சனி, 17 செப்டம்பர், 2011

தக்க காரணம் இருந்தால் தொழுகையை இடை மறிக்கலாமா? - சிறு விளக்கம்

"தக்க காரணம்" என்பதற்குரிய பொருள் என்ன?
சிறு விளக்கம்



அஸ்ஸலாமு அலைக்கும்..


"தக்க காரணம்" - என்பதை நாம் இருவரும் புரிந்து கொள்ளக்கூடிய விதங்களில் உள்ள வேறுபாடு தான் இந்த கருத்து வேறுபாட்டுக்கு காரணமே தவிர, வேறு பிரச்சனையில்லை.

தொழுகையை இடைமறிப்பது குறித்து ஏற்கனவே பல முறை நான் கருத்துக்கள் பதிந்து விட்டதால், இங்கு வேறொரு கோணத்தில் மட்டும் நான் விளக்கமளிக்கலாம் என்று நினைக்கிறேன்..
இதை முடித்து விட்டு, தொழுகையை இடைமறிப்பது குறித்து பேசினால் எளிதில் புரியும், இன்ஷா அல்லாஹ்



உங்கள் பதிலின் சாராம்சம் :- ஏதேனும் காரணங்கள் கூறி இறை கட்டளையை மீறுவதாக இருந்தால் அந்த காரணம், அல்லாஹ் அனுமதிக்கின்ற காரணமாக இருக்க வேண்டும், நமது மனதினுள் தோன்றும் காரணங்களையெல்லாம் , இது தக்க காரணம் தான் என்று கூறி செயல்படுத்தக்கூடாது .

நீண்ட உதாரணங்களோடும், விளக்கங்களோடும் நீங்கள் சொல்லிய கருத்தின் கரு இது தான்.

இதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்.

அதே சமயம், சில கருத்துக்களை நானும் சொல்கிறேன்.

அல்லாஹ் நேரடியாக அளித்த சலுகையின் படி, அவன் விதித்த ஒன்றை நாம் செய்யாமல் தவிர்க்கலாம் - இது ஒரு வகை.

உதாரணம் - நீங்கள் குறிப்பிட்ட ஜம்மு - கசர் தொழுகை.

ஆனால், நான் கூறுவது இந்த வகையை அல்ல!


மார்க்க விஷயங்களில், ஒன்றரை செயல்படுத்துவதற்கும் மீறுவதற்கும் - இரண்டு வகையான வழிகள் உள்ளன..
  • ஒன்று, அல்லாஹ்வின் நேரடியான அனுமதி!
  • இன்னொன்று அல்லாஹ்வின் மறைமுகமான அனுமதி..

நீங்கள் கூறிய எடுத்துக்காட்டுகள் அனைத்துமே அல்லாஹ்வின் நேரடி அனுமதியை குறித்த உதாரணங்கள் தான்.

நேரடியான அனுமதியோடு ஒரு செயலை செய்யாமலிருக்க நமக்கு சலுகை இருக்கும் போது ,அது அல்லாஹ்வின் அனுமதி என்று புரிய வேண்டுமேயல்லாமல், தக்க காரணம் இருப்பதால் அல்லாஹ்வின் கட்டளையை மீறலாம் என்று புரியக்கூடாது என்கிற கருத்து சரியே!

அதே சமயம், அல்லாஹ்வின் மறைமுக அனுமதி என்று ஒன்று இருக்கிறது.
ஏதோ நான் புதிதாக சொல்வதாக நினைது விடாதீர்கள். நாம் சாதாரணமாக அறியக்கூடிய ஒன்று தான்.

மறைமுக அனுமதி என்பதற்கு பொருள் - அல்லாஹ் தந்துள்ள பொதுவான சலுகை! அல்லது பொது அனுமதி!!
பொதுவான அனுமதி என்று வரும் போது, குறிப்பிட்ட ஆதாரங்கள் இருக்காது - பொதுவான ஆதாரங்களே இருக்கும்..

ஆணுறை பயன்படுத்தலாம் என்கிற நேரடி அனுமதியை அல்லாஹ் எங்கும் தரவில்லை. அதே சமயம், அஸ்ல் என்கிற ஒரு செயலை நபி அவர்கள் அனுமதித்திருந்த சம்பவம் ஹதீஸ் மூலம் நமக்கு கிடைக்கிறது.
பயணத்தில் இருப்பவர்கள் சுருக்கி தொழலாம் என்கிற அனுமதி நேரடியான அனுமதி என்றும், ஆணுறை பயன்படுத்தலாம் என்பதற்கு இந்த அஸ்ல் சம்பவம் மறைமுக அனுமதி என்றும் நாம் புரிந்து கொள்கிறோம்.


இப்போது இந்த இறை வசனத்திற்கு வாருங்கள்..

நிர்பந்தந்ததிற்கு ஆளானோர் தடை செய்யப்பட்டதை உண்ணலாம் என்று அல்லாஹ் அனுமதி அளிக்கிறான் -
பார்க்க 6 :119 , 6 :145

இதில் கூறப்படும் நிர்பந்தம் என்பது எதை குறிக்கும்? என்பதை அல்லாஹ்வே அந்த வசனத்தில் விளக்குகிறான்.

யாரேனும் வரம்பு மீறாமலும், வலிய செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்!!! 6 :145

அதாவது - வரம்பு மீறாமல் இருப்பவர்களுக்கு தான் இந்த அனுமதி!
அதே போல், வலிய செல்லாமல் இருப்பவர்களுக்கு தான் இந்த அனுமதி..


  • வரம்பு மீறுதல் மற்றும் வலிய செல்லுதல் ஆகிய இரு விஷயங்களை அல்லாஹ் சொல்லாமலிருந்திருந்தால் , இந்த வசனம், நேரடி கட்டளையாக மாறி இருக்கும்..
  • இந்த இரு அம்சங்களும் இங்கு சேர்ந்துள்ளதால், இது அல்லாஹ்வின் மறைமுக அனுமதி - அல்லது பொது அனுமதி ஆகி விட்டது.

அதாவது, வெறுமனே தாமாக செத்தவைகளை சாப்பிடுவது குறித்து மட்டும் அல்லாஹ் அனுமதி தரவில்லை.
வலிய செல்லாமலும், வரம்பு மீறாமலும் யார் நிர்பந்திக்கப்படுகிராரோ - (அது உணவு குறித்த நிர்பந்தமாகவும் இருக்கலாம், வேறு எதுவாகவும் இருக்கலாம்) அவர்கள் அனைவரும் - மார்க்கம் தடை செய்த எதையும் செய்யலாம்!!!!!!!


இப்போது வேறுபாடு உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்..


இது நாமாக, நம் மனதினுள் தோன்றும் காரணங்களாக பாவிப்பது என்கிற கருத்தை வைத்துக்கொண்டு விமர்சனம் செய்யக்கூடாது!

அல்லாஹ்வே இல்லை என்று சொல், இல்லையேல் உன்னை கொன்று விடுவேன் என்று நாம் நிர்பந்திக்கப்பட்டால் அதை சொல்லலாம்..


வட்டி வாங்கு , இல்லையேல், உன் குடும்பத்தை சூறையாடி விடுவேன் என்று நாம் நிர்பந்திக்கப்பட்டால், வட்டி வாங்கலாம்.!


விபச்சாரம் செய்யவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று நாம் மிரட்டப்பட்டால், நிர்பந்திக்கப்பட்டால், விபச்சாரம் செய்யலாம்!!!

விபச்சாரம் செய்வது மார்க்க விரோதம் அதை செய்வதற்கு எங்கே அல்லாஹ்வின் நேரடி அனுமதி இருக்கிறது என்று கேட்கக்கூடாது! அல்லாஹ்வின் பொது அனுமதியில் இதுவும் அடக்கம்.

தாமாக செத்தவை குறித்து தானே அனுமதியுள்ளது - வட்டி வாங்குவதற்கு எங்கே அனுமதி இருக்கிறது? இது ஒவ்வொருவரது மனநிலையை பொறுத்து முடிவெடுத்து விட்டு கடைசியில், அல்லாவின் அனுமதி என்று சொல்லி விடுவார்களே என்று கேட்கக்கூடாது!!!

ஏனெனில்,
அத்தகைய நிர்பந்தம் - நபருக்கு மாறுபடும் என்பது இன்னொரு முக்கிய விஷயம் !
உதாரணமாக, உங்களை நிர்பந்தப்படுத்த, உயிர் போகிற வரை கொடுமைப்படுத்த வேண்டியிருக்கும்.
என்னை நிர்பந்தப்படுத்த ஒரு சிறு கத்தியை காட்டினாலே போதும்!!

இப்போது, இந்த வேறுபாடு - உண்மையில் உங்களுக்கு வேறுபாடாக தோன்றினாலும், இறைவனின் பார்வையில், இது வேறுபாடல்ல!
வலிய செல்லாமலும், வரம்பு மீறாமலும் நீங்கள் உயிர் போகிற கட்டம் வரை நிர்பந்திக்கப்படுகிறீர்கள், நானோ, அதே போன்று வலிய செல்லாமலும் வரம்பு மீறாமலும் வெறும் கத்தியை விட்டே நிற்பந்தப்படுதப்படுகிறேன்.

இது தனிப்பட்ட நம் இருவரது மனநிலையை பொறுத்த விஷயம் தான்! ஆனால், இறைவனின் பார்வையில் நாம் இருவரும் ஒன்று தான்.
நாம் இருவரும் நிர்பந்தப்படுதப்பட்டவர்கள் தான்!

வலிய சொல்கிறேனா? வரம்பு மீறுகிறேனா? என்பது தான் அல்லாஹ் பார்க்கும் பார்வை!!!
நிர்பந்தத்தின் அளவு என்ன என்பது அல்லாஹ் வைக்கும் அளவுகோல் அல்ல!!


இப்போது தலைப்புக்கு வருவோம்..
தொழுகையில் இடை மறிப்பது குறித்து இனியும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?

உங்கள் கருத்தில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள் என்றால், அடுத்து நான் கேட்க்கின்ற கேள்விகளுக்கு நடுநிலையாகவும், இறையச்சத்தோடும் பதில் சொல்ல வேண்டும்..

மேலே உள்ள எனது கருதுக்களை பொறுமையாக இன்னொரு முறை படித்து விட்டு, தொழுகையை இடை மறிப்பது குறித்து இப்போதும் அதே கருத்தில் தான் உள்ளீர்களா என்பதை எனக்கு பதிலாக தாருங்கள் .
அதன் பிறகு நான் சில கேள்விகளை கேட்கிறேன்.. பதில் சொல்லுங்கள்..

வாதத்திற்கு அல்ல.. புரிந்து கொள்வதற்கு மட்டும்.

வஸ்ஸலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக