சனி, 17 ஆகஸ்ட், 2013

இணை வைப்பவர் பின்னின்று தொழலாம் என்பதற்கு இது ஆதாரமாகுமா ?
ஒருவர் பாவ சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார் என்பதற்கும் அதனால் இணை வைப்பவர் பின்னின்று தொழலாம் என்று சொல்வதற்கும் எந்த சம்மந்தமுமில்லை.
சிலர், இதை ஒரு வாதமாக வைப்பது விநோதமாக உள்ளது.

இணை வைப்பவர் பின்னின்று தொழுதால் இணை வைப்பவருக்கு என்ன தண்டனை எல்லாம் மறுமையில் அல்லாஹ் விதியாக்கி வைத்திருக்கிறானோ அவை நமக்கும் கிடைக்கும் என்று சொல்லியிருந்தாலோ அல்லது இணை வைப்பவரை பின்பற்றி தொழுபவரும் இணை வைப்பவரே என்று மார்க்கத்தில் எங்கேனும் சொல்லப்பட்டிருந்தாலோ தான் இந்த வாதம் சரியாகும்.

இணை வைக்கக்கூடியவர்கள் அல்லாஹ்வின் ஆலயத்தை நிர்வகிக்க கூடாது (9:17) என்பது அல்லாஹ் இட்டுள்ள கட்டளை. பள்ளிவாசலை நிர்வகித்தல் என்பதில் முதன்மையாக தொழுகைக்கு தலைமை தாங்குவது அடங்கும். அதை அவர் செய்யக்கூடாது என்றால் அப்படி செய்பவர் பின்னால் நாம் தொழக்கூடாது என்பது நேரடியாக புரிய வேண்டிய ஒன்று. அவ்வாறு தொழுதால், அந்த இணை வைக்கும் நபர் பள்ளிவாசலை நிர்வகிப்பதை நாம் அங்கீகரித்தோம் என்று ஆகி விடும்.

ஆக, அல்லாஹ் ஒன்றை சொன்னால் அதை அப்படியே கேட்டு செயல்பட வேண்டுமே தவிர அதில் குறுக்கு கேள்வி எழுப்ப கூடாது.

இணை வைப்பவர் பின்னால் தொழக்கூடாது என்று சொல்வது போல இணை வைப்பவரை திருமணம் செய்யக்கூடாது என்றும் மார்க்கம் கட்டளையிடுகிறது. அந்த பெண் இணை வைப்பவளாக இருந்தால் எனக்கென்ன? நான் தவ்ஹீத்வாதி, அவள் செய்யும் பாவம் என்னை கட்டுப்படுத்தாது, ஆகவே நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுவதற்கும், மேலே இணை வைப்பவர் பின்னின்று தொழுவது பற்றிய குதர்க்கதிற்கும் அதிக வேறுபாடு இல்லை !

கணவன் - மனைவி இடையே எப்படி திருமணம் மூலம் உறவு உருவாகிறதோ அது போல் இமாம் - மஃமூம் இடையே தொழுகை மூலம் உறவு ஏற்படுகிறது. இணை வைப்பவர்களுடன் திருமண உறவே தடை எனும் போது தொழுகை திருமணத்தை விடவும் மகத்தான ஒரு அமல் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக