திங்கள், 10 பிப்ரவரி, 2014

முஹம்மது நபி மரணிக்க மாட்டார்களா?


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த தருவாயில், அவர்கள் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாய் அவர்கள் இறந்து விட்டதை கூட ஏற்றுக் கொள்ள சஹாபாக்களில் ஒரு தரப்பினரால் இயலவில்லை. 
உமர் (ரலி) அவர்கள், நபி இறக்கவில்லை என்றும் அவர்கள் இறந்து விட்டதாய் யார் சொன்னாலும் தம் வாளுக்கு அவர் இரையாகட்டும் என்று கொதிப்படைந்தார்கள்.
(பார்க்க 3667)

இது பற்றி சஹாபாக்களை பின்பற்றும் கூட்டத்தார், நபி அப்போது இறக்கவில்லை என்று தான் அவர்கள் கூறினார்கள், இறக்கவே மாட்டார்கள் என்றா சொன்னார்கள் ? என்று அப்பாவித்தனமாய் கேள்வி கேட்கின்றனர்.

ஆனால், நபி மீது கொண்ட அளவிலா அன்பானது, அவர்கள் எப்படி இப்போது இறப்பார்கள் ? அவர்கள் இப்போது இறக்க முடியாது, இறக்க மாட்டார்கள் என்கிற எண்ணத்தை தான் உமர் (ரலி) அவர்கள் உள்ளத்தில் தோற்றுவித்தது என்பதற்கு புஹாரி 1242 வில் வரும் செய்தி சான்றாய் நிற்கிறது.

கோபத்தின் உச்சியில் நின்ற உமர் (ரலி) அவர்களை ஆசுவாசப்படுத்தவும், உண்மையை புரிய வைக்கவும் அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கீழ்காணும் வசனத்தை ஓதிக்காட்டுகிறார்கள்.

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (3:144)

இந்த வசனத்தில், முஹம்மது நபியானாலும் அவரும் இறக்கக்கூடியவர் தான் என்கிற கருத்தை அல்லாஹ் பதிய வைத்திருக்கிறான்.

முஹம்மது நபி இறக்கக்கூடியவர் தான், ஆனால் இப்போது தான் அவர்கள் இறக்கவில்லை என்கிற நம்பிக்கை தான் உமர் அவர்களிடம் இருந்தது என்றால் அந்த நம்பிக்கையை இந்த வசனம் உடைக்காது,

இப்போது இறக்கவில்லை, ஆனால் பிற்காலத்தில் இறப்பார்கள் என்கிற எண்ணம் கொண்டிருந்த கூட்டத்தாரிடம் முஹம்மதும் மரணிக்ககூடியவர் தான் என்கிற வசனத்தை ஒப்பிக் காட்டுவதன் மூலம் அபுபக்கர் அவர்களது நோக்கம் நிறைவேறியிருக்காது.

நானும் நபி இறப்பார் என்பதை மறுக்கவில்லை, இப்போது அவர்கள் இறக்கவில்லை என்று தான் சொல்கிறேன் என்று அபுபக்கர் அவர்களுக்கு உமர் அவர்கள் மறுப்பு சொல்லியிப்பார்கள்.

நபியும் மரணிப்பார் என்கிற வசனம், நபி இறக்க மாட்டார் என்கிற நம்பிக்கையை கொண்டிருந்த மக்களிடம் தான் எடுபடும்,
நபியும் இறக்ககூடியவர் தான் என்று அப்போது சொல்வதில் தான் அர்த்தமும் இருக்கும்.

ஆகவே, நபி இறந்த தருவாயில், அவர்களும் மரணிப்பார்கள் என்பதை அங்குள்ள மக்கள் ஏற்காத நிலையும் இருந்தது என்பதே உண்மை.
அபுபக்கர் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை ஓதிக்காட்டிய பிறகு, இப்படி ஒரு வசனம் குர் ஆனில் இருப்பதை அப்போது தான் முதன் முதலில் கேட்பதை போன்று அங்கிருந்த மக்கள் வியப்படைந்தனர், உண்மையை ஏற்றனர்.

இவையனைத்தும் ஹதீஸ்கள் வாயிலாக நாம் புரிகிற ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக