கணவனை இழந்த பெண்கள் அல்லது விவாகரத்து மூலம் கணவனை பிரிந்த பெண்கள் உரிய கால அவகாசம் முடியாதவரை வேறொரு திருமணத்தை செய்வது கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.
இதன் மூலம், முதல் கணவரின் மூலம் அந்த பெண் கருவுற்றிருப்பளேயானால் அது வெளி உலகிற்கு தெளிவாக்கப்பட்டு, இதன் மூலம் அவள் மறுமணம் செய்கிற பொது தேவையற்ற சந்தேகங்களும் குழப்பங்களும் தவிர்க்கப்படும்.
மேலும் மறு மணம் செய்யாமலும் மறுமணத்தை தூண்டக்கூடிய பேச்சுக்களில் ஈடுபடுவதை விட்டு தவிர்ந்து விடுவதை தான் இத்தா காலம் என்று இஸ்லாம் சொல்கிறதே தவிர இது அல்லாத வேறெந்த கட்டுப்பாடுகளும் பெண்களின் மீது இஸ்லாம் விதிக்கவில்லை.
கணவன் இறந்து விட்டால் :
நான்கு மாதம் பத்து நாட்கள் மறு மணம் செய்யக்கூடாது. - ஆதாரம் குர் ஆன் 2:234
பருவ வயதை அடையாத பெண்ணாகவோ அல்லது மாதவிடாய் நின்று விட்ட பெண்ணாகவோ இருந்தால் :
மூன்று மாதம் மறு மணம் செய்யக்கூடாது. - ஆதாரம் குர் ஆன் 65:4
விவாகரத்து பெற்றுக்கொண்ட பெண்ணாக இருந்தால் :
மூன்று மாதம் மறு மணம் செய்யக்கூடாது. - ஆதாரம் குர் ஆன் 2:228
கணவனை இழக்கின்ற போது கர்பிணியாக இருந்தால் :
சுமந்திருக்கிற குழந்தையை பெறுகிற வரை மறு மணம் செய்யக்கூடாது. - ஆதாரம் குர் ஆன் 65:4
திருமணம் முடிந்து, இருவருக்கிடையே எந்த தாம்பத்திய உறவும் நடக்காத நிலையில் கணவன் பிரிந்து விட்டால் :
இத்தா காலம் இல்லை , எப்போது வேண்டுமானாலும் மறுமணம் செய்து கொள்ளலாம் . ஆதாரம் குர் ஆன் 33:49
இத்தா காலத்தில் கடைபிடிக்க வேண்டியவை :
திருமணம் பற்றிய பேச்சுக்களை நேரடியான முறையில் சம்மந்தப்பட்ட பெண்ணும் பேசக்கூடாது வேறு நபர்களும் அந்த பெண்ணிடம் அது பற்றி நேரடியான முறையில் பேசிக்கொள்ள கூடாது.
ஆதாரம் குர் ஆன் 2:235
நேரடியான முறையில் திருமணம் பற்றி பேசக்கூடாது என்றும், வாக்குறுதி கொடுக்க கூடாது என்றும் மேற்கண்ட வசனம் கட்டளையிட்டாலும் மறைமுகமாகவும் சாடை மாடையாகவும் திருமண விருப்பங்களை தெரிவிப்பது அனுமதிக்கப்பட்டது தான் என்றும் அதே வசனம் சொல்கிறது !
இத்தா காலங்களில் சுர்மா இடுவதோ மணப்போருட்களை உபயோகிப்பதோ சாயமிடப்பட்ட ஆடைகளை அணிவதோ கூடாது. நெய்வதற்கு முன் நூலிலேயே சாயமிடப்பட்ட துணிகளை தவிர .
புஹாரி 313
சாயமிடப்பட்ட துணிகளை உபயோகிக்க கூடாது என்பதால் வெள்ளை துணியை தான் அணிய வேண்டும் என்று புரிய கூடாது. மேற்கண்ட ஹதீஸிலேயே, நெய்வதற்கு முன் சாயமிடப்பட்ட துணியை தவிர, என்று சொல்லப்பட்டதில் இருந்து, இன்றைக்கு நாம் அணிகிற வண்ண ஆடைகளை இந்த ஹதீஸ் தடுக்கவில்லை என்று தெரிகிறது.
ஆடைகள் தயாராக்கப்பட்டு பயன்படுத்த துவங்கி பிறகு மீண்டும் சாயமிட்டு வண்ணங்களை மெருகேற்றும் வழக்கம் இருக்கிறது. அது போன்ற காரியங்கள் நபி (ஸல் அவர்கள் காலத்திலும் இருந்திருக்கிறது அதை தான் இத்தா கால பெண்கள் தவிர்க்க வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் சொல்கிறதே தவிர, வண்ண ஆடைகளை நெய்து அணிந்து கொள்ளும் இன்றைய வழக்கத்தை இது தடுக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
மேற்கண்ட கட்டுபாடுகளை தவிர, இத்தா கால பெண்கள் மீது வேறெந்த கட்டுப்பாடுகளையும் இஸ்லாம் விதிக்கவில்லை ! இவை அல்லாத எந்த நிபந்தனையை யார் சொன்னாலும் அதை நாம் கருத்தில் கொள்ள தேவையில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக