிதர்களுக்கும் அல்லாஹ் தான் எஜமானன், அது போன்று, இந்த மார்க்கத்திற்கும் அவன் தான் எஜமானன் !
இன்னும் சொல்லப்போனால், இஸ்லாமிய மார்க்கத்தை ஒருவர் புதிதாக தழுவுகிறார் என்றால் உலகிலுள்ள மனிதர்களுக்கு அதில் ஏதேனும் உரிமை கொண்டாட இடமிருக்கிறதா?
கிறித்தவர்கள் போப் என்று ஒருவரை நியமித்து வைத்திருக்கிறார்களே, இவர் நாடினால் தான் ஒருவரால் கிறுத்தவராக முடியும் என்று, அது போன்று இஸ்லாத்தில் எவரேனும் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா என்றால் இல்லை.
ஏன் இல்லை என்றால், இந்த மார்க்கத்திற்கு உரிமையாளனாக எந்த மனிதனும் இல்லை,
உரிமையாளன் அல்லாஹ்.
அதனால் தான் ஒருவன் இஸ்லாத்தை தழுவ எண்ணினாலும், அவன் யாருடைய அனுமதியையும் பெற வேண்டியதில்லை, வெறுமனே மனதால் எண்ணிக் கொண்டாலே போதும் என்று சொல்கிறது இஸ்லாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக