சனி, 17 ஆகஸ்ட், 2013

புஹாரியில் எல்லாம் சரியா?


புஹாரியில் எந்த ஹதீசும் சரியானவை தான் என்று வாதிடுபவர்கள் புஹாரி இமாமை இறைவனுக்கு இணையாக, தவறுகளுக்கு அப்பார்ப்பட்டவராகவே கருதுகிறார்கள். புஹாரியில் ஒரு செய்தி பதிவாகி விட்டதா? அதை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு விட வேண்டும் என்பவர்கள், மனிதர்கள் தவறிழைக்க கூடியவர்கள் தான் என்கிற இறை கட்டளையை மதிக்காதவர்கள் ஆவார்கள்.

குர் ஆனுக்கு முரணாக, நபி (ஸல்) அவர்களின் தகுதிக்கு தகாததாக ஒரு செய்தி புஹாரி நூலில் பதிவாகி இருந்தால், புஹாரி தவறிழைப்பாரா? என்று கேள்வியெழுப்புவதற்கு இவர்கள் காட்டும் கரிசனத்தில் கடுகளவு கூட, அல்லாஹ்வின் சிஃபத்தையும் நபியின் அந்தஸ்தையும் சிந்திப்பதற்கு காட்டுவது கிடையாது.

இதன் காரணமாக தான், நபிக்கு சூனியம் செய்யப்பட்டதாக புஹாரி இமாம் செய்தி ஒன்றை பதிந்த போது, நபிக்கு சூனியம் செய்ய முடியுமா? அது குர்ஆனுக்கு அழகானதா? அல்லாஹ்வின் வல்லமைக்கு ஏற்றதா? என்றெல்லாம் சிந்திப்பதை விட்டு விட்டு, புஹாரி இமாம் தவறிழைப்பாரா? என்கிற ஒற்றை கேள்வியை மட்டும் கேட்கிறார்கள்.

இப்படி சிந்தனை மழுங்கிய இவர்களுக்காக புஹாரியில் உள்ள முரண்பட்ட அறிவிப்புகள் சில..

புஹாரி பாகம் 7, ஹதீஸ் 787 இல், நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு பிறகு 10 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்ததாக செய்தி உள்ளது. இதை அனஸ் இப்னு மாலிக் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புஹாரி பாகம் 5, ஹதீஸ் 190 இல், நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு பிறகு 13 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
இதை இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

10 ஆண்டுகள் சரியா 13 ஆண்டுகள் சரியா என்கிற விவாதத்திற்கு நான் செல்லவில்லை. இரண்டில் எது சரி என்றாலும் இன்னொன்று தவறு என்று ஆகி விடுகிறதே, இதற்கு என்ன பதில்?
மனிதன் என்கிற முறையில் ஏற்பட்ட பிழை என்று இதை சொல்வார்களா? அல்லது புஹாரி இமாம் பொய் சொன்னார் என்று சொல்வார்களா?

சூனியத்தை பதிந்து விட்டதால் அவர் ஷிர்க் வைத்து விட்டாரா? என்று குட்டிக்கரணம் அடிப்பவர்கள், இதற்கு குட்டிக்கரணம் அடிக்கவில்லை என்றாலும் கூட, புஹாரி இமாம் பொய் சொல்லி விட்டார் என்று சொல்வார்களா?
அல்லது இதற்கு இவர்கள் சொல்லும் நியாயங்கள் சூனியத்தை பற்றிய ஹதீஸ் குறித்து நாம் சொல்வதோடு பொருந்தி போகுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

இன்னும்,

சுலைமான் நபிக்கு 90 மனைவிமார்கள் இருந்ததாக பாகம் 8 ஹதீஸ் 634 இல் பதிவாகியுள்ளது. இதை அபு ஹுரைரா அறிவிக்கிறார்.

அதே சமயம், சுலைமான் நபிக்கு 9 ஹதீஸ் 561 இல் 60 மனைவிமார்கள் இருந்ததாக அதே அபு ஹுரைரா தான் கூறுகிறார்.

இங்கே இந்த முரண்பாடு ஏன் வந்தது? 90 தான் சரி என்றால் 60 என்று சொன்ன அபு ஹுரைரா பொய் சொல்கிறார் என்று இவர்கள் அறிவிப்பு செய்வார்களா? அல்லது முன்னுக்கு பின் முரணாக பேசக்கூடியவர் என்றாவது சொல்வார்களா?
முரண்பட்ட இரு செய்திகளை பதிவு செய்த புஹாரி இமாம் ஒரு குழப்பவாதி என்று இவர்கள் அறிவிப்பார்களா?

அவசர அவசரமாக இதை மறுப்பதற்கு மட்டும் இந்த ஞான சூனியங்கள் முனையுமானால், மறுப்பு சொல்கிற போது அந்த மறுப்பானது தரப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பொருந்த வேண்டும் என்கிற வகையில், இது போன்ற முரண்பாட்டு பட்டியல் இன்னும் நீளும், என்பதை இவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக